Pages

Muhammad(pbuh)

கையெழுத்துப் பிரதி முதல் கணிணி மென்பொருள் வரை...ஹதீஸ்துறை கண்ட வளர்ச்சி


இன்று நாம் குர்ஆனை மனனம் செய்தவரை ஹாபிழ் என்று அழைக்கின்றோம். ஆனால் அன்று ஹாஃபிழ் என்று அழைக்கப்பட்டவர் குர்ஆனை மட்டுமின்றி இலட்சக்கனக்கான ஹதீஸ்கள், அந்த ஹதீஸ்களை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்கள், அவர்களது குறை நிறைகள் போன்ற அனைத்தையும் மனனம் செய்திருந்தார்கள்.
அந்த அளவுக்கு அபார மனனத்தன்மையை அன்றைய காலத்து முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அளித்திருந்தான். இதற்கு காரணம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் பிந்தைய தலைமுறைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்!
ஒருபக்கம் மனனம் வாயிலாகப் பதிவான இந்தக் குர்ஆன் ஹதீஸ், மறுபக்கம் ஏடுகள் மூலமும் பதிவானது. அன்றைய காலத்து ஏடுகள் இன்றைய காலத்தைப் போன்று தாள்களில் அமைந்திருக்கவில்லை! அந்த அளவுக்கான தொழிநுட்பத்தை அன்று கண்டுபிடிக்கவில்லை. அதனால் அவர்களுக்குக் கிடைத்த பேரீச்ச மர மட்டைகள், மென்மையான பலகைகள், பதனிடப்பட்ட தோல்கள், கால்நடைகளின் நீண்ட எலும்புகள் ஆகியவை தான் ஏடுகளாக அமைந்திருந்தன.
 
தோல்களிலிருந்து தாள்களுக்கு...
மரப்பட்டைகள், மென்கற்கள், பலகைகள், கால்நடைகளின் எலும்புகள், தோல்கள் போன்றவற்றிலிருந்து தாள்கள் அடங்கிய நூல்களுக்குக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் இடம் பெயர்ந்தன. ஆனால், கையழுத்துகளாக அவை பதிவாயின.
அதன் பின்னர் ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் அச்சு இயந்திர புரட்சி ஏற்பட்டு கையெழுத்துப் பிரதிகள் கருவிப் பிரதிகளாயின! இதன் பின்னர் உலகம் கணிணி யுகமானது. குறுந்தகடு மயமானது. மொத்தத்தில் மரப்பட்டைகள், பலகைகள், எலும்புகள், தோல்கள் போன்ற கடினப் பெருட்களில் குடியிருந்த ஹதீஸ்துறை கணிணி யுக மென்பொருட்களுக்குக் குடிபெயர்ந்தது. இது ஹதீஸ்துறை கண்ட வளர்ச்சியும் புரட்சியுமாகும்.
1985 வாக்கில் புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மது, தாரமீ, முஅத்தா மாலிக் ஆகிய ஒன்பது நூல்கள் அடங்கிய ஹதீஸ் அட்டவணை (ஒய்க்ங்ஷ்)-ஐ கிட்டத்தட்ட 10 மாதங்களாகத் தயாரித்து ஒரு யூதர் வெளியிட்டிருந்தார்.
துஆ தொடர்பாக ஒரு செய்தி நமக்கு வேண்டுமென்றால், துஆ என்ற ஒரு வார்த்தை ஒன்பது நூல்களில் எங்தெந்த பாடத்தில் இடம் பெறுகின்றது என்று அந்த அட்டவணை தெரிவித்து விடும். ஆனால் அது இடம்பெற்றிருக்கின்ற செய்தியை அந்த அட்டவணை நூலில் தேட முடியாது. புகாரி, முஸ்லிம் என்று ஒவ்வொரு நூலாக எடுத்துப் பார்க்க வேண்டும். இந்தச் சிரமத்தை நீக்கும் விதத்திலும், கஷ்டத்தைக் களையும் விதத்திலும் ஹதீஸ் மென்பொருள் ஒரு பெரிய புரட்சி படைத்தது.
அணிஅணியாக ஹதீஸ் சிடி, குறுந்தகடுகள் மக்களின் தாகத்தை தீர்க்கக் கிளம்பின. அவற்றில் ஆரம்பத்தில் ஆயிரம் நூல்கள் அடங்கிய அல்ஃபியா (ஆயிரம்) என்ற பெயரில் உதயமானது. ஆனால் அதை விலைக்கு வாங்கியவருக்கு மட்டுமே அதன் பயன்பாடு கிடைத்தது.
 
அல்குதுபுத் திஸ்ஆ
ஒன்பது நூல்கள் என்ற பெயரில் மேற்கண்ட ஒன்பது ஹதீஸ் நூல்கள் அடங்கிய "மவ்சூஆ' (கலைக் களஞ்சியம்) வெளியானது. அரபியில் குறைந்தபட்ச ஞானம் உள்ளவர்கள் கூடக் கையாள்கின்ற விதத்தில் இது எளிதாக அமைந்திருக்கின்றது.
ஒரு ஹதீஸை, அது இடம்பெறும் வார்த்தை வாரியாக, தலைப்பு வாரியாக, ஹதீஸ் எண் வாரியாக எளிதில் தேடுவதற்கு ஏதுவான ஒரு மென்பொருளாகும்.
மவ்ஸை கிளிக் செய்த அடுத்த நொடியிலேயே பார்வைக்குத் திரையில் காட்சி தரும். அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு அறிவிப்பாளரின் பலம் - பலவீனம் அவரைப் பற்றிய திறனாய்வு மிக்க ஹதீஸ் கலை அறிஞர்களின் சுருக்கமான விமர்சனம், ஹதீஸில் இடம் பெறும் புதிய வார்த்தைகளுக்குரிய அருஞ்சொற் பொருட்கள் என அனைத்து விபரங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
 
புகாரி ஹதீஸின் விளக்கம் தெரியவில்லை என்றால் அதன் விரிவுரையான ஃபத்ஹூல் பாரியையும், இதர நூல்களுக்குரிய விரிவுரையையும் அதே ஹதீஸில் பார்க்கும் வசதி, ஒரு நூலில் ஒரு ஹதீஸைப் பார்க்கும் போது, அந்த ஹதீஸ் வேறெந்த நூற்களில் இடம் பெற்றுள்ளது என்பதை அறியும் வசதி, அதைப் போன்ற கருத்துடைய ஹதீஸ்கள் வேறு எந்த இடங்களில் உள்ளன என்று அறியும் வசதி, இந்த ஹதீஸ்களை வேர்ட் ஃபைலுக்கு காப்பி செய்வதற்குரிய வசதி என்று அதன் பயன்பாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
உண்மையில் கையாள்வதற்கு இவ்வளவு எளிய முறையில் அமைந்த இந்த ஹதீஸ் மென்பொருளை அடிக்க வேறு எந்த மென்பொருளும் வெளிவரவில்லை என அடித்துச் சொல்லி விடலாம்.
 
அல்மக்தபதுஷ் ஷாமிலா
இது 16,0000 நூல்கள் அடங்கியது. இணைய தளத்தில் தற்போது இன்னும் மேலதிகமாக பதிவேற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்து நூல்களும் அடங்கிய நூலகம் என்ற பெயர் இதற்கு மிகவும் பொருத்தமாகவே அமைகின்றது. இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான அனைத்து நூல்களும் இதில் இடம்பெறுகின்றன.
 
ஜாமிவுல் ஹதீஸின் நபவி
இந்த ஹதீஸ் மென்பொருளில் கிட்டத்தட்ட 401 ஹதீஸ் நூல்கள் உள்ளன.
 
ஜவாமிவுல் கலீம்
இந்த ஹதீஸ் மென்பொருளில் மொத்தம் 1400 ஹதீஸ் நூல்கள் உள்ளன.
 
குர்ஆன் மென்பொருள்
இதில் குர்ஆன், கிராஅத், விளக்கவுரைகள் என அனைத்து வசதிகளும் உள்ளது. இது அல்லாமல் குர்ஆன் சம்பந்தமாக மேலும் பல மென்பொருள்கள் உள்ளன.
மேற்கண்டவை தவிர ஹதீஸ்களிலும் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன.
நவீன சாதனங்கள் வாயிலாக ஹதீஸ்களை ஆய்வு செய்யும் இவ்வசதி, ஹதீஸ் துறையில் மாபெரும் வளர்ச்சியும், புரட்சியும் ஆகும். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!