Pages

Muhammad(pbuh)

ஹதீஸ் எண்: 261
(வெளியே நின்று கொண்டு) பள்ளியிலிருந்து, 'தொழுகை விரிப்பை எனக்கு எடுத்துத் தா' என்று என்னிடம் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்ட போது நான் மாதவிலக்கானவள் என்று பதிலளித்தேன். அதற்கு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் 'உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

பாடம்: 105 மாதவிலக்கானவள் தொழுகையை களா செய்யத் தேவையில்லை

ஹதீஸ் எண்: 262
ஒரு பெண்மணி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் மாதவிலக்கானவள் தொழுகையை களா செய்ய வேண்டுமா? என்று வினவிய போது அன்னையார் அவர்கள் (அவளை நோக்கி) நீ ஹரூரிய்யா (ஹரூரைச் சார்ந்தவள்) தானே? (என்று கேட்டுவிட்டு) அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் மாதவிலக்காவோம். அப்போது நாங்கள் (தொழுகையை) களாச் செய்யமாட்டோம். நாங்கள் தொழுகையைக் களாச் செய்யும்படி கட்டளையிடப்படவும் இல்லை என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: முஆதா அவர்கள்.

ஹதீஸ் எண்: 263
இதே ஹதீஸ் பின்வரும் அறிவிப்பாளர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பாளர் தொடர்....
நோன்பை களாச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப் பட்டோம். ஆனால் தொழுகையை களாச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப்பட வில்லை என்று இதன் அறிவிப்பாளர் கூடுதலாக அறிவிக்கிறார் என இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்.

பாடம்: 106 மாதவிலக்கானவளிடம் உடலுறவு கொள்ளல்

ஹதீஸ் எண்: 264
யார் தனது மனைவி மாதவிலக்காக இருக்கும் போது உடலுறவு கொள்கிறாரோ அவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்வாராக! என்று அண்ணல் நபி (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்:
ஒரு தீனார் அல்லது அரை தீனார் என்று கூறியதாகத்தான் சரியான அறிவிப்பு வந்துள்ளது.
நபி (ஸல்) கூறியதாக அறிவிக்கும் ஷுஃபா வேறொரு அறிவிப்பில் இப்னு அப்பாஸ் கூறுவதாக அறிவிக்கிறார்.

ஹதீஸ் எண்: 265
ஒருவர் தன் மனைவியை மாதவிடாய் துவக்கத்தில் உடலுறவு கொண்டால் ஒரு தீனார்! அவளை மாதவிடாய் நின்று போகும் போது உடலுறவு கொண்டால் அரை தீனார்! (தர்மம் செய்ய வேண்டும்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர்: மிக்ஸம் அவர்கள்.

ஹதீஸ் எண்: 266
ஒருவர் தனது மனைவியிடம் அவள் மாதவிலக்காக இருக்கும் போது உடலுறவு கொண்டால் அவர் அரை தீனார் தர்மம் செய்வாராக! என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி).

இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்:
இதைப் போன்று தான் அலீ பின் பதீமா அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வழியாக முர்ஸலாக அறிவிக்கிறார்.

'அவ்(வாறு உடலுறவு கொண்ட)வர் ஒரு தீனாரில் ஐந்தில் இரண்டை தர்மம் செய்ய வேண்டும் என்று நான் அவருக்கு உத்திரவிடுகின்றேன்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஸாஹீ அவர்கள் அறிவிக்கிறன்றார். இந்த ஹதீஸ் - முர்ஸல் - அதாவது இதன் அறிவிப்பாளர்கள் வரிசையில் தொடராக இருவர் அல்லது இருவருக்கும் மேல் விடுபட்ட தொடர் ஆகும்.

குறிப்பு: சஹீஹான (சரியான) அறிவிப்பு ஒரு தீனார் அல்லது அரை தீனார் என்று தான் வந்துள்ளது என்று இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிட்டதிலிருந்து ஒரு தீனார் என்றும் அரை தீனார் என்றும் அறிவிக்கப்படுகின்ற இந்த ஹதீஸ்கள் சரியானவை அல்ல என்பதை கருத்தில் கொள்ளவும்.

பாடம்: 107 உடலுறவு அல்லாத காரியம் செய்தல்

ஹதீஸ் எண்: 267
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களில் மாதவிலக்காகி இருக்கும் மனைவியை அவர் மே(னியி)ல் பாதி தொடைகள் வரை அல்லது முட்டுகள் வரை மறைக்கின்ற ஆடையிருக்கும் போது கட்டி அணைப்பார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 269
நான் மாதவிலக்காகி இருக்கும் போது நானும், அல்லாஹ்வுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களும் (இடுப்பாடை அல்லாத) ஒரே மேலாடையில் (இருவரும் படுத்து) இரவைக் கழிப்போம். என்னிடமிருந்து எதுவும் (இரத்தம்) அதில் (அவ்வாடையில்) பட்டு விடும்போது அதனுடைய இடத்தை (மட்டும்) அ(து பட்ட இடத்)தை மட்டும் அவர்கள் கழுவுவார்கள். பிறகு அதை அணிந்தவாறு தொழுது கொள்வார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 270
எங்களில் ஒருவர் மாதவிலக்காகி விடுவார். அவளுக்கும் அவருடைய கணவருக்கும் ஒரு விரிப்பைத் தவிர இருக்காது. (அப்போது என்ன செய்ய வேண்டும்?) என்று தனது அத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவிய போது, அன்னையார் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை உனக்கு அறிவிக்கிறேன் என்று (பின்வருமாறு) கூறினார்கள். அவர்கள் (நான் மாத விலக்காகி இருக்கும் போது என்னிடம்) வந்தார்கள். பிறகு உடனே அவர்கள் தனது பள்ளிக்கு (இங்கு இமாம் அபூதாவூது அவர்கள் அண்ணலார் அவர்களது வீட்டில் உள்ள பள்ளி (தொழுமிடம்) என்று குறிப்பிடுகிறார்கள்) சென்றார்கள். எனது கண்கள் (உறக்கத்தில்) என்னை ஆட்கொள்ளும் வரை அவர்கள் திரும்பவில்லை. அவர்களை குளிர் வதைத்ததும் (என்னிடம் வந்து) நீ நெருங்கி வா! என்று கூறினார்கள். நான் மாதவிலக்கானவள் என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் உனது தொடைகளை வெளிப்படுத்துக என்று சொன்னதும் எனது தொடைகளை வெளிப்படுத்தினேன். அவர்கள் தனது கன்னத்தையும் மார்பையும் எனது தொடையின் மீது வை(த்துப்படு)த்தார்கள். நான் அவர்கள் மீது குப்புற சாய்ந்தேன். அவர்கள் (உடல்) சூடாகி (வெதுவெதுப்படைந்து) உறங்கி விட்டார்கள் என்று தனக்கு தன் அத்தை அறிவித்ததாக உமார பின் குராப் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

குறிப்பு: உமார பின் குராப்: இவர் அறியப்படாதவர் என்று ஹாபிழ் அறிவிக்கும் அப்துற்றஹ்மான் பின் ஸியாஹ், அப்துல்லாஹ் பின் உமர் பின் கானிம் ஆகியோர் அனைவரின் ஹதீஸையும் ஆதாரமாக கொள்ளப்படாது என்று முன்தரி அவர்கள் கூறுகின்றார்கள்.