அல்லாஹ் தடுத்துள்ளவைகளில் முதன்மையானது ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெரும் பாவச் செயலாகும்.
பெரும் பாவங்களிலேயே மிகப்பெரிய பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! ஆம், கூறுங்கள்! என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.. என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மன்னித்துவிடலாம். ஆனால் இணைவைத்தலை மட்டும் மன்னிக்கவேமாட்டான். ஏனெனில் இதற்கு மட்டும் பிரத்தியேகமாக பாவமீட்சி பெறவேண்டியுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)
ஷிர்க் -அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்- எனும் பெரும்பாவம் முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும். இணைவைக்கும் கொள்கையுடம் இறந்து விட்டவன் நிரந்தர நரகத்திற்குரியவனாவான்.