ஹதீஸ் எண்: 201
இஷா தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டது. அப்போது ஒருவர் எழுந்து நின்று, அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! எனக்கு ஒரு தேவை உள்ளது என்று சொன்னார். அவர்கள் அவரிடம் மக்கள் அல்லது மக்களில் சிலர் சிறு துயில் கொள்ளும் வரை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் மக்களுக்கு தொழுகை நடத்தினர்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் சாபித் அல்புனானீ ஆவார். இவர் உலூவைப் பற்றி இதில் குறிப்பிடவில்லை.
ஹதீஸ் எண்: 202
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் ஸுஜுது செய்வார்கள். பிறகு உலூச் செய்யாமலேயே குறட்டை விட்டவாறு (ஸஜ்தாவில்) உறங்குவார்கள். பிறகு எழுந்து தொழுவார்கள். அவர்களிடம் நான் 'உறங்கிய நீங்கள் உலூச் செய்யாமல் தொழுதீர்களே! என்று வினவினேன். 'படுத்து உறங்கியவர் தான் உலூச் செய்ய வேண்டும்' என்று பதிலளித்தனர்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
உஸ்மான், ஹன்னாத் ஆகிய அறிவிப்பாளர்கள் 'ஏனெனில் (ஒருவர்) படுத்து உறங்கும் போது மூட்டிணைப்புகள் தளர்வுறுகின்றன (அதனால் காற்று வெளியேற வாய்ப்புண்டு) என்று கூடுதலாக அறிவிக்கின்றனர்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
'படுத்து உறங்கியவர் தான் உலூச் செய்ய வேண்டும்' என்ற அவரது அறிவிப்பு முன்கரான நிராகரிக்கப்பட்ட ஹதீஸ் ஆகும். கதாதாவிடமிருந்து யசீத் அபூகாரித் தாலனியை தவிர வேறு யாரும் இதை அறிவிக்க வில்லை.இதன் ஆரம்பத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து பெருங்குழுவினரே அறிவிக்கின்றனர். அவர்கள் யசீத் கூறியதிலிருந்து எதையுமே குறிப்பிடவில்லை.
'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (உள்ளமும் சேர்ந்து உறங்குவதை விட்டும்) பாதுகாக்கப்பட்டவர்களாவார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
'எனது கண்கள் உறங்கும், எனது உள்ளம் உறங்காது' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஷுஃபா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
கதாதா அவர்கள் அபுல் ஆலியாவிடமிருந்து செவியுற்றவை நான்கு ஹதீஸ்களை மட்டும் தான். அவை யூனுஸ் பின் மத்தா அவர்கள் தொடர்பான ஹதீஸ், தொழுகை தொடர்பான இப்னு உமர் (ரலி) ஹதீஸ், நீதிபதிகள் மூவர் என்ற ஹதீஸ், எனக்கு விருப்பமானவர்கள் என்னருகில் உள்ளனர். அவர்களில் உமர் (ரலி) ஆவார் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆகியவையாகும்.இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
யசீத் அபூகாலித் தாலானியின் ஹதீஸை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். இதை அவர்கள் மறுக்கும் விதமாக என்னை கடிந்து கொண்டார்கள். அதோடு கதாதா அவர்களின் அறிவிப்பாளர்கள் கூறாததை அவர்கள் கூறியதாக அவர்களின் மீது புகுத்திச் சொல்ல யசீத் அபூகாலித் தாலானிக்கு என்ன அவசியம் ஏற்பட்டு விட்டது? என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் இதை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. (காரணம் இது பலவீனமாகும்)ஹதீஸ் எண்: 203
'ஆசன வாயின் கட்டுப்பாடு கண்களாகும். யார் உறங்கி விட்டாரோ அவர் உலூச் செய்து கொள்வாராக' என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.பாடம்: 81 கழிவுப் பொருள்களை காலால் மிதித்தால்!
ஹதீஸ் எண்: 204
கழிவுப் பொருள் காலால் மிதி பட்டால் நாங்கள் உலூச் செய்ய மாட்டோம். (தொழும் போது எங்களுடைய) தலைமுடி, ஆடை (தரையில் விழுவதை) நாங்கள் தடுக்க மாட்டோம்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள்.
பாடம்: 82 தொழும் போது உலூ நீங்கி விடுதல்
ஹதீஸ் எண்: 205
'உங்களில் ஒருவருக்கு தொழுகையில் காற்று விட்டால் அவர் (தொழுகையை விட்டு விட்டு) உலூச் செய்து திரும்பத் தொழுவாராக!' என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.பாடம்: 83 மதீ (இச்சை நீர்) வெளிப்படுதல்
ஹதீஸ் எண்: 206
எனக்கு (மதீ) இச்சை நீர் அதிகமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் என் முதுகு ஒடிகின்ற (குளிர் வேதனையினால்) அளவிற்கு அடிக்கடி குளித்துக் கொண்டிருந்தேன். இதை நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் 'நீ அவ்வாறு வெளிப்படுவதை கண்டால் உனது ஆண்குறியை கழுவிக் கொள். பிறகு தொழுகைக்கு நீ உலூச் செய்வது போல் உலூச் செய்து கொள்க! உனக்கு இந்திரியம் வெளிப்பட்டால் குளித்துக் கொள்க!' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அலீ (ரலி) அவர்கள்.
ஹதீஸ் எண்: 207
ஒருவர் தன்னுடைய மனைவியை நெருங்கும் போது அதனால் அவருக்கு மதீ வெளிப்பட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் மகளார் எனக்கு மனைவி என்பதால் அவர்களிடம் இதை நான் கேட்க வெட்கமடைகிறேன்' எனக் கூறி அலீ (ரலி) அவர்கள் மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கும்படி சொன்னார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அவர்கள் 'உங்களில் ஒருவர் இதைக் கண்டால் தனது மர்ம உறுப்பில் நீர் தெளித்து, தொழுகைக்கு உலூச் செய்வது போன்று அவர் உலூச் செய்வாராக!' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள்.
ஹதீஸ் எண்: 208
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டதாக இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸைப் போன்று அறிவிக்கின்றார். அதை மிக்தாத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவிய போது 'அவர் தனது ஆண்குறியையும் விரையையும் கழுவிக் கொள்ளட்டும்' என்று பதிலளித்ததாகவும் அதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.இமாம் அபூதாவூத் அவர்கள் கூறுகின்றார்கள்:
இதை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அலீ, மிக்தாத் ஆகியோர் வாயிலாக தன் தந்தை மூலம் ஹிஷாம் அவர்கள் அறிவிக்கின்றார். ஹிஷாம் அவர்களிடமிருந்து சவ்ரீ அவர்களும் ஒரு பெருங்குழுவினரும் அறிவிக்கின்றனர்.ஹதீஸ் எண்: 209
அதே ஹதீஸ் இங்கும் இடம் பெறுகின்றது.இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக அறிவிக்கின்ற ஹிஷாம் அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை முபல்லல் பின் புலாலா, ஒரு பெருங்குழுவினர், சவ்ரி, இப்னு உஐன் ஆகியோர் அறிவிக்கின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து விரைகளை என்று குறிப்பிடாமல் மிக்தாத் அவர்களிடமிருந்து தன் தந்தை வழியாக அறிவிக்கின்றார்.ஹதீஸ் எண்: 210
நான் அதிகமாக மதி வெளிப்படுவதால் சிரமத்தை அடைந்தேன். அதிகமாக குளித்தேன். இதை நான் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவிய போது 'இதற்காக நீ உலூச் செய்வதே போதுமானதாகும்' என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! ஆடையில் மதீ பட்டுவிட்ட பகுதியை என்ன செய்வது? என்று நான் கேட்ட போது 'ஒரு கையளவு நிரள்ளி அது உன் ஆடையில் கலந்து விட்டது என்று நீ காணுமளவுக்கு தண்ணீர் தெளிப்பது உனக்கு போதுமாகும்' என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.அறிவிப்பவர்: ஸுஹைல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள்.
Pages
▼
Muhammad(pbuh)
▼