சாப்பிடுவதின் ஒழுக்கங்கள்

தூய்மையான உணவுப் பொருட்களைத் தான் சாப்பிட வேண்டும்


நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!
(அல் குர்ஆன் 2:172)

சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 256

பிஸ்மில்லாஹ் என்று கூறி, அருகில் இருப்பதிலிருந்து சாப்பிட வேண்டும்

உமர் பின் அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது "நான் நபி (ஸல்) அவர்கள் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அளாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "சிறுவனே! (பிஸ்மில்லாஹ் என்று) அல்லாஹ்வின் பெயரைச் சொல்! உன் வலக் கரத்தால் சாப்பிடு! உனது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு'' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

நூல்: புகாரி 5376

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிஸ்மில்லாஹ்'' கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம்4105

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி'' என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 1781

பொருள்: ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்.

இடது கையால் சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் சாப்பிடும் போது தனது வலக்கரத்தால் சாப்பிடட்டும். குடிக்கும் போதும் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும். ஷைத்தான் தனது இடக்கரத்தால் சாப்பிடுகிறான். தனது இடக்கரத்தால் குடிக்கின்றான்''

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4108

உணவுப் பொருள் கீழே விழுந்தால் பேணவேண்டிய முறை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவருக்கு கவள வாய் உணவு கீழே விழுந்து விட்டால் அதில் பட்ட அசுத்தங்களை நீக்கி விட்டு அவர் அதை சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்காக (வீணாக) விட்டு விட வேண்டாம்''

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்4138

சாய்ந்து கொண்டு சாப்பிடுதல்

நபி (ஸல்) அவர்கள், "(ஆணவத்தை வெளிப்படுத்துவது போல்) நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல்: புகாரி 5398, முஸ்லிம் 4122

நின்று கொண்டு குடிப்பது கூடாது

நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதைத் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4115

நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்

நபி (ஸல்) அவர்கள "ஸம் ஸம்'' தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5617

அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: "மக்களில் சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்''
நூல்: புகாரி 5615

பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்''

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல்: புகாரி 153

சாப்பிட்ட பின் விரல்களை சூப்புவதும் அனைத்தையும் சாப்பிடுவதும்

(உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களை சூப்புமாறும், தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும் உணவின் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4136

பால் அருந்திய பின் வாய்கொப்பளித்தல்

நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்பளித்தார்கள். பிறகு "அதிலே கொழுப்பு இருக்கிறது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 211

குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில் அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது''

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3320

சாப்பிட்டு முடித்த பின் ஓத வேண்டிய துஆ

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) உணவு விரிப்பை எடுக்கும் போது "அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா'' (அதிகமான தூய்மையான வளமிக்க எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்) என்ற துஆவைக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: புகாரி 5458

உணவோ குடிபானமோ பரிமாறும் போது முதலில் வலது புறம் உள்ளவருக்குத் தான் கொடுக்க வேண்டும்

நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர். நபியவர்கள் (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்து விட்டு "வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5612

வலது புறத்தில் உள்ளவர் அனுமதி கொடுத்தால் இடது புறத்தில் உள்ளவருக்கு முதலில் கொடுக்கலாம்

நபி (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவனிடம் "(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதி தருவாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவன் "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்'' என்று பதில் கூறினார். உடனே நபியவர்கள் அதை அச்சிறுவனின் கையில் வைத்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)
நூல்: புகாரி 5620

ஒருவரது உணவு இருவருக்குப் போதும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(கூட்டாகச் சாப்பிடும் போது) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாகும். நான்கு நபர்களுடைய உணவு எட்டு நபர்களுக்குப் போதுமானதாகும்''

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4182

கூட்டாகச் சாப்பிட அனுமதிக்கப்பட்டவர்களும் இடங்களும்

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
அல்குர்ஆன் 24:61

அடுத்தவருக்குக் கொடுக்காமல் சாப்பிடக் கூடாது

(தன்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்) தனது சகோதரரிடம் அனுமதி பெற்றாரே தவிர, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2455

சமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்''

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5460

பசிக்கும் போது உணவுக்கே முன்னுரிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவு நேர உணவு வைக்கப்பட்டு தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப்படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்''

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 671

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது''

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 969

உணவைக் குறை கூறுதல் கூடாது

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபியவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.

நூல்: புகாரி 3563

உணவை வீண் விரையம் செய்வது கூடாது

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 7:31

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 17:27

பொறுப்பாளி இறுதியில் தான் சாப்பிட வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு கூட்டத்தாருக்கு (குடிபானத்தை) பங்கிட்டுக் கொடுக்கக் கூடியவர் அவர்களில் இறுதியாக குடிக்கக் கூடியவராவார்''

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 1213, திர்மிதி 1816

மதுபானங்கள் மற்றும் போதைப் தரக்கூடிய பொருட்களை சாப்பிடுவது கூடாது

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல் குர்ஆன் 5:90, 91

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "போதை தரக்கூடிய ஒவ்வொரு பொருளும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்''

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி 6124


பிற மதத்தவரின் ஹோட்டலில் சாப்பிடலாமா?

? அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத எந்த மாமிசத்தையும் உண்ணக் கூடாது. அப்படியானால் மாற்று மதத்தவர்களின் ஹோட்டலில் சாப்பிடுவது கூடுமா?

அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். (அல்குர்ஆன் 6:121)

"அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது'' என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மாற்று மத ஹோட்டலில் மட்டுமல்ல; முஸ்லிம் ஹோட்டலாக இருந்தாலும் அங்கு அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத இறைச்சி பயன்படுத்தப் படுமானால் அவற்றை உண்ணக் கூடாது.

அதே சமயம் மாற்று மதத்தினர் நடத்தும் ஹோட்டல்கள் சிலவற்றில் முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்கி அதைச் சமைக்கின்றனர். அல்லது முஸ்லிம்களை அழைத்து ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுக்குமாறு கூறி அவற்றிலிருந்து உணவு தயாரிக்கின்றனர். எனவே இவ்வாறு முஸ்லிம்கள் மூலம் அறுப்பது தெளிவாகத் தெரிந்தால் அந்த ஹோட்டல்களில் இறைச்சி உண்பது தடையில்லை. அவ்வாறு உறுதியாகத் தெரியாத பட்சத்தில், சந்தேகத்திற்கு இடமானதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு இறைச்சி உண்ணக் கூடாது.

பிஸ்மில்லாஹ் கூறி அறுக்க வேண்டும் என்று சொல்லும் போது, பிஸ்மில்லாஹ் சொல்லி யார் அறுத்தாலும் அதை உண்ணலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

பிஸ்மில்லாஹ் என்பதை வெறும் சடங்குக்காக, மந்திரச் சொல்லாகக் கூறக் கூடாது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை எந்தச் செயலாக இருந்தாலும் அது உளப்பூர்வமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் என்றால் யார்? அவனது ஆற்றல் என்ன? என்பதையெல்லாம் விளங்கியவர்கள் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அறுப்பதையே இது எடுத்துக் கொள்ளும்.

உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை இல்லாமல் வெறும் மந்திர வார்த்தையாக பிஸ்மில்லாஹ் கூறி அறுத்தால் அதையும் சாப்பிடக் கூடாது.

பித்அத்தான விருந்துணவு வீட்டிற்கு வந்தால் சாப்பிடலாமா?

? வரதட்சணை மற்றும் பித்அத்தான திருமணங்கள் நடைபெறும் வீடுகளிலிருந்து நமது வீட்டிற்கு உணவு வந்தால் சாப்பிடலாம் என்று எழுதி இருந்தீர்கள். இதே அடிப்படையில் பெண் பிள்ளை சடங்கு, கத்னா, திருமண நாள், வளை காப்பு என பித்அத் செய்யும் வீடுகளிலிருந்து நமது வீட்டுக்கு வரும் உணவை (பூஜிக்கப்படாத நிலையில்) சாப்பிடலாமா? விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது எனும் போது அந்த உணவு வீட்டுக்கு வந்தாலும் சாப்பிடக் கூடாது என்று தானே கூற வேண்டும்?

ஒரு உணவைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் கூற வேண்டும். அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ ஹராமாக்காத ஒன்றை நாமாக ஹராம் என்று கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

விருந்துக்கு அழைக்கப்படும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெற்றால் அந்த விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்றோம். இது அந்த விருந்தில் வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல! அந்த நிகழ்ச்சி மார்க்கத்திற்கு முரணாக இருப்பதால் அங்கு செல்வது தடுக்கப்பட்டது என்ற அடிப்படையில் தான் இவ்வாறு கூறுகிறோம். இதையும் நாம் சுயமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியுள்ளார்கள்.

நான் உணவைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் இருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: இப்னுமாஜா (3360)

தீமை நடக்கும் ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது என்பதால் அங்கு வழங்கப்படும் உணவு ஹராமாகி விடாது. ஒரு இடத்தில் பன்றி இறைச்சி அல்லது பூஜை செய்யப்பட்ட உணவுகளைக் கொண்டு விருந்து வழங்கப்படுகின்றது என்றால் அந்த உணவே தடுக்கப்பட்ட உணவாகும்.

ஆனால் வரதட்சணை, கத்னா, வளைகாப்பு போன்ற தீமைகள் நடக்கும் இடங்களில் இது போன்ற ஹராமான உணவு வகைகள் வழங்கப் படுவதில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது அங்கு உருவப்படங்கள் இருந்ததால் திரும்பிச் சென்றார்கள். இந்த அடிப்படையில் வரதட்சணை, சடங்கு, கத்னா போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லக் கூடாது; அங்கு நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறோம்.

ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளிலிருந்து உணவுப் பொருள் வரும் போது அதை உண்ணக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அல்லாஹ் ஹலாலாக்கிய உணவை நாம் ஹராமாக்கிக் கொள்வது போன்றாகி விடும். எனவே தான் இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்குத் தடையில்லை என்று கூறுகிறோம்.

அதே சமயம், இது போன்ற உணவுகளைத் தருபவர்களிடம் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் தீமை பற்றி மார்க்க அடிப்படையில் விளக்குவது நமது கடமையாகும்.

"பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரண பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும்' என்ற பிற மத மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மவ்லிது, பாத்திஹா ஓதப்பட்ட பின் சாதாரண உணவும் "தபர்ருக்' (பிரசாதம்) என்று கருதப்படுவதால் அவ்வாறான உணவுகள் ஹராமாகும். அந்த உணவுகளை வீட்டுக்குக் கொடுத்து விட்டாலும் உண்ணக்கூடாது.

பிற மதத்தவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாமா?

? நான் சவூதி அரேபியாவில் பணி புரிந்து வருகிறேன். இங்கு பல முஸ்லிம் நண்பர்களுடனும், முஸ்லி மல்லாத நண்பர்களுடனும் ஒரே அறையில் தங்கி, ஒன்றாக இணைந்து சாப்பிடும் சூழ்நிலை இருக்கிறது. நான் இந்து நண்பருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கண்ட சிலர் இதை ஹராம் என்று சொல்கிறார்கள். வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா?

வேதக்காரர்களுடனோ, அல்லது மற்ற மதத்தினருடனோ ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைத் தடை செய்யும் எந்த ஆதாரமும் குர்ஆன், ஹதீஸில் இல்லை.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப் பெற்ற ஒரு சமுதாயத்தவரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா? மேலும் வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் இருக்கிறோம். நான் எனது வில்லிலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட எனது நாயையும் ஏவி வேட்டையாடுவேன். (இவற்றில்) எது எனக்கு ஆகுமானதாகும்?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேதக்காரர்களின் விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரம் அல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவி விட்டு அவர்களின் பாத்திரத்தில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை நீங்கள் அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் சாப்பிடுங்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா அல்ஹுசனிய்யி (ர-)
நூல்: புகாரி 5478, 5488

இந்த ஹதீஸில் வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிட வேண்டாம் என்று கூறப்படுவதை வைத்து, "மாற்று மதத்தவர்களுடன் சாப்பிடக்கூடாது' என்று உங்கள் நண்பர்கள் கூறியிருக்கலாம். ஆனால் இந்த ஹதீஸ் அந்தக் கருத்தைக் கூறவில்லை.

"வேறு பாத்திரம் இருந்தால் வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிட வேண்டாம்' என்று இந்த ஹதீஸ் பொதுவாகக் கூறினாலும், அபூதாவூதில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதற்கான காரணம் இடம் பெற்றுள்ளது.

"நாங்கள் வேதக்காரர்களைக் கடந்து செல்கிறோம். அவர்கள் தங்களுடைய பாத்திரத்தில் பன்றி இறைச்சியைச் சமைக்கிறார்கள். தங்களது பாத்திரத்தில் மதுவையும் குடிக்கிறார்கள்'' என்று அபூஸஃலபா அல் ஹுஸனிய்யி (ரலி) கேட்டார். "அதுவல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அதிலேயே நீங்கள் சாப்பிடுங்கள்; குடியுங்கள். வேறு பாத்திரம் இல்லாவிட்டால் அதை நீங்கள் தண்ணீரால் கழுவி அதில் சாப்பிடுங்கள்; குடியுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா (ர-)
நூல்: அபூதாவூத் 3342

முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களான பன்றி இறைச்சியையும், மதுவையும் வேதக்காரர்கள் சாப்பிடுவதைக் குறிப்பிட்டு நபித்தோழர் கேட்கும் போது தான் நபி (ஸல்) அவர்கள் இந்தப் பதிலை அளிக்கிறார்கள். எனவே இது பொதுவான தடை அல்ல என்பதை விளங்கலாம். தடுக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டால் அந்தப் பாத்திரத்தை நாம் பயன்படுத்தக் கூடாது; வேறு பாத்திரம் இல்லாவிட்டால் அதைக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி முஸ்லிமல்லாதவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்குத் தடையேதும் இல்லை.

அஜினா மோட்டா கலந்த உணவை சாப்பிடலாமா?

? அஜினா மோட்டா என்ற ஒரு பொருள் குழம்பின் சுவை சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. அதைக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன?

அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.

இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் அஜினா மோட்டா சேர்ப்பது சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 51 வகையான உணவுப் பொருட்களில் அஜினாமோட்டா சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 2:195)

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

இந்த வசனங்களின் அடிப்படையில், மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் பொருள் என்று நிரூபணமானால் அதை உண்ணக் கூடாது. அஜினாமோட்டா உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதால் கண்டிப்பாக அதை உணவில் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

இறந்தவர் வீட்டில் விருந்து வைக்கலாமா?

? ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது; எனவே 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?

இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாக எந்த ஹதீசும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவுக்குச் சென்றிருந்தோம். அப்போது அவர்கள் கப்ருக்கருகில் இருந்து கொண்டு, "இறந்தவரின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் விசாலமாக்கிக் கொள்'' என்று தோண்டக் கூடியவரிடம் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். உணவு கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை அதில் வைத்தார்கள். மக்களும் வைத்தார்கள்; சாப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கவள உணவைத் தமது வாயில் மெல்லுவதை எங்களுடைய பெற்றோர் பார்த்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், "உரியவரின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை நான் சாப்பிடுகிறேன்'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! எனக்காக ஓர் ஆடு வாங்கி வரும்படி பகீஃ (சந்தை)க்கு ஆளனுப்பினேன். எனக்கு ஆடு கிடைக்கவில்லை. எனது அண்டை வீட்டுக்காரர் ஓர் ஆடு வாங்கியிருந்தார். அதன் கிரையத்தைப் பெற்று ஆட்டைத் தாருங்கள் என்று அவரிடம் ஆளனுப்பினேன். அவர் (வீட்டில்) இல்லை. அதனால் அவரது மனைவியிடம் கேட்டு ஆளனுப்பினேன். அவர் அந்த ஆட்டை அனுப்பி வைத்தார்'' என்று அந்தப் பெண் பதில் சொல்லி அனுப்பினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அதை கைதிகளுக்குச் சாப்பிடக் கொடு'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்சாரியைச் சேர்ந்த ஒரு மனிதர்
நூல்: அபூதாவூத் 2899, அஹ்மத் 21471, பைஹகீ, தாரகுத்னீ

இந்த ஹதீஸில் ஒரு பெண் உணவு கொடுத்து அனுப்பினாள் என்று கூறப்படுகின்றது. அந்தப் பெண் இறந்தவரின் மனைவி தான் என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் இறந்த வீட்டில் சாப்பிட்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்பிய பெண், இறந்தவரின் மனைவி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இறந்தவரின் வீட்டிற்குச் சென்று நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்றும் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை.

எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்று கூறுவது அபாண்டமாகும். ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும் 3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்று ஓதுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? இது போன்று சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் கூறுவதிலிருந்தே இவை பித்அத் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பூஜை செய்தவற்றை சாப்பிடலாமா?

? எங்கள் (அரசு) அலுவலகத்தில் மாதந்தோறும் ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாமி போட்டோ வைத்து, பூஜை என்ற பெயரில் பொரி கடலை தருவார்கள். இதைச் சாப்பிடலாமா? வேண்டாம் என்று கூறினால், "நீங்கள் தான் இந்தச் சாமிகளை நம்பவில்லையே! அப்படியானால் வெறும் பொரி கடலை என்று நினைத்துச் சாப்பிட வேண்டியது தானே!' என்று கேட்கிறார்கள். நம்மைப் பொறுத்த வரை வெறும் சடங்கு தானே! இதைச் சாப்பிடுவதில் என்ன தவறு? மேலும் இதற்காகப் பத்து ரூபாய் வழங்குவதில் தவறுண்டா?

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173

இந்த வசனத்தில் "அறுக்கப் பட்டவை' என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் தான் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்லிம்கள் என்ற பெயரில் அவ்லியாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.

சாமியை நம்பவில்லை என்பதால் அந்த உணவுகளைச் சாப்பிடலாம் என்று கூற முடியாது. நாம் நம்பா விட்டாலும் அதை வணங்குபவர்கள் அந்த உணவில் புனிதம் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

இந்த உணவை இஸ்லாம் தடுத்துள்ளது என்ற அடிப்படையில் தான் உண்ணக் கூடாது என்று கூறுகிறோமே தவிர, அதில் புனிதம் இருப்பதால் சாப்பிடக் கூடாது என்று நாம் கூறவில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் இது போன்ற பூஜைகள் இறைவனுக்கு இணை கற்பித்தல் என்ற மிகப் பெரும் பாவச் செயலாகும். எனவே இதற்காகப் பணம் கொடுப்பதும் கூடாது. அரசு அலுவலகம் என்பதால் அதில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவது அரசியல் சட்ட அடிப்படையிலும் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

பூஜை செய்தவைகளும் மவ்லிது பாத்திஹா சாப்பாடும் ஓன்றா?

? ஆகஸ்ட் 2004 இதழில், தீபாவளியன்று பூஜை செய்யாத பொருட்களை மாற்று மதத்தினர் தந்தால் சாப்பிடலாம் என்று கூறியிருக்கின்றீர்கள். அப்படியானால் மவ்லிது, ஃபாத்திஹா, கந்தூரி போன்றவற்றில் வழங்கப்படும் உணவுகளையும் சாப்பிடலாமா? இரண்டு தரப்பினரின் நோக்கமும் ஒன்று தானே? என்று என் நண்பர் வினவுகின்றார். விளக்கவும்.

மாற்று மதத்தினர் பண்டிகையின் போது படைப்பதற்கும், நம்மவர்கள் மவ்லிதுக்குப் படைப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மாற்று மதத்தினர் உணவைத் தயாரிக்கும் போதே சாமிக்குப் படைக்கும் நோக்கத்தில் மட்டும் தயாரிப்பதில்லை. இதில் படைக்காமல் தனியாக எடுத்து முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றார்கள். அந்த நோக்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தவும் செய்கின்றார்கள்.

ஆனால் மவ்லிது, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்லிது ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள். அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். இரண்டு தரப்பினரின் நோக்கத்திற்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. எனவே முழு உணவையும் எடுத்து வைத்து மவ்லிது ஓதாவிட்டாலும் அது நேர்ச்சையாக எண்ணியே தயாரிக்கப்படுவதால் அதைச் சாப்பிடக் கூடாது.

ஹராமான உணவுகள் எவை?

? கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி?
சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? டால்பின் பன்றி இனத்தைச் சேர்ந்தது. எனவே அது ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு, முதலை, ஆமை போன்றவை எப்படி? விளக்கவும்.



விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் (2:173, 5:3, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரி 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன. புகாரி 4215வது ஹதீஸில் வீட்டுக் கழுதை ஹராம் எனவும் குதிரை ஹலால் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அளவுகோலை நம் முன்னே வைத்துள்ளனர்.

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம்(ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா(ரலி), நூல்: புகாரி 5781, 5530.

மேற்பகுதியில் உள்ள பல் வரிசையின் முன் பற்களில் நான்கு பற்களுக்குப் பின் உள்ள பல் கோரைப் பல் எனப்படும்.

கோரைப் பல் என்பது மற்ற பற்களை விட நீளமாக இருக்கும். மனிதனுக்குக் கூட மற்ற விலங்கினம் அளவு இல்லா விட்டாலும் கோரைப் பல் இருக்கிறது. மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும் இடப்பக்கம் ஒரு பல்லும் மற்றபற்களை விட நீளம் அதிகமாக இருக்கும்.

இப்படி கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அதை நாம் உண்ணக் கூடாது. ஆடு, மாடு போன்றவற்றின் பற்கள் அனைத்தும் சமமான உயரம் கொண்டதாக அமைந்திருக்கும். பூனை, நாய், சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இரண்டு பற்கள் மட்டும் மற்ற பற்களை விட மிகவும் நீளமாக இருக்கும்.

இந்த அளவுகோலை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும். கழுதையைப் பொறுத்தவரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் இந்த அளவு கோலில் அவை அடங்காவிட்டாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவு கோலைப் பொருத்தக் கூடாது.

பல துறைகளிலும் விற்பன்னராக இருந்த அபூஅலீ இப்னு ஸீனா அவர்கள் விலங்கினங்களை ஆய்வு செய்து ஒரு தகவலைத் தருகிறார். கொம்பு உள்ள எந்த உயிரினத்துக்கும் கோரைப் பல் இருக்காது என்பது அவரது ஆய்வு.

எனவே எந்த விலங்குக்காவது கொம்பு இருந்தால் அதை நாம் உண்ணலாம். எவற்றுக்கு கொம்பு இல்லையோ அவற்றுக்கு மட்டும் கோரைப் பல் உள்ளதா என்று ஆய்வு செய்த பின் உண்ணலாம்.

கடல் வாழ் உயிரினங்களில் விலக்கப்பட்ட ஒன்று கூட இல்லை. கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான். கடல்வாழ் உயிரினங்களில் கோரைப் பற்கள் உள்ளதா என்று பார்க்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை, மத்ஹபுகளில் சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று எழுதி வைத்துள்ளனர். இவ்வாறு கூறுவதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை.

கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 5:96)

புத்தம் புதிய மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 16:14)

கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டது இருந்திருந்தால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூறவேண்டும். வேறு எவருக்கும் ஹராமாக்கும் அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் கடல் வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் ஹராம் என அறிவிக்கவில்லை.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்(அல்குர்ஆன் 2:195)

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள்(அல்குர்ஆன்4:29)

இந்த வசனங்களின் அடிப்படையில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நிரூபணமானால் அவற்றை உண்ணக் கூடாது. இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும் தானியத்துக்கும் ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பாம்பு, பல்லி, கடல் வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவை இந்த அளவு கோலுக்குள் அடங்கும்.

டால்பின் என்பது பன்றி வகையைச் சேர்ந்தது அல்ல. அதுவும் மீன் வகையைச் சேர்ந்தது தான். குர்ஆனில் தடை செய்யப்பட்டுள்ளது பன்றி என்ற விலங்கின் இறைச்சி தானே தவிர பார்ப்பதற்கு பன்றியின் தோற்றத்தில் உள்ளது எல்லாம் ஹராம் என்று கூறப்படவில்லை.


நின்று கொண்டு குடிக்கலாமா?

? நின்று கொண்டு தண்ணீர் குடிக்கலாம் என்பதற்கு ஆதாரப் பூர்வமான செய்திகள் உண்டா?

அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்த போது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு, "மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால் (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நஸ்ஸால்
நூல்: புகாரீ (5615)

நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு "ஸம்ஸம்' கிணற்றிலிருந்து (நீர்) பருகினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ (5617)

இதே கருத்தில் பல ஹதீஸ்கள் இருந்தாலும் இதற்கு மாற்றமாக, நின்று கொண்டு அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்றும் ஹதீஸ்கள் வந்துள்ளன.

எனவே முடிந்த அளவு அமர்ந்து அருந்த வேண்டும் என்றும், முடியாத போது நின்று கொண்டு அருந்தலாம் என்றும் இரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்து அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

பிற மதத்தவர் பன்றியை அன்பளிப்பு செய்தால் சாப்பிடலாமா?

? "இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது'' என்ற வசனத்தின் படி வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துக் கொடுத்தாலும் நாம் சாப்பிடலாமா?

முதலில் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட அஹ்லுல் கிதாப் என்ற வாசகம் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

பொதுவாக எல்லா யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார் களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப் பட்டன.

(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6)

"இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன்'' என்று ஈஸா நபி கூறியதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6)

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக் காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ண இவ்வசனம் (5:5) அனுமதிக்கிறது என்பது தவறாகும் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, பன்றியை அவர்கள் அறுத்துக் கொடுத்தால் உண்ணலாமா? என்றால் கூடாது என்றே கூறவேண்டும். ஏனெனில் திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றவர்கள் இதை அறுத்துக் கொடுத்தாலே உண்ணக் கூடாது என்று கூறும் போது, இரண்டாம் நிலையில் உள்ள வேதம் கொடுக்கப்பட்டவர்கள் கொடுத்ததை எவ்வாறு உண்ணமுடியும்?

மேலும் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் வாழ்கிறோம். அவர்கள் பன்றி இறைச்சியை சாப்பிடுகிறார்கள்; மதுவை அருந்துகிறார்கள்; அவர்களுடைய பாத்திரத்தை (நாங்கள் பயன்படுத்தும் போது) என்ன செய்வது?'' என்று கேட்ட போது, "வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையானால் அதை (நன்றாக) கழுவிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அஹ்மத் (17071) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை சிந்தித்தால் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துத் தந்தாலும் ஹராம் என்பதை விளங்கலாம்.

எனவே வேதக்காரர்கள் நமக்குத் தடை செய்யப்படாத உணவுப் பொருட்களைத் தந்தால் அதை நாம் உண்ணலாம் என்றே இந்த வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.