Pages

Muhammad(pbuh)

சூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல்

சூனியம் இறைநிராகரிப்புச் செயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் என்பது எந்தப் பயனையும் பெற்றுத்தராத, மாறாக தீமைகளையே விளைவிக்கும் பாவச்செயலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ

அவர்களுக்கு எந்தப் பயனும் தராத, அவர்களுக்கு துன்பமிழைக்கும் ஒன்றை- சூனியத்தை- கற்றுக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 2:102)


وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى

சூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)


1) நிச்சயமாக சூனியம் செய்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்:


وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ

மேலும் ஸுலைமான் (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை. எனினும் நிச்சயமாக ஷைத்தான்கள் தான் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சூனியத்தையும் பாபிலோ(ன் நகரி)னில் ஹாரூத், மாரூத் எனும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(தாகக் கூறி, பல)வற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மேலும் அவ்விருவரும் நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். ஆதலால் (இதைக்கற்று) நீ காஃபிராகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன் 2:102)


சூனியம் செய்பவர்களை கொலை செய்வதே மார்க்கத்தீர்ப்பாகும். சூனியத்தால் சம்பாதிப்பது ஹராமான, இழிவான செயலாகும். அறிவிலிகளும் அநியாயக்காரர்களும் பலவீனமான ஈமான் கொண்டவர்களும் தங்களின் எதிரிகளை சூனியத்தின் மூலம் பழிவாங்குவதற்காக சூனியக்காரர்களிடம் செல்கின்றனர். அநீதம் செய்தவர்கள் அதன் எதிர்விளைவாக தங்களை சூனியம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக சூனியக்காரர்களிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.


குல்அவூது பிறப்பில் ஃபலக், குல்அவூது பிறப்பின் னாஸ் மற்றும் இவைபோன்ற சில திருமறை வசனங்களின் மூலம் -மார்க்கம் அனுமதித்த முறையில்- அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடக் கடமைப்பட்டவர்கள் ஷிர்க்கான, ஹராமான வழிகளில் எங்கோ ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.


2) நிச்சயமாக ஜோஸியக்காரர்களும் குறிகாரார்களும் மகத்தான அல்லாஹ்வை நிராகரிக்கும் காஃபிர்களாவார்கள்.


மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறியமுடியாதபோது இவர்கள் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றார்கள். மூட நம்பிக்கையுடையவர்களிடம் பணம் பறிப்பதற்காக பலவழி முறைகளை கையாளுகிறார்கள். மண்ணில் கோடிட்டுப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பாத்திரத்தில் நீரூற்றிப் பார்ப்பது, வெற்றிலையில் மைதடவிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்த்து மறைவானவற்றைக் கூறுவது போன்ற பலவழிகளில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.


இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 முறை பொய்யுரைப்பார்கள். ஆனால் மதிமயங்கியவர்கள். அவர்கள் ஒரு முறை கூறிய உண்மையை வைத்துக் கொண்டு இட்டுக்கட்டி பொய்யுரைக்கும் அனைத்தையும் உண்மையென நம்பிவிடுகின்றனர். திருமணம், வியாபாரம் மற்றும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் இன்ப, துன்பங்கள் பற்றி கேட்பதற்காகவும், காணாமல்போன பொருட்களைத் திரும்பப் பெறவும் அவர்களிடம் செல்கிறார்கள்.


3) சூனியம் மற்றும் ஜோஸியக்காரனிடம் சென்று, அவன் கூறுவதை உண்மை என நம்புபவன் இஸ்லாத்தை விட்டும் வெளியாகிவிட்ட காஃபிர் ஆவான்.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:


مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ


சூனியக்காரனிடமோ, ஜோஸியக்காரனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகின்றவன், நிச்சயமாக முஹம்மது நபி(ஸல்)அவர்களின் மீது இறக்கப்பட்ட (மார்க்கத்)தை நிராகரித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல்: அஹமத் 9171)


இவர்களுக்கு மறைவான ஞானமெல்லாம் கிடையாது என்று தெரிந்து கொண்டே அவர்களை சோதிப்பதற்காகவோ அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ அவர்களிடம் செல்பவன் காஃபிராகி விடமாட்டான். எனினும் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً

யாரேனும் குறிகாரனிடம் வந்து அவனிடம் ஏதேனும் கேட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: ஸஃபிய்யா -ரலி, நூல்: முஸ்லிம் 4137)


அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் நாற்பது நாட்களும் தொழுவது அவன் மீது கடமையாகும். மேலும் அவன் தான் செய்த இப்பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.