Pages

Muhammad(pbuh)

ஹதீஸ் எண்: 351
யார் ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பைப்போல் குளித்து விட்டு (முதல் நேரத்தில்) செல்கின்றாரோ அவர் ஒட்டகையை தர்மம் செய்தவர் போலாவார். யார் இரண்டாம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு மாட்டை தர்மம் செய்தவரை போலாவார். யார் மூன்றாம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு ஆட்டை தர்மம் செய்தவரை போலாவார். யார் நான்காம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு கோழியை தர்மம் செய்தவரை போலாவார். யார் ஐந்தாம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு முட்டையை தர்மம் செய்தவரை போலாவார். இமாம் (உரை நிகழ்த்த) புறப்பட்டு வந்து விடும் போது உரையை செவியுறுவதற்காக மலக்குகள் வந்து விடுகின்றனர்.

அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி) அவர்கள்,

(புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

பாடம்: 130 ஜும்ஆ தொழுகையும் குளிப்பை விட சலுகையும்

ஹதீஸ் எண்: 352
மக்கள் கடுமையான உழைப்பில் ஈடுபட்டு விட்டு (வியர்வை நாற்றத்துடன்) அப்படியே ஜும்ஆவிற்கு வரும் வழக்கத்திலிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் குளித்து விட்டு (ஜும்ஆவிற்கு) வந்தால் நல்லாயிருக்குமே என்று போதிக்கப்பட்டது.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

(குறிப்பு: இது போன்ற ஹதீஸ் புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 353
ஈராக் நாட்டவர் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, இப்னு அப்பாஸே ஜும்ஆ நாளன்று குளிப்பு கடமை என்றா கருதுகின்றீர்கள்? என்று கேட்டனர். அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு அதற்கு பதில் கூறினார்கள். யார் குளிக்கின்றாரோ அவருக்கு அது தூய்மையானதும் சிறந்ததுமாகும். யார் குளிக்கவில்லையோ அவருக்கு அது கடமையில்லை. குளிப்பு எப்படி ஆரம்பமானது என்று உங்களுக்கு நான் அறிவிக்கின்றேன். மக்கள் கடுமையான வறுமையின் பிடியிலிருந்தார்கள். கம்பளியை அணிந்து கொண்டும், தங்கள் முதுகுகளில் சுமைகளை சுமந்து கொண்டுமிருந்தனர். அவர்களது (அன்றைய) பள்ளி நெருக்கடியானதாகவும் (பக்கச்சுவர்கள் போதிய உயரமில்லாமல் கட்டையாகவும் இருந்ததால்) முகடு தாழ்வானதாகவும் இருந்தது. அது (பேரீத்தம் பழ நாரில் வேயப்பட்ட) கூரை தான். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் வெப்பமிகுந்த ஒரு நாள் புறப்பட்டு வந்தார்கள். மக்கள் அந்த கம்பளி ஆடைகளில் வியர்த்து போயிருந்தனர். அவர்களிடமிருந்து துர்வாடை கிளம்பி இதனால் ஒருவர் இன்னொருவரை சங்கடமடையச் செய்தனர். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த வாடையை நுகர நேரிட்டதும் 'மக்களே! இந்த (ஜும்ஆ நாள் வந்து விட்டால் குளித்துக் கொள்ளுங்கள், உங்களில் ஒருவர் தன்னிடத்தில் இருக்கும் எண்ணெய் வாசனை திரவியங்களிலிருந்து மிகச் சிறந்ததை பூசிக் கொள்வாராக என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) (மேலும்) அவர்கள் கூறுகின்றார்கள்: எவனது திருப்பெயர் உயர்ந்து விட்டதோ அந்த அல்லாஹ் பொருளாதாரத்தை வழங்கினான். மக்கள் கம்பளி அல்லாத ஆடைகளை அணியலாயினர். (போதுமான பணியாளர்களைப் பெற்று) கடின உழைப்பிலிருந்து காக்கப் பெற்றனர். அவர்களது பள்ளி விரிவுபடுத்தப்பட்டது. வியர்வையினால் அவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு அளித்துக் கொண்டிருந்த சங்கடமும் தீர்ந்து போயிற்று.

அறிவிப்பவர்: இக்ரிமா.

ஹதீஸ் எண்: 354
யார் உலூச் செய்கிறாரோ அது நல்லது தான் யார் குளிக்கின்றாரோ அது மிகச் சிறந்தது ஆகும் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சமுரா (ரலி) அவர்கள்.

பாடம்: 131 இஸலாத்தை தழுவியவர் குளிப்பது.

ஹதீஸ் எண்: 355
நான் இஸ்லாத்தை தழுவ எண்ணி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் எனக்கு தண்ணீர், எலந்தை இலையை கொண்டு குளிக்கும்படிக் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: கைஸ்பின் ஆஸிம் (ரலி) அவர்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதி, நஸயீயிலும் இடம் பெறுகின்றது.)

ஹதீஸ் எண்: 356
(எனது பாட்டனார்) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் முஸ்லிமாகி விட்டேன் என்றார். உடனே அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிராகரிப்பு என்ற முடியை அகற்றி விடுதலை பெறுக! (முடியை) மழித்துக் கொள்க! என்று கூறினார்கள்.

எனது பாட்டனாருடன் இருந்த இன்னொருவருக்கு 'நிராகரிப்பு எனும் முடியை களைந்து, கத்னா செய்து கொள்வீராக!' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எனது பாட்டனார் அல்லது ஒருவர் எனக்கு அறிவிக்கின்றார்.

அறிவிப்பவர்: உசைம்.