Pages

Muhammad(pbuh)

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை - தொடர் 5

ஜமாஅத்தாகத் தொழுவதால் நமக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றிப் பார்ப்போம்.
நாம் ஜமாஅத்தாகத் தொழும் போது வரிசையாக நின்று தொழும் பாக்கியத்தைப் பெறுகின்றோம். இவ்வாறு வரிசையாக நின்று தொழுவது நமக்குப் பல நன்மைகளைப் பெற்றுத் தருகிறது. தொழுகையை ஜமாஅத்துடன் பேணித் தொழுபவர்கள் இந்த நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். நாம் வரிசையாக நின்று தொழுவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நாம் காண்போம்.
 
தொழுகைக்காக அணிவகுத்து நிற்பதின் சிறப்புகள்
வானவர்களைப் போன்ற அணிவகுப்பு
நாம் ஜமாஅத்துடன் கடமையான தொழுகைகளை நிறைவேற்றும் போது இறைவனுக்கு முன்னால் மலக்குமார்கள் அணிவகுத்து நிற்பதைப் போன்று அணிவகுக்கின்ற பாக்கியத்தைப் பெறுகின்றோம். நாம் இறைவனுக்கு முன்னால் பணிவுடன் அணிவகுத்து நிற்பதன் மூலம் அல்லாஹ் தனது அருட்கொடைகளை நமக்கு வாரி வழங்குகின்றான்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அறிந்துகொள்ளுங்கள்! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்பதைப் போன்று நீங்கள் அணிவகுத்து நில்லுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் எப்படி அணிவகுத்து நிற்கிறார்கள்?'' என்று கேட்டோம். அதற்கு "வானவர்கள் (முதலில்) முதல் வரிசையைப் பூர்த்தி செய்வார்கள்; வரிசைகளில் ஒருவரோடு ஒருவர் (இடைவெளி விடாமல்) நெருக்கமாக நிற்பார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி)
நூல்: முஸ்லிம் (736)
 
முதல் வரிசையைப் பூர்த்தி செய்த பிறகு இரண்டாவது வரிசையை ஆரம்பம் செய்தால்தான் மலக்குமார்களுக்கு ஒப்பாக நாம் அணிவகுத்து நிற்க முடியும்.
 
இன்றைக்குப் பல பள்ளிகளில் வரிசைகளில் நிற்கும் ஒழுங்கினை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. ஒருவர் மற்றொருவருக்கு மத்தியில் மிகவும் இடைவெளி விட்டு நிற்பது, மேலும் முதல் வரிசையில் இடம் இருக்கும் பொழுதே இரண்டாம் வரிசையை ஆரம்பம் செய்வது போன்ற நடைமுறைகள் சர்வ சாதரணமாகக் காணப்படுகிறது. இது போன்ற ஒழுங்கீனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். நபியவர்கள் கூறியதைப் போன்று முதல் வரிசையைப் பூர்த்தி செய்த பின் இரண்டாவது வரிசை ஆரம்பம் செய்தால் தான் நாம் முழுமையான நன்மைகளை அடைய முடியும்.
 
வரிசைகளில் இடைவெளி கூடாது
வரிசைகளில் இடைவெளி விட்டு தனித்தனியாக நிற்பதை நபியவர்கள் மிகவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் (ஒருவருக்கொருவர்) இடைவெளி விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அல் முஃஜமுல் கபீர் (11289 பாகம் : 9 பக்கம் ; 390)
மஜ்மவுஸ் ஸவாயித் (2505 பாகம் : 2 பக்கம் : 109)
 
சிறந்த வரிசை
ஆண்களும், பெண்களும் சேர்ந்து தொழுகின்ற பள்ளிகளில் ஆண்கள் முதல் வரிசையில் நிற்பதன் மூலமும், பெண்கள் அவர்களுக்குரிய கடைசி வரிசையில் நிற்பதன் மூலமும் சிறந்த வரிசையில் நிற்கின்ற பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (749)
 
இன்றைக்குப் பெரும்பாலான பள்ளிகளில் நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக பெண்கள் பள்ளிக்கு வருவதற்குத் தடை விதிக்கின்றனர். இது மாபெரும் வழிகேடு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
 
அறிவில் சிறந்தவர் இமாமிற்கு அருகில் நிற்பதும் அமைதியைப் பேணுவதும்
ஜமாஅத்தில் நாம் வரிசையில் அணிவகுத்து நிற்பதற்குரிய அழகிய வழிமுறைகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். நாம் அவற்றைப் பேணி நடப்பதன் மூலம் முழுமையான நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.
இமாமிற்கு அருகில் மார்க்கச் சட்டங்களை அறிந்தவர்கள் நிற்க வேண்டும். அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் அடுத்தடுத்த வரிசைகளில் நிற்க வேண்டும்.
அது போன்று அணிவகுத்து நிற்கும் போது கூச்சலிடுவதோ, சப்தமிடுவதோ கூடாது.
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் அறிவிற் சிறந்தவர் எனக்கு அருகில் (தொழுகையில் முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள் (அடுத்த வரிசையில்) நிற்கட்டும். (இதை மூன்று முறை கூறினார்கள்.) மேலும், (தொழுகைக்கு ஒன்றுகூடும்போது) கடைத்தெரு(வில் கூச்சலிடுவதைப் போன்று) கூச்சலிடுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் (740)
 
முதல் வரிசையின் சிறப்புகளும், நன்மைகளும்
முதல் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டி
முதல் வரிசையில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ் மாபெரும் பாக்கியங்களை வாரிவழங்குகிறான். அல்லாஹ் இதற்காக வாரி வழங்கும் நன்மைகள் நம்முடைய கண்களுக்குத் தெரிவதில்லை. அப்படி அல்லாஹ் நமக்கு அதனை அறிய வைத்தான் என்றால் அந்த நன்மைகளை அடைவதற்காகப் போட்டி ஏற்பட்டு, சீட்டு குலுக்கி முன்வரிசையில் நிற்பதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படிப்பட்ட மாபெரும் பாக்கியத்தை அல்லாஹ் முன்வரிசையில் நின்று தொழுபவர்களுக்கு வாரிவழங்குகிறான்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்து கொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (615), முஸ்லிம் (746)
 
இத்தகைய மாபெரும் நன்மைகளை அடையும் விஷயத்தில் இன்றைக்கு நாம் எவ்வளவு பொடும்போக்காக இருக்கின்றோம் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இன்றைக்குப் பல பள்ளிகளில் தொழுகை ஆரம்பிக்கும் போது இரண்டு மூன்று நபர்களைத் தவிர வேறு யாரும் இருப்பதில்லை. பலர் தாமதமாகத் தான் தொழுகையில் வந்து இணைகின்றனர். நம்முடைய கவனமின்மையினால் நாம் எத்தகைய பாக்கியத்தை இழக்கின்றோம் என்பதைக் கவனத்தில் கொண்டு இது போன்ற நன்மைகளை அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
 
அல்லாஹ் மற்றும் மலக்குமார்களின் ஸலவாத்
முன்வரிசைகளில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான். இன்னும் மலக்குமார்களும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டுகிறார்கள்.
பரா பின் ஆசிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபியவர்கள் வரிசையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதி வரை சென்று (தொழுகைக்காக அணிவகுத்து நிற்பவர்களின்) நெஞ்சுகளையும், தோள் புஜங்களையும் (நேராக இருக்குமாறு) சரி செய்வார்கள். மேலும் "(முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும்'' என்று கூறுவார்கள். மேலும் "அல்லாஹ்வும், மலக்குமார்களும் முன்வரிசைகளில் உள்ளவர்கள் மீது ஸலாவாத்துக் கூறுகின்றனர்'' என்றும் கூறுபவர்களாக இருந்தனர்.
நூல்: அஹ்மத் (18539)
 
அல்லாஹ் ஸலவாத்து கூறுகிறான் என்றால் முன்வரிசைகளில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான் என்பதாகும். மலக்குமார்கள் ஸலவாத்து கூறுகிறார்கள் என்றால் முன்வரிசைகளில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ்விடம் அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்கின்றனர் என்பதாகும்.
 
உள்ளங்கள் ஒருங்கிணையும் பாக்கியம்
ஜமாஅத் தொழுகையில் ஒருவருக்கொருவர் முரண்படாமல் நேராக அணிவகுத்து நின்று தொழுவதன் மூலம் உள்ளங்களுக்கு மத்தியில் அல்லாஹ் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறான். இந்தப் பாக்கியத்தை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுபவர்கள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
 
அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையி(ன் ஆரம்பத்தி)ல் எங்களுடைய தோள்களைத் தடவி (அவை சமமாக இருக்கின்றனவா என்று சரி) பார்ப்பார்கள்; மேலும், "நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும். உங்களில் அறிவிற்சிறந்தவர்கள் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும்'' என்று கூறுவார்கள். தொடர்ந்து அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆனால், நீங்களோ இன்று (வரிசையில் சீராக நிற்காத காரணத்தால்) கடுமையான கருத்துவேறுபாட்டுடன் காணப்படுகின்றீர்கள்.
நூல்: முஸ்லிம் (739)
 
முதல் வரிசையும் மூன்று முறை பிராரத்தனையும்
திண்ணை ஸஹாபாக்களில் ஒருவரான இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் முதலாவது வரிசைக்கு மூன்று முறையும், இரண்டாவது வரிசைக்கு ஒரு தடவையும் ஸலவாத் (பிரார்த்தனை) சொல்லக்கூடியவர்களாக இருந்நனர்
நூல்: அஹ்மத் (17196, 17202)
 
வரிசையில் பிந்தியவர்கள் மறுமையிலும் பிந்தியவர்களே!
தொழுகையாளிகள் அனைவருக்கும் மறுமையில் சிறந்த பரிசு இருக்கிறது. அதே நேரத்தில் பள்ளிக்கு முன்கூட்டியே வரும் சிலர் வரிசையில் வேண்டுமென்றே பிற்பகுதிக்குச் செல்வார்கள். இவ்வாறு முன்கூட்டியே வருபவர்கள் பின்வரிசையை நாடிச் செல்வது மறுமையில் நம்மை பிந்தச் செய்யக்கூடியதாகும்.
 
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது "முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றித் தொழட்டும். மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ் (மறுமையில்) பின்தங்கச் செய்துவிடுவான்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (747)
 
மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் சிலர் பள்ளிவாசலின் பிற்பகுதியில் (நிற்பதைக்) கண்டார்கள்...'' என்று ஹதீஸ் தொடங்குகிறது.
நூல்: முஸ்லிம் (747)
 
அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களிடத்தில் (வரிசையில்) பின்தங்குவதைக் கண்டார்கள். அவர்களை நோக்கி ''முந்தி வாருங்கள்! என்னைப் பின்பற்றுங்கள். உங்களுக்கு பின்னால் உள்ளவர்கள் உங்களைப் பின்பற்றட்டும். ஒரு கூட்டம் பின்னோக்கி சென்று கொண்டேயிருந்தால் அல்லாஹ் அவர்களை மறுமையில் பிந்தச் செய்து விடுவான்'' என்று கூறினார்கள்.
நூற்கள் அஹ்மத் (11310)
 
வேண்டுமென்றே பின்வரிசையை நாடினால்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு கூட்டத்தார் (வேண்டுமென்றே) முன் வரிசையிலிருந்து பின்தங்கிக் கொண்டேயிருந்தால் இறுதியாக அல்லாஹ் அவர்களை நரகத்தில் பின்தங்கச் செய்துவிடுவான்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் ( 679)
 
வரிசையின் வலது புறம் நிற்பது சிறந்ததா?
தொழுகை வரிசையின் வலது புறத்தைச் சிறப்பித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகவே உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வும், மலக்குமார்களும் (தொழுகை) வரிசைகளில் வலதுபுறத்தார்கள் மீது ஸலவாத்துக் கூறுகின்றனர்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் (578)
 
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் "உஸாமா பின் ஸைத்' என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.
''இவர் ஒரு பொருட்டாக மதிக்கத் தக்கவர் அல்ல'' என இமாம் அஹ்மத் விமர்சித்துள்ளார்கள்.
யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரைப் பலவீனமாக்கியுள்ளார்கள்.
''இவருடைய ஹதீஸ்கள் எழுதிக் கொள்ளப்படும். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது'' என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்கள்
''இவர் உறுதியானவராக இல்லை'' என இமாம் நஸாயீ கூறுகிறார்.
''இமாம் முஸ்லிம் இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை. இவருடைய ஹதீஸ்களை துணைச் சான்றாகவே பதிவு செய்துள்ளார்கள்'' என இப்துல் கத்தான் அல்ஃபாஸி கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 1 பக்கம் 183)
 
மேலும் மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரில் ''முஆவியா இப்னு ஹிஸாம்'' என்றொரு அறிவிப்பாளரும் இடம்பெறுகிறார். இவரையும் இமாம்கள் குறைகூறியுள்ளனர். எனவே இவரும் பலவீனமானவர் ஆவார்.
 
வரிசைகளில் வலது புறத்தைச் சிறப்பித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாக இருப்பத்ôல் வலது புறத்தில் நிற்பதும், இடது புறத்தில் நிற்பதும் சமமே.
ஆனால் இமாமுடன் தொழுபவர் ஒருவராக மட்டும் இருந்தால் அவர் இமாமின் வலது புறத்தில் தான் நிற்க வேண்டும்.
 
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஷாத் தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் (தொழுது கொண்டிருந்த) என்னை (இழுத்து) தமது வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். ....
நூல்: புகாரி (697)
 
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் என் தாயாருக்கும், அல்லது என் சிறிய தாயாருக்கும் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள். அப்போது என்னைத் தமக்கு வலப் பக்கத்திலும் பெண்ணை எங்களுக்குப் பின்னாலும் நிறுத்தினார்கள்.
நூல்: முஸ்லிம் (1171)
 
இமாமுடன் ஒருவர் மட்டும் நின்று தொழும் போது தான் அவர் இமாமிற்கு வலது புறம் நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வந்துவிட்டால் இமாம் முன்னால் சென்று விடுவார். பின்னர் வலதும், இடதும் சமமாகத் தான் இருக்க வேண்டும். இதுவும் வரிசையை சீராக ஆக்குவதில் உள்ளதாகும். பின்வரும் ஹதீஸில் ஒரு ஸஹாபி மட்டும் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது வலது புறம் நின்றார்கள். பின்னர் அதிகமான மக்கள் வந்ததும் அவர்கள் நபிகள் நாயகத்திற்கு பின்னால் வந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
அனஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்று கொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்றுகொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம். தமக்குப் பின்னால் நாங்கள் நிற்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்ததும் தொழுகையைச் சுருக்கலானார்கள்.
நூல்: முஸ்லிம் (2014)
 
வலது புறத்தில் நிற்பதை மிகவும் சிறப்பாக மக்கள் விளங்கி இருப்பதன் காரணத்தினால் சில பள்ளிகளில் இடது புறத்தை அப்படியே விட்டுவிட்டு வலது புறத்தில் மட்டும் நிற்கின்றனர். இது வரிசைகளுக்குரிய ஒழுங்கு முறை கிடையாது. எனவே வரிசை சீராக அமையும் பொருட்டு வலது புறத்தையும், இடது புறத்தையும் சமமாக நிரப்புவதே சிறந்ததாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்ததும் வலது புறம் உள்ளவர்களை நோக்கித் திரும்புவார்கள். இதன் காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்கள் வலது புறம் நிற்பதை விரும்பியுள்ளார்கள்.
 
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது, "ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு (அல்லது "தஜ்மஉ') இபாதக்க' (இறைவா! உன் அடியார்களை "உயிர் கொடுத்து எழுப்பும்' (அல்லது ஒன்றுதிரட்டும்) நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!) என்று அவர்கள் பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.
நூல்: முஸ்லிம் (1280)
 
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகத்தின் மீதுள்ள பாசத்தினாலும், அவர்கள் செய்கின்ற துஆவிற்காகவும் ஸஹாபாக்கள் வலது புறம் நிற்பதை விரும்பியுள்ளார்கள். இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இல்லாத காரணத்தினாலும், வலது புறம் நிற்பது தொழுகையின் அம்சமாகச் கூறப்படாத காரணத்தினாலும் மேற்கண்ட செய்தியின் அடிப்படையில் வலது புறம் நிற்பது சிறப்பானது என்ற கருதமுடியாது.
எனவே வலது புறமும், இடது புறமும் சீராக தொழுகை வரிசையை அமைத்துக் கொள்வதே சரியான செயல்முறையாகும்.