ஹதீஸ் எண்: 321
நான் அப்துல்லாஹ் (பின் மஸ்வூத்) ரலி அவர்கட்கும் அபூமூஸா (ரலி) அவர்கட்கும் மத்தியில் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ்வை நோக்கி) அபூ அப்துற்-றஹ்மான் அவர்களே! ஒருவர் ஜுனுபாகி ஒரு மாதம் வரை தண்ணீர் கிடைக்க வில்லை எனில், அவர் தயம்மம் செய்து கொள்ளலாமா என்று கருதுகின்றீர்களா? என்று வினவினார்கள். அதற்கு அவர்கள் ஒரு மாதம் வரை தண்ணீர் கிடைக்க வில்லை என்றாலும் அவர் தயம்மம் செய்ய வேண்டாம்! என்று பதிலுரைத்தார்கள். உடனே அபூமூஸா (ரலி) அவர்கள், அப்படியானால், அல் மாயிதா என்ற (5 ஆம்) அத்தியாயத்தில் 'நீங்கள் (சுத்தம் செய்வதற்குரிய) நீரை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் பரிசுத்தமான மண்ணைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள்' என்ற (6 ஆம்) வசனத்தை என்ன செய்ய போகிறீர்கள்? என்று வினவியதும் அப்துல்லாஹ் அவர்கள் இதில் அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டு விட்டால், அவர்களுக்கு தண்ணீர் குளிர்ந்து விடும் போது அவர்கள் மண்ணில் தயம்மம் செய்ய துவங்கி விடுவார்கள்! என்று பதிலளித்தார்கள். அதற்காகத் தான் நீங்கள் இதை வெறுக்கின்றீர்கள்? என்று அபூமூஸா அவர்கள் கேட்ட போது அவர்கள் ஆம் என்றார்கள். பிறகு அபூமூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் அம்மார் (ரலி) அவர்கள் என்னை 'அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தேவையை முன்னிட்டு அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் ஜுனுபாகி விட்டேன். அப்போது தண்ணீர் கிடைக்காததால் மிருகம் (தரையில்) புரண்டெழுவது போன்று நான் (சுத்தமான) மண்ணில் பரண்டெழுந்தேன். பிறகு நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, இதை அவர்களிடம் தெரிவித்த போது அவர்கள் (நீ மண்ணில் புரள தேவையில்லை) நீ இவ்வாறு செய்தால் போதுமாகும் என்று சொல்லி, தனது கையை மண்ணில் அடித்து உதறி தனது இடது கையை வலது கையின் மீதும் பிறகு தனது வலது கையை இடது கையின் மீதும் (இப்படி) இரு முன்னங்கைகளையும் ஒன்றோடு ஒன்றாக தட்டி பிறகு தனது முகத்தில் தடவினார்கள்'. என்று கூறியதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கூறியதும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் அம்மார் (ரலி) அவர்களின் இந்தக் கூற்றைக் கொண்டு திருப்தியடையவில்லை என்று நீர் அறியவில்லையா? என்று கேட்டார்கள்.அறிவிப்பாளர்: ஷகீக் அவர்கள்.
(குறிப்பு: இதை இமாம் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகியோர் தமது நூல்களில் பதிவாக்கியுள்ளனர்.)
ஹதீஸ் எண்: 322
அப்துற்-றஹ்மான் பின் அப்ஸா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் வீற்றிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, நாங்கள் ஓரிடத்தில் ஒரு மாதம் அல்லது இரு மாதங்கள் தங்குகின்றோம். (நாங்கள் எவ்வாறு தொழுவது) என்று வினவிய போது, உமர் (ரலி) அவர்கள் என்னை பொறுத்த வரையில் தண்ணீர் கிடைக்கின்ற வரை நான் தொழ மாட்டேன் என்று பதிலளித்தார்கள். அப்போது அம்மார் (ரலி) அவர்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! உங்களுக்கு நினைவில்லையா? நானும் நீங்களும் ஒட்டகம் மேய்ப்பதில் ஈடுபட்டிருக்கும் போது நமக்கு ஜனாபத் ஏற்பட்டு விட்டது. அதனால் நான் (மண்ணில்) புரண்டெழுந்தேன். நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்ததும், நான் இதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் நீ அவ்வாறு செய்வது உனக்கு போதுமானதாகும் என்று கூறி தனது இரு கைகளையும் மண்ணில் அடித்தார்கள். பிறகு அவ்விரண்டு கைகளையும் ஊதினார்கள். பிறகு அவ்விரண்டைக் கொண்டு தனது முகத்தையும், தனது கைகளையும் பாதி முழங்கைகள் வரை தடவினார்கள்' என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் 'அவ்வாறன்று, அல்லாஹ் மீது ஆணையாக! இது விஷயத்தில் நீர் எதை நோக்கி திரும்பி விட்டீரோ அதை நோக்கியே உம்மை திருப்பி விடுகிறோம் (இது உன் விருப்பத்தை சார்ந்தது) என்று சொன்னார்கள்.அறிவிப்பாளர்: அப்துற்-றஹ்மான் பின் அப்ஸா.
(குறிப்பு: இந்த ஹதீஸை இமாம் புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா ஆகியோரும் தமது நூல்களில் பதிவாக்கியுள்ளார்கள்.)
ஹதீஸ் எண்: 323
அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடமிருந்து அப்துற்றஹ்மான் அப்ஸா அறிவிக்கும் போது இந்த ஹதீஸில், அம்மாரே! நீ இவ்வாறு செய்வதே உனக்கு போதுமானதாகும் என்று அண்ணலார் கூறி பின்பு இரு கைகளையும் ஒரே ஒரு தடவை மண்ணில் அடித்தார்கள். பிறகு அவ்விரண்டில் மற்றொன்றின் மீது அடித்து, தனது முகத்தையும் முழங்கைகளையும் முட்டுக்கைகளை அடையாத வண்ணம் பாதி முழங்கைகள் வரை தடவினார்கள் என்று அறிவிக்கின்றார்.அறிவிப்பாளர்: அம்மார் பின் யாஸிர் (ரலி).
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
இந்த ஹதீஸை அப்துற்றஹ்மான் பின் அப்ஸா, சலமா பின் குஹைல், அஃமஷ் வழியாக வகிஃ அறிவிக்கின்றார்.தன் தந்தை அப்துற்றஹ்மான் பின் அப்சாவிடமிருந்து அறிவிக்கும் சயீத் ஸலமா பின் குஹைல், அஃமஷ் வழியாக இதை ஜரீர் அறிவிக்கின்றனர்.
ஹதீஸ் எண்: 324
இந்த சம்பவத்தை அம்மார் அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக (சயீத்) இப்னு அப்துற்றஹ்மான் பின் அப்ஸா அறிவிக்கின்ற போது, உனக்கு இதுவே போதுமானதாகும் என்றும் மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது கையை மண்ணில் அடித்து, பிறகு அக்கையில் ஊதி அதைக் கொண்டு தனது முகத்தையும், தனது முன்னங்கைகளையும் தடவினார்கள் என்று குறிப்பிடுகின்றார். அறிவிப்பாளர் ஸலமா அவர்கள் சந்தேகம் கொண்டு இதில் முட்டுக்கைகள் வரை அல்லது முன்னங்கைகள் வரை என்று இடம் பெற்றுள்ளதா என்று எனக்கு தெரியாது என்று குறிப்பிடுகின்றார்.அறிவிப்பாளர்: அம்மார் (ரலி).
ஹதீஸ் எண்: 325
பிறகு அக்கையில் ஊதி, அதைக் கொண்டு தனது முகத்தையும், தனது முன்னங் கைகளை முட்டுக் கைகள் வரை அல்லது முழங்கைகள் வரை தடவினார்கள் என்று மேலுள்ள அதே இஸ்நாத் மூலம் ஷுஃபா அறிவிப்பதாக ஹஜ்ஜாஜ் வழியாக அலீ பின் சஹ்ல் ரம்லீ அறிவிக்கின்றார்.ஸலமா அவர்கள் (இந்த ஹதீஸில்) முன்னங்கைகள், முகம், முழங்கைகள் என்று அறிவிக்கும் போது ஒரு நாள் மன்சூர் என்பார் அவரை நோக்கி, நீ என்ன அறிவிக்கின்றீர் என்பதை கவனித்துக் கொள்க! ஏனெனில் உம்மைத் தவிர வேறு யாரும் முழங்கைகளை குறிப்பிடவில்லை என்று கூறினார் என்று ஷுஃபா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஹதீஸ் எண்: 326
அம்மார் (ரலி) அவர்களிடமிருந்து தன் தந்தை வழியாக சயீத் பின் அப்துற்றஹ்மான் பின் அப்ஸா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸில், 'உனது இரு கைகளையும் மண்ணில் அடித்து இவ்விரண்டைக் கொண்டு உமது முகத்தையும், உமது முன்னங்கைகளையும் நீ தடவிக் கொள் உமக்கு போதுமாகும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிட்டு இந்த ஹதீஸைத் தொடர்கிறார்.அறிவிப்பாளர்: அம்மார் (ரலி) அவர்கள்.
அம்மார் ரலி அவர்கள் உரையாற்றுவதை நான் செவியுற்றேன். ஆனால் அவர்கள் ஊதவில்லை என்று தான் குறிப்பிட்டார்கள் என சயீத் பின் அப்துற்றஹ்மான் பின் அப்ஸா கூறியதாக மாலிக் மூலம் ஹுஸைன் வழியாக இதை ஷுஃபா அறிவிக்கின்றார். தனது இரு முன்னங்கைகளையும், மண்ணில் அடித்து ஊதினார்கள் என்று அவர் கூறியதாக இந்த ஹதீஸில் ஹகம் மூலம் ஷுஃபா வாயிலாக ஹுஸைன் பின் முஹம்மது குறிப்பிடுகின்றார்.
ஹதீஸ் எண்: 327
நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தயம்மத்தைப் பற்றி வினவிய போது முகத்திற்கும், முன்னங்கைகளுக்கும் ஒரு தடவை மண்ணில் அடிக்குமாறு எனக்கு கட்டளையிட்டார்கள் என்று அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அறிவிப்பாளர்: அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள்.
ஹதீஸ் எண்: 328
பயணத்தில் தயம்மம் செய்வது பற்றி கதாதா அவர்களிடம் வினவப்பட்ட போது அவர் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் முட்டுக்கைகள் வரை (தடவச்) சொன்னார்கள் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் அறிவித்ததாக அப்துற்றஹ்மான் பின் அப்ஸா, ஷுஃபி வாயிலாக எனக்கு ஒரு அறிவிப்பாளர் அறிவித்தார் என்று பதிலளித்தார்.அறிவிப்பாளர்: கதாதா அவர்கள்.
இந்த சனதில் அறியப்படாத ஒருவர் இடம் பெற்றார் என்று முன்திரி அவர்கள் கூறுகின்றார்.
பாடம்: 124 ஊரில் வசிப்பவர் தயம்மம் செய்தல்
ஹதீஸ் எண்: 329
நானும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்களின் அடிமையான அப்துல்லாஹ் பின் யஸார் அவர்களும் புறப்பட்டு அபுல்ஜுஹைம் பின் அல்ஹாரிஸ் பின் சிம்மா அவர்களிடம் சென்றோம். அப்போது அபுல் ஜுஹைம் அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள். பிஃர் ஜமல் என்ற இடத்திலிருந்து அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து கொண்டிருக்கும் போது, அவர்களை ஒருவர் சந்தித்து, அவர்களுக்கு ஸலாம் உரைத்தார். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் கூறாமல் ஒரு சுவர் அருகே வந்து தனது முகத்தையும் தனது இரு கைகளையும் (தயம்மம் செய்து) தடவினார்கள். பின்பு அவருக்கு பதில் சலாம் கூறினார்கள். இவ்வாறு இப்னு அவர்கள் கூற அப்பாஸ் அவர்களிடமிருந்து செவியுற்றதாக அறிவிப்பாளர் அவர்களுடைய அடிமை உமைர் அவர்கள்.அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமை உமைர்.
(குறிப்பு: இந்த ஹதீஸை இமாம் புகாரி, நஸயீ ஆகியோர் தமது நூல்களில் பதிவு செய்துள்ளார். இமாம் முஸ்லிம் அவர்கள் இதை முன்கதிஃ ஆக பதிவு செய்திருக்கின்றார்கள்.)
ஹதீஸ் எண்: 330
நாபி அறிவிக்கின்றார்கள். ஒரு தேவையை முன்னிட்டு நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று கொண்டிருந்த போது இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் தேவையை நிறைவேற்றிவிட்டு அன்றைய தினம் அவர்கள் அறிவித்த ஹதீஸ் இதுதான்: சிறுநீர் அல்லது மலம் கழித்து விட்டு திரும்பிய அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை ஒருவர் ஒரு குறுகிய தெருவில் கடந்து சென்ற போது அவர்களுக்கு அவர் ஸலாம் சொன்னார். ஆனால் அவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறவில்லை. அந்த தெருவில் (பார்வையை விட்டும்) மறைகின்ற தருவாயில் தனது இருகைகளை சுவரில் அடித்து அவ்விரண்டைக் கொண்டு தனது முகத்தை தடவினார்கள். பிறகு மீண்டும் ஒரு தடவை அடித்து அவ்விரண்டைக் கொண்டு தனது முகத்தை தடவினார்கள். பிறகு மீண்டும் ஒரு தடவை அடித்து தனது இரு முழங்கைகளை தடவினார்கள். பின்பு அம்மனிதருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். மேலும் அவரிடம், நான் சுத்தமில்லாமல் இருந்தேன் என்பதை தவிர உமது சலாமுக்கு பதில் கூறுவதை விட்டும் என்னை வேறெதுவும் தடுக்க வில்லை என்று (விளக்கம்) கூறினார்கள்.அறிவிப்பவர்: நாபிஃ அவர்கள்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
முஹம்மது பின் சாபித் அவர்கள் தயம்மமுடைய பாடத்தில் முன்கரான ஹதீஸை அறிவிக்கின்றார் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.இமாம் அபூதாவூத் குறிப்பிட்டதாக இப்னு குறிப்பிடுகின்றார். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு முறை அடித்ததாக அறிவிக்கும் இந்த செய்தியில் முஹம்மது பின் சாபித் அவர்களுக்கு யாரும் உடன்படவில்லை. அவர்களெல்லாரும் இதை இப்னு உமர் (ரலி) அவர்களது செயலாக அறிவிக்கின்றனர்.
Pages
▼
Muhammad(pbuh)
▼