Pages

Muhammad(pbuh)

பாடம்: 114 இரத்தப் போக்குள்ளவள் ஒரு நாளைக்கு ஒரு முறை குளித்தல்!

ஹதீஸ் எண்: 301
கஃகாஃ, சைத்பின் அஸ்லம் ஆகிய இருவரும் அபூபக்கர் அவர்களின் அடிமையான சுமைய்யி அவர்களை சயீத் பின் அல்முஸய்யிப் அவர்களிடம், 'சூதக இரத்தப் போக்குள்ளவர் எவ்வாறு குளிக்க வேண்டும்?' என்று கேட்டு வருமாறு அனுப்பி வைத்தார்கள். அப்போது சயீத் அவர்கள் 'அப்படிப்பட்டவர் ழுஹ்ருக்கு ழுஹ்ர் குளிக்க வேண்டும். (அதாவது இன்றைய ழுஹ்ர் நண்பகல் நேரத்தில் குளித்தால் அவர் குளிப்பு மறுநாள் ழுஹ்ர் நண்பகல் நேரம் வரை அது செல்லுபடியாகும்.) மேலும் அவர் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும். அவருக்கு இரத்தம் மிகைத்து வருமானால் பஞ்சிட்ட ஆடையைக் கொண்டு துணியில் இறுக்கி கட்டிக் கொள்ளவும் என்று பதிலளித்தார்கள்' என்று சுமைய்யி அவர்களே அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து அனஸ் பின் மாலிக் (ரலி), அவர்களிடமிருந்து 'அவர் ழுஹ்ருக்கு ழுஹ்ர் குளிக்க வேண்டும்' என்றே அறிவிக்கப்படுகின்றது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து கமீர் வழியாக தனது மனைவி மூலம் அறிவிக்கும் ஷுஃபி அவர்கள் வாயிலாக தாவூத், ஆஸிம் ஆகியோரும் இவ்வாறே அறிவிக்கின்றனர். எனினும் தாவூத் அவர்கள் 'ஒவ்வொரு நாளும் (குளிக்க வேண்டும்) என்றும், ஆஸிம் தனது ஹதீஸில் 'ழுஹ்ரின் போது' என்றும் அறிவிக்கின்றனர்.

இதுவே சாலிம் பின் அப்துல்லாஹ், ஹசன், அதா ஆகியோரின் கருத்தாகும்.

இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
ழுஹ்ருக்கு ழுஹ்ர் என்று வருகின்ற இடத்தில் சயீத் பின் அல்முஸய்யிப் அவர்கள் துஹ்ருக்கு துஹ்ர் என்றே தனது ஹதீஸில் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதில் சந்தேகம் ஏற்பட்டு அறிவிப்பாளர்கள் அதை மாற்றி லுஹ்ருக்கு லுஹ்ர் என்று கூறிவிட்டனர் என்று கருதுகின்றேன் என்று மாலிக் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதை மின்வர் பின் அப்துல் மாலிக் பின் சயீத் பின் அப்துற்றஹ்மான் பின் யர்பூஃ அறிவிக்கின்ற போது 'அதில்' அவர் துஹ்ருக்கு துஹ்ர் என்றே அறிவிக்கின்றார். ஆனால் அறிவிப்பாளர்கள் அதை ழுஹ்ருக்கு ழுஹர் என்றே மாற்றி விட்டனர்.

ழுஹர்: அரபியில் மேற்புள்ளியிட்ட 'ல' என்ற எழுத்தைக் கொண்டு ஆரம்பத்தில் இடம் பெறும் இவ்வார்த்தைக்கு நண்பகல் நேரம் என்று பொருளாகும்.

துஹ்ர்: மேற்புள்ளியிட்ட 'த' என்ற எழுத்தைக் கொண்டு ஆரம்பத்தில் இடம் பெறும் இவ்வார்த்தைக்கு துப்புரவு என்று பொருளாகும்.

துஹ்ர் துப்புரவு என்ற வார்த்தையின் படி வழமையான மாதவிடாய் காலம் முடிந்து குளிக்க வேண்டும் என்ற கருத்தாகும். ழுஹர் நண்பகல் என்ற வார்த்தையின் படி தினந்தோறும் நண்பகல் நேரத்தில் குளிக்க வேண்டும் என்ற கருத்தாகும்.

ஹதீஸ் எண்: 302
சூதக இரத்தப் போக்குள்ளவர் தனது மாதவிடாய் (காலம்) நின்றதும் (முடிந்ததும்) தினந்தோறும் குளிப்பாராக! மேலும் அவர் கொழுப்பு அல்லது ஆலிவ் எண்ணெய் தடவிய கம்பளித்துணியை (தனது மர்மஸ்தானத்தில்) வைத்துக் (கட்டிக்) கொள்வாராக! என்று அலீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)

(குறிப்பு: இது கரீப் ஆன ஹதீஸ் என்று முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள்.)

பாடம்: 115 உதிரப்போக்குடையவள் அவ்வப்போது குளித்தல்

ஹதீஸ் எண்: 303
சூதக இரத்தப் போக்குள்ளவர் தொடர்பாக முஹம்மது பின் உஸ்மான் அவர்கள் காஸிம் பின் முஹம்மது அவர்களிடம் வினவிய போது அப்படிப்பட்டவர் தனது (வழமையான) மாதவிடாய் நாட்களில் தொழுகையை விட்டுவிடுவாராக! பின்பு குளித்து தொழுவாராக! பிறகு (உதிரப்போக்கு) நாட்களில் (அவ்வப்போது) குளிப்பாராக! என்று பதிலளித்தார்.

அறிவிப்பவர்: முஹம்மது பின் உஸ்மான்.

பாடம்: 116 ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்யலாம்

ஹதீஸ் எண்: 304
பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் சூதக இரத்தப் போக்குள்ளவராக ஆனபோது அவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 'இது மாதவிடாய் இரத்தமெனில் அது அடையாளங்கண்டு கொள்ளப்படும் கரிய இரத்தமாகும். இந்த இரத்தம் உனக்கு வந்தால் நீ தொழுகையை விட்டுவிடு! இதல்லாத இரத்தம் வந்தால் நீ உலூச் செய்து, தொழுது கொள்' என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்: பாத்திமா பின்த் அபீஹுபைஷ்.

இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
அறிவிப்பாளர் இப்னுல் முஸன்னா தெரிவிக்கின்றார்:
எமக்கு இப்னு அபீ அதீ அவர்கள் தனது மனனத்தின் மூலம் அறிவிக்கும் போது 'உர்வா, (அவர்களுக்கும் பாத்திமா அவர்களுக்கும் இடையில்) அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றார். (286 ஹதீஸின் குறிப்பைப் பார்க்கவும்)

இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
இந்த ஹதீஸை அபூஜஃபர் வழியாக ஹகம் அவர்கள் மூலம் அறிவிக்கும் அலா பின் அல் முஸய்யிப் அவர்களிடமிருந்தும் ஷுஃபா அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்படுகின்றது. இந்த அறிவிப்புகளில் 'நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்து கொள்க' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (மர்பூஆக) அலா அவர்களும், ஷுஃபா அவர்கள் அபூஜஃபர் அவர்களுடன் நிறுத்தி (மவ்கூபாக்கி)யும் அறிவிக்கின்றனர்.

பாடம்: 117 உளூவை நீக்கும் காரியம்

ஹதீஸ் எண்: 305
உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் சூதக இரத்தப் போக்குள்ளவராக ஆனபோது அவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'அவர் தனது (வழமையான) மாதவிடாய்களில் (தொழுகையை விட்டுவிட்டு) காத்திருந்து, பிறகு குளித்துத் தொழுமாறும், பிறகு அதன்பின்பு எதையும் கண்டால் உலூச் செய்து தொழுவாராக! என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர்: இக்ரிமா அவர்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முர்ஸலானது என்று மன்திரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஏனெனில் இக்ரிமா அவர்கள் நபித்தோழர் அல்ல!)

ஹதீஸ் எண்: 306
ரபீஆ அவர்கள், சூதக இரத்தப் போக்குள்ளவர் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று கருத்துக் கொண்டிருக்க வில்லை எனினும், இரத்தமல்லாத உலூ முறிவு அவரைத் தீண்டினால் அவர் உலூச் செய்ய வேண்டும் என்பதை தவிர!.

அறிவிப்பாளர்: வஹப் லைஸ் அவர்கள்.

இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: இதுவே மாலிக் பின் அனஸ் (ரலி) அவாகள் கருத்தாகும்.

பாடம்: 118 துப்புறவுக்கு பிறகு கலங்கலான (மண்நிறம், மஞ்சள்) நிறத்தைக் கண்டால்?

ஹதீஸ் எண்: 307
நாங்கள் (குளித்து) துப்புரவான பிறகு (வெளிப்படும்) மண் நிற இன்னும் மஞ்சள் நிற (திரவ)த்தை கவனத்தில் கொள்ள மாட்டோம் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்துகொண்ட உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பாளர்: உம்மு ஹுதைல் அவர்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸை இமாம் புகாரி, நஸயி ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள். அதில் நாங்கள் 'துப்புரவான பிறகு' என்ற வாசகம் இடம் பெறவில்லை.)

ஹதீஸ் எண்: 308
அதே ஹதீஸை இதன் அறிவிப்பாளர் இங்கு அறிவிக்கின்றார்.

அறிவிப்பாளர்: உம்மு அதிய்யா (ரலி)

பாடம்: 119 சூதக இரத்தப் போக்குள்ளவரை கட்டி உடலுறவு கொள்தல்!

ஹதீஸ் எண்: 309
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் சூதக இரத்தப் போக்குள்ளவராக இருக்கும் போது அவரிடம் அவருடைய கணவர் உடலுறவு கொள்வார்.

அறிவிப்பாளர்: உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி).

இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
முஅல்லா பின் மன்சூர் நம்பிக்கையாளர் என்று யஹ்யா பின் முஈன் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இவர் எதையும் தனது சொந்த அபிப்பிராயக் கண்ணோட்டத்துடன் அணுகுபவர் என்ற காரணத்தால் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவரிடமிருந்து எதையும் அறிவிக்கமாட்டார்கள்.

ஹதீஸ் எண்: 310
ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் அவர்கள் சூதக இரத்தப் போக்குடையவரானார்கள். அவருடைய கணவர் அவரிடம் உடலுறவுக் கொள்வார்கள்.

அறிவிப்பாளர்: ஹம்னா பின்த் ஜஹ்ஷ்.

(குறிப்பு: முன்திர் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: இக்ரிமா அவர்கள் உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ், ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோரிடம் செவியுற்றார் என்ற கருத்து ஆட்சேபணைக்குரியது.)