ஹதீஸ் எண்: 341
ஜும்ஆ தினத்தன்று குளிப்பது வயது வந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 342
வயது வந்த ஒவ்வொருவருக்கும் ஜும்ஆவிற்கு செல்வது கடமையாகும். ஜும்ஆவிற்கு செல்லும் ஒவ்வொருவரின் மீதும் குளிப்பு கடமையாகும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹப்ஸா (ரலி) அவர்கள்.

ஜும்ஆவின் பஜ்ர் நேரம் உதயமான பிறகு ஒருவர் குளித்து விட்டால் அது ஜும்ஆ குளிப்பிற்கு போதுமானதே! அவரது குளிப்பு கடமையான குளிப்பாக இருந்தாலும் சரியே! என்று இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஹதீஸ் எண்: 343
ஒருவர் ஜும்ஆ தினத்தன்று குளித்து, தனது ஆடைகளில் நல்லதை அணிந்து அவரிடம் வாசனை திரவியம் இருக்குமானால் அதையும் பூசிக் கொண்டு ஜும்ஆவிற்கு வருகின்றார். மக்களை தாண்டிச் செல்லாமல் தன் மீது அல்லாஹ் கடமையாக்கியதை தொழுகின்றார். இவரது தொழுகை முடிந்து இமாம் வெளியாகும் வரை (யாருடனும் பேசாது) மௌனமாக இருந்தாரென்றால் இவரது இந்த நற்செயல்கள் இந்த ஜும்ஆவிற்கும் முந்தைய ஜும்ஆவிற்கும் இடையில் ஏற்பட்டு விட்ட பாவங்களுக்கு பரிகாரமாகி விடுகின்றன என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்கள்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர்.

(ஜும்ஆவிலிருந்து ஜும்ஆ வரை ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் கால அளவில்) மூன்று நாட்களை அதிகமாக்கி (பத்து நாட்கள் என்றும்)யும் ஒரு நன்மை செய்யும் போது அதற்கு பதிலாக அது போன்று பத்து நன்மைகள் கிடைக்கும் என்றும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (இணைத்து) கூறியதாக முஹம்மது பின் ஸலமா கூறுகின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
(ஹம்மாத், முஹம்மது பின் ஸலமா ஆகிய இருவரும் இணைந்து அறிவிக்கும் இத்தொடரில்) முஹம்மது பின் ஸலமா அறிவிக்கும் ஹதீஸ் நிறைவானதாகும். அபூஹுரைரா (ரலி) அவர்களின் கருத்தை ஹம்மாத் அவர்கள் தனது அறிவிப்பில் கூறவில்லை.

மூன்று நாட்கள் என்பதை இடையில் இடம்பெறச் செய்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூசாலிஹ் வழியாக முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

ஹதீஸ் எண்: 344
குளிப்பதும், பல்துலக்குவதும் ஜும்ஆ தினத்தில் வயது வந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். தன்னால் முடிந்தவரை (முயன்று) நறுமணத்தை பூசிக் கொள்ளல் வேண்டும்.

அறிவிப்பாளர்: தம் தந்தை வழியாக அபூசயீத் அல்குத்ரீ வழியாக அப்துற்றஹ்மான்.

(இத்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்களான) புகைர் என்பார் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களுக்கும் அம்ர் பின் சுலைம் அவர்களுக்கும் இடையில் உள்ள (அபூசயீத் அல்குத்ரீ அவர்களின் மகனான) அப்துற்றஹ்மான் என்ற அறிவிப்பாளரை தனது தொடரில் குறிப்பிடவில்லை.

'(தன்) மனைவியிடமிருந்தேனும் நறுமணத்தை வாங்கி பூசிக் கொள்ள வேண்டும்' என்று நறுமணம் தொடர்பாக புகைர் அறிவிக்கின்றார்.

(இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீயிலும் இடம் பெறுகின்றது. இது போன்ற ஹதீஸை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக அம்ர் பின் சுலைம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 345
ஒருவர் ஜும்ஆ நாளன்று குளித்து, முதல் நேரத்திலேயே புறப்பட்டுச் சென்று (குத்பா) ஆரம்ப சொற்பொழிவையும் பெற்று விடுகின்றார். வாகனத்தில் செல்லாது நடந்தே செல்கின்றார். இமாமுக்கு அருகில் சென்று (குத்பாவின் போது தடுக்கப்பட்டவற்றை செய்யாது) சொற்பொழிவை வீணாக்காமல் செவிமடுக்கின்றார் எனில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு வருடம் நோன்பு நோற்ற, நின்று தொழுத வணக்கத்தின் கூலி கிடைக்கும் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன்.

அறிவிப்பாளர்: அவ்ஸ் பின் அவ்ஸ் அஸ்ஸகபீ (ரலி) அவர்கள்.

(கஸ்ல வக்தஸல என்று இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ளது. கஸ்ஸல வக்தஸல என்றும் இதை வாசிக்கலாம்.

1. கஸல வக்தஸல - கழுவி, குளித்தார்
2. கஸ்ஸல வக்தஸல - (தனது மனைவியை) குளிக்கச் செய்து (தானும்) குளித்தார் என்றும் இதற்கு இருவிதமாக பொருள் கொள்வோர் உண்டு.

அரபி மூலத்தில் இரண்டு பொருட்களை தரும் இரு வார்த்தைகள் இடம் பெற்றிருந்தாலும் 'குளித்தார்' என்பதை தவிர இதற்கு வேறு தனி அர்த்தமில்லை என்று கூறுவோரும் உண்டு. இந்த இரண்டாவது அணியினரின் கருத்துப்படியே இந்த ஹதீஸின் மொழியாக்கம் ஆகியுள்ளது. ஹதீஸ் எண் - 348 ல் அதன் தொடர்பான செய்தி வருவதாலேயே இங்கே இந்த விளக்கம்.)

(இந்த ஹதீஸ் திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)

ஹதீஸ் எண்: 346
இங்கு மேலுள்ள ஹதீஸைப் போன்று இடம் பெற்றுள்ளது.

ஹதீஸ் எண்: 347
ஜும்ஆ நாளன்று ஒருவர் குளித்து, தனது மனைவியிடத்தில் வாசனை திரவியம் இருக்குமானால் அவ்வாசனை திரவியத்தை பூசிக் கொள்கின்றார். தனது ஆடைகளில் நல்லதை அணிகின்றார். (பள்ளியில் நுழைந்ததும்) மக்களை தாண்டவுமில்லை. சொற்பொழிவு நடக்கும் போது அச்சொற்பொழிவை வீணாக்கவுமில்லை என்றால், (இவரது இந்த நற்செயல்கள்) இரண்டு ஜும்ஆக்களுக்கு இடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகி விடுகின்றன. எவர் சொற்பொழிவை வீணடித்து மக்களை தாண்டிச் சென்று விடுகின்றாரோ அவருக்கு (அந்த ஜும்ஆ) லுஹர் தொழுகையாக ஆகி விடுகின்றது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 348
ஜனாபத், ஜும்ஆ நாள், இரத்தம் குத்தி எடுத்தல், மய்யித்தை குளிப்பாட்டுதல் ஆகிய நான்கு காரியங்களுக்காக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள்.

ஹதீஸ் எண்: 349
கஸல வக்தஸல என்ற இந்த சொல்லை பற்றி மக்ஹுல் என்பாரிடம் கேட்டேன். தனது தலையையும் உடலையும் கழுவினர் (குளித்தார்) என்று பொருள் செய்தார்.

அறிவிப்பவர்: அலி பின் ஹவ்ஷப்.

ஹதீஸ் எண்: 350
தனது தலையையும் கழுவி, உடலையும் கழுவினார் என்று கஸல வக்தஸலவுக்கு சயீத் என்பார் விளக்கம் அளிக்கின்றார்.