பாடம்: 70 ஆண்குறியை தொடுவதால் உலூ நீங்குமா?
ஹதீஸ் எண்: 181
நான் மர்வா பின் அல்ஹகம் என்பாரிடம் சென்றிருந்தேன். எதனால் உலூ நீங்கும் என்பதை அவரிடம் விவாதித்தோம். ஆண்குறியை தொடுவதினால் உலூ முறியும் என்று மாவான் கூறினார். இதை 'நான் (இது வரை) அறியவில்லையே' என்றேன். அதற்கு மர்வான் யார் தனது ஆண்குறியை தொடுகிறாரோ அவர் உலூச் செய்து கொள்வாராக! என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூற தான் செவியுற்றதாக புஸ்ரா பின்த் சப்வான் எனக்கு அறிவித்தார்கள் என்று சொன்னார்.அறிவிப்பவர்: உர்வா பின் ஜுபைர் அவர்கள்.
பாடம்: 71 ஆண்குறியை தொடுவதற்கு அனுமதி
ஹதீஸ் எண்: 182
நாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது கிராமவாசி போல் ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் நபி அவர்களே! 'ஒருவர் உலூச் செய்த பிறகு தனது ஆண்குறியை தொடுவது தொடர்பாய் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று வினவினார். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 'அதுவும் அவரது ஒரு உறுப்பு தானே?' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: தன் தந்தை வாயிலாக கைஸ் பின் தல்க் அவர்கள்.
இந்த ஹதீஸை தல்க் பின் கைஸ் என்பாரிடமிருந்து முஹம்மது பின் ஜாபிர் வழியாக ஹிஷாம் பின் ஹஸ்ஸான், ஸுப்யான் சவ்ரீ, சுஃபா, இப்னு உஐனா, ஜரீர் அர்-ராசி ஆகியோர் அறிவிக்கின்றனர்.
ஹதீஸ் எண்: 183
முந்தைய ஹதீஸின் இஸ்நாத் கருத்தை கொண்ட ஹதீஸை கைஸ் பின் தல்க் அவர்களிடமிருந்து முஹம்மது பின் ஜாபிர் அறிவிக்கின்றார். ஒருவர் 'தொழுகையில்' தன் ஆண்குறியை தொடுவது தொடர்பாய் என்ன கருதுகின்றீர்கள் என்று வினவியதாக இதில் அறிவிக்கின்றார்.பாடம்: 72 ஒட்டகை இறைச்சி உண்ணுவதால் உலூ நீங்குமா?
ஹதீஸ் எண்: 184
ஒட்டகை இறைச்சியை சாப்பிட்டால் உலூ செய்ய வேண்டுமா? என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. 'அதைச் சாப்பிட்டால் உலூச் செய்யுங்கள்' என்று பதிலளித்தனர். ஆட்டிறைச்சியைச் சாப்பிட்டால் உலூச் செய்ய வேண்டுமா? என்று வினவப்பட்ட போது 'அதற்காக நீங்கள் உலூச் செய்ய வேண்டாம்' என்று பதிலளித்தனர்.ஒட்டகை தொழுவங்களில் தொழலாமா? என்று வினவப்பட்ட போது 'ஒட்டகைத் தொழுவங்களில் தொழாதீர்கள். காரணம் அவை (ஒட்டகங்கள்) ஷைத்தான்களின் வகையாகும் என்று பதிலளித்தனர். ஆட்டுக் கொட்டில்களில் தொழலாமா? என்று வினவப்பட்ட போது அவற்றில் 'நீங்கள் தொழுங்கள், அவை (ஆடுகள்) அபிவிருத்திக்குரியவை' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: பர்ரா பின் அஸிப் (ரலி) அவர்கள்.
பாடம்: 73 பச்சைக்கறியை தொடுவதினாலோ அல்லது கழுவுவதினாலோ உலூ நீங்குமா?
ஹதீஸ் எண்: 185
ஆட்டை உரித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு அருகில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்ற போது அவரை நோக்கி அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நீ விலகுக! நான் உனக்கு (உரித்துக்) காட்டுகிறேன் என்று கூறி தனது கையை தோலுக்கும் இறைச்சிக்கும் இடையே உட்படுத்தி அதை பலமாக உள்ளே கொண்டு சென்றார்கள். அவர்களது கை அக்குள் வரை மறைந்து விட்டது. பிறகு சென்று உலூச் செய்யாமல் தொழுதார்கள்.அய்யூப், அமர் ஆகிய இதன் அறிவிப்பாளர்கள் அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் என்று கருதுகின்றோம் என்று தெரிவிக்கின்றார்கள்.
அமர் என்பவர் தனது ஹதீஸ் அறிவிப்பில் அதாவது நபிகள் (ஸல்) அவர்கள் தண்ணீரை தொடாமல் என்று கூடுதலாக அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: இதே ஹதீஸை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் (ரலி) அவர்களை குறிப்பிடாமல் 'அதா' விடமிருந்து ஹிலால் வாயிலாக அப்துல் வாஹித் பின் ஜியாத் அபூமுஆவியா ஆகியோர் முர்ஸலாக அறிவிக்கின்றனர்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ள ஹிலால் என்பார் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) (நபித்தோழர்) அவர்களிடமிருந்து (அதாபின் யஸீத் அவர்கள் நேரடியாக அறிவிக்காமல்) என்று தான் அறிகின்றேன் எனக் கூறுகிறார்கள்.
பாடம்: 74 இறந்தவற்றை தொட்டால் உலூ நீங்குமா?
ஹதீஸ் எண்: 186
தன் இரு பக்கங்களிலும் மக்களுடன் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் மேட்டுப்பகுதியிலிருந்து கடைத்தெருவிற்குள் நுழைந்தார்கள். செத்த, இரு காதுகளும் இணைந்திருக்கும் ஒரு ஆட்டுக்குட்டிக்கருகில் சென்ற போது அதை அதன் காதை பிடித்து தூக்கி பிறகு 'இதை உங்களில் யார் விரும்புவார்? என்று வினவினார்கள்' என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.பாடம்: 75 சமைத்த உணவை சாப்பிடுவதால் உலூ நீங்குமா?
ஹதீஸ் எண்: 187
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டின் தொடை பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள்.அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
ஹதீஸ் எண்: 188
ஓர் இரவு நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் விருந்தாளியாக தங்கினேன். அவர்கள் சிறிதளவு இறைச்சியை வறுவல் செய்ய சொன்னார்கள். அவர்கள் கத்தியை எடுத்து அதை எனக்கு வெட்டத் துவங்கினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள் வந்து, அவர்களுக்கு தொழுகையை அறிவித்தார்கள். உடனே அவர்கள் கத்தியை போட்டு விட்டு இவருக்கு என்ன அவசரம்? அவரது கையில் மண் படியட்டும் என்று கூறி தொழலானார்கள்.அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அன்பாரி அவர்கள் எனக்கு மீசை அதிகமாக வளர்ந்திருக்கிறது. அதை எனக்கு ஒரு பற்குச்சியை (அளவாக) வைத்து (அதற்கு மேற்பட்டதை) கத்தரித்து விட்டார்கள் என்றோ அல்லது பற்குச்சியை (அளவாக) வைத்து உனக்கு நான் அதை கத்தரிப்பேன் என்றோ அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதாக கூடுதலாக அறிவிக்கின்றார்.
ஹதீஸ் எண்: 189
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள், ஆட்டின் தொடைப் பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு தனக்கு கீழிருந்து விரிப்புத்துணியில் தனது கையை துடைத்தார்கள். பிறகு நின்று தொழலானார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
ஹதீஸ் எண்: 190
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப் பகுதியை கடுவாய் பற்களால் கடித்து சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதனர்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
Labels:
அபூதாவூது