ஹதீஸ் கலை

ஹதீஸ் கலை
الفرق بين الحديث والسنة والأثر
இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம்
இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரமாக ‘ஹதீஸ்’ காணப்படுகிறது. ஹதீஸ்கள் திரட்டப்பட்ட நூல்கள் மிக அண்மைக் காலம் வரை, அவற்றின் மூல மொழியான அரபு மொழியிலேயே இருந்து வந்தன. தற்போது சில நிறுவனங்களாலும், அறிஞர்களின் பெரும் முயற்சியா லும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டி ருக்கின்றன..
அதிலும் குறிப்பாக புகாரி, முஸ்லிம் போன்ற நூல்கள் முழுமையாக வெளிவந்துவிட்டன. இது தமிழ் உல கிற்கும், குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய அருளாகும். ஆகவே, அனைவரும் அவற்றைப் படித்து தம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
அவற்றைப் படிக்கும் போது ஹதீஸ் கலையுடன் தொடர்பான சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். அப்போதுதான் அவற்றின் மூலம் பயன் பெற முடியும். எனவே, ஹதீஸ் நூற்களிலும், ஏனைய இஸ்லாமிய நூற்களிலும் காணப்படும் சில சொல் வழக்குகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஹதீஸ், ஸுன்னத், கபர், அதர், ஹதீஸுல் குத்ஸி ஆகிய 5 சொல் வழக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை முதலில் பார்ப்போம்.
1. ஹதீஸ்:
الحديث
ஹதீஸ் என்னும் சொல்லிற்கு அகராதியில் புதியது, செய்தி என்பது பொருளாகும். மார்க்க வழக்கில் நபி (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம், பண்பாடுகள், அங்க அடையாளங்கள் தொடர்பான செயதிகளுக்கு சொல்லப்படும், அவை நபித்துவத்திற்கு முன்னரோ, பின்னரோ இடம் பெற்றவையாக இருக்கலாம்.
மேற்படி வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ‘ஸுன்னத்’ என்ற வார்த்தையை விட விரிவான, ஆழமான விளக்கம் கொண்டதாகவே ‘ஹதீஸ்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.
அதேவேளை ‘ஸுன்னத்’ என்பது நபித்துவத்திற்குப்பின்னர் நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய சட்டங்கள், மேற்கொண்டு வந்த இபாதத்துக்கள் போன்றவற்றை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஹதீஸ் – ஸுன்னா இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடாகும்.
2.ஸுன்னத்
السـنـة

“ஸுன்னா” என்ற சொல் அரபு மொழியில் வழிமுறை, நடைமுறை என்ற கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். இச்சொல் இதே கருத்துக்களில் அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். அல்லாஹ் கூறுகின்றான்
سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ مِن قَبْلُ وَلَن تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا
இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத் (நடைமுறை) ஆகும். இதற்கு முன்னும் இவ்வாறே நடந்திருக்கின்றது. ஆகவே, அல்லாஹ்வுடைய நடைமுறையில் (ஸுன்னத்தில்) எவ்வித மாறுதலையும் காணமாட்டீர். (அல்-பத்ஹ் 23) இவ்வசனத்தில் ஸுன்னா என்ற சொல் நடைமுறை என்ற கருத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண்சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக் கெனில், அவர்கள் ஒரு உடும்புப் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள். என்று நபி (ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிஸ்தவர் களையுமா நீங்கள் நாடுகிறீர்கள்? என்று நாம் கேட்டோம். அதற்கவர் ‘வேறு யாரை என்று (திருப்பிக்) கேட்டார்கள். (நூல்: புஹாரி 7320) இந்த நபிமொழியில் ஸுன்னா என்ற சொல் வழிமுறை என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
[நபி (ஸல்) அவர்களுடைய] ஸுன்னா என்ற வார்த்தை இஸ்லாமிய ஷரீஅத்தில் பின்வரும் கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை வருமாறு:
1. ஸுன்னா السـنـة) ) இஸ்லாமிய ஷரீஅத்தின் பார்வையில்.
2. ஸுன்னா السـنـة) ) ஷரீஅத்தின் சட்டக் கலையில்…
3. ஸுன்னா السـنـة) ) இபாதத்துக்களில்…
ஸுன்னா இஸ்லாமிய ஷரீஅத்தின் பொதுக் கண்ணோட்டம்
ஸுன்னா இஸ்லாமிய ஷரீஅத்தின் பொதுக் கண்ணோட்டம்
நபி (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றும் ஷரீஅத்தைச் சார்ந்ததாகும். அவை நம்பகரமான அறிவிப்பாளர் தொடர் வரிசையின் மூலம் கிடைக்கப் பெற்றால் மாத்திரமே, அவை ஷரீஅத்தில் ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன. ஆய்வு செய்து மனிதர்களுடைய செயற்பாடுகளுடன் தொடர்பான விதிகளைப் பெறும் ஆற்றல் பெற்ற (முஜ்தஹித்கள்) அறிஞர்கள் அவற்றிலிருந்து சட்டங்களைப் பெறுவர். ஆகவே, ஸுன்னா இஸ்லாமிய ஷரீஅத்தின் இரண்டாவது மூலாதாரமாகும். இது அல்குர்ஆனுக்கு அடுத்த இடத்தை வகிக்கின்றது. ஆகவே, அல்குர்ஆனைப் பின்பற்றுவது போலவே ஸுன்னாவையும் பின்பற்றுவது கடமையாகும்.
ஷரீஅத்தின் பார்வையில் ‘ஸுன்னா’ என்பது ஷரீஅத்தின் அனைத்துச் சட்டங்களையும் உள்ளடக்கிக் கொள்ளக் கூடியதாகும். அதன் உட்பிரிவுகளை அல்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அவற்றுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்து நோக்கலாம்.
‘ஸுன்னா’ ஷரீஅத்தின் மூலாதாரம் என்பதற்கு கீழ்வரும் விடயங்கள் சான்றுகளாகும்.
1. அல்குர்ஆன் : ரஸூல் (ஸல்) அவர்களைப் பின்பற்றி, அவருக்கு வழிப்பட்டு நடக்குமாறு அல்குர்ஆன் கட்டளையிடுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا
மேலும் நம் தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் எதனை விட்டும் உங்களைத் தடை செய்கின்றாரோ அதனைத் தவிர்ந்து நடந்து கொள்ளுங்கள். (அல்ஹஷ்ர்: 7)
அதே போன்று அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முடிவு செய்து விட்ட ஒரு விவகாரத்தில், ஒரு மனிதனுக்கு தன்னிஷ்டப்படி நடந்து கொள்வதற்கு அனுமதியில்லை. அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ
மேலும் அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. (அல் – அஹ்ஸாப்: 36)
மேற்படி வசனங்கள், அல்லாஹ் தனது தூதரை பின்பற்றுவதைக் கடமையாக்கி விட்டான் என்பதையும் ஸுன்னாவும் மனிதனுடைய செயற்பாடுகளுடன் தொடர்பான விதிகளைத் தருகின்ற மூலாதாரமாகும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.
2. நபித் தோழர்களின் நடைமுறை : நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்ற போதே, அவரது ஏவல் விலக்கல்களை ஸஹாபாக்கள் ஏற்று நடந்துள்ளனர். அல்குர்ஆன் கூறும் சட்டங்களுக்கும், நபி (ஸல்) அவர்கள் (ஸுன்னா) கூறும் சட்டங்களுக்குமிடையில் வேறுபாடு இருப்பதாக அவர்கள் ஒருபோதும் கருதியதில்லை. அவ்வாறே நபி (ஸல்) அவர்களுடைய வபாத்துக்குப் பின்னரும் அல்குர்ஆனிலிருந்து சட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தனர். அதில் கிடைக்காத போது ஸுன்னாவிலிருந்து சட்டங்களைப் பெற்று நடைமுறைப்படுத்தி வந்தனர்.
3. அல்குர்ஆன் சுருக்கமாகக் கூறுகின்ற கடமைகள் ஸுன்னாவின் விளக்கமின்றி நடைமுறைப்படுத்த முடியாமலே இடம்பெற்றுள்ளன. அவற்றில் அல்லாஹ் மனிதன் மீது விதியாக்கிய நிறையக் கடமைகள் இடம் பெற்றுள்ளன. அவை தொடர்பான மேலதிக விபரங்களோ, செயல்முறை விளக்கங்களோ குர்ஆனில் இடம்பெறவில்லை. இதற்கு தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளை உதாரண மாகக் கொள்ள முடியும். இவை சார்ந்த செயல்முறை விளக்கங்களை ஸுன்னாவிலிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதன் அடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் மூலம் வந்த செய்திகளில் ஆதார பூர்வமானவைகள் ஷரீஅத்தின் ஆதாரங்களாகும். அவை களைப் பின்பற்றுவது கடமையும் கூட. ஆகவே அல்லாஹ்வின் தூதர் என்ற வகையில் அவர்களைப் பின்பற்றுவது கடமை என்பது போலவே, அவர் வழியாக வந்த சட்டங்களைப் பின்பற்றுவதும் கடமையாகும். அவர் மூலம் வந்த செய்திகள் அல்குர்ஆனில் கூறப் பட்ட விதிகளை விபரமாகத் தெளிவாக எடுத்துக் கூறுவதா கவோ, அல்குர்ஆன் கூறாத விதிகளைத் தனியாக எடுத்துச் சொல்லும் ஹதீஸ்களாகவோ இருக்கலாம். (ஏனெனில், ஸுன்னா, அல்குர்ஆ னைப் போலவே – சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற சுதந்திரமான மூலாதாரமும், தெளிவுபடுத்தும் அதிகாரம் பெற்ற மூலாதாரமும் ஆகும்).
சட்டக் கலையின் பார்வையில் ‘ஸுன்னா’
பர்ளான கடமையான வணக்கங்கள் தவிர்ந்த ளுஹாத் தொழுகை, துல்ஹஜ் மாதம் ஆரம்பப் 10 நாட்கள் நோன்பு வைத்தல், ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்தல், திங்கள், வியாழன் நோன்பு வைத்தல் போன்ற உபரியான வணக்க வழிபாடுகளையே குறிக்கும்.
‘ஸுன்னத்’ என்ற அனைத்தும் நன்மை வழங்கப்படுகின்ற இபாதத்துக்களாக மாட்டா. அவைகளிற் சில, கடமையான வணக்க வழிபாடுகளாகவும், இன்னும் சில உபரியான வணக்கங்களாகவும், வேறு சில நபி (ஸல்) அவர்களுடைய பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டக் கூடியனவாகவும் உள்ளது. இது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். ஆகவே, நபிகள் நாயகத்தின் எல்லா வழிமுறைகளும் இபாதத்தாகும் என்று ஒரு பிழையான நம்பிக்கை சிலரிடம் காணப்படுகின்றது. அதனைத் திருத்திக் கொள்வது மிகப் பிரதானமானதாகும்.
இபாதத்துக்கள் கண்ணோட்டத்தில் ‘ஸுன்னத்’
பித்அத் – நூதன அனுஷ்டானங்கள் – என்ற வார்த்தைக்கு எதிர்ச் சொல்லாக ஸுன்னத் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகின்றது. குர்ஆன் அல்லது ஸுன்னா அடிப்படையில் செய்யப்படுகின்ற இபாதத்துக்கள் ஸுன்னத்தானவை என்றும், அவற்றின் அடிப்படைகளைத் தழுவாது இபாதத் என்ற பெயரில் செய்யப்படுகின்ற செயல்கள் பித்அத்தானவை – ஸுன்னாவுக்கு எதிரானவை – என்றே அழைக்கப்படுகின்றன. ஆகவே, ஸுன்னத் – பித்அத் ஆகிய இரு சொற்களும், எதிர்க்கருத்துள்ள சொற்களாகும்.
3. ‘கபர்’
الخبر

இவ்வார்த்தை அரபு மொழியில் ‘செய்தி’, உளவு பார்த்தல்’ என்ற கருத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றது. வழக்கில் ‘ஹதீஸ்’ என்ற வார்த்தை தருகின்ற அதே கருத்திலேயே ‘கபர்’ எனும் இவ்வார்த்தையும் பயன் படுத்தப்படுகின்றது. அதே போன்று ‘ஸஹாபாக்கள், தாபிஈன்கள்’ போன்றோரின் கூற்றுக்களைக் குறிக்கவும் இவ்வார்த்தை சாதாரண அளவில் பயன்படுத்தப் படுகின்றது.
4.‘அதர்’
الأُثـر

‘அதர்’ என்ற வார்த்தை அரபு மொழியில் ‘அறிவித்தல், அடிச்சுவடு’ எனும் கருத்துக்களைத் தருகின்றது. பரிபாஷையில்: ஹதீஸ், ஸுன்னத், கபர் ஆகிய மூன்று சொற்களும் ஒத்த கருத்துள்ள பதங்களாகும். ஆனால், அதிக அளவில் ‘அஸர்’ எனும் இவ்வார்த்தை ‘ஸஹாபாக்கள், தாபிஈன்கள்’ ஆகியோரின் கூற்றுக்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மேற்கூறப்பட்ட 4 வார்த்தைகளுக்கும் பரிபாஷையில் கூறப்பட்ட வரைவிலக்கணங்களின் அடிப்படையில், அவற்றுக்கிடையே சிறு வேறுபாடுகள் தென்பட்டாலும், அவை ஒத்த கருத்தில் பயன்படுத்தப் பட்டு வருகின்ற வார்த்தைகள் என்பது பெரும்பான் மையான இஸ்லாமிய அறிஞர்களுடைய கருத்தாகும்.
5. ‘ஹதீஸுல் குத்ஸீ’
அல்லாஹ் சொன்னதாக நபி (ஸல்) சொன்ன வார்த்தைகளே ஹதீஸுல் குத்ஸீ என்று அழைக்கப்படுகின்றது. ஆனால், இது அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட அல்குர்ஆன் போன்ற வஹீயல்ல. ஆகவே, அல்குர்ஆனைப் போன்று மாத்திரம் அதனை ஓதுவதன் மூலம் நன்மையடைய முடியாது. அவ்வாறே, நபி (ஸல்) அவர்களுடைய வார்த்தைகளான ஹதீஸ்களுமல்ல. ஆகவே, ‘ஹதீஸுல் குத்ஸீ’ என்பது அல்குர்ஆனின் நடைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், அறிவிப்பு முறையில், ஏனைய ஹதீஸ்களிலிருந்து வேறுபட்டதாகவும் காணப்படுகின்ற அதே வேளை, அது அல்குர்ஆனைப் போன்று அற்புதமும் அன்று. இவைகளே, அல்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் – ஹதீஸுல் குத்ஸீ ஆகியவற்றுக்குமிடையிலான வேறுபாடுகள் ஆகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.