Pages

Muhammad(pbuh)

கடன்

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

"இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி ஸல் அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி ஸல் அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி ஸல் அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி ஸல் அவர்களிடம் வந்து, 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டதற்கு நபி ஸல் அவர்கள், 'ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்" என்றார்கள். நூல்: புகாரி



எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி ஸல் அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி ஸல் அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள்.


நபித்தோழர்கள், 'அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள், 'அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்" என்று கூறினார்கள். நூல்: புகாரி


ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது.
என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி