பாவங்களின் பரிகாரங்கள்!

நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தோ தெரியாமலோ நிறைய பாவங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்து கொண்டிருக்கும் பாவங்கள் மன்னிக்கப்படுதற்கான வழிமுறைகள், ஹதீஸ்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிறர் குறைகளை மறைத்தல்!
யார் இவ்வுலகில் பிறருடைய குற்றங்குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். (முஸ்லிம்)

சபையினில் ஏற்பட்ட தவறுகளுக்கு பரிகாரமாக!
ஒரு சபையினில் பங்கெடுத்துவிட்டுக் கலையும் போது,

‘ஸூப்ஹானகல்லாஹூம்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’

பொருள் : அல்லாஹ்வே உன்னைப்புகழ்வதுடன் உனது தூய்மையை நான் துதிக்கின்றேன். உன்னைத்தவிர உண்மையில் வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நான் சாட்சி கூறுகின்றேன். உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். உன் பக்கமே மீளுகின்றேன்’

என்று ஓதினால் அக்கூட்டத்தில் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (இறைவனால்) மன்னிக்கப்பட்டுவிடும். (திர்மிதீ)

உளு வை முறையாகச் செய்வது!
யார் உழுவை முறையாகச் செய்கின்றாரோ அவருடைய நகக்கண்கள் உட்பட அவரது உடம்பு முழுவதிலிருந்து பாவங்கள் வெளியேறி விடுகின்றன. (முஸ்லிம்)

சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கபட கடமையான தொழுகை
கடமையான தொழுகைக்கான நேரம் வந்ததும் யார் முறையாக உழு செய்து உள்ளச்சத்துடன் ஒழுங்காகத் தொழுகின்றாரோ அவருடைய அத்தொழுகை – அவர் பெரும்பாவங்கள் செய்யாதவரை – அவருடைய சிறிய பாவங்கள் அனைத்திற்கும் பரிகாரமாகிவிடும். அந்நிலை அவருடைய ஆயுள் முழுவதும் உண்டு. (முஸ்லிம்)

பாவம் போக்கும் ஐவேளைத் தொழுகை
“உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)

10 நாட்கள் செய்த பாவங்களைப் போக்கும் ஜூம்ஆத் தொழுகை!
யார் முறையாக உழு செய்து ஜூம்ஆவுக்(காக பள்ளிக்)கு வந்து மௌனமாக இருந்து குத்பா – உரையைக் கேட்கின்றாரோ அவருடைய ஒரு ஜூம்ஆவுக்கும் மறு ஜூம்ஆவுக்கும் இடையேயான பாவங்களும் மேலும் அதிகப்படியான மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் (முஸ்லிம்)

ஒரு வருட பாவங்களை போக்க ஆஷூரா நோன்பு!
ஆஷூரா (முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11 ஆகிய) தினங்களில் நோன்பு நோற்பதன் மூலம் கடந்த ஒரு வருட (சிறிய) பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகிறேன். (முஸ்லிம்)

இரண்டு வருடங்கள் செய்த சிறிய பாவங்களைப் போக்கும் அரஃபா நோன்பு!
அரஃபா (துல்ஹஜ் பிறை 9 ஆம்) தினத்தில் நோன்பு நோற்பது கடந்த ஒரு வருடம் மற்றும் அடுத்த ஒரு வருட (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (முஸ்லிம்)

பாவம் போக்கும் ஃநபில் தொழுகை!
ஒரு முஸ்லிம் பாவம் செய்துவிட்டால் (அதை உணர்ந்து) உழுசெய்து சுத்தமாகி இரு ரக்அத்துகள் தொழுது மன்னிப்புக் கோரினால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான் (அபூதாவுத்)

சிறிய முன்பாவங்கள் மன்னிக்கப்பட!
உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு ‘நான் உளூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று கூறினார்கள் என்றார்கள்” என ஹும்ரான் அறிவித்தார். (புகாரி)

முன்பாவங்களைப் போக்கும் ரமலான்!
ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி)

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி)

லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. (புகாரி)

நடைபாதையில் உள்ள தடைகளை அகற்றினால்?
ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான். (புகாரி)

பிந்திய இரவில் பாவமன்னிப்பு வழங்கப்படும்!
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான். (புகாரி)

அன்று பிறந்த பாலகனைப்போல் பாவமற்றவராக ஆக!
மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார். (புகாரி)

கடன்பட்டோருக்காக உதவுவதல்!
யார் ஏழையின் (கடன்போன்ற) சிரமங்களை எளிதாக்கி உதவுகின்றாரோ அவருடைய இம்மை- மறுமை சிரமங்களை அல்லாஹ் எளிதாக்கிவிடுகின்றான். (முஸ்லிம்)

பொறுமையுடன் இருந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்!
ஒரு முஸ்லிமுக்கு நோய், வேதனை, துக்கம், கவலை, தொல்லை, துயரம் முதலான முள் குத்துவது உட்பட ஏதேனும் சோதனை நிகழ்ச்தால் அ(தனைப் பொறுத்துக் கொள்வ)தற்காக அவனுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (புகாரி)

அல்லாஹ்விற்காக நோன்பு நோற்பது!
யார் அல்லாஹ்வின் வழியில் ஒரு நாள் நோன்பிருக்கிறாரோ அந்த ஒருநாள் நோன்பிற்காக அல்லாஹ் அவருடைய முகத்தை எழுபது ஆண்டுகள் நரகத்திலிருந்து தூரமாக்கி விடுகிறான். (புகாரி)

பாவங்களை அழிக்கும் தர்மம்!
தர்மம் பாவங்களை அழித்துவிடும். நீர் நெருப்பை அணைப்பதைப் போல. (திரிமிதீ)

ஹஜ் மற்றும் உம்ரா – பாவங்களுக்கான சிறந்த பரிகாரங்கள்!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)

கடல் நுரை போல உள்ள அதிகமான பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமானால்!
‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! (புகாரி).

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்

ஷவ்வால் மாத நோன்பு.

யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.


ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். "இந்நாளின் சிறப்பென்ன?" என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது மகத்தான நாளாகும். இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், "நாங்கள்தாம் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள்" என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் (முஸ்லிம்களை) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய(ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், "நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (இது ஹிஜிரீ 10ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகும்).

மாதத்தில் மூன்று நோன்புகள்.

"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்கவும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர்.அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

"ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், "வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா?" என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றிவெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.

"உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்,(சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவது மென்றுவிடட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதற்குத் தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

"அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை" என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?" என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான்(எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன். நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன்"என்றோ கூறினார்கள். அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

"மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, "இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது" என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத

குர்ஆனின் நற்போதனைகள்...

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83
கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152
அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36
வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68
பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116
புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12
ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35
அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

தவிர்ந்து கொள்ளுங்கள்

கஞ்சத்தனம்

இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 3:180)

“கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகளணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரது அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1433, 1444)

கஞ்சத்தனம் செய்து சேமித்து வைக்கும் பலரின் பணம் இரவோடு இரவாக திருடப்பட்டு விடுவதையும், அவர்களுக்குப் பெரும் செலவை இழுத்து வைக்கும் நோய்கள் வருவதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சந்தேகம் கொள்வது

நமக்குள் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம் தவறான வீண் சந்தேகம் தான். கணவன், மனைவி, நண்பர்கள், நிர்வாகம் என அனைத்து மட்டத்திலும் கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடிய கொடிய நோயாக உள்ளது இந்த சந்தேகம் தான்.
ஒருவர் ஒரு நேரத்தில் செய்த தவறான நடவடிக்கைகளை வைத்து அவருடைய அனைத்துச் செயல்களையும் குற்ற உணர்வோடு நம்முடைய மனதில் நாமே ஒரு மாயையை உருவாக்கி அதற்குச் செயல் வடிவம் கொடுத்து விடுகிறோம். இது தவறிலிருந்து ஒருவர் திருந்தாமல் மீண்டும் அவர் அந்தத் தவறைச் செய்வதற்குத் தூண்டுவதாகவும் அமைந்து விடும்.

இதனால் தான் இஸ்லாம், அவர் தவறு செய்யும் கட்டத்தில் உள்ள அந்த நிலையை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறது சாட்சி இருந்தால் தான் அந்தத் தவறைக் கூட உண்மைப்படுத்துகிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தையும் நபிகளாரின் பொன்மொழிகளையும் பாருங்கள்:

நம்பிக்கை கொண்டோரே! ஊகங் களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)

“(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்கன் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (நூல்: புகாரி 5143)
எந்த அடிப்படையும் இல்லாமல் தவறான எண்ணம் கொள்வது மிகப் பெரிய பொய் செல்வதைப் போன்றதாகும் என்று நபிகளார் எச்சரித்துள்ளதைக் கவனத்தில் கொள்க!

தீய பேச்சுக்கள்

நம் நாவிலிருந்து உதிரும் பேச்சின் கடினத்தை விளங்காமல் அடுத்தவரது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர்களுக்கு நபியவர்கள் விடுக்கும் எச்சரிக்கை இதோ:

“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6477)

இதைப் போன்று, ஒருவர் செய்த தவறுக்காக அவரின் பெற்றோரைத் திட்டும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இவைகள் அறியாமைக் காலப் பழக்கங்கள் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஉரூர், நூல்: புகாரி (30)

மோசடி

நம்பிக்கை மோசடி இன்று சர்வ சாதாரணமாக நடக்கிறது. வியாபாரம் என்றால் அதில் பல வகையில் நூதனமாக மோசடி செய்கிறார்கள். இவ்வாறு மோசடி செய்து பணம் சம்பாதிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளட்டும். மறுமை நாளில் நரகத்தின் அடித்தட்டில் கடும் வேதனைப்படும் நயவஞ்சகர்கள் தான் இவ்வாறு செய்வார்கள் என்று கூறியுள்ளார்கள். நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3333)

முகஸ்துதி

தனிமையில் ஒரு நன்மையைச் செய்வதை விட, பிறர் இருக்கும் போது தான் அதில் அதிக ஈடுபாடு காட்டி செய்கிறோம். ஏன்? அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக! வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக! இவ்வாறு மறுமை வெற்றியை முன்னிலைப் படுத்தாமல், மறுமையில் நன்மை தரும் செயல்களில் முகஸ்துதியை விரும்பினால், அதனால் நன்மை கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நம் இறைவன் (காட்சியப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெப்படுத்தும் அந்த (மறுமை) நால், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறி விடும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி (4919)

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நால்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நால்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி (6499)

மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கி யிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.

இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று, அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப் படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3865)

பேராசை

செல்வத்தைத் தேடலாம். ஆனால் செல்வமே வாழ்க்கை என்று அதைத் தேடுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி இறைக்கடமைகளை புறக்கணித்து விடக் கூடாது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைக் கொண்டு அலைந்தால் மனநிம்மதியும் இழந்து மார்க்க ஒழுங்களை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகளை பாருங்கள்.

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) “இறைவன் உங்களுக்காக வெக் கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகி றேன்” என்று சொன்னார்கள். “பூமியின் வளங்கள் எவை?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை)” என்று பதிலத்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம் “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?” என்று வினவினார். அதற்கு (பதிலக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். அம்மனிதர் “(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)” என்று கூறினார். அந்த பதில் வெப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்று விடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பி விடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெயேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.

இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகல் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி (6427)

“ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்கலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (6436)

“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6446)

தடை செய்யப்பட்ட தீமைகள்

1) ஷிர்க் எனும் இணைவைத்தல்!

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)

2) சூன்யம், ஜோதிடம் மற்றும் குறிபார்த்தல்!

“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.

“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3) கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்மை செய்வதாக நம்புதல்!

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி

4) பாதுகாப்பு வேண்டி தாயத்து, கயிறு, வளையம் அணிதல்!

நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் நான் சென்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தூதுவரை அனுப்பி ஒட்டகக் கழுத்தில் (கண் திருஷ்டிக்காகக் கட்டப்பட்டு) உள்ள வில் கயிற்றினாலான மாலையை அல்லது (வில் கயிற்றினாலான மாலையென குறிப்பிடாது பொதுவான) எந்த மாலையையும் துண்டிக்காமல் நீர் விட்டு விட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருக்கு கூறியதாக அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)

(ஷிர்க்கான வார்த்தைகளைக் கூறி) மந்திரித்தல், தாயத்துகள், (ஏலஸ்கள் கட்டுதல். தாவீசுகள்) திவலாக்கள் ஆகிய அனைத்தும் ஷிர்க்காகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

5) துர்ச்சகுனம் பார்த்தல்!

(இஸ்லாத்தில்) தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது; சஃபர் என்பதும் கிடையாது; நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கூடாது; கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை’ என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா – (ரலி) நூல்: புகாரீ, முஸ்லிம்

எவர் ஒருவருடைய (அவர்பார்த்த) சகுனம் அவருடைய தேவையை (நிறைவேற்றி முடிப்பதை) விட்டும் திருப்பி விடுகிறதோ அவர் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்து விட்டார்’ என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதனுடைய பரிகாரமென்ன? என்று (நபித் தோழர்களான) அவாகள் கேட்டார்கள் அ(தற்கு நபிய)வர்கள் அல்லாஹூம்ம லா கைர இல்லா கைருக்க, வலா தைர இல்லா தைருக்க, வலா இலாஹ இல்லா கைருக்க.

(பொருள்: யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி வேறு நன்மையில்லை உன் சகுனமின்றி வேறு சகுனமில்லை உன்னையன்றி வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறில்லை) என நீர் வுறுவதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபள்லு இப்னு அப்பாஸ் – ரலி நூல்: அஹ்மது

6) முகஸ்துதி (பிறருக்கு காண்பிப்பதற்காக அமல் செய்தல்)!

“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)

‘என்னிடம் தஜ்ஜாலை விடவும் (அவனால் உங்களுக்கு ஏற்படும் தீமையை விடவும்) உங்கள் மீது அதிகம் பயப்படத்தக்க ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். ஆம்! தெரிவியுங்கள் என (தோழர்களான)அவர்கள் கூறினார்கள். அ(தற்கு நபிய)வர்கள், (நான் பெரிதும் உங்கள் மீது பயப்படும் தீங்கு) மறைமுக ஷிர்க்காகும் (அது யாதெனில்) ஒருவர் தொழுகையை நிறைவேற்ற நிற்கிறார். தன்னை மற்றவர் பார்ப்பதை கண்டு தனது தொழுகையை (நீட்டி நிறுத்தி) அழகுபடுத்துகிறார் (முகஸ்துதியான இதுவே மறைமுக ஷிர்க்காகும்) எனக் கூறினார்கள்.

7) காலத்தை ஏசுதல்!

காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள் காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறிவரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா – ரலி நூல்: புகாரி.

8.) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!

‘அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக’ அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

9) கப்றுகளில் கட்டங்கள் எழுப்புதல்!

அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.

10) கப்றுகளுக்காக விழா நடத்துதல்!

எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.

11) சமாதி வழிபாடு!

யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!” (அல்-குர்ஆன் 7:194)

12) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!

“உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!” (அல்-குர்ஆன் 108:2)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக!” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

13) அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்தல்!

“இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்” (அல்-குர்ஆன் 2:270)

“அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர், (அதை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடுவாராக! அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதை நிறை வேற்றி) அவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்: ஆயிஷா – ரலியல்லாஹூ அன்ஹு. ஆதாரம் : புகாரீ, அஹ்மது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

14) இறைவனல்லாத பிறரை (அவுலியா, இறைநேசர்கள் போன்றவர்களை) அழைத்து உதவி தேடுதல்!

“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)

“அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகின்றானோ அவன் நரகில் நுழைவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.


15) அல்லாஹ் அல்லாதவர் ஹலாலை ஹராமாக்குவதையும் ஹராமை ஹலாலாக்குவதையும் ஏற்றுக்கொள்ளுதல்!

“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக்

கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?” (அல்-குர்ஆன் 10:59)

அதிய்யி பின் ஹாதிம் – ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம், வேதக்காரர்களான) ‘அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும், தங்களுடைய சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்’ (9:31) என்ற பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு, ‘நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன் அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அ(ந்தக் குருமார்களான)வர்கள் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி, அதனால் நீங்கள் அதை ஹராமாக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி, அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?’ எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். (ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது.

16) தொழுகையை விட்டுவிடுதல்!

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)

17) தொழுகையில் பொடுபோக்காக, அலட்சியமாக இருத்தல்!

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)

18) அவசர அவசரமாக தொழுதல்!

“முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)

“ருகூவை பூரணமாக செய்யாத, ஸஜ்தாவை மிக குறுகிய நேரத்திலும் செய்த ஒருவரைப் பார்த்து, “இந்த நிலையிலேயே தொழக்கூடியவர்கள் இறக்க நேரிட்டால், அவர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு மார்க்கத்தை நிலைநாட்டியவராகத்தான் மரணிப்பார்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

19) அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்!

“அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவர் இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ஸலி), ஆதாரம் : அபூதாவுத், அஹ்மத். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.

20) வேண்டுமென்றே ஜமாஅத் தொழுகையை தவறவிடுதல்!

நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

21) தொழுகையில் இமாமை முந்துதல்!


முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள்.

22) கொலை செய்தல்!

“எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்” (அல்-குர்ஆன் 4:93)

‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)

23) விபச்சாரம் செய்தல்!

“நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது” (அல்-குர்ஆன் 17:32)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

24) ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல்!

“மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாம் : அஹ்மத்.

25) வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்!

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் – முதல் – உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-2:279)

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

26) மது அருந்துதல்!

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

27) சூதாட்டத்தில் ஈடுபடுதல்!

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

28) பொய் பேசுதல்!

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

29) திருடுதல்!

“திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:38)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ஒரு முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

30) லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல்!

“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்” (அல்-குர்ஆன் 2:188)

‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.

31) பொய்சாட்சி கூறுதல்!

அபூபக்ரா (ரலி) பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆதாரம் : புகாரி.

32) அவதூறு கூறுதல்!

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

33) அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்!

“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)

‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.

34) கர்வம் கொள்ளுதல்!

“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

35) தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்!

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)

36) அளவு நிறுவையில் மோசடி செய்தல்!

“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)

“மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 55:7-9)

37) பிறர் சொத்தை அபகரித்தல்!

அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்கள் : “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள்.

38) மோசடி செய்தல்!

“எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:161)

“நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 8:58)

39) அநீதி இழைத்தல்!

“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.

40) புறம் பேசுதல்!

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6307

“எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4870

“மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4871

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது. ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும்.

வேதனையை விட்டும் பாதுகாவல்

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. (அல்குர்ஆன் 8:33)

பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தண்டனை இறங்காது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

மக்கள் செல்வமும், மழை நீர் வளமும்

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 71:10-12)

அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் அவன் மழை, செல்வங்கள், மக்கள் ஆகியவற்றைக் கொண்டு நமக்கு உதவுவான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஸஹர் நேரத்தில்…

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:18)
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)

(அல்குர்ஆன் 3:17)

இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வயுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1145

சுவனத்தைப் பெற்றுத் தரும் ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.” (பொருள் : அல்லாஹ்வே! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே. என்னை நீ மன்னிப்பாயாக. ஏனெனில் பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.)

என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகல் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), நூல் : புகாரி (6306)

தொழுகையில் ஸலாம் கொடுத்ததும்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று தடவை (அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் 931

அண்டைவீட்டாரின் உரிமைகள்

பக்கத்து வீட்டுகாரர்களிடம் பேண வேண்டிய பண்புகள்

ஓர் இறை நம்பிக்கையாளர் தனது அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அண்டை வீட்டாருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் என்ன என்பதையும் பார்ப்போம்.

தொல்லை தருதல்

வீட்டில் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தித் தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது.

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 5187


அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி)
நூல்: புகாரீ 6016


அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும். அண்டை வீட்டாருக்குத் தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.

“எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 73


நல்லறங்கள் பல புரிந்தும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாகக் கருதப்படுகிறாள்; ஆனால் அவள் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவள் நரகில் இருப்பாள்’ என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 9298


“ஒரு அடியானின் உள்ளம் சரியாகும் வரை அவனுடைய ஈமான் சரியாகாது. அவனுடைய நாவு சீராகும் வரை அவனுடைய உள்ளம் சரியாகாது. யாருடைய அண்டை வீட்டார் அவனின் நாச வேலையிலிருந்து பாதுகாப்பு பெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது” என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 12575


மாபெரும் குற்றம்

அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அவரது நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வது அவசியமாகும். பக்கத்து வீட்டில் இருக்கிறார்; அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும் போது அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் வெளியூர் சென்று விட்டார்; எனவே நாம் அங்கு சென்று திருடலாம், விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். அதற்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லி விட்டு “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். “பிறகு எது?” என்று நான் கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரீ 4477


பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம்; நம்பியவர்களுக்குத் துரோகம் செய்தல் இன்னொரு குற்றம்; இந்த இரண்டும் சேர்ந்து பெரும் பாவமாக மாறி விடுகிறது.

“நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்த ஒன்றாகும். இது மறுமை நாள் வரை ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஒருவன் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள். “திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி)
நூல்: அஹ்மத் 22734


அதாவது ஒருவர் பக்க வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வது, மற்ற பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.

ஒருவர் பக்கத்து வீட்டில் திருடுவது, மற்ற பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.
மறுமையில் முறையிடுதல்

அண்டை வீட்டாருக்கு நலம் நாடாமல் தான் மட்டும் நன்றாக இருந்தவனுக்கு எதிராக அவனது அண்டை வீட்டான் அல்லாஹ்விடம் முறையிட்டு நீதி கேட்பான்.

தன் அண்டை வீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம், “என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான்; நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான்” என்று மறுமை நாளில் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அதபுல் முஃப்ரத் 111


நன்மையான காரியங்களில் கூட்டாகுதல் மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. அண்டை வீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் சபைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும் பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டை வீட்டாருக்குச் சொல்லுதல் என்று நற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்ல வேண்டும். நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரியங்களில் கூட்டாகச் செயல்பட்டுள்ளனர்.
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரீ 89


திருக்குர்ஆன் அறிவுரைகள், நபிகளாரின் விளக்கங்களை முறை வைத்துக் கற்று வந்த நபித்தோழர்களைப் போல் அண்டை வீட்டார்கள் சேர்ந்து போக முடியாத நேரங்களில் ஒருவர் சென்று நல்ல செய்திகளைக் கேட்டறிந்து தம் அண்டை வீட்டாருக்கும் எடுத்துச் சொல்லி நன்மையில் கூட்டாக வேண்டும்.

அல்லாஹ்விடம் சிறந்தவர்

“நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)
நூல்: திர்மிதீ 1867)


நல்ல அண்டை வீட்டார்

“நல்ல அண்டை வீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பது ஆகியவை ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 14830


தொல்லையைப் பொறுத்துக் கொள்ளுதல்

அண்டை வீட்டார் என்று வரும் போது சில பிரச்சனைகள் ஏற்படத் தான் செய்யும். அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, வாழ்நாள் பகைவர்களாக மாறி விடாதீர்கள்.
அவர்கள் தரும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு அவருக்குச் சரியான அறிவுரைகளைக் கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.

ஒரு மனிதனுக்குத் தொல்லை தரும் அண்டை வீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்குப் போதுமானவனாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)

-அபூ ஹாரிஸ்

சாப்பிடுவதின் ஒழுக்கங்கள்

தூய்மையான உணவுப் பொருட்களைத் தான் சாப்பிட வேண்டும்


நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!
(அல் குர்ஆன் 2:172)

சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 256

பிஸ்மில்லாஹ் என்று கூறி, அருகில் இருப்பதிலிருந்து சாப்பிட வேண்டும்

உமர் பின் அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது "நான் நபி (ஸல்) அவர்கள் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அளாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "சிறுவனே! (பிஸ்மில்லாஹ் என்று) அல்லாஹ்வின் பெயரைச் சொல்! உன் வலக் கரத்தால் சாப்பிடு! உனது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு'' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

நூல்: புகாரி 5376

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிஸ்மில்லாஹ்'' கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம்4105

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி'' என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 1781

பொருள்: ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்.

இடது கையால் சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் சாப்பிடும் போது தனது வலக்கரத்தால் சாப்பிடட்டும். குடிக்கும் போதும் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும். ஷைத்தான் தனது இடக்கரத்தால் சாப்பிடுகிறான். தனது இடக்கரத்தால் குடிக்கின்றான்''

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4108

உணவுப் பொருள் கீழே விழுந்தால் பேணவேண்டிய முறை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவருக்கு கவள வாய் உணவு கீழே விழுந்து விட்டால் அதில் பட்ட அசுத்தங்களை நீக்கி விட்டு அவர் அதை சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்காக (வீணாக) விட்டு விட வேண்டாம்''

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்4138

சாய்ந்து கொண்டு சாப்பிடுதல்

நபி (ஸல்) அவர்கள், "(ஆணவத்தை வெளிப்படுத்துவது போல்) நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல்: புகாரி 5398, முஸ்லிம் 4122

நின்று கொண்டு குடிப்பது கூடாது

நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதைத் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4115

நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்

நபி (ஸல்) அவர்கள "ஸம் ஸம்'' தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5617

அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: "மக்களில் சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்''
நூல்: புகாரி 5615

பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்''

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல்: புகாரி 153

சாப்பிட்ட பின் விரல்களை சூப்புவதும் அனைத்தையும் சாப்பிடுவதும்

(உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களை சூப்புமாறும், தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும் உணவின் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4136

பால் அருந்திய பின் வாய்கொப்பளித்தல்

நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்பளித்தார்கள். பிறகு "அதிலே கொழுப்பு இருக்கிறது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 211

குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில் அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது''

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3320

சாப்பிட்டு முடித்த பின் ஓத வேண்டிய துஆ

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) உணவு விரிப்பை எடுக்கும் போது "அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா'' (அதிகமான தூய்மையான வளமிக்க எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்) என்ற துஆவைக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: புகாரி 5458

உணவோ குடிபானமோ பரிமாறும் போது முதலில் வலது புறம் உள்ளவருக்குத் தான் கொடுக்க வேண்டும்

நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர். நபியவர்கள் (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்து விட்டு "வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5612

வலது புறத்தில் உள்ளவர் அனுமதி கொடுத்தால் இடது புறத்தில் உள்ளவருக்கு முதலில் கொடுக்கலாம்

நபி (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவனிடம் "(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதி தருவாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவன் "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்'' என்று பதில் கூறினார். உடனே நபியவர்கள் அதை அச்சிறுவனின் கையில் வைத்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)
நூல்: புகாரி 5620

ஒருவரது உணவு இருவருக்குப் போதும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(கூட்டாகச் சாப்பிடும் போது) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாகும். நான்கு நபர்களுடைய உணவு எட்டு நபர்களுக்குப் போதுமானதாகும்''

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4182

கூட்டாகச் சாப்பிட அனுமதிக்கப்பட்டவர்களும் இடங்களும்

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
அல்குர்ஆன் 24:61

அடுத்தவருக்குக் கொடுக்காமல் சாப்பிடக் கூடாது

(தன்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்) தனது சகோதரரிடம் அனுமதி பெற்றாரே தவிர, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2455

சமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்''

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5460

பசிக்கும் போது உணவுக்கே முன்னுரிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவு நேர உணவு வைக்கப்பட்டு தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப்படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்''

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 671

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது''

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 969

உணவைக் குறை கூறுதல் கூடாது

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபியவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.

நூல்: புகாரி 3563

உணவை வீண் விரையம் செய்வது கூடாது

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 7:31

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 17:27

பொறுப்பாளி இறுதியில் தான் சாப்பிட வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு கூட்டத்தாருக்கு (குடிபானத்தை) பங்கிட்டுக் கொடுக்கக் கூடியவர் அவர்களில் இறுதியாக குடிக்கக் கூடியவராவார்''

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 1213, திர்மிதி 1816

மதுபானங்கள் மற்றும் போதைப் தரக்கூடிய பொருட்களை சாப்பிடுவது கூடாது

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல் குர்ஆன் 5:90, 91

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "போதை தரக்கூடிய ஒவ்வொரு பொருளும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்''

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி 6124


பிற மதத்தவரின் ஹோட்டலில் சாப்பிடலாமா?

? அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத எந்த மாமிசத்தையும் உண்ணக் கூடாது. அப்படியானால் மாற்று மதத்தவர்களின் ஹோட்டலில் சாப்பிடுவது கூடுமா?

அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். (அல்குர்ஆன் 6:121)

"அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது'' என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மாற்று மத ஹோட்டலில் மட்டுமல்ல; முஸ்லிம் ஹோட்டலாக இருந்தாலும் அங்கு அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத இறைச்சி பயன்படுத்தப் படுமானால் அவற்றை உண்ணக் கூடாது.

அதே சமயம் மாற்று மதத்தினர் நடத்தும் ஹோட்டல்கள் சிலவற்றில் முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்கி அதைச் சமைக்கின்றனர். அல்லது முஸ்லிம்களை அழைத்து ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுக்குமாறு கூறி அவற்றிலிருந்து உணவு தயாரிக்கின்றனர். எனவே இவ்வாறு முஸ்லிம்கள் மூலம் அறுப்பது தெளிவாகத் தெரிந்தால் அந்த ஹோட்டல்களில் இறைச்சி உண்பது தடையில்லை. அவ்வாறு உறுதியாகத் தெரியாத பட்சத்தில், சந்தேகத்திற்கு இடமானதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு இறைச்சி உண்ணக் கூடாது.

பிஸ்மில்லாஹ் கூறி அறுக்க வேண்டும் என்று சொல்லும் போது, பிஸ்மில்லாஹ் சொல்லி யார் அறுத்தாலும் அதை உண்ணலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

பிஸ்மில்லாஹ் என்பதை வெறும் சடங்குக்காக, மந்திரச் சொல்லாகக் கூறக் கூடாது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை எந்தச் செயலாக இருந்தாலும் அது உளப்பூர்வமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் என்றால் யார்? அவனது ஆற்றல் என்ன? என்பதையெல்லாம் விளங்கியவர்கள் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அறுப்பதையே இது எடுத்துக் கொள்ளும்.

உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை இல்லாமல் வெறும் மந்திர வார்த்தையாக பிஸ்மில்லாஹ் கூறி அறுத்தால் அதையும் சாப்பிடக் கூடாது.

பித்அத்தான விருந்துணவு வீட்டிற்கு வந்தால் சாப்பிடலாமா?

? வரதட்சணை மற்றும் பித்அத்தான திருமணங்கள் நடைபெறும் வீடுகளிலிருந்து நமது வீட்டிற்கு உணவு வந்தால் சாப்பிடலாம் என்று எழுதி இருந்தீர்கள். இதே அடிப்படையில் பெண் பிள்ளை சடங்கு, கத்னா, திருமண நாள், வளை காப்பு என பித்அத் செய்யும் வீடுகளிலிருந்து நமது வீட்டுக்கு வரும் உணவை (பூஜிக்கப்படாத நிலையில்) சாப்பிடலாமா? விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது எனும் போது அந்த உணவு வீட்டுக்கு வந்தாலும் சாப்பிடக் கூடாது என்று தானே கூற வேண்டும்?

ஒரு உணவைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் கூற வேண்டும். அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ ஹராமாக்காத ஒன்றை நாமாக ஹராம் என்று கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

விருந்துக்கு அழைக்கப்படும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெற்றால் அந்த விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்றோம். இது அந்த விருந்தில் வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல! அந்த நிகழ்ச்சி மார்க்கத்திற்கு முரணாக இருப்பதால் அங்கு செல்வது தடுக்கப்பட்டது என்ற அடிப்படையில் தான் இவ்வாறு கூறுகிறோம். இதையும் நாம் சுயமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியுள்ளார்கள்.

நான் உணவைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் இருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: இப்னுமாஜா (3360)

தீமை நடக்கும் ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது என்பதால் அங்கு வழங்கப்படும் உணவு ஹராமாகி விடாது. ஒரு இடத்தில் பன்றி இறைச்சி அல்லது பூஜை செய்யப்பட்ட உணவுகளைக் கொண்டு விருந்து வழங்கப்படுகின்றது என்றால் அந்த உணவே தடுக்கப்பட்ட உணவாகும்.

ஆனால் வரதட்சணை, கத்னா, வளைகாப்பு போன்ற தீமைகள் நடக்கும் இடங்களில் இது போன்ற ஹராமான உணவு வகைகள் வழங்கப் படுவதில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது அங்கு உருவப்படங்கள் இருந்ததால் திரும்பிச் சென்றார்கள். இந்த அடிப்படையில் வரதட்சணை, சடங்கு, கத்னா போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லக் கூடாது; அங்கு நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறோம்.

ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளிலிருந்து உணவுப் பொருள் வரும் போது அதை உண்ணக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அல்லாஹ் ஹலாலாக்கிய உணவை நாம் ஹராமாக்கிக் கொள்வது போன்றாகி விடும். எனவே தான் இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்குத் தடையில்லை என்று கூறுகிறோம்.

அதே சமயம், இது போன்ற உணவுகளைத் தருபவர்களிடம் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் தீமை பற்றி மார்க்க அடிப்படையில் விளக்குவது நமது கடமையாகும்.

"பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரண பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும்' என்ற பிற மத மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மவ்லிது, பாத்திஹா ஓதப்பட்ட பின் சாதாரண உணவும் "தபர்ருக்' (பிரசாதம்) என்று கருதப்படுவதால் அவ்வாறான உணவுகள் ஹராமாகும். அந்த உணவுகளை வீட்டுக்குக் கொடுத்து விட்டாலும் உண்ணக்கூடாது.

பிற மதத்தவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாமா?

? நான் சவூதி அரேபியாவில் பணி புரிந்து வருகிறேன். இங்கு பல முஸ்லிம் நண்பர்களுடனும், முஸ்லி மல்லாத நண்பர்களுடனும் ஒரே அறையில் தங்கி, ஒன்றாக இணைந்து சாப்பிடும் சூழ்நிலை இருக்கிறது. நான் இந்து நண்பருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கண்ட சிலர் இதை ஹராம் என்று சொல்கிறார்கள். வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா?

வேதக்காரர்களுடனோ, அல்லது மற்ற மதத்தினருடனோ ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைத் தடை செய்யும் எந்த ஆதாரமும் குர்ஆன், ஹதீஸில் இல்லை.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப் பெற்ற ஒரு சமுதாயத்தவரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா? மேலும் வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் இருக்கிறோம். நான் எனது வில்லிலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட எனது நாயையும் ஏவி வேட்டையாடுவேன். (இவற்றில்) எது எனக்கு ஆகுமானதாகும்?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேதக்காரர்களின் விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரம் அல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவி விட்டு அவர்களின் பாத்திரத்தில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை நீங்கள் அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் சாப்பிடுங்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா அல்ஹுசனிய்யி (ர-)
நூல்: புகாரி 5478, 5488

இந்த ஹதீஸில் வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிட வேண்டாம் என்று கூறப்படுவதை வைத்து, "மாற்று மதத்தவர்களுடன் சாப்பிடக்கூடாது' என்று உங்கள் நண்பர்கள் கூறியிருக்கலாம். ஆனால் இந்த ஹதீஸ் அந்தக் கருத்தைக் கூறவில்லை.

"வேறு பாத்திரம் இருந்தால் வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிட வேண்டாம்' என்று இந்த ஹதீஸ் பொதுவாகக் கூறினாலும், அபூதாவூதில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதற்கான காரணம் இடம் பெற்றுள்ளது.

"நாங்கள் வேதக்காரர்களைக் கடந்து செல்கிறோம். அவர்கள் தங்களுடைய பாத்திரத்தில் பன்றி இறைச்சியைச் சமைக்கிறார்கள். தங்களது பாத்திரத்தில் மதுவையும் குடிக்கிறார்கள்'' என்று அபூஸஃலபா அல் ஹுஸனிய்யி (ரலி) கேட்டார். "அதுவல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அதிலேயே நீங்கள் சாப்பிடுங்கள்; குடியுங்கள். வேறு பாத்திரம் இல்லாவிட்டால் அதை நீங்கள் தண்ணீரால் கழுவி அதில் சாப்பிடுங்கள்; குடியுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா (ர-)
நூல்: அபூதாவூத் 3342

முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களான பன்றி இறைச்சியையும், மதுவையும் வேதக்காரர்கள் சாப்பிடுவதைக் குறிப்பிட்டு நபித்தோழர் கேட்கும் போது தான் நபி (ஸல்) அவர்கள் இந்தப் பதிலை அளிக்கிறார்கள். எனவே இது பொதுவான தடை அல்ல என்பதை விளங்கலாம். தடுக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டால் அந்தப் பாத்திரத்தை நாம் பயன்படுத்தக் கூடாது; வேறு பாத்திரம் இல்லாவிட்டால் அதைக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி முஸ்லிமல்லாதவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்குத் தடையேதும் இல்லை.

அஜினா மோட்டா கலந்த உணவை சாப்பிடலாமா?

? அஜினா மோட்டா என்ற ஒரு பொருள் குழம்பின் சுவை சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. அதைக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன?

அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.

இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் அஜினா மோட்டா சேர்ப்பது சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 51 வகையான உணவுப் பொருட்களில் அஜினாமோட்டா சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 2:195)

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

இந்த வசனங்களின் அடிப்படையில், மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் பொருள் என்று நிரூபணமானால் அதை உண்ணக் கூடாது. அஜினாமோட்டா உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதால் கண்டிப்பாக அதை உணவில் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

இறந்தவர் வீட்டில் விருந்து வைக்கலாமா?

? ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது; எனவே 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?

இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாக எந்த ஹதீசும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவுக்குச் சென்றிருந்தோம். அப்போது அவர்கள் கப்ருக்கருகில் இருந்து கொண்டு, "இறந்தவரின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் விசாலமாக்கிக் கொள்'' என்று தோண்டக் கூடியவரிடம் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். உணவு கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை அதில் வைத்தார்கள். மக்களும் வைத்தார்கள்; சாப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கவள உணவைத் தமது வாயில் மெல்லுவதை எங்களுடைய பெற்றோர் பார்த்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், "உரியவரின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை நான் சாப்பிடுகிறேன்'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! எனக்காக ஓர் ஆடு வாங்கி வரும்படி பகீஃ (சந்தை)க்கு ஆளனுப்பினேன். எனக்கு ஆடு கிடைக்கவில்லை. எனது அண்டை வீட்டுக்காரர் ஓர் ஆடு வாங்கியிருந்தார். அதன் கிரையத்தைப் பெற்று ஆட்டைத் தாருங்கள் என்று அவரிடம் ஆளனுப்பினேன். அவர் (வீட்டில்) இல்லை. அதனால் அவரது மனைவியிடம் கேட்டு ஆளனுப்பினேன். அவர் அந்த ஆட்டை அனுப்பி வைத்தார்'' என்று அந்தப் பெண் பதில் சொல்லி அனுப்பினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அதை கைதிகளுக்குச் சாப்பிடக் கொடு'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்சாரியைச் சேர்ந்த ஒரு மனிதர்
நூல்: அபூதாவூத் 2899, அஹ்மத் 21471, பைஹகீ, தாரகுத்னீ

இந்த ஹதீஸில் ஒரு பெண் உணவு கொடுத்து அனுப்பினாள் என்று கூறப்படுகின்றது. அந்தப் பெண் இறந்தவரின் மனைவி தான் என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் இறந்த வீட்டில் சாப்பிட்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்பிய பெண், இறந்தவரின் மனைவி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இறந்தவரின் வீட்டிற்குச் சென்று நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்றும் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை.

எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்று கூறுவது அபாண்டமாகும். ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும் 3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்று ஓதுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? இது போன்று சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் கூறுவதிலிருந்தே இவை பித்அத் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பூஜை செய்தவற்றை சாப்பிடலாமா?

? எங்கள் (அரசு) அலுவலகத்தில் மாதந்தோறும் ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாமி போட்டோ வைத்து, பூஜை என்ற பெயரில் பொரி கடலை தருவார்கள். இதைச் சாப்பிடலாமா? வேண்டாம் என்று கூறினால், "நீங்கள் தான் இந்தச் சாமிகளை நம்பவில்லையே! அப்படியானால் வெறும் பொரி கடலை என்று நினைத்துச் சாப்பிட வேண்டியது தானே!' என்று கேட்கிறார்கள். நம்மைப் பொறுத்த வரை வெறும் சடங்கு தானே! இதைச் சாப்பிடுவதில் என்ன தவறு? மேலும் இதற்காகப் பத்து ரூபாய் வழங்குவதில் தவறுண்டா?

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173

இந்த வசனத்தில் "அறுக்கப் பட்டவை' என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் தான் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்லிம்கள் என்ற பெயரில் அவ்லியாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.

சாமியை நம்பவில்லை என்பதால் அந்த உணவுகளைச் சாப்பிடலாம் என்று கூற முடியாது. நாம் நம்பா விட்டாலும் அதை வணங்குபவர்கள் அந்த உணவில் புனிதம் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

இந்த உணவை இஸ்லாம் தடுத்துள்ளது என்ற அடிப்படையில் தான் உண்ணக் கூடாது என்று கூறுகிறோமே தவிர, அதில் புனிதம் இருப்பதால் சாப்பிடக் கூடாது என்று நாம் கூறவில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் இது போன்ற பூஜைகள் இறைவனுக்கு இணை கற்பித்தல் என்ற மிகப் பெரும் பாவச் செயலாகும். எனவே இதற்காகப் பணம் கொடுப்பதும் கூடாது. அரசு அலுவலகம் என்பதால் அதில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவது அரசியல் சட்ட அடிப்படையிலும் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

பூஜை செய்தவைகளும் மவ்லிது பாத்திஹா சாப்பாடும் ஓன்றா?

? ஆகஸ்ட் 2004 இதழில், தீபாவளியன்று பூஜை செய்யாத பொருட்களை மாற்று மதத்தினர் தந்தால் சாப்பிடலாம் என்று கூறியிருக்கின்றீர்கள். அப்படியானால் மவ்லிது, ஃபாத்திஹா, கந்தூரி போன்றவற்றில் வழங்கப்படும் உணவுகளையும் சாப்பிடலாமா? இரண்டு தரப்பினரின் நோக்கமும் ஒன்று தானே? என்று என் நண்பர் வினவுகின்றார். விளக்கவும்.

மாற்று மதத்தினர் பண்டிகையின் போது படைப்பதற்கும், நம்மவர்கள் மவ்லிதுக்குப் படைப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மாற்று மதத்தினர் உணவைத் தயாரிக்கும் போதே சாமிக்குப் படைக்கும் நோக்கத்தில் மட்டும் தயாரிப்பதில்லை. இதில் படைக்காமல் தனியாக எடுத்து முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றார்கள். அந்த நோக்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தவும் செய்கின்றார்கள்.

ஆனால் மவ்லிது, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்லிது ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள். அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். இரண்டு தரப்பினரின் நோக்கத்திற்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. எனவே முழு உணவையும் எடுத்து வைத்து மவ்லிது ஓதாவிட்டாலும் அது நேர்ச்சையாக எண்ணியே தயாரிக்கப்படுவதால் அதைச் சாப்பிடக் கூடாது.

ஹராமான உணவுகள் எவை?

? கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி?
சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? டால்பின் பன்றி இனத்தைச் சேர்ந்தது. எனவே அது ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு, முதலை, ஆமை போன்றவை எப்படி? விளக்கவும்.



விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் (2:173, 5:3, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரி 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன. புகாரி 4215வது ஹதீஸில் வீட்டுக் கழுதை ஹராம் எனவும் குதிரை ஹலால் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அளவுகோலை நம் முன்னே வைத்துள்ளனர்.

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம்(ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா(ரலி), நூல்: புகாரி 5781, 5530.

மேற்பகுதியில் உள்ள பல் வரிசையின் முன் பற்களில் நான்கு பற்களுக்குப் பின் உள்ள பல் கோரைப் பல் எனப்படும்.

கோரைப் பல் என்பது மற்ற பற்களை விட நீளமாக இருக்கும். மனிதனுக்குக் கூட மற்ற விலங்கினம் அளவு இல்லா விட்டாலும் கோரைப் பல் இருக்கிறது. மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும் இடப்பக்கம் ஒரு பல்லும் மற்றபற்களை விட நீளம் அதிகமாக இருக்கும்.

இப்படி கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அதை நாம் உண்ணக் கூடாது. ஆடு, மாடு போன்றவற்றின் பற்கள் அனைத்தும் சமமான உயரம் கொண்டதாக அமைந்திருக்கும். பூனை, நாய், சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இரண்டு பற்கள் மட்டும் மற்ற பற்களை விட மிகவும் நீளமாக இருக்கும்.

இந்த அளவுகோலை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும். கழுதையைப் பொறுத்தவரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் இந்த அளவு கோலில் அவை அடங்காவிட்டாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவு கோலைப் பொருத்தக் கூடாது.

பல துறைகளிலும் விற்பன்னராக இருந்த அபூஅலீ இப்னு ஸீனா அவர்கள் விலங்கினங்களை ஆய்வு செய்து ஒரு தகவலைத் தருகிறார். கொம்பு உள்ள எந்த உயிரினத்துக்கும் கோரைப் பல் இருக்காது என்பது அவரது ஆய்வு.

எனவே எந்த விலங்குக்காவது கொம்பு இருந்தால் அதை நாம் உண்ணலாம். எவற்றுக்கு கொம்பு இல்லையோ அவற்றுக்கு மட்டும் கோரைப் பல் உள்ளதா என்று ஆய்வு செய்த பின் உண்ணலாம்.

கடல் வாழ் உயிரினங்களில் விலக்கப்பட்ட ஒன்று கூட இல்லை. கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான். கடல்வாழ் உயிரினங்களில் கோரைப் பற்கள் உள்ளதா என்று பார்க்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை, மத்ஹபுகளில் சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று எழுதி வைத்துள்ளனர். இவ்வாறு கூறுவதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை.

கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 5:96)

புத்தம் புதிய மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 16:14)

கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டது இருந்திருந்தால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூறவேண்டும். வேறு எவருக்கும் ஹராமாக்கும் அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் கடல் வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் ஹராம் என அறிவிக்கவில்லை.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்(அல்குர்ஆன் 2:195)

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள்(அல்குர்ஆன்4:29)

இந்த வசனங்களின் அடிப்படையில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நிரூபணமானால் அவற்றை உண்ணக் கூடாது. இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும் தானியத்துக்கும் ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பாம்பு, பல்லி, கடல் வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவை இந்த அளவு கோலுக்குள் அடங்கும்.

டால்பின் என்பது பன்றி வகையைச் சேர்ந்தது அல்ல. அதுவும் மீன் வகையைச் சேர்ந்தது தான். குர்ஆனில் தடை செய்யப்பட்டுள்ளது பன்றி என்ற விலங்கின் இறைச்சி தானே தவிர பார்ப்பதற்கு பன்றியின் தோற்றத்தில் உள்ளது எல்லாம் ஹராம் என்று கூறப்படவில்லை.


நின்று கொண்டு குடிக்கலாமா?

? நின்று கொண்டு தண்ணீர் குடிக்கலாம் என்பதற்கு ஆதாரப் பூர்வமான செய்திகள் உண்டா?

அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்த போது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு, "மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால் (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நஸ்ஸால்
நூல்: புகாரீ (5615)

நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு "ஸம்ஸம்' கிணற்றிலிருந்து (நீர்) பருகினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ (5617)

இதே கருத்தில் பல ஹதீஸ்கள் இருந்தாலும் இதற்கு மாற்றமாக, நின்று கொண்டு அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்றும் ஹதீஸ்கள் வந்துள்ளன.

எனவே முடிந்த அளவு அமர்ந்து அருந்த வேண்டும் என்றும், முடியாத போது நின்று கொண்டு அருந்தலாம் என்றும் இரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்து அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

பிற மதத்தவர் பன்றியை அன்பளிப்பு செய்தால் சாப்பிடலாமா?

? "இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது'' என்ற வசனத்தின் படி வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துக் கொடுத்தாலும் நாம் சாப்பிடலாமா?

முதலில் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட அஹ்லுல் கிதாப் என்ற வாசகம் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

பொதுவாக எல்லா யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார் களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப் பட்டன.

(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6)

"இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன்'' என்று ஈஸா நபி கூறியதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6)

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக் காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ண இவ்வசனம் (5:5) அனுமதிக்கிறது என்பது தவறாகும் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, பன்றியை அவர்கள் அறுத்துக் கொடுத்தால் உண்ணலாமா? என்றால் கூடாது என்றே கூறவேண்டும். ஏனெனில் திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றவர்கள் இதை அறுத்துக் கொடுத்தாலே உண்ணக் கூடாது என்று கூறும் போது, இரண்டாம் நிலையில் உள்ள வேதம் கொடுக்கப்பட்டவர்கள் கொடுத்ததை எவ்வாறு உண்ணமுடியும்?

மேலும் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் வாழ்கிறோம். அவர்கள் பன்றி இறைச்சியை சாப்பிடுகிறார்கள்; மதுவை அருந்துகிறார்கள்; அவர்களுடைய பாத்திரத்தை (நாங்கள் பயன்படுத்தும் போது) என்ன செய்வது?'' என்று கேட்ட போது, "வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையானால் அதை (நன்றாக) கழுவிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அஹ்மத் (17071) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை சிந்தித்தால் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துத் தந்தாலும் ஹராம் என்பதை விளங்கலாம்.

எனவே வேதக்காரர்கள் நமக்குத் தடை செய்யப்படாத உணவுப் பொருட்களைத் தந்தால் அதை நாம் உண்ணலாம் என்றே இந்த வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.