Pages

Muhammad(pbuh)

குர்ஆனின் குரல்

ரமலான் மாதம் என்றவுடன் திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் என்று முஸ்லிம்களில் மனதில் சிந்தனை பிறக்கும். பேரண்டத்தையும் மனிதனையும் படைத்த இறைவன் மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக தூதர்களை அனுப்பினான். மனித குலத்திற்கு அருளப்பட்ட இறுதி வேதமே திருக்குர்ஆன் ஆகும்.
    குர்ஆன் என்றவுடன் இது மத சம்பந்தப்பட்ட நூல்; பழைய வரலாறுகள் இருக்கும்; சொர்க்கம் நரகம் பற்றி மட்டுமே இருக்கும்; என்றெல்லாம் நினைத்தால் அது சரியான பார்வையாகாது. திருக்குர்ஆன் நாம் வழக்கமாகப் படிக்கும் நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியில் அமைந்திருக்கிறது. பொதுவாக மதத்தைப்பற்றி இன்று உலகம் கொண்டுள்ள கருத்தின்படி உள்ள ஒரு மத நூலன்று இது! மாறாக ஓர் இயக்கத்தை உருவாக்க வந்த வேதமாகும். ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க வந்த நூல் இது.
    இந்நூல் வந்ததுமே சாந்த குணமும் இனிய சுபாவமும் கொண்ட ஒருவரை தனிமையிலிருந்து வெளிக்கொணர்ந்து தீமைக்கு எதிராக குரல் எழுப்புமாறு தூண்டிற்று. போதைக்கு எதிராகவும் விபசாரத்தை ஒழிப்பதற்காகவும் இன்னபிற அனைத்து அசத்தியத்துக்கு எதிராகவும், மூடபழக்க வழக்கங்களை மூட்டை கட்டவும் போர்க்குரல் கிளம்பிற்று. ஒவ்வொரு வீட்டிலுருந்தும் இனிய பண்பும் நல் ஒழுக்கமும் உடைய ஒவ்வொருவரையும் ஈர்த்துச் சத்தியத்தின்பால் அழைப்பு விடுக்கும் அளவிற்க்கு திருக்குர்ஆனின் போதனைகள் வலிமையானவையாக இருந்தன. கிபி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் நபியாக வந்த நபி(ஸல்) அவர்கள் முலமாக இவ்வுலகிற்கு குர்ஆன் அருளப்பட்டது.
    அவர்களது 40 வயதில் தொடங்கி 63வது வயதுவரை சிறிது சிறிதாக இடம் பொருள் சூழ் நிலைகளைத் தாங்கி 23 ஆண்டுகளில் முழு குர்ஆன் நிறைவடைந்தது. இறையச்சத்தை மையமாக வைத்து சத்திய பிரச்சாரம் செய்தார்கள் முஹம்மது நபி அவர்கள். இறைபோதனைக்கு இசைவாக உலகைச் சீர்திருத்தவும் பாடுபடக்கூடிய ஒரு குழுவாக (உம்மத்தாக) அமைத்து விடுவதுதான் நபி(ஸல்) அவர்களின் ஒப்படைக்கப்பட்ட பணியாக இருந்தது. அந்த அழைப்பும் நற்போதனையும் கொண்ட வேத நூல்தான் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு அருளிய அல்குர்ஆன்.
    இஸ்லாத்தை ஓர் இயக்கமாக - உலகளாவிய இயக்கத்துக்கு தகுதியான முழு அமைப்பாகத்தான் நபி(ஸல்) அவர்கள் 'இஸ்லாம்' எனும் இயக்கத்துக்கு முகவரியிட்டுக் காட்டினார்கள். ஆனால் இன்றோ முஸ்லிம்கள் பலர் இஸ்லாம் எனும் வாழ்க்கைத் திட்ட இயக்கத்தை மதாமாகப் பார்க்கிறார்கள். இதனால் இஸ்லாத்தின் தூயவடிவம் உலக மக்களுக்கு சரிவரத்தெரியாமல் போய்விடுகிறது. இஸ்லாத்தை அறிய திருக்குர்ஆனின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது விவாதிக்கும் விஷயம் என்ன? அதன் மையக் கருத்து என்ன? அதன் இலக்கும் குறிக்கோளும் என்ன? என்பனவற்றையெல்லாம் சாதாரனமாகத் தத்தமக்குத் தெரியும் மொழியில் குர்ஆனை படிப்பவர்களுக்கு மிக எழிதில் விளங்கும்! அது விவாதிக்கும் விஷயம் மனிதனைப்பற்றியாதாய் இருக்கிறது. எனவேதான் மனிதனின் வெற்றியும் நற்பேறும் அவனுடைய வீழ்ச்சியும் இழப்பும் எந்த அம்சங்களில் அமைந்துள்ளன என்பதை அது விரிவாக ஆராய்கிறது.
    இதன் மையக் கருத்து இதுதான்
    இறைவன் பிரபஞ்சத்தின் அமைப்பு முறை இவற்றில் மனிதனுடைய அந்தஸ்து அவனுடைய உலக வாழ்வு ஆகியவை பற்றி தன் புலனுணர்விற்கு உட்பட்டவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மனிதன் ஏற்படுத்திக்கொண்ட சித்தாத்தங்கள் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப உருவாக்கிக்கொண்ட தத்துவங்கள் அல்லது மன இச்சைக்கு அடிமைப்பட்டு வகுத்துக்கொண்ட கருத்தோட்டங்கள் ஆகியன யாவுமே அடிப்படையில் தவறானதாகவே இருக்கின்றன. விரும்பத்தகாத விளைவுகளையும் அழிவையும் தரக்கூடியனவாகவுமிருக்கின்றன.
    ஆகவே மனிதனுடைய பலம் பலவீனம் ஆகியவற்றை முழுமையாக விளங்கிக்கொண்டு ஒழுக்கமுள்ள இறையச்சமுள்ள சீரிய நேரிய வாழ்க்கையை அமைப்பது தேவையாகிறது. அப்படிப்பட்ட வாழ்வை மேற்கொண்டால்தான் அவனுடைய இறுதி முடிவு வெற்றியுடையதாயும் நற்பேறு கொண்டதாயும் இருக்கும் எனப் புலனாகிறது. பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டுவரும் மூடப்பழக்க வழக்கங்களைத் துடைத்தெறியும் கருத்துக்கள், வானம் பூமி ஆகியவற்றின் அமைப்பு, மனிதனைப் படைத்தல், பிரபஞ்சத்தின் சான்றுகள், சென்றுபோன சமுதாயங்களின் வரலாற்று நிகழ்ச்சிகள், தனி மனிதனின் இல்லற கடமைகள், பொது வாழ்வின் ஒழுக்கங்கள், இறைவணக்கம், ஏழைவரி, மனித சமுதாய ஒற்றுமை....... ஆகியவை பற்றியெல்லம் குர்ஆன் பேசுகிறது
    .மக்களுக்கு மத்தியில் உண்மையான சகோதரத்துவத்தையும், ஒற்றுமையும் நிலவவும், ஏற்றதாழ்வுகள் நீங்கிடவும் குர்ஆன் வழிகாட்டுகிறது. அப்படிப்பட்ட உலக பொதுமறை நூலான திருக்குர்ஆன் இவ்வுலகிற்கு கிடைக்கப்பெற்ற மாதம்தான் ரமழான்.
     திருமறையை மட்டும் இறைவன் வழங்கவில்லை. அத்தோடு இவ்வுலகிற்கு ஒரு தூதரையும் மக்களுக்கு வழிகாட்ட அனுப்பியிருந்தான். ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு வரைபடமும் அதன்படி நிர்மானிக்க ஒரு பொறியியளாளரும் தேவைப்படுவதைப்போல முழு மனித சமுதாயத்துக்கும் குர்ஆனையும் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் வழங்கியிருக்கிறான்.
    திருக்குர்ஆனின் விளக்க உரையாக தம் வாழ்க்கையை நபி(ஸல்) அவர்கள் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சொல்லும் செயலும் அங்கீகரித்த விஷயங்களும் குர்ஆனின் வரையரைக்குட்பட்டே அமைந்திருந்தன. ஆக, குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய வாழ்வு முறையையும் பேணி வாழ்வதே உண்மை இஸ்லாம் ஆகும்.