ஸூரத்துல் இக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு

'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு.

அபூ ஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். ஒருவர்'குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார்.

அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ''என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்'' என்று கூறினார்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள்.

அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.



ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து,

அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', 'குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள்.

பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள்.

முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.