Pages

Muhammad(pbuh)

ஹதீஸ் எண்: 331
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்று விட்டு (திரும்பி) வரும் போது பிஃர் ஜமல் என்ற இடத்திற்கு அருகில் அவர்களை ஒருவர் சந்தித்தார். உடனே அவர் அவர்களுக்கு சலாம் சொன்னதும், அவருக்கு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உடன் பதிலளிக்காது ஒரு சுவருக்கு அருகில் வந்து தனது கையை சுவரில் வைத்தார்கள். பிறகு தனது முகத்தையும், தனது இரு கைகளையும் தடவினார்கள். பிறகு அம்மனிதருக்கு பதில் சலாம் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) அவர்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸை முன்திரி அவர்கள் ஹசன் என்று கூறுகின்றார்.)

பாடம்: 125 ஜுனுபானவர் தயம்மம் செய்யலாமா?

ஹதீஸ் எண்: 332
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் சில ஆடுகள் திரண்டிருந்தன. அப்போது அவர்கள் (என்னை நோக்க) அபூதரே! இவற்றை நீ காட்டிற்கு ஓட்டிச் செல் என்று சொன்னார்கள். நான் ரபதா என்ற இடத்திற்கு (ஓட்டிச்) சென்றேன். (அங்கு) என்னை ஜனாபத் தீண்டி நான் (குளிக்க முடியாமல்) ஐந்து அல்லது ஆறு (நாட்கள்) தங்கியிருந்தேன். பின்பு நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவர்கள் என்னை, 'அபூதரே!' என்று அழைத்தார்கள். நான் (பதில் கூறாது) மௌனம் சாதித்தேன். அப்போது அவர்கள், அபூதரே! உடனது தாய் இழக்க கடவது! உமக்கு அழிவுண்டாகட்டும்! என்று கூறி எனக்காக ஒரு கருத்த அடிமைப் பெண்ணை அழைத்தார்கள். அப்பெண்மணி தண்ணீர் பாத்திரத்தை கொண்டு வந்தாள். (ஒரு புறத்தில்) அவள் ஒரு ஆடையைக் கொண்டு என்னை மறைத்தாள். நானும் (இன்னொரு புறத்தில்) ஒரு ஒட்டகையை மறைவாக்கிக் கொண்டு குளிப்பை நிறைவேற்றினேன். அப்போது தான் நான் என் மேலிருந்த மலையை இறக்கியவன் போலானேன். அப்போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் '(தண்ணீர் இல்லாது) பத்தாண்டுகள் ஆயினும் (பரிசுத்தமான) மண் ஒரு முஸ்லிமின் உளூ(விற்கு அல்லது குளிப்பிற்கு பரிகாரமாகும்)வாகும்'! எனவே எப்போது தண்ணீரை பெற்றுக் கொள்கிறாயோ அப்போது உனது உடலை தண்ணீரில் கழுவச் செய்க! இதுவே சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூதர் (ரலி).

ஹதீஸ் எண்: 333
பனூ ஆமிர் கிளையினரில் ஒருவர் அறிவிக்கின்றார்
நான் இஸ்லாத்தைத் தழுவியதும் என்னுடைய மார்க்க(த்தைப் பற்றிய அறியாமை)ம் என்னை கவலை கொள்ள வைத்தது. இதனால் நான் அபூதர் அவர்களிடம் (மார்க்கத்தைத் தெரிந்து கொள்வதற்காக) வந்தேன். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள். நான் மதீனா (எனக்கு ஒத்துக் கொள்ளாததால்)வை வெறுத்தேன். எனவே எனக்கு அல்லாஹ் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் சில ஒட்டகங்களையும், ஆடுகளையும் (எடுத்துக் கொண்டு செல்லும் படி) உத்தரவிட்டு, அவற்றின் பாலை பருகும்படி கூறினார்கள்.

இங்கு அறிவிப்பாளர் ஹம்மாத் பாலுக்கு பதிலாக சிறுநீர் என்று கூறினாரா? என்று சந்தேகடைகிறேன் என்று குறிப்பிடுகின்றார்.

அபூதர் தொடர்ந்து கூறுகின்றார்கள்: எனவே நான் தண்ணீரில் உள்ள பகுதியை விட்டும் நான் தூரமாகி விட்டேன். என் குடும்பம் என்னோடு தான் இருந்தது. அப்போது என்னை ஜனாபத் தீண்டி விடும்போது நான் சுத்தமின்றியே தொழுதேன். பிறகு நான் நண்பகலில் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த போது அவர்கள் பள்ளியின் நிழலில் தனது தோழர்களின் குழுவினருடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் அபூதர் தானே! என்று வினவியதும், நான் ஆம்! அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! நான் நாசமாகி விட்டேன்! என்று பதிலளித்தேன். அவர்கள், உன்னை நாசமாக்கியது எது? என்று வினவியதும், நான் தண்ணீர் உள்ள பகுதியை விட்டும் தூரமாகி விட்டேன். என்னுடைய குடும்பம் என்னுடனே இருந்தது. எனவே என்னை ஜனாபத் தீண்டிவிடும் போது நான் சுத்தமின்றியே தொழுதேன் என்று பதிலளித்தேன். உடனே எனக்காக அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) தண்ணீருக்கு உத்தரவிட்டார்கள். முழுதும் நிரம்பியிராத தளும்புகின்ற ஒரு பாத்திரத்தில் கருத்த அடிமைப்பெண் நீர் கொண்டு வந்தாள். நான் ஒரு ஒட்டகைக்கு அருகில் மறைந்து கொண்டு குளித்தேன். பிறகு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள், நீ பத்தாண்டுகள் வரை தண்ணீரை பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும் பரிசுத்தமான மண்ணே தூய்மை (அளிக்கும் பொருள்) ஆகும். எனவே நீரை பெற்றுக் கொண்டால் அதை உனது உடலில் தழுவச் செய் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: மூஸா பின் இஸ்மாயீல்.

பாடம்: 126 ஜுனுபானவர் குளிருக்கு பயந்து தயம்மம் செய்யலாமா?

ஹதீஸ் எண்: 334
அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
தாதஸாலாஸில் என்ற படையெடுப்பின் போது கடுங்குளிரான இரவில் (உறங்கும் போது) கனவு கண்டு நான் ஜுனுபாகி விட்டேன். நான் குளித்தால் மரணமடைந்து விடுவேனோ என்று அஞ்சினேன். எனவே நான் தயம்மம் செய்து, எனது தோழர்களுக்கு சுப்ஹ் தொழுகை நடத்தினேன். இதை பிறகு அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தனர். அப்போது அவர்கள் (என்னை நோக்கி) அம்ரே! நீ ஜுனூபாக இருக்கும் போது உனது தோழர்களுக்கு நீ தொழுகை நடத்தினாயா? என்று வினவினார்கள். நான் அவர்களிடம் என்னை குளிப்பதிலிருந்து தடுத்து விட்ட நிகழ்ச்சியை அவர்களிடம் தெரிவித்தேன். மேலும் நான் 'உங்களை நீங்கள் கொன்று விட வேண்டாம். அல்லாஹ் உங்களிடம் கருணை உள்ளவனாக இருக்கின்றான்' என்று அல்லாஹ் கூறி இருக்கிறான் என நான் செவியுற்றிருக்கிறேன் என்றும் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) சிரித்தார்கள். மேலும் அவர்கள் வேறெதையும் கூறவில்லை.

அறிவிப்பவர்: இப்னுல் முஸன்னா.

ஹதீஸ் எண்: 335
அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் சிறுபடையெடுப்பில் பங்கேற்றிருந்தார்கள் என்றும் இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸைப் போன்று அறிவிக்கின்றார். 'அவர்கள் தனது உடலின் (கங்குமர் போன்ற) இணைப்புப் பகுதிகளை கழுவி தொழுகைக்கு உலூ செய்வது போன்று உலூச் செய்தார்கள் என்று மேலுள்ள ஹதீஸைப் போன்று அறிவிக்கும் இவர் தயம்மம் செய்வதை குறிப்பிடவில்லை'.

அறிவிப்பவர்: முஹம்மது பின் ஸலமா.

பாடம்: 127 காயம் பட்டவர் தயம்மம் செய்தல்

ஹதீஸ் எண்: 336
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நாங்கள் ஒரு பயணம் சென்று கொண்டிருந்த போது எங்களில் ஒருவர் மேல் கல்பட்டு அவரது தலை காயமாகி விட்டது. பிறகு அவர் (உறங்கும் போது) கனவு கண்டு ஜுனுபாகி விட்டார். எனவே தயம்மம் செய்ய அனுமதி உண்டா? என்று வினவிய போது, 'நீங்கள் தண்ணீரில் (குளிப்பதற்கு) சக்தியுள்ளவராக இருக்கும் போது உமக்கு அப்படி நீர் தயம்மம் செய்ய அனுமதி இருப்பதை நாங்கள் காணமுடியவில்லை' என்று அவர்கள் பதிலளித்தார்கள். எனவே அவர் (தண்ணீரில்) குளித்ததினால் மரணமடைந்து விட்டார். நாங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தவுடன் இதை அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் (பின்வருமாறு) தெரிவித்தார்கள். அவரை அவர்கள் கொன்று விட்டனர்! அல்லாஹ் அவர்களை கொல்வானாக! அவர்கள் (இந்தச் சட்டத்தை) அறியாமலிருக்கும் போது அவர்கள் கேட்டு தெரிந்திருக்க வேண்டாமா? ஏனெனில் அறியாமை (என்ற நோ)யின் நிவாரணம் (அதைப் பற்றி தெரிந்தவரிடம்) வினவுவதாகும். (இறந்த) அவர் தயம்மம் செய்து, அவர் தனது காயத்தில் (ஈர) துணியை பிழிந்து அல்லது (ஈர) துணியை கொண்டு கட்டுப்போட்டு, பிறகு அதன் மீது மஸ்ஹுசெய்து அவர் தனது உடல் முழுவதும் கழுவிக் கொள்வதே அவருக்கு போதுமாகும்.

அறிவிப்பவர்: மூஸா பின் அப்துற் ரஹ்மான்.

(குறிப்பு: இந்த தொடரில் ஜுபைர் பின் குரைக் என்பவர் இடம் பெறுகின்றார். இமாம் தாரகுத்னீ அவர்கள் இவர் வலுவானவர் அல்லர் என்று குறிப்பிடுகின்றார்கள் என இமாம் ஹாபிழ் முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள்.)

ஹதீஸ் எண்: 337
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விட்டது. பிறகு அவர் கனவு கண்டு ஜுனுபாளியாகி விட்டார். எனவே அவருக்கு குளிக்கும் படி உத்திரவிடப்பட்டு அவர் குளித்ததும் இறந்து விட்டார். அது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தெரிந்து, அவரை அவர்கள் கொன்று விட்டார்கள். அல்லாஹ் அவர்களை கொல்வானாக! அறியாமை என்ற நோயின் நிவாரணம் விளக்கம் கேட்பதல்லவா? என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி).

பாடம்: 128 தயம்மம் செய்து தொழுத பிறகு ஒருவர் தண்ணீரை கண்டால்!

ஹதீஸ் எண்: 338
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவர் பயணம் சென்று கொண்டிருந்தனர். அப்போது (அவர்களுக்கு) தொழுகை நேரமானதும் அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே, அவ்விருவரும் பரிசுத்தமான மண்ணில் அவர்கள் தயம்மம் செய்து தொழுதார்கள். பிறகு அவ்விருவரும் அந்த (தொழுகைக்குரிய) நேரத்திலேயே தண்ணீரை பெற்று கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தொழுகையையும் உலூவையும் மீட்டிக் கொண்டார். இன்னொருவர் (அவ்வாறு) மீட்டவில்லை. பிறகு அவ்விருவரும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இதை தெரிவித்தார்கள். அப்போது அவர்கள் இவ்வாறு மீட்டாதவரை நோக்கி, நீர் சுன்னத்திற்கு (நபிவழிக்கு) உடன்பட்டு விட்டீர்! உமது தொழுகை உமக்கு போதுமானதாகும். (திருப்பித் தொழ வேண்டியதில்லை) உ ளூச் செய்து மீட்டித் தொழுதவரை நோக்கி 'உமக்கு இருமடங்கு கூலிகள் உள்ளன!' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி).

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
இந்த ஹதீஸை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அதாபின் யாஸிர், பக்ர் பின் ஸவாதா, உமைரா பின் அபீநாஜியா, அல்லைஸ் வழியாக அப்துல்லாஹ் பின் நாபிஃ அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
இந்த ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ அவர்களுடைய பெயரை குறிப்பிட்டிருப்பது சரியன்று. இது முர்ஸல் ஹதீஸ் ஆகும்.

இதை இமாம் நஸயீ அவர்கள் முர்ஸலாகவும் முஸ்னதாகவும் பதிவு செய்திருக்கின்றார்கள்.

ஹதீஸ் எண்: 339
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடைய தொடர்களில் இருவர் என்று மேலுள்ள ஹதீஸை இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.

அறிவிப்பாளர்: அதாபின் யஸார்.

இப்னுல்ஹைஆ இவர் வலுவானவர் அல்ல என்று யஹ்யா முபின் முஈன் குறிப்பிடுகின்றார்.

இவரை இமாம் வகீஃ யஹ்யா பின் கதான், இப்னு மஹ்தி ஆகியோர் (இவரிடமிருந்து அறிவிக்காது) விட்டு விடுவர் என்று இமாம் முஸ்லிம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

பாடம்: 129 ஜும்ஆ தினத்தில் குளித்தல்

ஹதீஸ் எண்: 340
ஜும்ஆ நாளன்று உமர் (ரலி) அவர்கள் (ஜும்ஆ) உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ஒருவர் (பள்ளியில்) நுழைந்தார். (அவரிடம்) 'நீங்கள் தொழுகையை விட்டும் (அதன் ஆரம்ப நேரத்தில் வராமல்) பின் தங்கி விடுகின்றீர்களா?' என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டதும், 'நான் (ஜும்ஆ) பாங்கை செவிமடுத்த மாத்திரத்தில் உடனே உளூ செய்ததை தவிர நான் வேறு எந்த வகையிலும் தாமதமாக வில்லையே' என்று வந்தவர் பதில் சொன்னார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் 'உளூ மட்டும் தான் செய்தீர்களா? உங்களில் ஒருவர் ஜும்ஆவிற்கு வர நாடினால் அவர் குளித்துக் கொள்ளட்டும் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூற செவியுறவில்லையா?' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).