ஹதீஸ் எண்: 191
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நான் இறைச்சியும் ரொட்டியும் அளித்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்ய தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதில் உலூச் செய்தார்கள். பிறகு லுஹர் தொழுதார்கள். பிறகு தனது மிச்ச உணவை கொண்டு வரும்படி கூறி சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழலானார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

ஹதீஸ் எண்: 192
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் இரு செயல் முறைகளில் இறுதியானது (நெருப்பில்) சமைக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதினால் உலூ செய்யாமலிருப்பது தான்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

இது முந்தைய ஹதீஸின் சுருக்கமே என்று இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஹதீஸ் எண்: 193
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்ஹர்ஸ் பின் ஜஸ்உ (ரலி) அவர்கள் எகிப்து நாட்டில் எங்களிடம் வருகையளித்தனர். எகிப்திய பள்ளிவாயிலில் அவர்கள் ஹதீஸ் அறிவிக்கும் போது நான் செவியுற்றேன். அவர் கூறலானார்: ஒருவரது வீட்டில் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஆறேழு பேர்கள் இருந்தோம் என எண்ணுகிறேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் வந்து அவர்களை தொழுகைக்கு அழைத்தார்கள். உடனே நாங்கள் புறப்பட்டு சட்டியை நெருப்பில் (அடுப்பில்) வைத்திருந்த ஒருவருக்கருகில் சென்றோம். அவரிடம் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உனது சமையல் ஆகிவிட்டதா? என்று வினவினார்கள். அவர் ஆம்! எனது தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்! என்று பதிலளித்தார். அதிலிருந்து அவர்கள் ஒரு துண்டை எடுத்து அதை தொழுகைக்கு அவர்கள் தக்பீர் கட்டும் வரை மெண்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களையே உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அறிவிப்பவர்: உபைத் பின் சுமாமா அல்முராதீ அவர்கள்.

பாடம்: 76 சமைத்ததை சாப்பிட்டால் உலூச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துதல்

ஹதீஸ் எண்: 194
நெருப்பில் சமைத்த(தை சாப்பிடுவ)தினால் உலூச் செய்வது அவசியமாகும் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ் எண்: 195
அபூசுப்யான் பின் சயீத் பின் அல்முகீரா அவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவரை உம்முஹபீபா (ரலி) அவர்கள் (மாவு கலந்த) பானத்தை அருந்தச் செய்தனர். அவர் (பருகியதும்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாய்க் கொப்பளித்தார்கள். அப்போது உம்முஹபீபா (ரலி) அவர்கள் 'எனது சகோதரியின் மகனே! நீ உலூச் செய்ய வேண்டாமா? அண்ணல் நபி (ஸல்) அவர்கள், நெருப்பில் சமைத்த பொருள் உண்பதினால் உலூச் செய்யுங்கள் என்று சொன்னார்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலாமா (ரலி) அவர்கள்.

பாடம்: 77 பால் பருகியதும் உலூச் செய்தல்

ஹதீஸ் எண்: 196
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பால் பருகினார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச்செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு இது கொழுப்பு அடங்கியது என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.

பாடம்: 78 பால் பருகியதும் உலூச் செய்யாமலிருக்க அனுமதி

ஹதீஸ் எண்: 197
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் பால் பருகினார்கள். ஆனால் வாய்க் கொப்பளிக்காமலும், உலூச் செய்யாமலும் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்.

இதன் அறிவிப்பாளர்களின் ஒருவரான ஜைத் அல்ஹப்பாப் என்பார் தனக்கு அறிவித்த அறிவிப்பாளர் முதீபின் ராஷித் என்பாரை பற்றி பின்வருமாறு கூறுகிறார்: 'எனக்கு இந்த அறிவிப்பாளரை அறிமுகப்படுத்தியவர் ஷுஃபா ஆவார்.

பாடம்: 79 இரத்தம் வெளிப்படுவதால் உலூ நீங்குமா?

ஹதீஸ் எண்: 198
'தாத ரிகாஃ' என்ற போரின் போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றோம். (எங்கள் தோழர்களில்) ஒருவர் இணை வைப்பாளர்களின் ஒருவனின் மனைவியை கொன்று விட்டார். அவளது கணவன் முஹம்மதுடைய தோழர்களில் எவரையேனும் கொல்லாமல் ஓயப்போவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டான். எனவே அவன் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடிச்சுவற்றை தொடரலானான். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் தங்கலானார்கள். அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நம்மை காவல் புரிபவர்கள் யார்? என வினவினார்கள். முஹாஜிரீன்களில் ஒருவரும் அன்சாரிகளில் ஒருவரும் பதிலளித்ததும் நீங்கள் இருவரும் கணவாயின் வாயிலில் (காவல்) இருந்து கொள்ளுங்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவ்விருவரும் கணவாயின் வாயிலுக்கு சென்றதும் முஹாஜிரித் தோழர் படுத்துக் கொண்டார். அன்சாரித் தோழர் தொழத் துவங்கினார். (சபதம் செய்த அம்மனிதன் வந்து விட்டான் அவன் (தொழுகின்ற) அவரின் தோற்றத்தை கண்டதும் அவர் அக்கூட்டத்தின் காவலாளர் என்று விளங்கிக் கொண்டான். அவரை நோக்கி அவன் அம்பெய்தான். அதை அவர் மேல் (குறி தவறாது) விழச் செய்தான். அதை அவர் கழற்றி விட்டார். இவ்வாறு அவன் மூன்று அம்புகளை அவரை நோக்கி எறியும் வரை (அவர் அவற்றை கழற்றி விட்டார்) பிறகு ருகூஃ செய்து சஜ்தா செய்தார். பிறகு அவரது தோழர் தூங்கி எழுந்தார். அவர்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்று (எதிரி) அவன் புரிந்து கொண்டதும் பயந்தோடி விட்டான். அன்சாரித் தொழரின் இரத்தக் காட்சியை முஹாஜிர் தோழர் கண்ட போது 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூய்மையானவன்) அவன் அம்பெய்த ஆரம்பத்திலேயே என்னை எழுப்பியிருக்கக் கூடாதா என்று வினவினார். அதற்கு அவர் நான் ஓதிக் கொண்டிருந்த சூராவில் (அத்தியாயத்தில்) ஆழ்ந்து விட்டேன். அதை நான் துண்டிக்க விரும்பவில்லை என்று அவர் பதில் சொன்னார்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள்.

பாடம்: 80 உறங்குவதால் உலூ நீங்குமா?

ஹதீஸ் எண்: 199
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) ஓர் இரவில் (ஒரு முக்கிய பணியில்) முழு ஈடுபாடாக இருந்து விட்டார்கள். இதனால் அவர்கள் இஷாவை பிற்படுத்தி விட்டார்கள். எந்த அளவுக்கெனில் பள்ளியில் நாங்கள் உறங்கினோம். பிறகு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகையுற்று, 'உங்களைத் தவிர யாரும் தொழுகைக்காக காத்திருப்பவர்கள் யாருமில்லை' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 200
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இஷாவை (உறக்கத்தினால்) தங்களது தலைகள் சரிந்து விழும் அளவிற்கு எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர்கள் உலூச் செய்யாமலேயே தொழுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்:
'அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் (இஷா தொழுகையை எதிர்பார்த்து) தலைகள் சரிந்து விழும் வரை தூங்கிக் கொண்டிருப்போம்' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக கதாதா அவர்கள் கூடுதலாக அறிவிக்கிறார்.

இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்:
இதை இப்னு அபீ அரூபா என்பவர் கதாதா அவர்களிடமிருந்து வேறொரு உரைநடையில் அறிவிக்கின்றார்.