Pages

Muhammad(pbuh)

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.
இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.
இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.
நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.
பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.
ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.
திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்துப் பேசும் போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.
அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விஷயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதை விட அழகாகப் பேசுகிறது.
தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.
அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விஷயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.
பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திப்பவர்கள் 'இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்' என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.
அறிவியல், நவீன கண்டு பிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விட அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.
ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்ட மேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.
அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு ஏற்கத்தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.
குலம், கோத்திரம், சாதி, இவற்றால் ஏற்படும் தீண்டாமை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. இந்தச் சிக்கலான பிரச்சினைக்கும் திருக்குர்ஆன் மிக எளிதான தீர்வை வழங்கி தீண்டாமையை அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம்.
முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் ஆதாரங்களாக உள்ளன.