பாடம்: 120 பேறுகால இரத்தம்

ஹதீஸ் எண்: 311
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பேறுகால தொடக்குள்ள பெண்கள் பேறு கால இரத்தத்திற்கு பிறகு நாற்பது பகல்கள் அல்லது நாற்பது இரவுகள் (தொழாமல், நோன்பு நோற்காமல்) இருப்பார்கள். மேலும் நாங்கள் எங்களுடைய முகங்களில் (கிளம்புகின்ற பருக்களை போக்குவதற்காக வரிஸ் என்ற செடியின் சாயத்தை பூசிக் கொள்வோம் என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பாளர்: உம்மு ஸலமா (ரலி).

(குறிப்பு: இந்த ஹதீஸ் இமாம் திர்மிதி, இப்னுமாஜா ஆகியோரும் தமது நூல்களில் பதிவாக்கியுள்ளனர்.)

ஹதீஸ் எண்: 312
நான் ஹஜ்ஜு செய்ததும் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது நான் இறை நம்பிக்கையாளரின் அன்னையே! சம்ரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் மாதவிடாய் (காலத்தில் விட்ட தொழுகையை) பெண்கள் களாச் செய்ய வேண்டும் (திருப்பித் தொழ வேண்டும்) என்று பெண்களுக்கு கட்டளையிடுகின்றாரே! என்று வினவியதற்கு அவர்கள் 'அவ்வாறு பெண்கள் களா செய்ய வேண்டாம். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் எவரேனும் பேறுகால இரத்தப் போக்கின் போது நாட்பது இரவுகள் (தொழாமல்) இருப்பார்கள். பேறுகால இரத்தப் போக்கின் போது விடுபட்ட தொழுகையை களா செய்யும் படி அவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட மாட்டார்கள்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அஸ்தி கிளையைச் சார்ந்த முஸ்ஸா அவர்கள்.

அசத்தியா: இவருடைய பெயர் முஸ்ஸா என்பதாகும். இவர் உம்முபஸ்ஸா என்ற இடுகுறி பெயரால் அழைக்கப்படுகிறார் என்று முஹம்மது பின் ஹாதம் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம்: 121 மாதவிடாய் குளிப்பு

ஹதீஸ் எண்: 313
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை அவர்களுடைய ஒட்டகையின் சேணத்தின் பின்பக்கம் அமர்த்தி பயணம் செய்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் வைகறை வரை தொடர்ந்து பயணம் செய்து, தனது ஒட்டகையை படுக்க வைத்தார்கள். நான் அவர்கள் ஒட்டகையின் சேணத்திலிருந்து இறங்கினேன். இந்த இடத்தில் எனது இரத்தம் படிந்திருந்தது! அது எனது முதல் மாதவிடாயாகும். உடனே ஒட்டகத்திற்கு பாய்ந்து சென்று விட்டேன். மேலும் நான் வெட்கமடைந்தேன். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் இரத்தத்தையும் கண்ட போது, 'உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?' என்று வினவினார்கள். நான் 'ஆம்' என்றேன். அப்போது அவர்கள் 'நீ உன்னை (உனது ரத்தத்தை சேணத்தில் வழிவதை விட்டும்) சரி செய்து கொள்க! மேலும், நீ ஒரு தண்ணீர் பாத்திரத்தை எடுத்து அதில் உப்பு போட்டு சேணத்தில் பட்ட இரத்தத்தை கழுவி விடு. பிறகு உனது வாகன இருக்கைக்கு வருக என்று சொன்னார்கள். இந்நிகழ்ச்சியை தெரிவித்த பின்னர் அறிவிப்பாளர் மேலும் அறிவிக்கின்றார். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கண்ட போது எங்களுக்கு யுத்தத்தில் கிடைத்த பொருளில் இருந்து கொஞ்சத்தை வழங்கினார்கள். மேலும் அவர் மாதவிடாயிலிருந்து துப்புரவாகும் போது தண்ணீரில் உப்பைக் கலக்காது (குளித்து) துப்புரவாக மாட்டார் என்றும், தான் மரணமானதும் தன்னை குளிப்பாட்டும் போது உப்பை பயன்படுத்துமாறும் அறிவுரை வழங்கியதாகவும் அந்த அறிவிப்பாளர் தெரிவிக்கின்றார்.

அறிவிப்பாளர்: கிபார் அவர்களுடைய கிளையைச் சேர்ந்த ஒரு பெண்மணி.

எனக்கு அப்பெண்மணியுடைய பெயரை முஹம்மது பின் இஸ்ஹாக் எனக்கு குறிப்பிட்டார். ஆனால் நான் அதை மறந்து விட்டேன் என்று அறிவிப்பாளரில் ஒருவரான சலமா தெரிவிக்கின்றார்.

ஹதீஸ் எண்: 314
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அஸ்மா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருகையுற்று, 'அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் மாதவிடாயிலிருந்து துப்புரவானால் எப்படி குளிக்க வேண்டும்?' என்று வினவிய போது, அதற்கு அவர்கள், அவர் எலந்தை இலையும், தண்ணீரும் (கலந்து) எடுத்துக் கொண்டு உளூ ச் செய்ய வேண்டும். பிறகு தனது தலையை கழுவவும், அதை தண்ணீர் அவரது முடியின் அடிப்பாகங்களுக்கு சென்றடையும் வரை தேய்க்க வேண்டும். பிறகு தனது உடலில் (தண்ணீர்) ஊற்ற வேண்டும். பிறகு பருத்தி அல்லது கம்பளித் துண்டைக் கொண்டு அவர் சுத்தம் செய்ய வேண்டும்' என்று பதிலளித்தார்கள். அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! அதைக் கொண்டு நான் எப்படி சுத்தம் செய்வது என்று வினவியதும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: இங்கு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் எதை மறைமுகமாக குறிப்பிடுகின்றார்கள் என்பதை புரிந்து கொண்டு 'அதை இரத்த கறைகாகுமிடத்தில் (மறைவுறுப்பில்) இட்டுக் கொள்க! என்று அவருக்கு பதிலளித்தேன்.

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி).

ஹதீஸ் எண்: 315
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்சாரிப் பெண்களை குறிப்பிடும் போது அவர்களை புகழ்ந்து மார்க்க விஷயத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதற்காக அவர்களை பாராட்டினார்கள். மேலும், அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருகையுற்று, என்று மேலுள்ள ஹதீஸின் கருத்தை இந்த அறிவிப்பாளர் அறிவிக்கும் போது கஸ்தூரி வாசமூட்டப்பட்ட (பருத்தி அல்லது கம்பளி) துண்டு என்று அறிவிக்கின்றார்.

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி).

ஹதீஸ் எண்: 316
'அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், சபிய்யா பின்த் ஷைபா, இப்ராஹீம் பின் முஹாஜிர், ஷுஃபா, தனது தந்தை வழியாக உபைதுல்லாஹ் பின் முஆத் அல்அன்பரி இந்த தொடர் வழியாக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அஸ்மா (ரலி) அவர்கள் வினவிய போது' என்று இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸின் கருத்தை அறிவிக்கும் போது 'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கஸ்தூரி வாசமூட்டப்பட்ட (பருத்தி அல்லது கம்பளித்) துண்டு என்று பதிலளித்தார்கள். நான் அதைக் கொண்டு எப்படி சுத்தம் செய்வேன் என்று அவர் வினவியதும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூய்மையானவன்) அதைக் கொண்டு நீ சுத்தம் செய்க! என்று கூறி ஒது துணியைக் கொண்டு (வெட்கத்தினால் தனது முகத்தை) மூடிக் கொண்டார்கள். மேலும் இதன் அறிவிப்பாளர், அஸமா (ரலி) அவர்கள் அண்ணலாரிடம், ஜனாபத்திற்காக குளிப்பதைப் பற்றி கேட்ட போது, நீ உனக்குரிய தண்ணீரை எடுத்து அழகிய முறையில் நிறைவான விதத்தில் சுத்தம் செய்க! பிறகு உனது தலைக்கு நீர் ஊற்றி, பிறகு உனது தலை(முடியின்) அடிப்பாகங்களில் அது சேரும் வரை அதை நீ தேய்ப்பாயாக! என்று அண்ணலார் பதிலளித்தார்கள் என்றும், பெண்களில் அன்சாரிப் பெண்கள் மிகவும் சிறந்தவர்கள்! மார்க்கத்தைப் பற்றி விளக்கம் கேட்பதற்கும், மேலும் அதில் அறிவு பெறுவதற்கும் நாணம் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்க வில்லை என்று அன்னை அயிஷா (ரலி) அவர்கள் பாராட்டு தெரிவித்தார்கள் என்றும் கூடுதலாக அறிவிக்கின்றார்.

(குறிப்பு: இதைப் போன்ற ஹதீஸை இமாம் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகியோர் தமது நூல்களில் பதிவாக்கியுள்ளனர்.)

பாடம்: 123 தயம்மம்

ஹதீஸ் எண்: 317
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உஸைத் பின் ஹுலைர் அவர்களையும் இன்னும் சிலரையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தொலைந்து விட்ட கழுத்து மாலையை தேடுவதற்காக அனுப்பி வைத்தார்கள். அப்போது தொழுகை நேரமாகி (தண்ணீர் கிடைக்காததால்) உளூவின்றியே அவர்கள் தொழுது விட்டனர். எனவே அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்ததும் இதை அவர்களிடம் முறையிட்ட போது, தயம்மம் தொடர்பான வசனம் இறங்கியது.

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி).

இப்னு (முஹம்மது) நுபைலி அவர்கள் தனது அறிவிப்பில் 'அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக! நீங்கள் வெறுக்கின்ற எந்த காரியமும் உங்களை வந்தணுகுவதில்லை. அதில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தே தவிர! என்று உஸைத் பின் ஹுலைர் அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி கூறினார்கள்' என்று கூடுதலாக அறிவிக்கின்றார்.

ஹதீஸ் எண்: 318
அம்மார் பின் யாசிர் அவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்கள் (நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது, பஜ்ர் தொழுகைக்காக மண்ணை தொட்டு தடவிக் கொள்வார்கள். அப்போது (முதலில்) அவர்கள் தங்கள் முன்னங்கைகளை மண்ணில் அடித்து தங்கள் முகங்களை ஒரே ஒரு தடவை தடவிக் கொண்டனர். அவர்கள் திரும்பவும் தங்களது முன்னங்கைகளை இன்னொரு தடவை அடித்து தங்கள் கைகள் முழுவதையும் (வெளிப்புறங்களை) முழங்கை வரைக்கும் தங்களது உட்புறக்கைகளை அக்குள் வரைக்கும் தடவிக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர்: அம்மார் பின் யாசிர் (ரலி).

ஹதீஸ் எண்: 319
இதே ஹதீஸை போன்று இப்னு வஹப் அவர்களிடமிருந்து சுலைமான் பின் தாவூத் அல் மஹ்ரிய்யு அவர்களும், அப்துல் மலிக் பின் ஷுஐபு அவர்களும் அறிவிக்கின்றனர். இதன் அறிவிப்பாளர், 'முஸ்லிம்கள் (தொழத் தயாராக) கிளம்பி தங்களது முன்னங் கைகளை மண்ணில் அடித்தனர். ஆனால் அவர்கள் (தங்கள் கைகளில்) மண்ணில் எதையும் (அள்ளி) வைத்திருக்க வில்லை' என்று அறிவித்து, மேலுள்ள ஹதீஸை போன்றே தெரிவிக்கின்றார். ஆனால் இவர் முழங்கைகள், கக்குள்களை குறிப்பிடவில்லை. இப்னுல் லைஸ் (அப்துல் மலிக் பின் ஷுஐப் அவர்கள் 'முழங்கைகளுக்கு மேல் வரை (தடவினார்கள்) என்று அறிவிக்கின்றார்.

(குறிப்பு: இதை இப்னுமாஜா அவர்கள் தமது நூலில் பதிவாக்கியிருக்கிறார்கள். மேலும் இந்த ஹதீஸ் முன்கதீஃ (என்ற பலவீனமான வகையைச் சேர்ந்தது) ஆகும். உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா அவர்கள் அம்மார் பின் யாஸிர் அவர்களை சந்திக்க வில்லை. இவரது தந்தை வாயிலாக அம்மார் பின் யாஸிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இவரது ஹதீஸை சுருக்கி பூரணமான தொடராக நஸாயி, இப்னுமாஜா ஆகியோர் அறிவிக்கின்றனர் என்று முன்திரி அவர்கள் குறிப்பிடுகின்றார்.)

ஹதீஸ் எண்: 320
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உளலாதில் ஜைவி என்ற இடத்தில் ஓய்வெடுப்பதற்காக இரவு தங்கலானார்கள். அவர்களுடன் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் இருந்தனர். ஜஸ்ஃலிபார் என்ற இடத்தில் அன்னையார் அவர்களின் கழுத்து மாலை அறுந்து விழுந்து விட்டது. இதனால் அவர்களது கழுத்து மாலையை தேடும் பணி, மக்களை அவர்களிடம் தண்ணீரில்லாத நிலையில் வைகறை வெளுக்கும் வரை (புறப்பட முடியாமல்) தடுத்து விட்டது. இதனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது கோபங்கொண்டு, மக்களை அவர்களிடம் தண்ணீர் இல்லாத சமயத்தில் (தொழமுடியாமல்) தடுத்து நிறுத்தி விட்டாயே என்று கூறினார்கள். அவ்வமயம் அல்லாஹ் தஆலா தனது திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தூய்மையான மண்ணில் சுத்தம் செய்கின்ற சலுகையை இறக்கியருளினான். எனவே முஸ்லிம்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் (தயம்மம் செய்யக்) கிளம்பி, தங்கள் கைகளை மண்ணில் அடித்தனர். பிறகு தங்கள் கைகளை மண்ணிலிருந்து எதையும் அள்ளாமல் உயர்த்தி அவற்றைக் கொண்டு தங்களது முகங்களையும் தங்களது (வெளிப்பக்க) கைகளை முழங்கைகள் வரையிலும், தங்களது உட்பக்க கைகளை கக்குள் வரையிலும் தடவிக் கொண்டார்கள் என்று அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பாளர்: அம்மார் பின் யாஸிர் (ரலி).

'இந்த ஹதீஸை மக்கள் (ஹதீஸ் கலையினர்) சட்டை செய்ய வில்லை' என்று தனது ஹதீஸில் இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார் என்று (முஹம்மது) இப்னுயஹ்யா தனது அறிவிப்பில் கூடுதலாக தெரிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: இவ்வாறே இதை இப்னு இஸ்ஹாக் அறிவிக்கும் போது அந்த அறிவிப்பில் (அம்மாருக்கும் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்வுக்கும் இடையில்) இப்னு அவர்களிடமிருந்து என்று குறிப்பிடுகின்றார். மேலும் இவர் யூனுஸ் (317 வது ஹதீஸ்) அவர்கள் தெரிவிப்பது போன்று (மண்ணில்) இரண்டு முறை அடித்தல் என்றே தெரிவிக்கின்றார். ஜுஹ்ரியிடமிருந்து இதை மஃமர் அவர்கள் இரண்டு முறை அடித்தல் என்றே அறிவிக்கின்றார்.

அம்மார் அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார் என்று ஜுஹ்ரி வாயிலாக மாலிக் அறிவிக்கின்றார். இவ்(மாலிக் அறிவித்த)வாறே ஜுஹ்ரி வாயிலாக அபூஉவைஸ் அறிவிக்கின்றார்.

இந்த ஹதீஸ் அறிவிப்பில் இப்னு உஐனா அவர்கள் ஒரு தடவை தன் தந்தை வாயிலாக அறிவிக்கும் உபைதுல்லாஹ்விடமிருந்து என்றும் மறுதடவை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கும் உபைதுல்லாஹ்விடமிருந்து என்றும் சந்தேகம் கொண்டவராக அறிவிக்கின்றார்.

இப்னு உஐனா அவர்கள் மேற்கூறிய இந்த ஹதீஸ் அறிவிப்பிலும் தான் ஜுஹ்ரி அவர்களிடமிருந்து (நேரடியாகவோ அல்லது ஊடே ஒரு அறிவிப்பாளரிடமிருந்தோ என்று) செவியுற்றதிலும் தடுமாறுகின்றார்.
இந்த ஹதீஸில் நான் பெயர் குறிப்பிட்ட (யூனுஸ், இப்னு இஸ்ஹாக், மஃமர் ஆகிய)வர்களை தவிர இவர்களில் வேறு யாரும் இரண்டு முறை அடித்தலை தெரிவிக்கவில்லை.

(குறிப்பு: கழுத்து மாலை அறுந்து விட்ட இந்த ஆயிஷா (ரலி) அவர்களது ஹதீஸை இமாம் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகியோர் தமது நூல்களில் பதிவாக்கியுள்ளனர். ஆனால் தயம்மம் செய்யும் விதம் பற்றி அதில் இடம் பெறவில்லை.)