Pages

Muhammad(pbuh)

திக்ரின் சிறப்புக்கள்

لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

என்ற திக்ரை ஒரு நாளைக்கு நூறு தடவை கூறுபவருக்கு பத்து அடிமைகளை உரிமைவிட்ட நன்மை கிடைக்கிறது. அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகிறது. நூறு தீமைகள் அழிக்கப்படுகிறது. மாலை வரை ஷைத்தானைவிட்டும் பாதுகாப்புக் கிடைக்கிறது. இதனை விடவும் அதிகமாக திக்ர் (அமல்) செய்தவரைத் தவிர மற்ற எவரும் இவரைவிடச் சிறந்தசெயல் செய்தவராக முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)


سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ

என்று ஒரு நாளைக்கு நூறு தடவைக் கூறினால் அவருடைய பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நுல்கள்: புஹாரி, முஸ்லிம்)


سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه

என்று காலையிலும் மாலையிலும் நூறு தடவை கூறுபவரைவிட மறுமை நாளில் சிறந்த செயலுடன் யாரும் வரமாட்டார். ஆனால் இவரைப் போன்றோ அல்லது இவரைவிட அதிகமாகவோ திக்ர் செய்தவரைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)


لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

என்று பத்துத் தடவை கூறுபவர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியரில் (அடிமையாகியுள்ள) நான்கு அடிமைகளை உரிமை விட்டவரைப் போன்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)


سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

இந்த இரண்டு வார்த்தைகளும் சொல்வதற்கு மிக எளிதானவை. இறைவனின் தராசில் மிக கனமானவை. இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)


سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ

என்று நான் கூறுவது சூரியன் உதயமாகும் இவ்வுலகத்தை விட எனக்கு மிகவும் பிரியமானதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)


நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தபோது, உங்களில் எவரேனும் ஒருநாளில் ஆயிரம் நன்மைகள் சம்பாதிக்க முடியுமா? என்று கேட்டார்கள். ஆயிரம் நன்மைகள் எப்படி சம்பாதிக்க முடியும்? என்று ஒரு தோழர் கேட்க, நூறு தடவை தஸ்பீஹ் செய்யுங்கள். ஆயிரம் நன்மைகள் எழுதப்படும் அல்லது ஆயிரம் தீமைகள் அழிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஸஃது(ரலி), நூல்:முஸ்லிம்)


سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ

என்று கூறினால் சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நாட்டப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)


அப்துல்லாஹ் இப்னு கைஸே! உனக்கு சொர்க்கத்துப் பொக்கிஷம் ஒன்றை அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள் என்றார்.

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

என்று கூறுவீராக! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ்(ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம்)


سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ

இவை இறைவனின் மிகப் பிரியமான நான்கு வார்த்தைகளாகும். இதில் எந்த வார்த்தையையும் முதலாவதாக கூறலாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)


ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு ஏதேனும் திக்ரைக் கற்றுத் தாருங்கள் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள்

لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، اَللهُ أَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيْرًا، سُبْحَانَ اللهِ رَبِّ الْعَالَمِيْنَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ

என்பதைக் கற்றுக்கொடுத்தார்கள். அதற்கு அவர் இவைகள் இறைவனைப் புகழ்வதற்காக உள்ளவை. எனக்காக எதுவும் இல்லையா? என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதனைக் கற்றுக் கொடுத்தார்கள்.

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ

(அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)


ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் நபி(ஸல்) அவர்கள் அவருக்கு தொழுகையைக் கற்றுக் கொடுப்பார்கள். பிறகு இவ்வார்த்தையைக் கொண்டு பிரார்த்திக்கச் சொல்வார்கள்.

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ

(அறிவிப்பவர்: தாரிக் அல்அஸ்ஜயீ(ரலி), நூற்கள்: புஹாரி, முஸ்லிம்)


اَلْحَمْدُ لِلَّهِ

சிறந்த துஆ ஆகும்.


لاَ إِلَهَ إِلاَّ اللهُ

சிறந்த திக்ர் ஆகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி, இப்னுமாஜா)


தஸ்பீஹ் செய்யும் முறை


நபி(ஸல்) அவர்கள் தம் வலது கை விரலால் தஸ்பீஹை எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறுகிறார்கள்.
(நூல்: அபூதாவூத், திர்மிதி)