ஹதீஸ் எண்: 161
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள்.இதன் அறிவிப்பாளர் முஹம்மது அல்லாதர் 'காலுறைகள் மேற்பாகத்தின் மீது மஸஹ் செய்தார்கள்' என்று அறிவிக்கின்றனர்.
ஹதீஸ் எண்: 162
மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல்பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு தகுதியானதாகும்.ஆனால் நான் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை தனது காலுறைகளின் மேல்பாகத்தின் மீதே மஸஹ் செய்யக் கண்டுள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்து கைர் அவர்கள்.
ஹதீஸ் எண்: 163
'அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை தனது இரு பாதங்களின் அடிப்பாகம் தான் கழுவுவதற்கு பெரிய பகுதி என்று நான் கருதியிருந்தேன். இந்த ஹதீஸை அஃமஷ் அவர்கள் தனது இஸ்னாதைக் கொண்டு அறிவிக்கிறார்.ஹதீஸ் எண்: 164
மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருக்குமானால் பாதங்களின் அடிப்பாகமே மேற்பாகத்தைவிட மஸஹ் செய்வதற்கு உரியதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தனது காலுறைகளின் மேற்பாகத்தில் மஸஹ் செய்துள்ளார்கள் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.'நான் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை பாதங்களின் மேற்பாகத்தில் மஸஹு செய்யக் காணுகின்ற வரை பாதங்களின் அடிப்பாகந்தான் மேற்பாகத்தைவிட மஸ்ஹு செய்வதற்கு உரியது என்று கருதியிருந்தேன்' என்று அஃமஷ் அவர்களிடமிருந்து அதே இஸ்னாத் மூலம் அறிவிக்கின்ற வகீஃ என்பார் பாதங்கள் என்றால் காலுறைகள் என்றே (இந்த இடத்தில்) இதன் பொருள் என்று விளக்குகிறார். வகீஃ அறிவிப்பது போன்றே அஃமஷ் என்பாரிடமிருந்து ஈஸா பின் யூனுஸ் அறிவிக்கின்றார்.
நான் அலீ (ரலி) அவர்களை உலூச் செய்யக் கண்டேன். அப்போது அவர்கள், தனது பாதங்களின் மேல் பகுதியை கழுவியதும் 'அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை இதை (இவ்வாறு) நான் செய்யக் கண்டிருக்கவில்லையானால்' என்று கூறினார்கள் என தன் தந்தை வாயிலாக அறிவிக்கும் அப்துகைர் மூலமாக அபு அஸ்ஸவ்ஃதா என்பார் அறிவித்து இந்த ஹதீஸை தொடர்கிறார்.
ஹதீஸ் எண்: 165
தபூக் யுத்தத்தின் போது நான் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கட்கு உலூச் செய்ய நீர் ஊற்றினேன். அவர்கள் காலுறைகளின் (மேல் பாகத்திலும்) அடிப்பாகத்திலும் மஸஹ் செய்தார்கள்.அறிவிப்பவர்: முகீரா (ரலி) வாயிலாக அவரின் எழுத்தாளர்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
'இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் சவ்ர் என்பார் தனக்கு முன்னுள்ள அறிவிப்பாளர் ரஜமி என்பாரிடமிருந்து இந்த ஹதீஸை செவியுறவில்லை' என எனக்கு தகவல் கிடைத்தது.ஹதீஸ் எண்: 166
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தால் உலூ செய்வார்கள். மேலும் (மர்ம உறுப்பில்) நீர் தெளிப்பார்கள்.அறிவிப்பவர்: சுப்யான் பின் ஹகம் சகபீ அல்லது சுப்யான் பின் இப்னு ஹகம் சகபீ அவர்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
இந்த இஸ்னாதை சரிகாண்பதில் சுப்யான் அவர்களுக்கு அறிஞர்கள் குழு உடன்பட்டுள்ளது. அவர்களில் சிலர், ஹகம் அல்லது இப்னு ஹகம் என்றும் கூறுகின்றனர்.ஹதீஸ் எண்: 167
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள், சிறுநீர் கழித்து விட்டு பிறகு தன் மர்ம ஸ்தானத்தில் தண்ணீர் தெளிக்கக் கண்டிருக்கிறேன்.அறிவிப்பவர்: தன் தந்தை வாயிலாக சகீபைச் சார்ந்த ஒருவர்.
ஹதீஸ் எண்: 168
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள். பிறகு உலூச் செய்து விட்டு தனது மர்ம உறுப்பில் நீர் தெளிப்பார்கள்.அறிவிப்பவர்: தன் தந்தை வாயிலாக ஹகம் அல்லது இப்னுல் ஹகம் அவர்கள்.
பாடம்: 65 உலூச் செய்த பின் கூற வேண்டியவை
ஹதீஸ் எண்: 169
நாங்களும், அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். நாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஒட்டகங்களை மேய்ப்பதற்கு நாங்கள் முறை வைத்துக் கொள்வோம். எனது மேய்ப்பு முறை வந்ததும், மாலையில் நான் அவற்றை (தொழுவத்திற்கு) ஓட்டி வந்தேன். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவர்களை அடைந்தேன். அப்போது அவர்கள் கூற நான் செவியுற்றேன். 'உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவ்வுலூவை அவர் அழகுறச் செய்து பின்பு (தொழுவதற்கு) நின்று தனது அகத்தாலும் முகத்தாலும் அவர் ஒருமுகப்பட்டு இரண்டு ரக்அத்துகளை தொழுதால் அவருக்கு (சுவனம்) நிச்சயமாகி விடும். அப்போது ஆஹா என்ன அருமை என்றேன். (ஆச்சர்ய மேலீட்டால்) சப்புக் கொட்டினேன். எனக்கு முன்பிருந்த ஒருவர் 'உக்பாவே! இதற்கு முன்பு ஆற்றிய உரை இதைவிட அருமை' என்று கூறினார். (யார் என்று) பார்த்தேன். அவர் உமர்பின் கத்தாப் (ரலி) அவர்கள் தான்! அபூஹப்ஸ் அவர்களே! அது என்ன உரை என்று கேட்டேன். நீ வருவதற்கு சற்று முன்பு தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அவர்கள் கூறலானார்கள். 'உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவ்வுலூவை அழகுறச் செய்து, அவர் அதை நிறைவு செய்யும் போது அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹுவஹ்தஹு லாஷரீக லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு (வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தவிர யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை என்று நான் சான்று பகர்கின்றேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், திருத்தூதரும் ஆவார்கள் என்றும் சான்று பகர்கின்றேன்) என்று கூறினால் அவருக்காக எட்டு சுவனங்களின் வாயில்கள் திறக்கப்பட்டு விடும். அவற்றில் அவர் விரும்பிய எதிலும் நுழையலாம்.அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
ஹதீஸ் எண்: 170
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் உக்பா பின் ஆமிர் அவர்களிடமிருந்து மேலுள்ள ஹதீஸை போன்று அறிவிக்கின்றார். இவர் ஒட்டகை மேய்ப்பு செய்தியை குறிப்பிடாததோடு 'அவர் அவ்வுலூவை அழகுறச் செய்து' என்று வரும் இடத்தில் 'பிறகு தனது பார்வை விண்ணோக்கி உயர்த்தி மேற்கண்டவாறு கூற வேண்டுமென' தொடர்ந்து அறிவிக்கின்றார்.
Labels:
அபூதாவூது