Pages

Muhammad(pbuh)

தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில்


தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில் உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இயக்கம் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களாக வாழச்செய்யும் உயர் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாகும்.

பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக இருந்துக்கொண்டு அல்லாஹ்வை மறந்து வாழ்ந்த மக்களையும், சமாதி வழிபாடுகளிலும் தனிநபர் வழிபாட்டிலும் முழ்கிக்கிடந்த மக்களையும், இஸ்லாமியக் கடமைகள் இன்னதென்று அறியாமல் அவற்றை அலட்சியப்படுத்தி வாழ்ந்த மக்களையும் கண்டு பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலைப்பட்டு துவக்கிய இயக்கமே தப்லீக் இயக்கமாகும். இந்த இயக்கம் புத்துயிர் பெற்ற பிறகு சமாதிகளில் மண்டியிட்டவர்கள் அல்லாஹ்வின் சன்னதியில் சிரம் பணியலானார்கள். பூட்டிக்கிடந்த இறையில்லங்கள் தொழுகையாளிகளால் நிரபப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் பற்றிய மதிப்பு மக்களின் உள்ளங்களில் அதிகமாகியது.

இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் தங்களின் பொருளையும், உழைப்பையும் தியாகம் செய்கின்ற நிலை ஏற்பட்டது. மவ்லவிகள் மட்டுமே மார்க்கத்தைச் சொல்லத்தக்கவர்கள் என்ற நிலை இந்த ஜமாஅத்தின் எழுச்சியினால் ஓரளவாவது மாறியது. இதெல்லாம் இந்த இயக்கத்தினால் சமுதாயத்திற்கு கிடைத்த நற்பயன்கள். அதில் ஈடுபாடு கொண்ட மக்களின் நோக்கத்தில் இன்றளவும் குறைகாண முடியாது.

ஆனாலும் பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்களின் புதல்வர் யூசுப் (ரஹ்) ஆகியோரின் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தின் மார்க்க அறிஞர்கள் தப்லீகின் உயர் நோக்கத்திலிருந்து அதைத் திசை திருப்பும் பணியில் ஈடுபடலானார்கள்.

மனிதர்களுக்கும், பெரியார்களுக்கும் அளவு கடந்த மரியாதை செய்யும் அளவுக்கு மக்களின் மூளைகளை சலவை செய்யலானார்கள். மீண்டும் சமாதி வழிபாட்டுக்கும் தனிமனித வழிபாட்டுக்கும் மக்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபடலானார்கள்.

இந்தபணியைச் செய்தவர்களில் முதலிடத்திலிருப்பவர், உபி மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஸகரிய்யா சாஹிப் என்பவர் காலம் சென்ற இவர் தனக்கும் அப்போதைய ஹஜ்ரத்ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீகின் தஃலீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.

குர்ஆனையும், நபிவழியையும் கற்பிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் இவர் எழுதிய கற்பனைகளும், கதைகளும் படிக்கப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற இவரது தஃலீம் தொகுப்பு தப்லீக் ஜமாஅத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது.

தப்லீக் ஜமாஅத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.

தொழுகையின் சிறப்பு, ஸதகாவில் சிறப்பு, ரமழானின் சிறப்பு என்றெல்லாம் பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இவரது நூலில் மிகவும் தந்திரமாக எவருக்கும் சந்தேகம் வராத வகையில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன. ஸகரிய்யா சாஹிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார். என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன் பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை விற்க ஆரம்பித்து விடுவார்.

ஆரம்பத்தில் உள்ள சில பக்கங்களில் இவர் மக்கள் உள்ளங்களில் நல்ல இடத்தைப் பெற்றுவிடுவதால் அடுத்தடுத்து இவர் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் கண்டு கொள்வதில்லை எனவே தான் தஃலீம் தொகுப்புகளில் மலிந்துள்ள அபத்தங்களை நாம் இனம் காட்ட வேண்டியுள்ளது. சிந்தனையாளர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சில அபத்தங்களை மட்டும்தான் இனம் காட்டுகிறோம்.

தொழுகையா? சொர்க்கமா?
இப்னு ஸீரின் (ரஹ்) கூறுகிறார்கள்: சொர்க்கம் செல்லுதல். இரண்டு ரக்அத்கள் தொழுதல். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள எனக்கு அனுமதியளித்தால் இரண்டு ரக்அத்கள் தொழுவதையே நான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன், ஏனெனில் சொர்க்கம் செல்லுவது என்னுடைய மகிழ்ச்சிக்காக வேண்டியதாகும். இரண்டு ரக்அத்கள் தொழுவதோ என்னுடைய எஜமானனின் திருப்திக்காக வேண்டியதாகும்.

தொழுகையின் சிறப்பு என்ற பகுதியில் பக்கம் 25-ல் இவ்வாறு கதையளக்கிறார் ஸகரிய்யா சாஹிப். மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையின் சிறப்பைக் கூறுவதுபோல இது தோற்றமளித்தாலும் சிந்தித்துப் பார்க்கும்போது இதில் மலிந்துள்ள அபத்தங்கள் தெரியவரும்.

இப்னுஸீரின் என்பவர் மிகவும் சிறந்த மார்க்க அறிஞர் ஆவார். ஹிஜ்ரி 110ல் மரணமடைந்த இப்பெரியார் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அதன் வார்த்தைகளில் கூட மாற்றம் செய்யாமல் அறிவிக்கும் அளவுக்குப் பிடிப்புள்ளவர்.

இது போன்ற பெரியார்களின் பெயரைப் பயன்படுத்தினால் தான் மக்களிடம் எடுபடும் என்பதற்காக அந்தப் பெரியாரின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார் ஸகரிய்யா சாஹிப். இப்னு ஸீரின் இவ்வாறு கூறினால் எந்த நூலில் இது இடம் பெற்றுள்ளது? அந்த நூல் எந்த ஆண்டில் யாரால் எழுதப்பட்டது? ஹிஜ்ரி 110ல் மரணமடைந்த அப்பெரியார் இவ்வாறு கூறியிருந்தால் அந்தக் காலக்கட்டத்திலோ அதற்கடுத்த காலகட்டத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இது இடம் பெற்றுள்ளதா? என்று எந்த விபரத்தையும் ஸகரிய்யா சாஹிப் கூறவில்லை. இப்னு ஸீரின் என்னவோ இவரது வகுப்புத் தோழர் போலவும் அவர் வந்து நேரில் கூறியது போலவும், 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பற்றி சித்தரிக்கிறார் ஸகரிய்யா சாஹிப். இந்தப் பெரியார் இவ்வாறு கூறியிருக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு இதன் தவறுகளை ஆராய்வோம்.

அல்லாஹ்வோடு அவனது அடியார்கள் நடந்து கொள்வதற்கு சில ஒழுங்குகள் உள்ளன. அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்பது போலவோ, அல்லாஹ் சொன்னதைவிட சிறந்ததை அல்லாஹ்வுக்குச் சொல்லிக் கொடுப்பது போலவோ ஒரு அடியான் பேசினால் அவன் அல்லாஹ்வின் மதிப்பை உணரவில்லை என்று பொருள்.

தொழுகை மற்றும் ஏனைய வணக்கங்களை நிறைவேற்றினால் அதன் பரிசு சுவர்க்கம் என்பது இறைவனின் ஏற்பாடு. இந்த ஏற்பாட்டை குறை காண்பது உண்மை முஸ்லிமுக்கு அழகல்ல.

முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஆக்குவதற்குப் பதில் என்னை நபியாக அவன் ஆக்கியிருந்தால் இப்படிச் செய்திருப்பேன் என ஒருவன் கூறினால் அதை எந்த முஸ்லிம் ஜீரணிக்கமாட்டான். இறைவன் அவ்வாறு ஆக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அவ்வாறு ஆக்கியிருந்தால்..... எனக் கூறுவது ஆணவப்போக்காகவே கருதப்படும். சொர்க்கத்தையும், இரண்டு ரக்அத் தொழுவதையும் எதிரெதிரே நிறுத்தி இதில் எது வேண்டும் என இறைவன் கேட்கமாட்டான்.

இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல. ஒன்றுக்கு பரிசு மற்றொன்று என்ற வகையில் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இறைவனுடன் மரியாதைக்குறைவாக நடக்கும் இது போன்ற வார்த்தைகளை ஸகரிய்யா சாஹிப் சொல்ல முடியுமே தவிர பெரியார் இப்னுஸீரின் சொல்லியிருக்க மாட்டார்கள்.

இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு இறைவன் கூறினால் நான் தொழுவதையே தேர்ந்தெடுப்பேன் என்பதில் மற்றொரு தவறும் உள்ளது. ஒரு பேச்சுக்காக இப்படி இறைவன் கேட்பதாகவே வைத்துக் கொள்வோம் அப்படிக் கேட்கும்போது இவர் இதைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்று எப்படிக் கூற முடியும்?

அந்த நேரத்தில் இறைவன் எத்தகைய முடிவைத்தான் எடுக்க முடியுமே தவிர இந்த முடிவைத் தான் எடுப்பேன் என்று கூறமுடியாது. அவ்வாறு கூறுவதும் ஆணவப் போக்காகும், எவரும் தான் நினைத்தவாறெல்லாம் முடிவெடுப்பேன் என்று கூறமுடியாது.

சொர்க்கம் செல்வது என்னுடைய மகிழ்ச்சிக்காக வேண்டியதாகும். இரண்டு ரக்அத்கள் தொழுவது என்னுடைய எஜமானின் திருப்திக்காக வேண்டியதாகும் என்ற வாசகமும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்றது.

இந்த வாசகத்தில் இறைவன் தொழுகையின்பால் தேவையுள்ளவன் போன்று சித்தரிக்கப் படுகின்றான். இறைவன் எதை எப்போது செய்யச் சொல்கிறானோ அப்போது அது இறைவனின் திருப்திக்கு உரியதாகின்றது. இறைவன் தொழச் சொல்லும் போது தொழுவதும் தொழாதே என்று சொல்லும்போது தொழாமலிருப்பதும் தான் இறைவனின் திருப்திக்குரியதாகும்.

நோன்பு வைப்பது இறைவனின் திருப்திக்காக பெருநாள் எனது திருப்திக்காக. எனவே நான் இறைவன் திருப்திக்காக பெருநாள் அன்று நோன்பு வைப்பேன் என்று ஒருவன் கூறினால் அவனைவிட அறிவிலி எவனும் இருக்க முடியாது. இப்படிச் சொல்வதால் இறைவனின் கடுமையான கோபத்திற்கு அவன் ஆளாகுவான் இறைவனின் திருப்தியைப் பெற முடியாது.

இறைவன் சுவர்க்கத்துக்குப் போகச் சொல்லும் போது எனக்கு சுவர்க்கம் வேண்டாம் தொழப் போகிறேன் என்று கூறுபவனுக்கும் பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பவனுக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை.

தொழுகையின் சிறப்பை விளக்க, குர்ஆனில் எத்தனையோ வசனங்கள் உள்ளன. ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அதை விடுத்து இது போன்ற அபத்தங்களைக் கூறி தொழுகையின் சிறப்பை விளக்க எந்த அவசியமும் இல்லை. பெரியார்கள் எவ்வளவு ஈடுபாடுடன் இருந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? என்று புருவத்தை உயரச் செய்வதே இதன் நோக்கம்.