புறம் பேசுதல்

முஸ்லிம்கள் ஒன்றுகூடும் சபையில் புறம் பேசுவது, பிறரை இழிந்துரைப்பது போன்ற செயல்கள் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உள்ளங்கள் வெறுக்கும் அறுவருப்பான உவமையைக் கூறி இதனை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் ஒருவர் தன்னுடைய சகோரசரின் மாமிசத்தை அவர் இறந்து பிணமாக இருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள். (அல்குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்:
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் -புறம்- என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)

நம்முடைய முஸ்லிம் சகோதரர் வெறுப்பதை நாம் கூறுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம்.. ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே!

அல்லாஹ்விடத்தில் மிகக்கேவலமான, இழிவாகக் கருத்தப்படும் புறம் பேசுதல் விஷயத்தில் மக்கள் மிகப் பொடுபோக்காக உள்ளனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி ஒருவன் தனது சகோதரனின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகும். (அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜைத்(ரலி) நூல்: அபூதாவூத்)

சபையில் இருப்பவர் இத்தீமையிலிருந்து பிறரைத் தடுப்பது கடமையாகும். மேலும் புறம் பேசப்படும் சகோதரருக்கு சார்பாக நாம் பேசவேண்டும். இவ்வாறு பேசுவதை நபி(ஸல்)அவர்கள் வரவேற்றுள்ளார்கள்.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்துவிடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: அஹமத்)

யா அல்லாஹ்! எங்களுடைய பாவங்களையும் எங்களுடைய செயல்களில் நாங்கள் வரம்புமீறியதையும் மன்னித்தருள்வாயாக! எங்களுடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக!

நபி(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தோழர்களின் மீதும் அருள்புரிவாயாக!

-அகிலத்தோரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்-