ஹதீஸ் எண்: 231
மதீனாவின் ஒரு தெருவில் குளிப்புக்கடமையான என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். நான் பாதையை மாற்றிக் கொண்டு வேறு வழியாக சென்று விட்டேன். நான் குளித்து விட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். 'அபூஹுரைராவே! நீர் எங்கே சென்றிருந்தீர்' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நான், 'நான் குளிப்புக்கடமையானவனாக இருந்தேன், தூய்மையற்ற நிலையில் உங்கள் முன் அமர்ந்திருப்பதை வெறுத்தேன்' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டான்' என்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இமாம் அபூதாவூது அவர்கள் கூறுகிறார்கள்:
பிஸ்ர் அறிவிக்கும் இதே ஹதீஸில் பக்ர் என்பவரிடமிருந்து ஹுமைத் அறிவிக்கிறார்.

பாடம்: 93 குளிப்புக் கடமையானவர் பள்ளியில் பிரவேசித்தல்

ஹதீஸ் எண்: 232
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களின் வீட்டு வாயில்கள் (பள்ளிக்குள் வந்து போக வசதியாக பள்ளியை முன்னோக்கியவாறு) பள்ளியை ஒட்டி இருந்தன. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) இந்த (வீட்டு) வாயில்களை பள்ளியை விட்டும் (வேறு திசையை) நோக்கி மாற்றியமையுங்கள் என்று கட்டளையிட்டார்கள். பிறகு அண்ணல் நபி (ஸல்) (வீட்டிற்குள் அல்லது பள்ளிக்குள்) நுழைந்து விட்டனர். தங்களுக்கு (இந்த உத்தரவில்) சலுகை கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து அவர்கள் எதையுமே செய்யாதிருந்தனர். இதற்கு பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் வந்து, 'இந்த வீட்டு வாயில் பள்ளியை விட்டும் (வேறு திசையை நோக்கி) மாற்றியமையுங்கள். ஏனெனில் பள்ளியை மாதவிடாய் ஆனவளுக்கும், குளிப்புக் கடமையானவர்களுக்கும் (நுழைவதற்கு) நான் அனுமதிக்க மாட்டேன்' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்லத் என்பவர் புலைத் அல்ஆமிரி ஆவார்.

பாடம்: 94 குளிப்புக் கடமையானவர் மறதியாக மக்களுக்கு தொழுகை நடத்துதல்

ஹதீஸ் எண்: 233
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுகையில் நுழைந்தார்கள். அப்போது 'நீங்கள் உங்களுடைய இடங்களில் இருந்து கொள்ளுங்கள்' என்று சைகை செய்தார்கள். பிறகு தனது தலையிலிருந்து நீர் சொட்டியவாறு வந்து அவர்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 234
இந்த ஹதீஸ் மேலுள்ள அதே இஸ்னாத், பொருளைக் கொண்டே இடம் பெறுகிறது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யசீத்; பின் ஹாரூன் இந்த ஹதீஸின் ஆரம்பத்தில் (நுழைந்தார்கள்) என்பதை அடுத்து தக்பீர் கூறினார்கள் என்றும் அதன் கடைசியில் 'அவர்கள் தொழுகையை முடித்த போது நானும் மனிதன் தான், நான் குளிப்புக் கடமையாக இருந்தேன்' என்று சொன்னார்கள் என்றும் அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூசலமா வாயிலாக ஜுஹ்ரி அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது அவர்கள் தான் தொழுமிடத்தில் நின்று அவர்கள் தக்பீர் சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அவர்கள் (தொழுகையை விட்டும்) திரும்பி விட்டார்கள். பிறகு 'அப்படியே இருங்கள்' என்று சொன்னார்கள் என்ற குறிப்பிடுகின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். பிறகு கையினால் மக்களுக்கு உட்காருங்கள் என்று சைகை செய்து விட்டு சென்று குளித்தார்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை முர்ஸலாக முஹம்மத் அவர்கள் வாயிலாக அய்யூப், இப்னுஅவ்ன், ஹிஷாம் ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

இதே போன்று (முர்ஸலாக) 'அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் தக்பீர் சொன்னார்கள்' என்று அதா பின் யஸார் வழியாக இஸ்மாயீல் பின் அபூஹகீம் மூலம் இமாம் மாலிக் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 'தக்பீர் கூறினார்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ரபீஃ பின் முஹம்மது, யஹ்யா, அபான் ஆகியோர் வாயிலாக இதை எமக்கு முஸ்லிம் பின் இப்ராகீம் அறிவிக்கின்றார்கள்.

ஹதீஸ் எண்: 235
இகாமத் சொல்லப்பட்டு மக்கள் அணியில் நின்றார்கள். அப்போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் (இல்லத்திலிருந்து) வெளிவந்து தனது இடத்தில் வந்து நின்றதும் தான் குளிக்க வில்லை என்று அவர்களுக்கு ஞாபகம் வந்தது. உடனே மக்களை நோக்கி உங்களுடைய இடத்தில் இருந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். பிறகு தன்னுடைய வீட்டிற்கு திரும்பிச் சென்று குளித்துவிட்டு தனது தலையிலிருந்து நீர் சொட்டியவாறு அணியில் நின்று கொண்டிருந்த எங்களிடம் வந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

இது இதன் அறிவிப்பாளரான இப்னு ஹர்ப் என்பாரின் உரை நடையாகும். அய்யாஷ் என்பார் தனது அறிவிப்பில் 'அவர்கள் குளித்து விட்டு எங்களிடம் வருகின்ற வரை நாங்கள் அவர்களை நின்றவாறே எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்' என்று கூறுகிறார்.

பாடம்: 95 இரவில் தூங்கி எழுந்து ஆடையில் ஈரத்தை காணுதல்

ஹதீஸ் எண்: 236
(ஒரு மனிதர் ஒரு மாதிரியான கனவு கண்டு விந்து வெளிப்பட்டதாக அவருக்கு நினைவு இல்லை) ஆனால் ஆடையில் ஈரத்தைக் காண்கிறார். (அவர் குளிக்க வேண்டுமா?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, 'அவர் குளிக்க வேண்டும்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 'ஒருவர் (ஒரு மாதிரியான) கனவு கண்டதாக நினைவு கொள்கிறார். ஆனால் அவர் ஈரத்தைக் காண்வில்லை என்றால் (அவர் குளிக்க வேண்டுமா?) என்ற வினவப்பட்ட போது அவர் குளிக்க வேண்டியதில்லை' என்று பதிலளித்தார்கள். அப்போது உம்மு ஸுலைம் (ரலி) அன்ஹா அவர்கள் ஒரு பெண் இதை (ஈரத்தை) காணுகிறாள் என்றால் அவள் மீது குளிப்புக் கடமையாகுமா? என்று கேட்ட போது 'ஆம் பெண்கள் ஆண்களை (இது விஷயத்தில்) ஒத்தவர்கள் தான்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள்.

பாடம்: 96 ஆண்களை போன்று பெண்களும் ஈரத்தைக் கண்டால்

ஹதீஸ் எண்: 237
ஆசியா, உம்முஸுலைம் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் அவர்கள், அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கமடைய மாட்டான். ஒரு பெண் தூக்கத்தில் ஆண் காண்பதையே கண்டால் அவள் குளிக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று வினவிய போது, 'ஆம் அவள் நீரைக் கண்டால் குளிக்க வேண்டும்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி அன்னையார் அவர்கள் தொடர்ந்து அறிவிக்கின்றார்கள்: நான் அவர்களை (உம்முஸுலைம்) நோக்கி சீ! ஒரு பெண்ணும் இதை காண்பாளா? என்று கேட்ட போது, அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, 'ஆயிஷாவே! உனது வலக்கரம் மண்ணை தழுவட்டும்' பின் எவ்வாறு (தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உருவ) ஒற்றுமை தோன்றுகிறது? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
ஜுஹ்ரி அவர்களிடமிருந்து மாலிக் அவர்கள் மூலம் ஜுபைதி, உகைல், யூனுஸ், ஜுஹ்ரி அவர்களுடைய சகோதரன் மகனும், ஜுஹ்ரி அவர்களிடமிருந்து மாலிக் மூலம் இப்ராகீம் பின் அபுல் வசீர் ஆகியோரும் இவ்வாறே அறிவிக்கின்றனர்.

ஜுஹ்ரி அவர்களுக்கு உடன்பட்டு முஸாபிஃ அல்ஹஜபீ என்பார் 'ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா மூலம் என்றே அறிவிக்கின்றார். ஆனால் ஹிஷாம் பின் உர்வா அவர்கள் உம்முஸுலைம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்' என்று உம்முஸலமா, ஜைனப் பின்த் அபீஸலமா வாயிலாக உர்வா அவர்களிடமிருந்து என்று அறிவிக்கிறார்.

பாடம்: 97 குளிப்பதற்கு போதுமான தண்ணீர் அளவு

ஹதீஸ் எண்: 238
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை ஒரு பரக் அளவு பாத்திரத்தில் நிறைவேற்றுவார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
ஒரு பரக் அளவு (நீர்) கொள்ளும் ஒரே பாத்திரத்தில் நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் குளிப்போம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று இந்த ஹதீஸில் ஜுஹ்ரி வாயிலாக மஃமர் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
மாலிக் அவர்களின் (முதலிலுள்ள) ஹதீஸை போன்று இப்னு உஐனா அவர்களும் அறிவிக்கின்றார்.

மேலும் இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
பரக் என்பது 16 ராத்தல்களாகும்.

குறிப்பு: வழக்கொழிந்து விட்ட இந்த ராத்தல் முறையை வைத்து நாம் பரக் என்பதற்கு விளக்கம் காண்பது மிகவும் சிரமம். ஒரு பரக் எத்தனை 'சாஉ' க்களைக் கொண்டது என்பதை வைத்து அதன் அளவை நாம் அறியலாம்.

மூன்று 'சாஉ'க்கள் கொண்டது ஒரு பரக் ஆகும் என்று சுப்யான் பின் உஐனா அவர்கள் கூறுவதாக முஸ்லிமில் வரும் அறிவிப்பு தெரிவிக்கிறது.

இவ்வாறே ஒரு பெருங்கூட்டம் தெரிவிக்கின்றது என்று இமாம் நவவீ அவர்கள் தெரிவிக்கின்றார்கள். (அவ்னுல் மஃபூத்)

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் 'சாஉ' என்பது நான்கு முத்துகள் ஆகும் என புகாரியின் விளக்கவுரையில் கிர்மானி என்பவர் கூறுகின்றார். நடுத்தரமான ஒரு மனிதரின் இரு சிரங்கைகள் நிரம்பியிருப்பது ஒர முத்து ஆகும் என்று காமூஸ் (அரபி அகராதி) தெரிவிக்கின்றது. (அவ்னுல் மஃபூத்)

பாடம்: 98 கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை

ஹதீஸ் எண்: 239
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கடமையான குளிப்பு பற்றி பேசி கொண்டிருந்தனர் அப்போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) நான் எனது தலையில் மூன்று தடவை (நீரை) ஊற்றுவேன் என்று கூறி மேலும் தனது இரு கைகளில் எப்படி ஊற்றுவது என்று சைகை செய்து காட்டினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம் (ரலி)

ஹதீஸ் எண்: 240
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றுவதாக இருந்தால் ஹிலாபை கொண்டு வரச் செய்வார்கள். பிறகு தன் கைகளால் அள்ளி தனது தலை (முழுவதும்) யில் ஊற்றுவார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

ஹலாப் ஒரு ஒட்டகையில் கரக்கும் பாலை கொள்கின்ற பாத்திரமாகும்.