Pages

Muhammad(pbuh)

இருநூறு ரக்அத்கள் தொழுத பெரியவர்


இருநூறு ரக்அத்கள் தொழுத பெரியவர்

பெரியார்கள் மேல் அளவுக்கதிகமான மதிப்பையும் மலைப்பையும் ஏற்படுத்தும் மற்றொரு கதையைப் பாருங்கள்.

முஹம்மதுப்னு ஸிமாஆ (ரஹ்) என்ற பெரியார் சிறந்த ஆலிமாக இருந்தார்கள். இவர் இமாம் அபூயூசுப் (ரஹ்), இமாம் முஹம்மது (ரஹ்) ஆகிய இரு இமாம்களின் மாணவராவார். அன்னார் தங்களுடைய நூற்றிமுப்பதாவது வயதில் காலமாகும் வரை ஒவ்வொரு நாளும் இரு நூறு ரக்அத்கள் நபில் தொழுது கொண்டிருந்தார்களாம், அவர்கள் கூறுகிறார்கள்: நாற்பது ஆண்டுகள் வரை தொடந்து முதல் தக்பீர் தவறாமல் நான் தொழுது வந்திருக்கிறேன் ஒரே நேரத்தைத் தவிர- இப்படிப் போகின்றது கதை!

இந்த கதை தப்லீகின் தஃலீம் தொகுப்பு நூலில் தொழுகையின் சிறப்புகள் என்ற பகுதியில் 86ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

ஒரு நாளைக்கு 200 ரக்அத்கள் நபில் தொழுவது சாத்தியப்படக்கூடியது தானா? இதை முதலில் நாம் ஆராய்வோம்.

ஒரு நாளைக்கு மொத்தம் 24 மணி நேரங்களே உள்ளன. இந்த இருபத்திநான்கு மணி நேரங்களில் ஏறத்தாழ மூன்று மணிநேரங்கள் தொழக்கூடாத நேரங்களாகும்.

சூரியன் உதிக்கத் துவங்கி முழுமையாக உதிப்பதற்கு 20 நிமிடங்கள். சூரியன் உச்சிக்கு வரத் துவங்கி உச்சி சாய்வதற்கு 20 நிமிடங்கள். சூரியன் மறையத் துவங்கி முழுமையாக மறைவதற்கு 20 நிமிடங்கள். இந்த மூன்று நேரங்களிலும் தொடக்கூடாது என்று ஹதீஸ்களில் தடைவந்துள்ளது. இந்த வகையில் 24 மணி நேரங்களில் ஒரு மணி நேரம் குறைகின்றது.

அஸர் தொழுத பிறகு உபரியான தொழுகை தொழுவதற்கும் ஹதீஸ்களில் தடை வந்துள்ளது. இந்தப் பெரியார் முதல் தக்பீரிலே தொழுதுவிடும் வழக்கமுடையவர் என்று இந்தக்கதையில் கூறப்படுகின்றது. அஸர் தொழுகையை நான்கு மணிக்கு அவர் நிறைவேற்றினால் மஃரிப் வரை குறைந்தது இரண்டு மணி நேரங்கள் தொழக் கூடாத நேரங்கள். இந்த வகையில் இரண்டு மணி நேரங்கள் கழித்து விட்டால் எஞ்சியிருப்பது 21 மணி நேரங்களே.

ஒரு நாளைக்கு இரண்டு தடவை மலம் கழிப்பது நான்கு தடவை சிறுநீர் கழிப்பது என்று வைத்துக் கொண்டாலும், குறைந்தது அரைமணி நேரமாவது தேவைப்படும். இவ்வாறு ஆறு தடவை உலூ செய்ய வேண்டும். இந்த வகையில் குறைந்தது அரைமணி நேரமாகும். இப்போது எஞ்சியிருப்பது 20 மணி நேரங்களே.

மனிதன் என்ற முறையில் சில மணி நேரங்களாவது தூங்க வேண்டும். நபியவர்களும் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி வலியுறுத்துகிறார்கள். மனித உடலும் இயற்கையாகவே தூக்கத்தின் பால் நாட்டம் கொண்டதாகவே உள்ளது. குறைந்த பட்சம் ஐந்து மணி நேரங்கள் தூக்கத்தில் கழித்தால் எஞ்சியிருப்பது பதினைந்து மணி நேரங்களே.

எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் பசி உணர்வு இல்லாத மலக்குகளாக அவர்கள் ஆக முடியாது டீ, காபி, டிபன் என்று பல தடவை உண்ணாவிட்டாலும் குறைந்தது இரண்டு தடவைகளாவது உண்ண வேண்டும். இதற்கு குறைந்தபட்சமாக அரைமணி நேரமாவது தேவைப்படும், இப்போது எஞ்சியிருப்பது பதினான்கரை மணி நேரங்களே.

இந்த பதினான்கரை மணி நேரங்களில் இந்தப் பெரியார் ஐவேளைக் கடமையான தொழுகைகளையும் தொழுதுவிட்டு சுன்னத்தான தொழுகைகளையும் தொழுதுவிட்டு உபரியாக 200 ரக் அத்கள் நபில் தொழுதுள்ளார்களாம்.

ஜமா அத்துடன் ஐவேளைத் தொழுகையையும் தொழ சுமார் ஒரு மணி நேரம். அதன் பின் ஓதவேண்டிய சுன்னத்தான திக்ருகள் துஆக்கள் ஆகியவற்றுக்கு அரை மணிநேரம், தொழுகையின் முன்பின் சுன்னத்துகளுக்காக ஒரு மணிநேரம் இரவுத் தொழுகை, லுஹாத் தொழுகை ஆகியவற்றுக்கு ஒரு மணி நேரம். இப்போது எஞ்சியிருப்பது பதினொரு மணி நேரங்களே.

இந்தப் பதினொரு மணி நேரங்களில் அதாவது 660 நிமிடங்களில் 200 ரக்அத் நபில் தொழு முடியுமா? பெரியார்கள் நம்மைப் போல் அவசர அவசரமாகத் தொழமாட்டார்கள். நிறுத்தி நிதானமாகத் தொழுவார்கள். இந்தப் பெரியார் இதில் விதிவிலக்கானவர். நம்மைப் போல் வேகமாகத் தொழுபவர் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு ரக்அத்துக்கு ஐந்து நிமிடங்களாவது ஆகும். 200 ரக்அத்துகளுக்கு 1000 நிமிடங்கள் தேவை.

மிக முக்கியமான தேவைகளுக்குப் போக எஞ்சியிருக்கும் 660 நிமிடங்களில் 200 ரக்அத்கள் தொழுவது எப்படி சாத்தியமாகும்? அப்படித் தொழுதால் அது தொழுகையாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

இது போக இன்னும் பல அலுவல்களைக் கணக்கில் நாம் சேர்க்கவில்லை அவற்றுக்கு மழுப்பலான பதில்களை ரெடிமேடாக வைத்துள்ளனர்.

மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நேரம் தேவை என்று நாம் சொன்னால் இந்தப் பெரியார் அந்த உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று அவர்கள் கூறலாம். அவர் வேண்டுமானால் அப்பாற்பட்டவராக இருக்கலாம். அவரது மனைவியும் அப்பாற்பட்டவராக இருந்திருப்பாரா? என்று நாம் கேட்டால் அவர் பிரம்மச்சாரியாக இருந்திருக்கலாம் என அவர்கள் கூறலாம்.

தான் உண்பதற்காகவும், தனக்குச் சமைத்துப் போடுவோர்கள் உண்பதற்காகவும், உழைக்க நேரம் தேவை என்று நாம் சொன்னால் பூர்வீகச் சொத்துக்கள் ஏராளமாக இருந்திருக்கலாம் அல்லவா என்பர்.

மார்க்க அறிஞராக அவர் இருப்பதால் மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்கும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதற்கும் நேரம் தேவை என்று நாம் கூறினால் அந்தக் காலத்தில் எல்லாருமே மார்க்க அறிஞர்களாக இருந்திருக்கலாம் என்பர்.

திருமணம், ஜனாஸா போன்ற சுன்னத்தான காரியங்களுக்கும் நேரம் தேவை என்று நாம் கூறினால் அந்தக் காலத்தில் பித்அத்கள் மலிந்திருந்ததால் அவற்றை புறக்கணித்திருக்கலாம் என்பர். முன்னர் கூறியதற்கு இது முரணாக உள்ளதே என்று இவர்கள் சிந்திப்பதில்லை.

நியாயப்படுத்தவே முடியாத பணிகளுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கியுள்ளோம். இவற்றையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தாலும் 200 ரக்அத்கள் தொழுவதற்கு நிச்சயமாக நேரம் கிடைக்காது.

பெரியார்களைப் பற்றி மலைப்பை ஏற்படுத்தி, அவர்களை வழிப்படுவதற்காகவே இது போன்ற கதைகளை கட்டியுள்ளனர். ஸகரியாசாஹிபும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால்தான் தன் நூல் நெடுகிலும் இது போன்ற நம்ப முடியாத அபத்தமான கதைகளை அள்ளி விடுகிறார்.