Pages

Muhammad(pbuh)

தொழுகை - கடமையும் சிறப்பும்

இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.

1- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவது,

2- தொழுகையை நிலை நாட்டுவது

3- ரமளான் மாதம் நோன்பு நோற்பது

4- ஹஜ் செய்வது

5- ஜகாத் கொடுப்பது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)

தொழுகையை நிலைநாட்டும்படி அல்லாஹ் சுமார் 80 இடங்களில் அல்குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். அதில் சில வசனங்களையும் தொழுகையைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் சிலவற்றையும் தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் ஈருலகிலும் வெற்றிபெறும் தொழுகையாளிகளாக ஆக்கியருள்வானாக!

1- தொழுகைக் கடமை
நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீர் வணங்குவீராக! என்னை நினைவு கூறும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன் 20:14)

அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை வணங்க வேண்டும் மேலும் தொழுகையை நிலைநாட்டவேண்டும் மேலும் ஜகாத்தை வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.
(அல்குர்ஆன் 98:5)

நபி(ஸல்) தனது மரண வேளையில்கூட "தொழுகை! தொழுகை!" என கூறிக் கொண்டிருந்தார்கள்.
(அறிவிப்பவர் : உம்மு ஸலமா-ரலி, நூல் : இப்னுமாஜா)

குழந்தைகள் ஏழு வயதை அடையும் போது அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்! பத்து வயதை அடைந்து விட்டால் அடித்தாவது தொழ வையுங்கள்! என நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : அபுதாவூத்)

2- போர்க்களத்திலும் தொழுகை

(பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 2:239)

3- உரிய நேரத்தில் தொழவேண்டும்
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்கள் மீது கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்! (தொழுகையின் போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2:238)

4- மானக்கேடை விட்டும் விலகிட

தொழுகையை நிலை நிறுத்துவீராக, நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன் 29:45)

5- தொழுகையாளியே வெற்றியாளர்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்குர்ஆன் 23.1-2)

தூய்மையடைந்தவன் திட்டமாக வெற்றி பெறுகிறான். மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். (அல்குர்ஆன் 87:14-15)

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்! எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் 2:45)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)

6- சுவனத்தின் வாரிசுதாரர்

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங்கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)

யார் தொழுகையை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் இருக்கும். யார் அதை பேணிக்கொள்ள வில்லையோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, அத்தாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. மாறாக 'அவர் மறுமை நாளில் -காஃபிர்களாகிய- காருன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலப் ஆகியவர்களுடன் இருப்பார்', என நபி (ஸல்) எச்சரித்தார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் -ரலி, நூல்: அஹ்மத்)

மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்குங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, நூல் : இப்னுமாஜா)

காலையிலோ, மாலையிலோ பள்ளிவாயிலுக்குச் செல்பவருக்காக - அவர் காலையிலும், மாலையிலும் செல்லும் போதெல்லாம் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு தங்குமிடத்தை அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

சூடு தனிந்த நேரத்திலுள்ள (ஃபஜ்ர் மற்றும் அஸர் ஆகிய) இரு தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூமூஸா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளுச் செய்து, பிறகு முகம் மற்றும் மன ஈடுபாட்டுடன் இரண்டு ரகஅத்கள் தொழுவாரானால் அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர் -ரலி, நூல் : முஸ்லிம் )

7- வேண்டாம், நரகக் கேடு

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள் (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள் (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
(அல்குர்ஆன் 19:59)

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். (அல்குர்ஆன் 107:4-5)

8- மறுமை நாளில் முதல் விசாரணை!
மறுமையில் (செயல்களை குறித்து) முதல் விசாரணை தொழுகையைக் குறித்தே இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபுஹுரைரா-ரலி, நூல் : அபுதாவூத்)

9- நீங்கள் முஸ்லிம்கள்தானா?

அடியானுக்கும் இணைவைத்தலுக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் -ரலி, நூல் : முஸ்லிம்)

நமக்கும் (இறைநிராகரிப்பாளராகிய) அவர்களுக்கும் மத்தியிலுள்ள உடன்படிக்கை தொழுகையாகும். யார் அதை விட்டு விடுவாரோ அவர் காஃபிராகி விட்டார் என நபி(ஸல்) கூறினார்கள்.
(நூற்கள் : நஸயீ, திர்மிதீ, அபுதாவூத்);

10- பிரார்த்தனை

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءَ، رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ.

ரப்பிஜ்அல்னீ முகீமஸ் ஸலாத்தி வமின் துர்ரிய்யத்தீ ரப்பனா வதகப்பல் துஆ. ரப்பனஃக்ஃபிர்லீ வலிவாலிதைய்ய வலில் முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்.

(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! எங்கள் இரட்சகனே! எனக்கும் என் பெற்றோருக்கும் (மற்ற) விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் (மறுமை) நாளில் மன்னித்தருள்வாயாக! (அல்குர்ஆன் 14:40)