பாவங்கள் என்றால் என்ன? என்பதைப் புரியாமலே நம்மில் பலர் அதைச்செய்து குற்றவாளியாகின்றனர். எனவே பாவம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்களிடம் நன்மையைப்பற்றியும் தீமையைப்பற்றியும் வினவினேன். அதற்கவர்கள் “நல்லொழுக்கமே நன்மையெனப்படும்.பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்செரிப்பதும், அதைப்பிறரிடம் வெளியிடும் போது நீ வெறுப்பதுமாகும்.” என விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸிற பின் ஸம்ஆன், நூல் முஸ்லிம்)
இதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தடுத்துள்ள அறிவுக்குப் பொருந்தாத, அறிவை மழுங்கச்செய்யும் மூடநம்பிக்கைகள்,சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றையும் பாவம் என்றே இஸ்லாம் கூறுகிறது.
மதத்தின் பெயரால் எல்லா மதங்களிலும் மலிந்துள்ளதைப் போல் இஸ்லாத்திலும் மூடநம்பிக்கைகளைக காணமுடிகிறதே என்ற ஐயம் நம்மில் பலருக்கு எழலாம்.அவை யாவும் அந்நிய மதங்களிலிருந்து நம்மதத்தில் இறககுமதியானவையாகும். எனவே இஸ்லாத்தில் ஊடுருவியுள்ள சிறு பாவங்களையும் நம்மை அழிக்கும் பெரும் பாவங்களையும் விட்டு தவிர்ந்து கொள்வது நம்மனைவர் மீதும் தலையாய கடமையாகும். இப்போது தண்டனைக்குரிய பெரும் பாவங்களைப் பற்றித் தெரிந்து கொளவோம்.
பெரும் பாவம் என்றால் என்ன?
பெரும் பாவம் என்பது அல்லாஹ்வினாலும், அவன் திருத்தூதர் (ஸல்) அவர்களாலும் விலக்கப்பட்வைகளைக் குறிக்கும்.இவற்றைச் செய்வதால் இறைவனின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக நேரழடும்.
பெரும் பாவங்களைத்தவிர்த்து ஏனைய சிறு பாவங்களை மன்னிப்பதாக பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்:-
إِن تَجْتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلاً كَرِيماً
உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால் உங்களுடைய சிறு பாவங்களுக்கு(அதனை)நாம் பரிகாரமாக்கி உங்களை (மன்னித்து மிக்க) கண்ணியத்தின் வாயிலிலும் புகுத்துவோம். (அல்குர்ஆன் 4:31)
என்ற மறைவசனத்தின் வாயிலாக பெரும் பாவங்களைத் தவிர்த்து தங்களை பாதுகாத்துக் கொண்டவர்களை சுவர்கத்தில் புகுத்துவதாக அறிவிக்கிறான வல்ல நாயன். மேலும்,
وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ
(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவைகளையும் விட்டு விலகி இருப்பதுடன் தங்களுக்கு கோபமூட்டப்பட்ட சந்தர்பத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள் அல்குர்ஆன் 42:37), எனவும்
الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ
(நன்மை செய்யும்) அவர்கள் (அறியாமல் நேர்ந்துவிடும்) சிறு தவறுகளைத்தவிர ஏனைய பெரும்பாவங்களிலிருந்து விலகி இருப்பார்கள். நிச்சயமாக உமது இரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். (அல்குர்ஆன் 53:32) எனவும் கூறியுள்ளான்.
“ஐந்து நேரத் தொழுகைகளும். ஒவ்வொரு ஜும்ஆவும். ஒவ்வொரு ரமளானும். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடைப்பட்ட காலங்களில் செய்யக்கூடிய சிறுதவறுகளுக்கு பரிகாரமாகும். (ஆனால்)இடைப்பட்ட காலங்களில் பெரும்பாவங்களில் ஈடுபடாத வரை! என நபி (ஸல்) கூறினார்கள். ( ஆதாரம்: முஸ்லிம்.திர்மிதி. அஹ்மத்)
இதன் மூலம் பெரும் பாவங்களை செய்யாதவனுக்கு ம்ட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என்பதை பெருமானார்(ஸல்)அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
மனிதனிடம் காணப்படும் பாவச்செயல்களில் ஏழு பாவங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவற்றில் ஒன்றைச் செய்தாலும் அது அவனை அழித்துவிடும்.
“ஏழு பெரும் பாவங்கள்”
عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – عَنِ النَّبِىِّ – صلى الله عليه وسلم – قَالَ « اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ » . قَالُوا يَا رَسُولَ اللَّهِ ، وَمَا هُنَّ قَالَ « الشِّرْكُ بِاللَّهِ ، وَالسِّحْرُ ، وَقَتْلُ النَّفْسِ الَّتِى حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ ، وَأَكْلُ الرِّبَا ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ ، وَالتَّوَلِّى يَوْمَ الزَّحْفِ ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ »
ஒருமுறை நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தம் நல்லறத் தோழர்களிடம் “அழிவைத்த்தரும் ஏழு பாவங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு” எச்சரித்தார்கள்’அவை யாவை? என நபித்தோழர்கள் கேட்டபோது பின்வருமாறு விளக்கமளித்தார்கள் அண்ணலவர்கள்.
1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்
2. சூனியம் செய்தல்
3. இறைவன் தடுத்த ஓர்உயிரை அநியாயமாக கொலை செய்தல்
4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குவது
5. வட்டிப்பொருளை உண்ணுதல்
6. போரில் பறமுதகிட்டு ஓடுவது
7. விசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.
அறிவிப்பவர். அபூ ஹுரைரா (ரலி) நூல்கள் புகாரி. முஸ்லிம்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அவை ஏழிலிருந்து எழுபது வரை ஆகும் எனக்கூறுகிறார்கள். உண்மையில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவது சரிதான் என இமாம் தஹபீ (ரஹ்) அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.மேலே கூறப்பட்ட நபி மொழியில் பெரும் பாவங்கள் யாவும் கூறப்படவில்லை. அழிவிற்கு கொண்டு செல்லக்கூடிய பாவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளது.
கொலை. களவு. விபச்சாரம் போன்ற தண்டனைக்குரிய குற்றங்களும், விலக்கபட்டவைகளை உண்ணுதல், பருகுதல் போன்ற வேதனைக் குரிய குற்றங்களும், பொய். கோள் சொல்லுதல் போன்ற சாபத்திற் குரிய குற்றங்களும் பெரும் பாவங்களச் சார்ந்தவையாகும். இவற்றுள் சில சிலவற்றைவிட கொடியதாகும்.அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் பெரும் பாவங்களில் தலையாயது என நபி (ஸல்) கூறியிருப்பதிலிருந்தும்,” அதற்கு மன்னிப்பே கிடையாது, இணை வத்தவன் நிரந்தரமாக நரகிலேயே இருப்பான்” என்பதிலிருந்தும் இது பெரும் பாவம் மட்டுமல்ல, அதைவிடக்கொடியது என்பதும் புரியமுடிகிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை ஆய்வு செய்த இமாம் தஹபீ(ரஹ்) அவர்கள் குர்ஆன் சுன்னா ஒளியில் எழுபது பாவங்களைப் பின்வருமாறுதொகுத்து வழங்கியுள்ளனர்.
“பெரும்பாவங்கள் எழுபது”
1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்.
2. சூனியம் செய்தல்.
3. இறைவன் தடுத்த ஓர் உயிரை அநியாயமாக கொலை செய்தல்
4. அநாதைகளின் சொத்துகளை விழுங்குதல்
5. வட்டிப்பொருளை உண்ணுதல்
6. போரில் புறமதுகிட்டு ஒடுதல்
7. வசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்
8. பெற்றோரைத் துன்புறுத்தல்
9. பொய் சத்தியம் செய்தல்
10.பொய்சாட்சிசொல்லுதல்
11. சதிசெய்தல்
12. அல்லாஹ்வின்மீதும்,அவனது ரஸூலின் மீதும் பொய்யுரைத்தல்
13. ஆகாததை ஆகுமாக்குதல்
14. காட்டிக்கொடுத்தல்
15. மோசடி செய்தல்
16. பொய்யுரைத்தல்
17. கோள் சொல்லுதல்
18. வாக்கு மாறுதல்
19. அநீதம் செய்தல்
20. முகஸ்துதி செய்தல்
21. வழிப்பறி செய்தல்
22. தொழுகையை விடுதல்.
23. ஸகாத்தை மறுத்தல்
24. நோன்பைவிடுதல்
25. ஹஜ்ஜு செய்யாதிருத்தல்
26. கற்ற கல்வியை மறைத்தல்
27. விதியை பொய்யாக்குதல்
29. திட்டுதல் (சபித்தல்)
30. பிறரைத் துருவி ஆராய்தல்
31. நன்மையை சொல்லிக்காட்டுதல்
32. சோதிடனை உண்மைப்படுத்தல்
33. அதிகாரிக்கு இலஞ்சம் வழங்குதல்
34. தற்பெருமை
35. தற்கொலை
36 திருடுதல்
37. மது அருந்துதல்
38. சூதாட்டம்
39. விபச்சாரம்
40. ஆண் புணர்ச்சி
41. தகாத உறவு
42. அதிகாரத்தில் இருப்பவபவன் அநீதி செய்தல்
43. நேர்மை தவறிய நீதிபதி.
44. ஆண் பெண்ணாகவும்,பெண் ஆணாகவும் வேடமிடுதல்
44. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
45. கணவனுக்குத் துரோகம் செய்தல்
46. உருவப்படம் வரைதல்
47. ஒப்பாரி வைத்து அழுதல்
48. கொடுமை செய்தல்
49. வரம்பு மீறுதல்
50. அண்டை வீட்டாரை நோவினை செய்தல்
51. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்
52. மதபோதகர்களை இம்சித்தல்
53. கர்வம் கொள்ளுதல்
56. ஆண்கள் பட்டாடையும் தங்கமும் அணிதல்
57. அடிமை தப்பித்து ஓடுதல்
58. அல்லாஹ்வுக்கன்றி அறுத்தல்
59. அந்நியரை தந்தையாக ஏற்றல்
60. மேலதிக தண்ணீரைத் தடுத்தல்
61. அளவை நிறுவையில் மோசடிசெய்தல்
62. நியாயமின்றி வாதம் புரிதலும் பிறரை மயக்கப் பேசுதலும்
63. இறைச் சோதனைகளில் அவநம்பிக்கை கொள்ளல்
64. நல்லடியார்களை துன்புறுத்தல்
65. தனித்துத் தொழுதல்
66. ஜும்ஆத் தொழுகையைத் தவறவிடல்
67. மரண சாசனம் மூலம் அநீதமிழைத்தல்
68. பிறரை வஞ்சித்தல்
69. உளவு பார்த்தல்
70. நபித் தோழர்களை தூற்றுதல்