வெங்காயம் பூண்டு மற்றும் இதுபோன்ற வெறுக்கத்தக்க வாடை தரும் பொருட்களை சாப்பிட்டுவிட்டு அதன் வாடையுடன் பள்ளிவாயிலுக்கு வருவது கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால்) உங்களுடைய அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 7:31)
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلًا فَلْيَعْتَزِلْنَا أَوْ قَالَ فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ
வெங்காயம் அல்லது பூண்டை உண்டவர் நம்மை விட்டும் தனித்திருக்கட்டும் -அல்லது- நமது பள்ளியை விட்டும் தளித்திருக்கட்டும். அவருடைய வீட்டிலேயே அமர்ந்து கொள்ளட்டும். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரீ 855)
مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ
வெங்காயம் பூண்டு மற்றும்(அது போன்ற வாடையுடைய) குர்ராஸ் எனும் செடியை சாப்பிட்டவர் நமது பள்ளிவாயிலை நெருங்கவேண்டாம். ஏனெனில் மனிதர்கள் துன்புறும் பொருட்களின் மூலம் மலக்குகளும் துன்புறுகிறார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம் 876)
உமர்(ரலி)அவர்கள் மக்களுக்கு ஜும்ஆ உரை நிகழ்த்தும் போது இவ்வாறு கூறினார்கள். மக்களே! நிச்சயமாக நீங்கள் இரண்டு செடிகளைச் சாப்பிடுகின்றீர்கள். நான் அவைகளை அருவருப்பானவையாகவே கருதுகிறேன். அவை வெங்காயமும் பூண்டும். நிச்சயமாக நபி(ஸல்)அவர்கள் எவரிடமேனும் இவ்விரண்டின் வாடையைக் கண்டால் அவரை பள்ளியிலிருந்து வெளியேறி பகீஃ-மண்ணறையின் பக்கம் சென்றுவிடுமாறும். அதனை சாப்பிட விரும்புபவர் சமைப்பதின் மூலம் அவற்றின் வாடையை போக்கி விடுமாறும் கட்டளையிடுவார்கள். (அறிவிப்பவர்: மிக்தான்(ரலி) நூல்: முஸ்லிம்)
கடின வேலைகள் செய்து வேர்வையுடனும் அக்குள் மற்றும் ஆடைகளில் அருவருக்கத்தக்க வாடையுடனும் பள்ளிக்கு வருவதும் இந்தத் தடையில் அடங்கும். இதைவிட மிககெட்ட நிலை என்னவெனில் -சிகரட் போன்ற- ஹராமாக்கப்பட்ட புகைபிடித்து விட்டு அதன் துர்நாற்றத்துடன் பள்ளிக்கு வருவதுதான். இவர்கள் அல்லாஹ்வின் அடியார்களான மலக்குகளுக்கும் தொழுகையாளிகளுக்கும் துன்பம் தருகின்றனர்.