கடமை மறந்த கூலிக்காரர்
ஷைகு அபூ அப்தில்லாஹ் ஜலாவு (ரஹ்) என்பவர்கள் கூறுவதாவது: ஒரு நாள் என்னுடைய தாயார், என் தந்தையாரிடம் மீன் வாங்கி வரும்படியாகக் கூறினார். என் தந்தை கடைத்தெருவிற்குச் சென்றார்கள். நானும் அன்னாருடன் சென்றிருந்தேன். அங்கு மீனை வாங்கி அதனை வீட்டுக்குக் கொண்டுவர ஒரு கூலிக்காரரைத் தேடினார்கள். அப்பொழுது எங்களுக்கருகில் நின்றிருந்த ஒரு வாலிபர், “பெரியவரே இதனைத் தூக்கி வர கூலியாள் வேண்டுமா?” என்று கேட்டார். ஆம் என்று என் தந்தை பதில் கூறியதும் அவர் அதனை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு எங்களுடன் நடந்து வந்தார்.
சென்று கொண்டிருக்கும் போது வழியில் பாங்கு சப்தம் கேட்டதும் அந்த வாலிபர், “நான் உளுச் செய்ய வேண்டிதிருக்கிறது. உளுச் செய்து தொழுத பின்னர்தான் இதனை எடுத்து வர முடியும். உங்களுக்கு விரும்பமிருந்தால் சற்று நேரம் காத்திருங்கள் இல்லையானால் தங்களுடைய மீனை எடுத்துச் செல்லலாம். என்று கூறி மீனை வைத்துவிட்டுச் சென்று விட்டார்.”
ஒரு கூலிக்காரப் பையன் இவ்வளவு பக்தியுடன் இருக்கும் பொழுது, நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு இவரை விட மிக மிகத்தகுதியுள்ளவர்கள் என்பதாக என் தந்தையார் எண்ணியவராக அந்த மீன் கூடையை அங்கேயே வைத்துவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்று விட்டார்கள். நாங்கள் தொழுகையை முடித்து திரும்பி வந்தபோது அந்த மீன் அங்கேயே அப்படியே இருந்தது. அந்த வாலிபர் அதனைத் தூக்கி எங்களுடைய வீட்டில் கொண்டு வந்து விட்டார்.
வீட்டுக்குச் சென்று தந்தை இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியை என் தாயாரிடம் கூறினார். அதற்கு என் தாயார், “அவரை இருக்கச் சொல்லுங்கள். அவரும் மீன் சாப்பிட்டுச் செல்லட்டும்” என்று கூறினார். இதனை அவ்வாலிபரிடம் கூறியதும், “நான் நோன்பு வைத்திருக்கிறேன்” என்றார் அவர். சரி மாலையிலாவது இங்கு வந்து நோன்பு திறக்க வேண்டும் என்று என் தந்தையார் வற்புறுத்திக் கூறியதும், “நான் போய்விட்டுத்திரும்பி வர முடியாது. வேண்டுமானால் இங்கு அருகிலுள்ள மஸ்ஜிதில் தங்கி இருக்கிறேன். மாலையில் உங்களுடைய விருந்தைச் சாப்பிட்டுச் செல்கிறேன்” என்று கூறிவிட்டு அருகிலுள்ள மஸ்ஜித்துக்கு சென்று விட்டார்.
மாலை நேரமானதும் மஃரிபிற்குப் பின் அவர் வந்தார். சாப்பிட்டு முடித்த பின் அவர் இரவில் தங்குவதற்காக தனிமையான ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் அவர் தங்கினார். எங்களுக்குப் பக்கத்து வீட்டில் நடக்க முடியாத சப்பாணிப் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் மறுநாள் முற்றிலும் சுகம் உடையவளாக - நன்கு நடக்கக் கூடியவளாக இருப்பதைப் பார்த்தோம். நாங்கள் அவளிடம் ~உனக்கு எப்படிச் சுகம் ஏற்பட்டது என்று கேட்டதற்கு உங்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளியின் பொருட்டால் நான் அல்லாஹ்விடம் துஆ கேட்டேன். “யா அல்லாஹ் இந்த விருந்தாளியின் பரக்கத்தால் எனக்கு சுகமளிப்பாயாக என்று கேட்டதும் உடனே எனக்குச் சுகம் ஏற்பட்டு விட்டது” என்று அப்பெண் கூறினாள். பிறகு நாங்கள் அவ்வாலிபர் தனிமையில் இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது கதவு மூடியே இருந்தது. ஆனால் அவரை அங்கு காணவில்லை. எங்கு சென்றால் என்றே தெரியவில்லை
இந்தக்கதை மேற்படி நூலில் 124 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. கூலியாள் வேண்டுமா என்று இவ்வாலிபர் வந்து கேட்கிறார். மீனைத்தூக்கி வருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டவர் இடையிலேயே ஒப்பந்தத்தை முறிக்கிறார். இப்படி நடக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கவில்லை. கூலிக்கு வேலை கேட்கும் போதே அவர் யோசித்திருக்க வேண்டும். அல்லது பாங்கு சப்தம் கேட்கும் வரை நான் தூக்கி வருவேன் என்ற அவர் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். ஆனால் இவர் இடையில் கழுத்தறுக்கிறார். இத்தகைய ஒப்பந்தத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாங்கோசை கேட்டவுடன் ஒப்புக் கொண்ட வேலையைக் கூட உதறிய இந்த வாலிபர் மஃரிபுக்குப் பின் சாப்பிட்டுவிட்டு தனியறைக்குச் சென்று விட்டதாக இந்தக் கதை கூறுகிறது. இவ்வளவு பேணுதலுள்ளவர் இஷா ஜமாஅத்துக்காக ஏன் புறப்படவில்லை? இந்தக் கதை பொய்யாகப் புனையப்பட்டது என்பதை இந்த முரண்பாடு காட்டிக் கொடுத்து விடுகின்றது. தொழுகையின் சிறப்பைச் சொல்லும் சாக்கில் ஸகரியா சாஹிப் தூவுகின்ற விஷக்கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எவரது பொருட்டாலும் இறைவனிடம் எதையும் கேட்கலாகாது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கொள்ளை. ஒவ்வொருவரும் தத்தமது நல்லறங்களின் பொருட்டாலேயே இறைவனிடம் உதவி தேட வேண்டும். ஸகரியா சாஹிப் பின்பற்றுகின்ற இமாம் அபூஹனீபா அவர்கள் கூட இதை மிகவும் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.
இதற்கு மாற்றமாக அந்த வாலிபரின் பொருட்டால் அப்பெண்மணி குணமடைந்தாள் என்று கதை விடுகிறார். தனது இமாமுடைய போதனைக்கு மாற்றமாகவும் இவர் கதையளந்திருப்பது இது போன்ற மரியாதையை மற்றவர்களிடமிருந்து பெறுவதற்கே. நல்லடியார்களை ஷைகுமார்களை மக்கள் இவ்வளவு உயரத்தில் வைத்துப் போற்ற வேண்டும் என்ற போதனை தான் இந்தக்கதையின் முக்கிய அம்சமாக உள்ளது.
கடமை மறந்த கூலிக்காரர்
Labels:
தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில்