Pages

Muhammad(pbuh)

பாடம்: 66 ஒருவர் ஒரே உலூவில் பல தொழுகை தொழுதல்

ஹதீஸ் எண்: 171
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் உலூவைப் பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் 'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்வார்கள். ஆனால் நாங்கள் ஒரே உலூவில் பல தொழுகைகளை தொழுது கொள்வோம்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ அஸத் பின் அம்ர் (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 172
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளின் போது ஒரே உலூவில் ஐந்து நேரத் தொழுகைகளை தொழுதார்கள். தனது காலுறைகளுக்கு மஸ்ஹுசெய்து கொண்டார்கள். அப்போது அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள் 'நீங்கள் இதுவரை செய்திராத ஒன்றை இன்று நீங்கள் செய்யக் காண்கிறேனே? (ஏன்?) என்ற வினவியதும் 'நான் வேண்டுமென்றுதான் செய்தேன்' என்று அண்ணலார் பதிலளித்தார்கள்.

பாடம்: 67 உறுப்பில் ஒரு பகுதி நனையாமல் விடுபடுதல்

ஹதீஸ் எண்: 173
'அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் உலூச் செய்து விட்டு தனது பாதங்களில் ஒரு நக அளவு நனையாமல் விட்டவராக வந்தார். அவரை நோக்கி அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் 'நீர் திரும்பிச் சென்று உமது உலூவை அழகுறச் செய்க' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள ஜரீர் பின் ஹாசிம் என்பாரிடமிருந்து அறிய முடியவில்லை. இதை இதே வரிசையில் இடம் பெற்றுள்ள இப்னு வஹப் மட்டுமே அறிவிக்கின்றார்.

'நீர் திரும்பிச் சென்று உமது உலூவை அழகுறச் செய்க' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் வாயிலாக மஃமல் அவர்களிடமிருந்து இதைப் போன்று அறிவிக்கப்படுகின்றது.

ஹதீஸ் எண்: 174
அறிவிப்பாளர் பெயர்கள் மாற்றத்துடன் மேலுள்ள ஹதீஸே இங்கு இடம் பெறுகிறது.

ஹதீஸ் எண்: 175
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருவரை தொழுது கொண்டிருக்கக் கண்டார்கள். அவருடைய மேற்பாகத்திற்கு மேல் திர்ஹம் (நாணயம்) அளவிற்கு நீர்படாமல் வெண்மை தெரிந்தது. அவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உலூவையும் தொழுகையையும் மீட்டுமாறு உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: நபித்தோழர்களில் ஒருவர்.

பாடம்;: 68 ஹதஸ் ஆகிவிட்டோமோ என்று ஐயம் கொள்தல்

ஹதீஸ் எண்: 176
ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது காற்று பிரிவது போன்று உணர்வது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் காற்று பிரிந்த சப்தத்தை அல்லது அதன் நாற்றத்தை உணரும் வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

ஹதீஸ் எண்: 177
உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தனது வயிற்றுக்குள் இறைச்சலை உணர்ந்து தான் ஹதஸ் ஆகிவிட்டோமா அல்லது ஹதஸ் ஆகவில்லையா என்று சந்தேகம் கொண்டால் அவர் சப்தத்தை கேட்கின்ற வரை அல்லது நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

பாடம்: 69 முத்தமிட்டால் உலூ முறியுமா?

ஹதீஸ் எண்: 178
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னை முத்தமிட்டார்கள். அவர்கள் உலூச் செய்யவில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
இந்த ஹதீஸ் முர்ஸலாகும். காரணம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்ற இப்றாகீம் என்பார் அன்னையாரிடமிருந்து எதையும் செவியுறவில்லை. அபூஅஸ்மா என்று இடுகுறிப் பெயரால் அழைக்கப்படும் இப்றாகீம் அத்தைமூ என்பார் நாற்பது வயதை அடையும் முன்பே இவர் மரணித்து விட்டார் என்று இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.

இவ்வாறே இந்த ஹதீஸை பர்யாபீ அவர்களும் மற்றவர்களும் அறிவிக்கின்றனர் என்று இமாம் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஹதீஸ் எண்: 179
அண்ணல் நபி (ஸல்) தனது மனைவியரில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு பிறகு உலூச் செய்யாமல் தொழச் சென்றார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

இதை அன்னையாரிடமிருந்து அறிவிக்கின்ற உர்வா அவர்கள் தெரிவிக்கின்றார். 'உங்களைத் தவிர அது வேறு யாராகவும் இருக்க முடியாதே' என்று நான் வினவியதற்கு அன்னையார் அவர்கள் சிரித்தார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
இவ்வாறே இதை சாயிதா என்பவரும் அப்துல் ஹமீது அல்ஹிம்மானி அவர்களும் சுலைமான் அல்அஃமஷ் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்கள்.

ஹதீஸ் எண்: 180
இதே ஹதீஸை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா அல்முஸ்னீ என்பார் வாயிலாக எமது அறிவிப்பாளர்கள் அறிவித்தனர் என்று அஃமஷ் அறிவிக்கின்றார்.

('எமது அறிவிப்பாளர்கள்' என்று குறிப்பிடப்படுபவர்களில் ஹபீப் பின் உபைப் சாபித் என்பாரை தவிர வேறு யாரும் அறியப்படாதவர்கள் ஆவர்.)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
ஹபீப் என்பாரிடமிருந்து அஃமஷ் அறிவிக்கும் இந்த ஹதீஸையும் உதிரப்போக்குள்ளவள் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று இதே இஸ்நாத் மூலம் அஃமஷ் அறிவிக்கும் ஹதீஸையும் இவ்விரண்டு ஹதீஸ்களும் பலவீனமானவையே என்று மக்களுக்கு அறிவித்திடுக என்று யஹ்யா பின் சயீத் அல்கதான் என்பார் ஒருவருக்கு தெரிவித்தார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
'உர்வா அல் முஸ்னீ என்பாரிடமிருந்து மட்டும் தான் ஹபீப் அறிவிக்கின்றார். அதாவது இவர் உர்வா பின் ஜுபைர் அவர்களிடமிருந்து எதையும் அறிவிப்பார்களுக்கு அறிவிக்க வில்லை' என்று சவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்றது.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா பின் ஜுபைர், ஹபீப் ஆகியோர் வழியாக ஹம்ஸா அச்சய்யாத் அவர்கள் சரியான ஹதீஸை அறிவிக்கின்றனர்.