தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதைக் காண்போம்.
பாங்கு கூறுவதன் சிறப்புகள்
தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வணக்கமாக்கியுள்ளார்கள். ஒருவன் தன்னுடைய வீட்டில் தொழுதாலும், கடைவீதியில் தொழுதாலும், காட்டில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவதைத் தான் மார்க்கம் வழிகாட்டுகிறது.
பல பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்கென்று முஅத்தின்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முஅத்தின்கள் நியமிக்கப்படாத பள்ளிகளும் உள்ளன. முஸ்லிம்களில் அதிகமானோர் பாங்கு கூறுவதற்கு வெட்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே பல பள்ளிவாசல்களில் சப்தமிட்டு பாங்கு கூறுவதற்குச் சக்தியில்லாத வயோதிகர்கள் முஅத்தின்களாக உள்ளனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூட விளங்க முடியாத வகையில் பாங்கின் வாசகங்களைக் கூறுகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு அம்சமாகும்.
தொழுகைக்காக நாம் கூறுகின்ற பாங்கிற்கு, பாங்கு சொல்பவருக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வாரி வழங்குகிறான்.
பாங்கு சொல்வதற்குப் போட்டி
ஒரு தடவை பாங்கு சொன்னால் ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று அறிவிப்புச் செய்தால் அந்தப் பணத்தைப் பெறுவதற்காகப் பலர் பாங்கு சொல்வதற்குப் போட்டி போடுவார்கள். ஆனால் இந்த உலகில் கிடைக்கின்ற பல கோடிகளை விட மறுமையில் கிடைக்கின்ற ஒரு நன்மை மிகச் சிறந்ததாகும்.
பாங்கு சொல்லுதல் என்ற நற்காரியத்திற்கு இறைவன் நன்மைகளை வாரிவழங்குகிறான். அவன் வாரிவழங்குவது இவ்வுலகில் நமது கண்களுக்குத் தெரியாது. இதன் காரணமாகத் தான் நாம் அந்த நற்காரியத்தைச் செய்வதில் அசட்டையாக இருக்கின்றோம். பாங்கு சொல்வதால் கிடைக்கும் நன்மையை அல்லாஹ் நமது கண்களுக்குக் காட்டினால் நிச்சயமாக அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்காக, பாங்கு சொல்பவரை சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்து எடுக்கும் நிலைதான் ஏற்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூற்கள்: புகாரி (615, 654, 2689), முஸ்லிம், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அபூ தாவூத், அஹ்மத்
பாங்கு சொல்வது எவ்வளவு பெரிய நற்பாக்கியம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது. தொழுகைக்காக பாங்கு சொல்பவர் நிச்சயம் தொழுகையாளியாகத் தான் இருப்பார். எனவே தொழுகை என்ற வணக்கம் தான் இந்தப் பாக்கியத்தை அடைவதற்குக் காரணமாக அமைகிறது. இதன் மூலம் தொழுகை என்பது பாரமல்ல. அது பலன்களை வாரி இறைக்கும் செழிப்பான ஒரு தோட்டம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
பாங்கு சொல்பவர்களுக்கு நபியவர்களின் பிரார்த்தனை
சாதாரண மனிதர்களின் பிரார்த்தனையை விட நபியவர்களின் பிரார்த்தனை வலிமை மிக்கதாகும். அகில உலகங்களின் இரட்சகன் ஏற்று, பதிலளிப்பதற்குத் தகுதியானதாகும். அந்த இறைத்தூதரின் பிரார்த்தனை, பாங்கு சொல்லும் முஅத்தின்களுக்குக் கிடைக்கின்றதென்றால் இது எப்படிப்பட்ட நற்காரியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் என்பவர் (பின்பற்றி தொழுபவர்களின் தொழுகைக்கு) பொறுப்பாளியாவார். பாங்கு சொல்பவர் (முஅத்தின் தொழுகை நேரங்களில் சரியாக பாங்கு சொல்வதற்காக) நம்புவதற்குரிய ஒருவராவார். எனவே அல்லாஹ் இமாம்களை நேர்வழியில் செலுத்துவானாக! பாங்கு சொல்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவானாக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: அஹ்மத் (9418)
தொழுகை நேரங்களை சரியாகக் கவனித்து அதனை மக்களுக்கு அறிவிப்புச் செய்தவற்காகத் தான் முஅத்தின். மக்கள் அவருடைய பாங்கை வைத்துத் தான் தொழுகை நேரங்களை அறிகிறார்கள். எனவே நம்பிக்கைக்குரியவராக ஒரு முஅத்தின் செயல்பட வேண்டும். அப்படி செயல்படும் முஅத்தினுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக நபியவர்கள் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் மன்னிப்பும், சுவனபதியும்
பள்ளிவாசலில் மட்டுமல்ல. பள்ளி அல்லாத எந்த இடத்தில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவது நம்முடைய பாவங்களை மன்னித்து சுவனத்தைப் பெற்றுத் தரக்கூடிய காரியமாகும். இதனைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலை உச்சியின் மீதுள்ள பாறையில் தொழுகைக்காக பாங்கு சொல்லி, தொழுகையை நிறைவேற்றும் ஆட்டு இடையனைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகின்றான். "இதோ என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள் என்னைப் பயந்தவனாக பாங்கு சொல்லி தொழுகையை நிலைநாட்டுகிறான். நிச்சயமாக நான் என்னுடைய அடியானை மன்னித்து அவனை சொர்க்கத்தில் நுழையச் செய்து விட்டேன்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரலி),
நூற்கள்: அபூதாவூத் 1017, அஹ்மத், நஸாயீ
தொழுகைக்காக பாங்கு சொல்பவருக்குத் தான் இந்தப் பாக்கியம். இதனை தொழுகையாளிகள் மட்டுமே அடைந்து கொள்ள முடியும். நாம் நிறைவேற்றும் தொழுகை ஒரு அற்புத பாக்கியம் என்பதை மேற்கண்ட நபிமொழி வலுப்படுத்துகிறது.
அனைத்தின் சாட்சியும் அழைப்பாளருக்கே!
பாங்கு சொல்பவரின் சப்தம் எவ்வளவு தூரம் செல்கிறதோ அந்தப் பகுதியில் வாழும் மனிதர்கள், ஜின்கள், விலங்குகள், புற்பூண்டுகள், மலைகள், மரங்கள், செடி கொடிகள், பள்ளங்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள் மொத்தத்தில் அனைத்துப் பொருட்களும் அவர் செய்த நற்காரியத்தை உறுதிப்படுத்தி அல்லாஹ்விடம் சாட்சி கூறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவ்வாறு சாட்சி கூற வைப்பான். இது பாங்கு சொல்பவருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஒரு அருளாகும்.
அபூ ஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் "ஆட்டை மேய்த்துக் கொண்டோ' அல்லது "பாலைவனத்திலோ' இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக் கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன'' என்று கூறிவிட்டு, இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (609)
தொழுகைக்காக பாங்கு கூறுபவருக்கே இப்படிப்பட்ட பெரும்பாக்கியம் என்றால் தொழுகை எப்பெரும் பாக்கியத்தை தொழுகையாளிகளுக்குப் பெற்றுத் தருகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அழகிய தோற்றம் பெறும் அழைப்பாளர்
பாங்கு சொல்பவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் காண்பதற்கு அழகிய தோற்றத்தை வழங்குகிறான். ஆம்! அவர்களின் கழுத்து மறுமையில் நீளமானதாக இருக்கும். இவ்வுலகில் கழுத்தை நீளமானதாக வைத்து நாம் கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் காண்பவர்கள் கவரும் விதத்தில் மறுமையில் பாங்கு சொல்பவர்களுக்குத் தோற்றம் வழங்குவான்.
"மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி),
நூல்: முஸ்லிம் (631)
அழகிய தோற்றத்தைப் பெற்றுத்தரும் இந்த அற்புத பாங்கிற்கு அடிப்படை வணக்கம் தொழுகை தான் என்பதை நாம் இங்கே நம்மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
ஷைத்தானை விரட்டும் பாக்கியம்
அல்லாஹ்வின் எதிரி ஷைத்தானை புறமுதுகிட்டு நெடுந்தொலைவுக்கு விரட்டும் மாபெரும் ஆயுதம் தான் பாங்கு. பாங்கு சொல்பவர் அல்லாஹ்வின் எதிரியை விரட்டியடிக்கும் மாபெரும் பாக்கியத்தைப் பெறுகிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்புச் செய்பவர் அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி (608), முஸ்லிம் (634)
ஷைத்தானை விரட்டும் இந்தப் பாக்கியத்தை பெற்றுத் தருவதும் தொழுகை தான்.
பாங்கிற்குப் பதில் சொல்வதன் சிறப்புக்கள்
தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்காக நபியவர்கள் வழிகாட்டிய ஒரு அற்புத நடைமுறை தான் பாங்கு சொல்லுதல். ஒருவர் முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்கும் போது அந்த பாங்குகிற்குப் பதில் கூறுவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தருகிறது.
இன்றைக்கு பெரும்பாலான சகோதரர்கள் பாங்கு சொல்லும் போது அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. ஒரு மார்க்க மீட்டிங் நடக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் அதற்குப் பதில் சொல்வதற்காக இடைவெளி விடப்படுகிறது. ஆனால் அந்நேரத்தில் பாங்கிற்குப் பதில் சொல்லாமல் பெரும்பாலானவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இவை தவிர்க்கப்பட வேண்டிய அம்சங்களாகும்.
பாங்கிற்கு நாம் பதில் கூறுவது நமக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பெரும் பாக்கியமாகும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளர் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் நீங்களும் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொல்லுங்கள். பின்பு அவர், "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் நீங்களும் "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லுங்கள். பின்பு அவர், "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' என்று சொன்னால் நீங்களும் "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' என்று சொல்லுங்கள். பின்பு அவர் "ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று சொன்னால் நீங்கள் "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் "ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று சொன்னால் நீங்கள், "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்று சொல்லுங்கள். பின்பு அவர் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் நீங்களும் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொல்லுங்கள். பின்பு அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் நீங்களும் "லா இலாஹ இல்லல்லாஹ்' என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி),
நூல் முஸ்லிம் (629)
உறுதியாகச் சொன்னால் சொர்க்கமும் உறுதி
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யமன் நாட்டில் அருவிகள் கொட்டும் இடத்தில் இருந்தோம். அப்போது பிலால் (ரலி) அவர்கள் எழுந்து பாங்கு கூறினார். அவர் முடித்த போது நபி (ஸல்) அவர்கள் "யார் உள்ளத்தில் உறுதி கொண்டவராக இவர் கூறியதைப் போன்று கூறுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்'' என்று கூறினார்கள்.
நூல்: அஹ்ம்த் (8609)
பாங்கிற்குப் பிறகு ஓதும் துஆக்களின் சிறப்புகள்
பாங்கு சொன்ன பிறகு ஓதும் துஆக்களுக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இது போன்ற நல்லறங்களில் கவனமற்றவர்களாகப் பலர் இருக்கின்றனர். நாம் செய்யும் சின்ன சின்ன நல்லறங்கள் கூட மறுமையில் இறைவனின் திருப்தியையும், சுவர்க்கத்தையும் பெற்றுத்தரும். பாங்கிற்குப் பிறகு ஓதும் துஆக்களுக்கு எத்தகைய சிறப்புகளை அல்லாஹ் வழங்குகிறான் என்று பார்ப்போம்.
பாங்கிற்குப் பதிலும் படைத்தவனின் சுவர்க்கமும்
அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு)
"அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன்'
என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்).
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் (630)
ஸலவாத்தும் அற்புத ஷஃபாஅத்தும்
பாங்கிற்குப் பிறகு நாம் நபி அவர்கள் மீது ஸலவாத் ஓதினால் அல்லாஹ் நமக்குப் பத்து முறை அருள்புரிகின்றான். ஒருவன் தான் செய்த பாவத்தினால் அவன் நரகத்திற்குச் சென்றாலும் நபியவர்களின் ஷஃபாஅத்தின் மூலம் சுவர்க்கம் செல்கின்ற பாக்கியத்தை அவனுக்கு இந்த பாங்கு துஆவினால் கிடைக்கச் செய்கின்றான்.
நபி( (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது "ஸலவாத்' சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை "ஸலவாத்' சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் "வஸீலா'வைக் கேளுங்கள். "வஸீலா' என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் (628)
பாங்கினால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு
இதுவரை தொழுகைக்கு பாங்கு கூறுவதால் கிடைக்கும் பல பாக்கியங்களைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதனை மீண்டும் ஒருமுறை தொகுப்பாகக் காண்போம்.
1. பங்கு சொல்வதற்காக அல்லாஹ் வழங்கும் நன்மைகளை அறிந்தால் மக்கள் அதற்காகப் போட்டியிடுவார்கள். அப்படிப்பட்ட பெரும் நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்.
2. பாங்கு சொல்பவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
3. எவ்விடத்தில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுபவனை அல்லாஹ் நேசிக்கிறான். அவனுடைய பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை வழங்குகிறான்.
4. பாங்கு சொல்பவருக்காக, அவருடைய சப்தம் எட்டும் தொலைவில் உள்ள மனிதர்கள், ஜின்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் மறுமையில் அல்லாஹ்விடம் சாட்சி சொல்வார்கள்.
5. பாங்கு சொல்பவர்கள் மறுமையில் நீண்ட கழுத்து உடையவர்களாக அழகிய தோற்றம் பெறுவார்கள்.
6. பாங்கு சொல்பவர் பாங்கு கூறும் போது அல்லாஹ்வின் எதிரியான ஷைத்தானை விரட்டியடிக்கும் பாக்கியத்தைப் பெறுகிறார்.
7. உள்ளத்தில் உறுதிகொண்டவராக பாங்கிற்குப் பதில் கூறுபவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை கூலியாகக் கொடுக்கின்றான்
8. பாங்கு கூறிய பிறகு ஓதும் துஆவினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
9. பாங்கு கூறிய பிறகு நபியவர்கள் மீது ஸலவாத் ஓதுவதினால் நமக்கு அல்லாஹ் பத்துமுறை அருள்புரிகிறான்.
10. ஒருவன் தான் செய்த பாவத்தினால் நரகத்திற்குச் சென்றுவிட்டாலும் பாங்கிற்குப் பதில் கூறியிருந்தால் நபியவர்களின் ஷஃபாஅத்தின் மூலம் அல்லாஹ் சொர்க்கம் செல்லும் பாக்கியத்தை வழங்குகிறான்.
தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்