நான்கு வழிகள்-நான்கு ஆறுகள்

இஸ்லாம் கற்றுத்தராத நான்கு வழிகள் இமாம்கள் பெயரில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. அவை ஹனபி, ஷாபி, மாலிகி, ஹம்பலி எனத் தெரிந்த ஒன்றுதான். இந்த நான்கு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான் சுன்னத் வல் ஜமாஅத்தின்  கொள்கையாம். உலகத்தில் எந்த தத்துவமாக இருந்தாலும் ஒரு வழிமுறையைத்தான் அவர்கள் கொள்கையாகக் கூறுவார்கள். ஆனால் மத்ஹப்வாதிகளிடம் நான்கு வழிமுறைகள்.
    ஒவ்வொரு மத்ஹப்வாதிகளும் தங்கள் மத்ஹபை உயர்த்திப் பேசுவதும் மற்றதை தாழ்த்துவதும் வாடிக்கை. ஹனபி பிக்ஹூ நூலில் " இந்த அடியானின் மீது அல்லாஹுத்தஆலா ஷரியத்தைப்பற்றி மெய்ஞான ரகசிய ஒழியை பாய்ச்சியபோது அந்த வெளிச்சத்தில் அனைத்து மத்ஹபுகளையும் குறிப்பாக நான்கு மத்ஹபுகளையும் நன்கு நோட்டமிட்டேன். அவை ஒவ்வொன்றும் ஆறுகள் வடிவத்தில் ஓடிக்கொண்டிருந்தன.
    அந்த நதிகளில் அதிகப் பெரியதாகவும் அதிக நீளம் உடையதாகவும் ஹனபி மத்ஹபைக் கண்டேன். அதாவது எல்லா மத்ஹபுகளிலும் பெரிய மத்ஹபும், நீண்ட காலம் நிலைத்திருப்பதும் ஹனபீ மத்ஹப் ஒன்றுதான் என்பது எனக்குப் புலனாகிறது."
    இவ்வாறு மெய்ஞான ஒழியில் ஹனபீ ஆறு ஓடுவதைப் பார்த்ததாகப் பகல் கணவு கண்டவர் அல்லாமா ஷாஃரானீ அவர்கள் தமது நூலான 'மீ ஜானுல் இஃதிதாலில்' சிறப்பித்து கூறுகிறார். மேலும் இதே நூலில் நபித்துவத்தின் பரிபூரண சுடர்கள் ஹனபீ மத்ஹப்புடன் இணைந்து நிற்கின்றன என்பதும் அவருக்குப் புலனாகின்றதாகப் புலம்புகிறார்.
    ஈஸா(அலை) அவர்களும் ஹனபி மத்ஹப்தான்
    இவர்களின் ஹனபீ மத்ஹபு வெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறதென்றால்  நபிமார்களுக்கும் ஹனபீ லேபிள் ஒட்டும் அளவிற்கு முற்றி உள்ளது. அதாவது கற்பனையாக ஒரு நபி இந்த சந்தர்ப்பத்தில் அனுப்பபடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அப்போது அவர் ஹனபீ மத்ஹபு பிரகாரமே செயல்படுவார். நூல்: ஃபுஸிலே ஸித்தா
    ஹழரத் ஈஸா(அலை) அவர்கள் மீண்டும் இறங்கிய பின்னர் ஹனபீ மத்ஹப்பிற்காகவே செயல்படுவார் என்று இமாமே ரப்பானீ முஜத்திதே அல்ஃபதானி அவர்கள் போற்றி புகழ்ந்து கூறுகிறார்களாம். இப்லீஸ் அல்லாஹ்விற்கே பாடம் போதித்தது போல் இப்லீஸ் ஏஜண்டுகளும் அல்லாஹ்விடமிருந்து ஷரியத் சட்டத்தை வாங்கி வந்த நபிமார்களுக்கே மத்ஹப் சட்டத்தை போதிக்க துணிந்து விட்டார்கள்.
    தமது  மத்ஹப்தான் சரியானது  மற்றவர்களின் மத்ஹப்  தவறானது  என்று  கூறுகிறது (ஹிஜ்ரி 1004 ல் எழுதப்பட்ட துர்ருல்முக்தார் பாகம்1 பக்கம்18) ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷஃபியாக மாறிவிட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் (துர்ருல் முக்தார் பாகம்2 பக்கம்443) மத்ஹபுகளை பின்பற்றுவதுதான் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வழியாம். அந்த நான்கில் ஒன்றை பின்பற்றுவதுதான் சரியான வழியாம் என்ன குழப்பமான கொள்கை! மத்ஹப்வாதிகளின் கொள்கைப்படி இஸ்லாத்திற்கு ஒரே வேதம்; ஆதம், ஹவ்வா என்ற ஒரு ஜோடியில் இருந்து பெருகிய மனித குலம். மனித குலத்திற்கு ஒரே இறுதித்தூதர். ஆனால் மத்ஹப் சட்டங்கள்  மட்டும் நான்கு. இந்த குழப்ப தத்துவத்தையே ஆலிம்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்.
    இந்த மத்ஹப் சட்டங்கள் இஸ்லாத்திற்கு முரணானவை என்பதை விளக்க ஒரு சிறிய உதாரனத்தை பார்ப்போம். அல்லாஹ் கூறுகிறான் "கடலில் வேட்டையாடுவதும், புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளது (5:96) ஆனால் "பிக்ஹின் கலைக்களஞ்சியம்"  என்ற "ஹனபி மத்ஹப்பின் சட்ட விளக்கக் கடல்" என்ற  நூலில் நண்டு,  இரால் ஆகியவை ஹராம்" எனக் கூறப்பட்டுள்ளது.
    அல்லாஹ் படைத்த கடலில் வேட்டையாடும் மீன்கள் எல்லாம் ஹலால் ஆனால் ஹனபீ சட்ட விளக்கக் கடலில் உள்ள நண்டு இரால் போன்றவை ஹராமானது எப்படி? வேதமும் இறுதி வேதம், இறுதித் தூதர் வஹீ முற்று பெற்றபின் முகவரியற்ற பொய்ச் செய்தியைத் தருவது யார்?
    எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம்  (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே. (26:221,223)
    நீ எனக்கு கியாமல் நாள்வரை அவகாசம் கொடுத்தால், நான் இவருடைய சந்ததிகளில் சிலரைத்தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன் என்று (இப்லீஸ்) கூறினான். (17:62)
    அல்லாஹ்விடமிருந்து அவகாசம் பெற்று முதல் மனிதரில் ஆரம்பித்து இன்று முதல் இறுதிவரை மனிதர்களை வழி கெடுத்துக் கொண்டிருப்பான். இந்த வலையில் மாட்டிய ஆலிம்கள் எழுதிய நூல்களில் எல்லாம் குர்ஆன் ஹதீஸிற்கு முரணானச் செய்திகளை அதிகம் காணலாம்.
     ஷைத்தான் முஸ்லிம்களை ஏகத்துவப் பாதையில் செல்ல விடாமல் தனது ஏஜண்டுகள் மூலம் முன்னால் வந்து ஹனபீ மத்ஹபைப் பின்பற்றச் சொல்கிறான். பின்னால் வந்து ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுவது தான் சரியானது என்கிறான். வலது பக்கம் மாலிக் மத்ஹப் மகத்தானது என்கிறான். இடது புறம் சென்று  ஹம்பலி மத்ஹபே கண்ணியமானது என்று கூறி முஸ்லிம்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறான். ஆகவே முஸ்லிம்களே! சிந்தியுங்கள். உங்களுக்கு நேர்வழியில்  செல்ல அல்லாஹ்  இறக்கிய சட்டம்  வேண்டுமா? வேண்டாமா? தேர்ந்தெடுங்கள் உங்கள் இறுதி முடிவை.