Pages

Muhammad(pbuh)

பாடம்: 100 குளிக்கும் போது பின்னலை பெண்கள் அவிழ்த்து விடுதல்

ஹதீஸ் எண்: 251
முஸ்லிம்களில் ஒரு பெண்மணி, அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களே! நான் தலையை இறுக்கமாக பின்னிக் கொள்பவளாக இருக்கிறேன். கடமையான குளிப்பின் போது நான் (அதனை) அவிழ்த்து விட வேண்டுமா? என்று வினவிய போது 'நீ அதன் மீது இருகை நிரம்ப தண்ணீரை ஊற்று. ஊற்றுவதே உனக்குப் போதுமானதாகும். பிறகு உனது உடலின் மற்ற பகுதியில் நீரை ஊற்றிக் கொள். நீ அப்போது தூய்மையாகி விடுவாய்' என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 252
உம்முஸலமா (ரலி) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார்கள் என்று இந்த ஹதீஸை இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்ற போது 'அப்பெண்மணிக்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் (விளக்கம்) கேட்டேன்' என்று உம்முஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று மேலுள்ள ஹதீஸின் பொருளையே தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு இரு கையளவு நீரின் போதும் உனது பின்னலை அழுந்த தேய்ப்பாயாக என்று (அண்ணலார் கூறியதாக) இதில் அறிவிக்கின்றார்.

ஹதீஸ் எண்: 253
எங்களில் ஒருத்திக்கு குளிப்புக்கடமை ஏற்பட்டு விட்டால் அவள் மூன்று தடவை இரு கைகள் அளவு தண்ணீரை இவ்வாறு (என்று அன்னையர் அவர்கள்) தனது இரு கைகளையும் இணைத்துக் காட்டினார்கள். அள்ளி தனது தலையில் ஊற்றும் போது ஒரு கை(யளவு தண்ணீரை)யை எடுத்து (தலையின்) ஒரு பகுதியில் ஊற்றுவாள். இன்னொரு கை(யளவு தண்ணீரை)யை இன்னொரு பக்கம் ஊற்றுவாள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸபிய்யா பின் ஷைபா அவர்கள்.

ஹதீஸ் எண்: 254
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் கட்டியவர்களாகவும், கட்டாதவர்களாகவும் இருக்கும் போது எங்களுடைய தலைகளின் மீது லிமாத் (லிமாத் என்றால் தலையில் இருகக் கட்டியுள்ள துணி) இருக்கும் நிலையிலேயே குளிப்போம்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 255
தங்களுக்கு ஸப்வான் (ரலி) அவர்கள் (கீழ்கண்டவாறு) அறிவித்தார்கள் என கடமையான குளிப்பு முறையை பற்றி எனக்கு ஜுபைர் பின் நுபைர் தீர்ப்பளித்தார். (சப்வான் இன்னும் மற்றவர்களும்) கடமையான குளிப்பு முறை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரிய போது 'ஒரு ஆண் (குளிக்கும் போது) தனது தலை முடியை விரித்து விட வேண்டும். பிறகு முடிகளின் அடிக்காம்புகளுக்கு நீர் சென்று அடையும் அளவுக்கு அதை அவர் கழுவ வேண்டும். ஒரு பெண் அவள் மீது (முடியை) அவிழ்த்து விடாமல் இருப்பது தவறில்லை. அவள் தமது இருகைகளால் மூன்று தடவைகள் தண்ணீரை அள்ளி தலையில் விட வேண்டும்' என்று அண்ணலார் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஷுரைஹ் பின் அபீத் அவர்கள்.

பாடம்: 101 மூலிகையைத் தேய்த்து கடமையான குளிப்பை நிறைவேற்றுதல்

ஹதீஸ் எண்: 256
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பின் போது தனது தலையை கித்மிய்யா (என்ற மூலிகையி)னால் தேய்த்து கழுவுவார்கள். இதைக் கொண்டே போதுமாக்கிக் கொள்வார்கள். இதற்கு மேல் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

பாடம்: 102 கடமையான குளிப்பை நிறைவேற்றுதல்

ஹதீஸ் எண்: 257
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் (உடலுறவின் போது வழிகின்ற) இந்திரியம் தொடர்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கையளவு தண்ணீர் எடுத்து இந்திரியம் பட்ட இடத்தில் ஊற்றுவார்கள். பிறகு ஒரு கையளவு நீர் எடுத்து அதில் (மறைவுறுப்பில்) ஊற்றுவார்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸவாஆ பின் ஆமிர் கிளையினரில் ஒருவர்.

பாடம்: 103 மாதவிலக்கான பெண்ணுடன் உண்ணுதல், உடலுறவு கொள்ளுதல்

ஹதீஸ் எண்: 258
யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால் அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் அவர்கள் சேர்ந்து உண்ணவும், குடிக்கவும் மாட்டார்கள். எனவே, இதைப் பற்றி அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, (நபியே!) மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் 'அது (அசுத்தமான) ஓர் உபாதை. எனவே மாதவிடாய் காலத்தில் பெண்களை (உடலுறவு செய்வதை விட்டும்) விலகி இருங்கள்' (2:222) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான். எனவே அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள், 'வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள், உடலுறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்' என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், இவர் (முஹம்மது (ஸல்)) நம்முடைய காரியத்தில் எதையுமே விட்டு வைக்க விரும்ப வில்லை. அதில் அவர் நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லை என்று பேசிக் கொண்டனர். அப்போது உசைத் பின் ஹுபைர், அப்பாத் பின் பிஷ்ர் ஆகிய இருவரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! யூதர்கள் இன்னின்னவாறு பேசிக் கொள்கிறார்களே! நாம் (யூதர்களுக்கு முழுமையாக வேறுபடுகின்ற விதத்தில்) ஏன் அவர்களிடம் (பெண்களிடம்) மாதவிடாய் காலத்திலும் உடலுறவு கொள்ளக் கூடாது? என்று அவர்களிருவரும் வினவியதும், அண்ணலார் (ஸல்) அவர்களின் முகம் (சினத்தால்) மாறி விட்டது. அவ்விருவரின் மீதும் அவர்கள் (கடுமையாக) கோபமடைந்து விட்டார்கள் என்றே நாங்கள் கருதினோம். உடனே அவ்விருவரும் புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்களுக்கு எதிரிலேயே அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக பால் வந்தது. அவர்கள் அவ்விருவரும் சென்ற தடத்தில் (ஆள்) அனுப்பி (அழைத்து வரச் செய்து) அவ்விருவரையும் பால் அருந்தச் செய்தனர். அப்போது நாங்கள் அவர்கள் அவ்விருவர் மீதும் கோபங்கொள்ள வில்லை என்று எண்ணிக் கொண்டோம்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 259
நான் மாதவிலக்காக இருக்கும் போது எலும்பை (கொண்ட இறைச்சியை) கடிப்பேன். பிறகு நான் அதை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் நான் வாய்வைத்த அதே இடத்திலேயே வாய் வைத்து சாப்பிடுவார்கள். நான் பானம் பருகிவிட்டு அதை அவர்களிடம் அளிப்பேன். நான் எந்த இடத்தில் (வாய் வைத்து) பருகினேனோ அதே இடத்தில் அவர்களும் வாய் வைத்து பருகுவார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 260
நான் மாதவிலக்காக இருக்கும் போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தலையை என் மடியில் வைத்து (படுத்து) இருப்பார்கள் அப்போது அவர்கள் (குர்ஆன்) ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.