Pages

Muhammad(pbuh)

மருத்துவம்

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.

1962. அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நோய் நிவாரணம் மூன்றில்.

1963. மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

தேனால் சிகிச்சையளிப்பதும், 'தேனில் மக்களுக்கு நிவாரணம் உள்ளதும்.

1964. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது'' என்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.

கருஞ்சீரகம்.

1965. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதையில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று கூறினார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்: 'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.

வெண்கோஷ்டம் மற்றும் செய்கோஷ்டம் ஆகியவற்றால் வாசனை பிடிப்பது.

1966. நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார்.

நோயின் காரணத்தால் குருதி உறிஞ்சி எடுப்பது.

1967. அபூ உபைதா ஹுமைத் அத்தவீல்(ரஹ்) கூறினார்: அனஸ்(ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அபூ தய்பா என்பவர் குருதி உறிஞ்சி வாங்கினார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு(க் கூலியாக) இரண்டு 'ஸாஉ' உணவு கொடுத்தார்கள். மேலும், அபூ தய்பாவின் எசமானர்களுடன் நபி(ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) அவர்கள் குறைத்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும், வெண்கோஷ்டமும்தான். மேலும், உங்கள் குழந்தைகளை (அவர்களின்) அடிநாக்கு அழற்சியைப் போக்க (தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் அவசியம் கோஷ்டத்தைப் பயன்படுத்துங்கள்'' என்று கூறினார்கள்.

(மருத்துவ சிகிச்சைக்காக) சூடிட்டுக் கொள்வது அல்லது பிறருக்குச் சூடிடுவது. மேலும், சூடிட்டுக் கொள்ளாமல் இருப்பதன் சிறப்பு.

1968. ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) கூறினார் : இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) 'கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் ஹுஸைன் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்:) நான் இதை ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்று கூறினார்கள் :(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், 'இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?' என்று கேட்டேன். அப்போது, 'அல்ல. இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது 'அடிவானத்தைப் பாருங்கள்'' என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், 'அடிவானங்களில் இங்கும் அங்கும் பாருங்கள்'' எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். 'இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது (விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்து விட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். 'நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்'' என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, '(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, 'அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, 'அவர்களில் நானும் ஒருவனா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக் கொண்டுவிட்டார்'' என்று கூறினார்கள்.

தொழுநோய்.

1969. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. 'ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

'ஸஃபர்' எனும் வயிற்று நோய் ஒரு தொற்று நோயன்று.

1970. அபூ ஹுரைரா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'தொற்று நோய் கிடையாது. 'ஸஃபர்' தொற்று நோயன்று. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது'' என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், 'இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?' என்று திருப்பிக் கேட்டார்கள்.

1971. ஹம்மாத் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார் : அய்யூப்(ரஹ்) அவர்களுக்கு அபூ கிலாபா(ரஹ்) அவர்களின் (ஹதீஸ் தொகுப்பு) நூல்கள் வாசித்துக் காட்டப்பட்டன. அவற்றில் அய்யூப்(ரஹ்) (அபூ கிலாபா(ரஹ்) அவர்களிடமிருந்து) அறிவித்த ஹதீஸ்களும் இருந்தன. அய்யூப்(ரஹ்) அவர்களுக்கு (முன்பே) வாசித்துக் காட்டப்பட்ட ஹதீஸ்களும் இருந்தன. அந்த நூலில் (பின்வரும்) இந்த ஹதீஸும் இடம் பெற்றிருந்தது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்: அபூ தல்ஹா(ரலி) அவர்களும் அனஸ் இப்னு நள்ர்(ரலி) அவர்களும் எனக்கு (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட விலா வலிக்காக) சூடிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) தம் கையால் எனக்குச் சூடிட்டார்கள். அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக் கடிக்காகவும், காது வலிக்காகவும் ஓதிப்பார்க்க அனுமதியளித்தார்கள். அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்: (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட) விலா வலிக்காக எனக்குச் சூடிடப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உயிரோடியிருந்தார்கள். அந்த நேரத்தில் அபூ தல்ஹா(ரலி), அனஸ் இப்னு நள்ர்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் என்னுடன் இருந்தனர். அபூ தல்ஹா(ரலி)தாம் எனக்குச் சூடிட்டார்கள்.

1972. ஃபாத்திமா பின்த் முன்திர்(ரஹ்) கூறினார் : அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் தம்மிடம் கொண்டு வரப்பட்டால் அவளுக்காக பிரார்த்தனை புரிந்துவிட்டு தண்ணீரை எடுத்து அவளுடைய ஆடையின் உட்பகுதியில் தெளிப்பார்கள். மேலும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காய்ச்சலைத் தண்ணீரால் தணிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்'' என்றும் கூறினார்கள்.

1973. ஹஃப்ஸா பின்த் சீரின்(ரஹ்) கூறினார்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) என்னிடம், '(உன் சகோதரரான) யஹ்யா இப்னு சீரின் எதனால் இறந்தார்?' என்று கேட்டார்கள். நான், 'கொள்ளைநோயால் இறந்தார்'' என்று பதிலளித்தேன். அவர்கள், 'கொள்ளைநோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள்.

கண்ணேறுக்கு ஓதிப்பார்ப்பது

1974. ஆயிஷா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி 'கட்டளையிட்டார்கள்.

1975. உம்மு ஸலமா(ரலி) கூறினார் : நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், 'இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது'' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாம்புக்கடி மற்றும் தேள் கடிக்கு ஓதிப் பார்ப்பது.

1976. அஸ்வத் இப்னு யஸீத் அந்நகஈ(ரஹ்) கூறினார் : ஆயிஷா(ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்'' என்று கூறினார்கள்.

1977. ஆயிஷா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்கும்போது 'பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா வரீகத்து பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா'' என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்... எங்கள் பூமியின் மண்ணும் எங்களில் சிலரின் உமிழ் நீரும் (கலந்தால்) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் உள்ள நோயாளியைக் குணப்படுத்தும்.)

நற்குறி.

1978. அபூ ஹுரைரா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்'' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், 'நீங்கள் செவியுறுகிற நல்ல (மங்கலகரமான) சொல்தான்'' என்று பதிலளித்தார்கள்.

சோதிடம்.

1979. அபூ ஹுரைரா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹுதைல்' குலத்துப் பெண் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது ஒரு கல்லை எறிய அது அவளுடைய வயிற்றில் பட்டுவிட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்றுவிட்டாள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் இந்த வழக்கைக் கொண்டு வந்தனர். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாகத் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். அப்போது குற்றம் புரிந்த அப்பெண்ணின் காப்பாளர்(கணவர்), உண்ணவோ பருகவோ, மொழியவோ அழவோ முடியாத ஒரு சிசுக்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது இறைத்தூதர் அவர்களே! இதைப் போன்றவை தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இவர் (சாதுர்யமாகவும் அடுக்கு மொழியிலும் பேசுவதில்) குறிகாரர்களின் சகோதரர்களில் ஒருவர்'' என்று கூறினார்கள்.

சில சொற்பொழிவுகளில் ஈர்ப்பு உள்ளது.

1980. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் : இரண்டு மனிதர்கள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து வந்து உரையாற்றினார்கள். அவ்விருவரின் (சொல்லெழில் மிக்க) சொற்பொழிவைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'சில சொற்பொழிவில் கவர்ச்சி உள்ளது' அல்லது 'சொற்பொழிவுகளில் சில கவர்ச்சியாகும்'' என்று கூறினார்கள்.

தொற்று நோய் கிடையாது.

1981. வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும், விஷம் அருந்துவதும்.

1982. மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால்...

1983. உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்து விடுங்கள். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.