Pages

Muhammad(pbuh)

முஹம்மது நபி (ஸல்) வரலாறு பகுதி-2

Q51) துறவி பஹீரா என்பவர் யார்?

நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்தபோது ஷாம் நாட்டின் புஷ்ரா நகரில் வசிந்து வந்தவர் தான் ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி. அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்’ என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், அபுதாலிப் அவர்களுடன் ஷாம் தேசம் சென்ற பன்னிரண்டு வயது சிறுவரான நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக இந்த பஹீரா என்ற துறவி வெளியில் வந்தார்.

Q52) துறவி பஹீரா (ஜர்ஜீஸ்), சிறுவராக இருந்த நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கூறியது என்ன?

அபுதாலிப் அவர்களுடன் சென்ற வியாபாரக் கூட்டம் புஸ்ரா (ஷாம் தேசம்) சென்றதும், துறவி பஹீரா (ஜர்ஜீஸ்) சிறுவராக இருந்த நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு ‘இதோ உலகத்தாரின் தலைவர்! இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்’ என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் ‘இது எப்படி உமக்குத் தெரியும்?’ என வினவினர். அவர் ‘நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று கூறினார். பிறகு அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

Q53) நபித்துவத்திற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கலந்துக் கொண்ட போர் எது?

நபி (ஸல்) அவர்களின் இருபதாவது வயதில் உக்காள் சந்தையில் குறைஷியரும் கினானாவும் கைஸ் அய்லான் குலத்தவருடன் சண்டையிட்டனர். அதற்கு ‘ஹர்புல் ஃபிஜார்’ என்று சொல்லப்படும். இந்தப் போர் புனித மாதத்தில் ஏற்பட்டு அதன் கண்ணியத்தைக் குலைத்து விட்டதால் அதற்கு ‘பாவப்போர்’ எனப் பெயரிட்டனர். நபி (ஸல்) அவர்கள் இதில் கலந்துகொண்டு தந்தையின் சகோதரர்களுக்கு அம்பெடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள்.

Q54) ‘ஹர்புல் ஃபிஜார்’ என்ற போர் நடைபெறக் காரணம் என்ன?

கினானாவைச் சேர்ந்த ‘பர்ராழ்’ என்பவன் கைஸ் அய்லானைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டான். இந்தச் செய்தி உக்காள் சந்தையில் பரவியது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் சண்டையிட்டனர். குறைஷ் மற்றும் பனூ கினானாவுக்கு ‘ஹர்ப் இப்னு உமய்யா’ தலைமை தாங்கினார். போரின் ஆரம்பத்தில் கைஸ் தரப்பினருக்கு வெற்றி கிட்டியது. ஆனால், நடுப் பகலுக்குப்பின் நிலைமை கைஸுக்கு எதிராகத் திரும்பியது. இந்நிலையில் சில குறைஷியர்கள் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பினர். எந்தத் தரப்பில் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டதோ அந்த அதிக எண்ணிக்கைக்கு மட்டும் நஷ்டஈடு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து சமாதானமாயினர்.

Q55) ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ என்றால் என்ன?

‘ஹர்புல் ஃபிஜார்’ என்ற போருக்குப்பின் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ வீட்டில் நடைபெற்ற சிறப்பு மிகு ஒப்பந்தத்திற்கு ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ என்று பெயர். ‘மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப் பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்’ என உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Q56) ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’என்ற உடன்படிக்கைக்கு காரணமான நிகழ்ச்சி எது?

ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன் மக்கா வந்தார். ஸஹ்மாவைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் அவரிடமிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுக்க மறுத்துவிட்டார். பறிகொடுத்தவர் தனது நேச கோத்திரங்களாகிய அப்துத் தார், மக்ஜூம், ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநீதத்தை உரத்த குரலில் கவிதையாகக் கூறினார். அதைக் கேட்ட ஜுபைர் ‘இப்னு அப்துல் முத்தலிப் ஏன் இவ்வாறு இவர் கைவிடப்பட்டார்’ என வினவினார்கள். அப்போதுதான் மேற்கூறப்பட்ட கோத்திரத்தார் இணைந்து இச்சிறப்புமிகு ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். அதன் பின் அனைவரும் ஆஸ் இப்னு வாயிலிடமிருந்து அந்த பாதிக்கப்பட்டவருக்கு அவரது உரிமையை பெற்றுத் தந்தனர்.

Q57) ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’என்ற உடன்படிக்கை குறித்து நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சிலாகித்துக் கூறினார்கள்?

இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாமின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன்.

Q58) நபி (ஸல்) அவர்கள் தமது வாலிபப்பருவத்தில் யாருடன் சேர்ந்து வணிகத்தில் ஈடுபட்டார்கள்?

நபி (ஸல்) அவர்கள், ஸாம்ப் இப்னு அபூஸாம்ப் அல் மக்ஜூமி என்பவருடன் இணைந்து வணிகம் செய்தார்கள். அவருக்கு நம்பிக்கைக்குரிய மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘என் சகோதரரே!, என் தொழில் நண்பரே!’ எனக் கூறி அவரை நபி (ஸல்) அவர்கள் வரவேற்றார்கள்.

Q59) நபி (ஸல்) அவர்களுடன் வணிகத்திற்காக ஷாம் தேசத்திற்கு சென்ற கதீஜா (ரலி) அவர்களுடைய அடிமையின் பெயர் என்ன?

கதீஜா (ரலி) அவர்கள், தமது அடிமை மய்ஸராவை நபி (ஸல்) அவர்களுடன் அனுப்பினார்கள்.

Q60) நபி (ஸல்) அவர்கள் குறித்து கதீஜா (ரலி) அவர்களின் அடிமை மய்ஸரா கூறியது என்ன?

நபி (ஸல்) அவர்களுடன் வணிகத்திற்குச் ஷாம் தேசத்திற்குச் சென்ற மய்ஸரா, அங்கிருந்து திரும்பி வந்ததும் கதீஜா (ரலி) அவர்களிடம், தான் நபி (ஸல்) அவர்களிடம் கண்ட நற்பண்புகள், உயர் சிந்தனை, பேச்சில் உண்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை விவரித்தார்.

Q61) நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க விரும்பிய கதீஜா (ரலி) அவர்கள் தமது விருப்பத்தை யார் மூலமாக தெரிவித்தார்கள்?

கதீஜா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களை மணமுடிக்கும் தனது எண்ணத்தை தோழி நஃபீஸா பின்த் முநப்பிஹ் இடத்தில் தெரிவித்தார். நஃபீஸா நபி (ஸல்) அவர்களிடம் கதீஜாவின் விருப்பத்தைக் கூற நபி (ஸல்) அவர்களும் அதை ஒப்புக் கொண்டார்கள்.

Q62) நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை மணக்கும் போது மஹராக எதைக் கொடுத்தார்கள்?

நபி (ஸல்) அவர்கள் 20 மாடுகளை மஹராகக் கொடுத்தார்கள்.

Q63) கதீஜா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கின்ற காலத்தில் நபி (ஸல்) அவர்கள் வேறு திருமணம் செய்தார்களா?

கதீஜா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கின்ற காலத்தில் நபி (ஸல்) அவர்கள் வேறு திருமணம் செய்யவில்லை! இவர் மரணித்த பின்பே நபி (ஸல்) அவர்கள் வேறு பெண்களை மணமுடித்தார்கள்.

Q64) நபி (ஸல்) அவர்களுக்கு அபுல் காஸிம் என்ற புனைப்பெயர் ஏன் கூறப்படுகிறது?

அன்னை கதீஜாவுக்குப் (ரலி) பிறந்த முதல் குழந்தை காஸிம். இவருடன் இணைத்தே நபியவர்களுக்கு ‘அபுல் காஸிம்’ என்ற புனைப்பெயர் கூறப்படுகிறது.

Q65) கதீஜா (ரலி) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்குரிய வேறு பெயர்கள் யாவை?

அப்துல்லாஹ்வுக்கு தய்யிப், தார் என்ற வேறு பெயர்களும் உண்டு.

Q66) கதீஜா (ரலி) அவர்கள் மூலமாகப் பிறந்த நபி (ஸல்) அவர்களின் பெண்மக்கள் எப்போது மரணமடைந்தார்கள்?

ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம் (ரலி) ஆகிய மூவரும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்து விட்டனர். நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின் ஆறுமாதம் கழித்து ஃபாத்திமா (ரலி) மரணமடைந்தார்.

Q67) நபித்துவத்திற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு குரைஷிகள் கஅபாவை புதுபித்தனர்?

நபித்துவத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஅபாவின் கட்டடம் பாதிப்படைந்தது. அதனால் குரைஷிகள் கஅபாவை புதுப்பித்துக் கட்டினர்.

Q68) குரைஷிகள் கஅபாவைப் புதுப்பித்துக் கட்டும் போது ஏற்பட்ட சர்ச்சையை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள்?

கஅபாவை பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒரு பகுதியைக் கட்ட வேண்டுமென முடிவு செய்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ‘பாகூம்’ என்ற ரோமானிய பொறியியல் வல்லுனரின் மேற்பார்வையில் கட்டத் தொடங்கினர். இறுதியாக, ஹஜ்ருல் அஸ்வதின்’ இடம் வந்தபோது அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது. அது பற்றிய சர்ச்சை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது. அப்போது அபூ உமய்யா இப்னு முகீரா – மக்ஜூமி அம்மக்களிடம், ‘இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர். அவர்கள் ஆவலுடன் காத்திருக்க, நபி (ஸல்) அவர்களே முதலாமவராக நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட அம்மக்கள் ‘இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்’ என்றனர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அதை அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது.

Q69) நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள்

Q70) நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

ஏறத்தாழ பத்து ஆண்டுகள்.

Q71) நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்து இறை தியானத்தில் ஈடுபட்டிருந்த ஹிரா குகையின் அளவு என்ன?

ஹிரா குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது.

Q72) நபித்துவம் அருளப்படப்போவதற்கு அடையாளங்களாக ஆறுமாதங்களாக நடைபெற்ற நிகழ்வுகள் யாவை?

பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தது உண்மையான கனவுகளைக் கண்டார்கள்; அவை அதிகாலையின் விடியலைப் போன்று நிதர்சனமாக நடந்து விடும்; இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழிந்தன. பிறகு தான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக வஹீ இறங்கியது.

Q73) முதல் வஹீ ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக அருளப்பட்டவுடன் அந்த நிகழ்வைக் கண்டு நடுக்கமுற்ற நபி (ஸல்) அவர்களுக்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் எவ்வாறு ஆறுதல் கூறினர்?

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்-குர்ஆனின் 96:1-5 வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக்காட்டிய பிறகு அந்த வசனங்களுடன் இதயம் நடுங்க (தமது துணைவியார்) கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து ‘என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்’ என்றார்கள். கதீஜா (ரழி) நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜாவிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள்.

அதற்கு கதீஜா (ரழி) ‘அவ்வாறு கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (சிக்குண்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்’ என்றார்கள்.

Q74) முதல் வஹீ இறங்கிய செய்தியைக் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு அறிந்த வரகா இப்னு நவ்பல் என்ற கிறிஸ்தவ அறிஞர் கூறியது என்ன?

வரகா கிருஸ்துவராக இருந்தார். அவர் இப்ரானி (ஹிப்ரூ) மொழியை அறிந்தவர்; இன்ஜீல் வேதத்தைக் கற்றவர்; வயது முதிர்ந்தவர்; கண்பார்வையற்றவர்; அவரிடம் கதீஜா (ரழி) ‘என் சகோதரரே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்!’ என்றார். ‘என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்!’ என வரகா கேட்க, நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். அதற்கு வரகா ‘இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு, உங்களது சமூகத்தார் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருக்க வேண்டுமே என்று அங்கலாய்த்தார். நபி (ஸல்) அவர்கள் ‘மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘ஆம்! நீங்கள் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீங்கள் வெளியேற்றப்படும்) அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு பலமான உதவி செய்வேன்’ என்று கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் வரகா குறுகிய காலத்தில் இறந்துவிட்டார்.

Q75) நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டாவது வஹீ அருளப்பட்ட நிகழ்வைக் கூறுக:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா குகையில் ஒரு மாதம் தங்கியிருந்து பிறகு திரும்பினேன். நான் பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கும்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு வலப்பக்கம் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. இடப்பக்கம் பார்த்தேன், எதையும் நான் காணவில்லை. ஆகவே, என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு நான் ஒன்றைக் கண்டேன். ஹிரா குகையில் என்னிடம் வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) வானுக்கும் பூமிக்குமிடையே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் கதீஜாவிடம் சென்று ‘என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்; குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்’ என்று கூறினேன். அவர்கள் என்னைப் போர்த்தி குளிர்ந்த நீரை என்மீது ஊற்றினார்கள். அப்போது இவ்வசனங்கள் அருளப்பட்டன.

(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபி

யே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)