Pages

Muhammad(pbuh)

பாடம்: 136 விந்துபட்ட ஆடை பற்றிய சட்டம்

ஹதீஸ் எண்: 371
ஹம்மாம் பின் அல்ஹரித் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.
அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் (இல்லத்தில்) தங்கியிருந்த போது கனவு கண்டு ஜுனுபாகி விட்டார். அவர் தனது ஆடையின் கரையை அல்லது ஆடையை தானே கழுவுவதை ஆயிஷா (ரலி) அவர்களின் அடிமைப் பெண் பார்த்தார். அந்தப் பெண் அதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர்கள், 'நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட விந்தை தேய்த்து விட்டதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்' என்று சொன்னார்கள்.

இமாம் அபூதாவூது அவர்கள் சொன்னார்கள்: அல்அஃமஸ் அவர்களின் அறிவித்தது அல்ஹகம் அவர்கள் அறிவித்தது போன்றதாகும்.

ஹதீஸ் எண்: 372
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட விந்துவை கசக்கி விடுவேன். அவர்கள் அதிலேயே தொழுது கொள்வார்கள்.

இமாம் அபூதாவூது அவர்கள் சொன்னார்கள்: இதே போன்றே முகீராவும் அபூமஃஸரும் வாசிலும் அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண்: 373
சுலைமான் பின் யஸார் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட விந்துவை கழுவி விடுவேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன். அதன் பிறகும் அதில் அடையாளத்தைப் பார்ப்பேன் என்றும் கூறினார்கள்.

பாடம்: 137 குழந்தையின் சிறுநீர் பட்ட ஆடையை எவ்வாறு கழுவுவது?

ஹதீஸ் எண்: 374
மிஹ்ஸனின் மகள் உம்மு கைஸ் அவர்கள் சொன்னார்கள். உணவு சாப்பிடும் வயதை அடையாத அவரது ஆண் குழந்தையுடன் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க வந்தார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவனை தனது மடியில் உட்கார வைத்தார்கள். அவர்களது ஆடையில் சிறுநீர் கழித்து விட்டார். தண்ணீர் கொண்டு வரச் செய்து அதன் மீது தெளித்தார்கள். அதைக் கழுவவில்லை.

ஹதீஸ் எண்: 375
அல்ஹரித் அவர்களின் மகள் லுபாபா அவர்கள் சொன்னார்கள். ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் அமர்ந்திருந்தார்கள். அவர் அவர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டார். 'வேறொரு ஆடையை அணிந்து கொண்டு இந்த ஆடையை கழுவுவதற்காக தாருங்கள்' என்றேன். அதற்கு அவர்கள், 'பெண் குழந்தையின் சிறுநீரை முழுவதுமாக கழுவ வேண்டும், ஆண் குழந்தையின் சிறுநீர் மீது தண்ணீரை தெளித்துக் கொள்ள வேண்டும்' என்றார்கள்.

ஹதீஸ் எண்: 376
அபூ அல்ஸம்ஹ் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நான் பணிவிடைகள் செய்து வந்தேன். அவர்கள் குளிக்க விரும்பும் போது, 'உனது முதுகை என் பக்கம் திருப்பிக் கொள்' என்று சொல்வார்கள். நான் அவர்களை நோக்கி என் முதுகை திருப்பிக் கொண்டு அவர்களை மறைத்துக் கொள்வேன். (ஒரு முறை) ஹஸன் அல்லது ஹுஸைன் (ரலி) அவர்களிடம் கொண்டு வரப் பட்டார்கள், அவர்களது மார்பில் சிறுநீர் கழிந்து விட்டார். நான் அதை கழுவுவதற்காக வந்தேன். அதற்கு அவர்கள், 'பெண் குழந்தையின் சிறுநீர் கழுவப்பட வேண்டும், ஆண் குழுந்தையின் சிறுநீர் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்' என்று கூறினார்கள்.

யஹ்யா இப்னு அல்வலீது என்பவர் இந்த ஹதீஸை நமக்கு அறிவித்தார் என்று அப்பாஸ் (ஒரு அறிவிப்பாளர்) கூறினார். யஹ்யா என்பவர் தான் அபூ அல்ஸஹ்ரா ஆவார். 'எல்லா சிறுநீரும் ஒன்றுதான்' என்று ஹஸன் அறிவித்ததாக ஹாருன் இப்னு தமீம் சொன்னார் என்று அபூதாவூது அவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ் எண்: 377
அலி (ரலி) அவர்கள் சொன்னார்கள். பெண் குழந்தையின் சிறுநீரை கழுவ வேண்டும், ஆண் குழந்தையின் சிறுநீர் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும், இது அக்குழந்தை திடஉணவை சாப்பிடும் வரையிலாகும்.

ஹதீஸ் எண்: 378
அலி இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் எண் 377 ல் உள்ளது போலவே இங்கே நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் 'திடஉணவை சாப்பிடும் வரை' என்ற வாசகத்தை இங்கே அவர் கூறவில்லை. 'திட உணவை சாப்பிடாதவரை இது கூடும் என்றும் திட உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டால் அவர்களது சிறுநீரை கழுவ வேண்டும் என்றும் கதாதா கூறினார் என்பது கூடுதலாக இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

ஹதீஸ் எண்: 379
தனது தாயார் சொன்னதாக ஹஸன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் திட உணவை சாப்பிடாத வரை ஆண் குழந்தையின் சிறுநீர் மீது தண்ணீரை தெளித்துக் கொள்வதையும், திட உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டால் அவர் அதை கழுவுவார். மேலும் பெண் குழந்தையின் சிறுநீரை கழுவுவார்.

பாடம்: 138 சிறுநீர் பட்ட மண்

ஹதீஸ் எண்: 380
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது ஒரு காட்டரபி பள்ளிக்குள் நுழைந்தார். இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார். இப்னு அப்தாவின் அறிவிப்பின் படி அவர், 'இறைவா! எனக்கும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அருள் புரிவாயாக! எங்களோடு சேர்த்து வேறு எவருக்கும் அருள் புரியாதே!' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'விசாலமானதை நீர் குறுக்கி விட்டீரே!' என்று கூறினார்கள். சிறிது நேரத்தில் அவர் பள்ளியின் ஒரு முலையில் சிறுநீர் கழித்தார். மக்கள் அவரை நோக்கி விரைந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களைத் தடுத்தார்கள். பிறகு 'நீங்கள் எளிமைப் படுத்துவதற்காகவே அன்றி கஷ்டம் கொடுப்பதற்காக அனுப்பப்பட வில்லை. அதன் மீது வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்' என்று கூறினார்கள்.