Pages

Muhammad(pbuh)

ஹதீஸ் எண்: 361
அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு பெண் அல்லாஹ்வின் திருத்தூதரிடத்தில் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவரது ஆடையில் மாதவிடாய் இரத்தத்தைக் கண்டால் அவள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'உங்களில் ஒருவரது ஆடையில் மாதவிடாய் இரத்தத்தைக் கண்டால் அவர் அதை சுரண்டி விடட்டும், பிறகு அதன் மீது தண்ணீர் தெளித்து விட்டு, அதோடு தொழுது கொள்ளட்டும்' என்று கூறினார்கள்.

ஹதீஸ் எண்: 362
இந்த ஹதீஸ் மேற்க்கூறிய ஹதீஸ் போன்று வேறொரு அறிவிப்பாளர் தொடருடன் ஹிஷாம் மூலமாக அறிவிக்கப்படுகிறது. இதில் 'அதை கசக்கி விடட்டும், பிறகு சுரண்டி விட்டு, தண்ணீரை ஊற்றி விடட்டும்' என்றுள்ளது.

ஹதீஸ் எண்: 363
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆடையில் பட்ட மாதவிடாய் இரத்தம் பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'மரச்சக்கையைக் கொண்டு தேய்ப்பீராக! பின்னர் இலந்தை இலையை உபயோகித்து தண்ணீரால் கழுவுவீராக!' என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் எண்: 364
எங்களில் ஒவ்வொருவரும் ஒரே ஒரு மேலாடையை வைத்திருப்போம். அதையே மாதவிடாயின் போதும் உடலுறவின் போதும் அணிந்திருப்பார். அதில் இரத்தக்கரையைக் கண்டால் உமிழ்நீரைக் கொண்டு தேய்த்துக் கொள்வார்' என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

ஹதீஸ் எண்: 365
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹவ்லத் பின்த் யஸார் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரே ஒரு ஆடை மட்டும் உள்ளது. அதை அணிந்திருக்கும் போதே மாதவிடாயும் ஏற்படுகின்றது. நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார். 'நீங்கள் சுத்தமான பிறகு அதை கழுவி விட்டு அதிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று அவர்கள் பதில் கூற, 'இரத்தக்கரை போக வில்லையானால்?' என்று கேட்டதற்கு, அவர்கள், 'இரத்தக்கரையை கழுவதே போதுமானதாகும், அதன் கரை இருப்பதால் எந்த பிரட்சனையும் இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம்: 133 உடலுறவின் போது அணிந்திருந்த ஆடையோடு தொழுவது

ஹதீஸ் எண்: 366
முஆவியா (ரலி) அவர்கள், அவர்களின் சகோதரியும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் 'நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் போது அணிந்திருந்த ஆடையோடு தொழுவார்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'ஆம்! அதில் எந்த அசுத்தத்தையும் காணவில்லையானால் (தொழுவார்கள்)' என்றார்கள்.

பாடம்: 134 பெண்களின் ஆடையை அணிந்து தொழலாமா?

ஹதீஸ் எண்: 367
'எங்களின் சுகுர் எனும் இடுப்பு ஆடையிலோ அல்லது விரிப்பிலோ நபி (ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள்' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் உபைதுல்லாஹ் சொல்கிறார், 'இதில் எனது தந்தை (முஆத்) சந்தேகித்தார்'

ஹதீஸ் எண்: 368
'எங்களது விரிப்பில் நபி (ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள்' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'நான் முஹம்மது பின் ஸிரின் அவர்களிடம் இதைப்பற்றி கேட்டேன். இதைப்பற்றி என்னிடம் எதையும் அவர் சொல்லவில்லை. ஆனாலும் 'வெகுநாட்களுக்கு முன்பே இதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நம்பகமான நபரிடமிருந்து நான் இதை செவியுற்றேனா என்பது எனக்குத் தெரியாது. இது பற்றி விசாரித்துக் கொள்ளுங்கள்' என்று சயீத் பின் அபீஸதகா அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்று ஹம்மாத் (நான்காவது அறிவிப்பாளர்) கூறுகிறார்.

(குறிப்பு: இது பலவீனமான ஹதீஸாகும். ஏனென்றால் முஹம்மது பின் ஸிரின் அவர்கள் ஆயிஷாவிடமிருந்து நேரடியாக செவியுறவில்லை. யாரிடமிருந்து செவியுற்றாரோ அவர் யாரென்று அறியப்படாதவர்.)

பாடம்: 135 பெண்ணின் ஆடையை அணிந்து தொழ அனுமதி

ஹதீஸ் எண்: 369
மைமூனா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி (ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவர், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அணிந்திருக்கும் ஆடையின் ஒரு பகுதி நபி (ஸல்) அவர்களின் மீது இருக்கும் போது அவர்கள் தொழுதார்கள்.

ஹதீஸ் எண்: 370
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
'எனது மாதவிடாயின் போது நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் படுத்திருக்கும் இரவில், அவர்கள் தொழுவார்கள். அப்போது போர்வையின் ஒரு பகுதி என் மீதும் மறுபகுதி அவர்கள் மீதும் இருக்கும்'.