ஜகாத்தின் சிறப்புகள்

இரட்டிப்புக் கூலி
மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.
(அல்குர்ஆன் 30:39)

தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
(அல்குர்ஆன் 57:18)

அச்சமில்லை
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2:262)
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன்2:277)

எழுதப்படும் இறையருள்
"எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக! நாங்கள் உன்னிடம் திரும்பி விட்டோம்'' (எனவும் மூஸா பிரார்த்தித்தார்). "என் வேதனையை நான் நாடியோருக்கு அளிப்பேன். எனது அருள், எல்லாப் பொருட்களையும் விட விசாலமானது. (என்னை) அஞ்சி, ஸகாத்தும் கொடுத்து, நமது வசனங்களை நம்புகிற மக்களுக்காக அதைப் பதிவு செய்வேன்'' என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 7:156)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப் படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 9:71)
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 24:56)

சுவனத்தின் வாரிசுரிமை
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 23:1-11)

இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்தான். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். "நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும் கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களை சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்து விலகி விட்டார்'' என்று அல்லாஹ் கூறினான்.
(அல்குர்ஆன் 5:12)

உறவினருக்கு உதவுபவர் வெற்றியாளர்
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 30:38)

மன்னிப்பும் மகத்தான கூலியும்
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:45)

மறுமையில் திரும்பக் கிடைக்கும் பொருள்
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
(அல்குர்ஆன்2:110)

எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதைக் குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்34:39)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் 73:20)

நட்டமில்லாத வியாபாரம்
அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலை நாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோர் நஷ்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் அவர்களின் கூலிகளை அவன் முழுமையாக அளிப்பான். தனது அருட்கொடைகளில் அவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்.
(அல்குர்ஆன் 35:29,30)

நரகத்திலிருந்து விடுதலை
இறையச்சமுடையவர் (ந்நரகத்)திலிருந்து விலக்கப்படுவார். அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.
(அல்குர்ஆன் 92:17,18)

பொருட்களைத் தூய்மைப் படுத்தும் புனிதக் கடமை
(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 9:103)

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! என்ற (அல்குர்ஆன் 9:34) வசனம் இறங்கிய போது இது முஸ்லிம்களுக்குப் பெரும் சிரமத்தை அளிப்பதாக இருந்தது. இதை அறிந்த உமர் (ரலி), "உங்களுக்கு இந்தக் கவலையை நான் தீர்த்து வைக்கிறேன்'' என்று கூறி, (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று, "அல்லாஹ்வின் நபியே! இந்த வசனம் உங்களுடைய தோழர்களுக்கு சிரமத்தை அளிக்கிறது' என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பொருளாதாரத்தில் எஞ்சியிருக்கும் பொருளை தூய்மைப்படுத்துவற்காகவே தவிர ஜகாத்தை விதியாக்கவில்லை. (உங்களுடைய சொத்துக்கள்) உங்களுக்குப் பின்னால் உள்ளோருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் வாரிசுரிமை சட்டத்தை விதித்திருக்கிறான்'' என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத்
பல்கிப் பெருகும் தர்மம்
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:261)

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன் 2:265)
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
(அல்குர்ஆன்2:276)

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 2:245)