தப்லீக் ஜமாஅத்தினரின் ஆறு நம்பர் என்று சொல்லப்படும் ஆறு அடிப்படை அம்சங்களும் வருமாறு :

தப்லீக் ஜமாஅத்தினரின் ஆறு நம்பர் என்று சொல்லப்படும் ஆறு அடிப்படை அம்சங்களும் வருமாறு :

 • கலிமா -லாயிலாஹ இல்லல்லாஹ் .

 • தொழுகையை நிலை நாட்டல் .

 • இல்மு – திக்ரு .

 • இக்ராம் -(பிற சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் )

 • இக்லாஸ் - ( மனத்தூய்மை )

 • தப்லீக் . - (வக்தில் வெளிக்கிளம்பிச் செல்லல் )


இந்த ஆறு விடயங்களுக்கும் நோக்கம் சிறப்பு , முயற்சி என்று சில விடயங்களை இணைத்து அலங்கரித்துள்ளனர் .  இப்போது இவை ஒவ்வொன்றையும் சற்று விரிவாக ஆராய்வோம் .


முதலாம் நம்பர் 'கலிமா'

ஆறு நம்பரில்; முதலாவது விடயம் கலிமா 'லாயிலாஹ இல்லல்லாஹ் ' இதன் நோக்கம் பற்றி இவர்கள் சொல்லும் போது. . . .  'வஸ்த்துக்களுடைய நம்பிக்கையை உள்ளத்திலிருந்து அகற்றி வஸ்த்துக்களின் இறைவனான அல்லாஹ்வின் நம்பிக்கையை இதயத்தில் பதிப்பதுதான் இதன் நோக்கம் என்கின்றனர் .  அதாவது நம்மைப் படைத்தது அவனே , நமக்கு உணவளிப்பது அவனே, செல்வத்தைத் தருவது வறுமையைத் தருவது நோயை விடுவது , குணப்படுத்துவது கஷடத்தை நீக்குவது , உயர்த் துவது தாழ்த்துவது அனைத்தும் அவன்தான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் என்று கலிமாவுக்கு விளக்கம் கூறுகின்றனர் . 
ஆனால் நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் காபிர்கள் மத்தியில் அன்று இந்தக் கலிமாவை முன்வைத்த போது அதன் நோக்கம் பற்றி என்ன கூறினார்கள் அதற்கு எப்படி விளக்கமளித்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

குரைஷிக் காபிர்கள் அன்று கல்லையும் மண்ணையும் விக்ரகங்களையும் தான் வணங்கிக் கொண்டிருந்தார்கள் .  ஆனால் அல்லாஹ்வைப் பற்றிய இறை நம்பிக்கை அவர்களிடம் எப்படி இருந்தது என்பது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். . .

قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ (88) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّا تُسْحَرُونَ (89) بَلْ أَتَيْنَاهُمْ بِالْحَقِّ وَإِنَّهُمْ لَكَاذِبُون المؤمنون 84 .  َ

நபியே பூமியும் அதிலுள்ளவைகளும் யாருக்குச்சொந்தமென்று (அவர்களிடம் கேளுங்கள்).  அல்லாஹ்வுக்குரியவையேயென்று அவர்கள் பதிலளிப்பார்கள்.  அப்படியாயின் அவர்கள் சிந்திக்க வேண்டாமா ? ஏழு வானங்களின் அதிபதியும் பிரமாண்டமான அர்ஷின் அதிபதியும் யாரெனக் கேளுங்கள் .  அல்லாஹ்தான் என அவர்கள் கூறுவார்கள் . நீங்கள்அறிவுடையோராயின் அனைத்து வஸ்த்துக்களின் ஆட்சி அதிகாரங்களையும் தன்கையில் வைத்திருக்கும் - (பிறருக்கு ) அடைக்கலம் கொடுக்கும் , எவரின் அடைக்கலமும் தேவையற்றவன் யார் என அவர்களைக் கேளுங்கள் அல்லாஹ் தானென அவர்கள் பதிலளிப்பார்கள் .( முஃமினூன் .  84 ---88 )

இந்த வானங்களையும் பூமியையும் படைத்தவன் யாரென்று அவர்களைக் ( குரைஷிக் காபிர்களைக்) கேட்டால் அல்லாஹ் தான் என்று அவர்கள் நிச்சயம் கூறுவார்கள் ( அன்கபூத் 66 வசனம் )

قل مَنْ يَرْزُقُكُمْ مِنْ السَّمَاءِ وَالأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنْ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنْ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلا تَتَّقُون - يونس 31
َ
நபியே(அவர்களிடம் ) சொல்லுங்கள் . .  உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார் ? உங்களது பார்வை கேள்வி (அனைத்துக்கும் ) சொந்தக்காரன் யார் . ? செத்ததிலிருந்து உயிருள்ளதையும் உயிருள்ளதிலிருந்து செத்ததையும் வெளிப்படுத்துபவன் யார் ? எனக் கேளுங்கள் அல்லாஹ்தான் என்று அவர்கள் கூறுவார்கள் அப்படியானால் அவர்கள் (அவனைப்) பயப்பட வேண்டாமா ? (ஸூரத்துல் யூனுஸ் 37ம் வசனம் )

இது போன்ற அல்குர்ஆன் வசனங்கள் பல்வேறு இடங்களில் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது .
எனவே இந்த வசனங்களின் படி அன்றைய குறைஷிக் காபிர்களிடம் கூட அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன் .  ஆக்குபவன் அழிப்பவன்,காப்பவன் ,உணவளிப்பவன் , நோயைக் குணப்படுத்துபவனெல்லாம் அவன்தான் எனும் நம்பிக்கை இருக்கத தான் செய்தது . 
அல்லாஹ்கூறுகின்றான். . .

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلْ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لا يَعْقِلُون العنكبوت 65 . 
َ
அவர்கள் (காபிர்கள்) கப்பலில் ஏறினால் ( கடலில் மூழ்கி விடு வோமோ எனப் பயந்து ) அல்லாஹ்விடம் பயபக்தியுடன் பிரார்த்திப்பார்கள் .  கடலிலிருந்து அவன் அவர்களைக் காப்பாற்றியதும் அவனுக்கு இணை வைப்பார்கள் என்று கூறுகின்றான் .
(ஸூரா அன்கபூத் 65 ம் வசனம் )

அக்காலத்தில் அப்றஹா எனும் மன்னன் கஃபாவைத் தகர்ப்பதற்காக யானைப்படையுடன் வந்தான் .  இடையில் நபியவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலிபின் ஒட்டகங்களைச் சுவீகரித்துக் கொண்டதும் அவனுடன் பேச அப்துல்முத்தலிப் வந்தபோது அவன் 'நான் கஃபாவை இடிக்க வந்துள்ளேன் நீயோ உன் ஒட்டகங்களைப் பற்றிப் பேசுகின்றாயே' என்றான் அதற்கு அப்துல் முத்தலிப் 'ஒட்டகத்தின் சொந்தக்காரன் நான் . அவற்றை நான் தான் பாதுகாக்க வேண்டும் .  கஃபாவின் சொந்தக் காரனோ அல்லாஹ் எனவே அதை அவன் பாதுகாத்துக் கொள்வான் என்று கூறியது அல்லாஹ்வின் மீது அவருக்கிருந்த யகீன் - அசைக்க முடியாத நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.  இத்தனைக்கும் அவர் ஒரு காபிர் என்பதும் குறிப்பிடத்தக்கது .  ( ரஹீக் அல் மக்தூம் அலா ஸீரத்திர் ரஸூல் ப: 95 . )

இதிலிருந்து அல்லாஹ்தான் எமக்கு அனைத்துக்கும் பொறுப்பாளன், அவனே உணவளிப்பவன், குணமளிப்பவன் எனும் நம்பிக்கை காபிர்களிடம் இருந்ததென்பது தெளிவாகின்றது .  எனினும் இத்தகைய மக்களைத்தான் அல்லாஹ் 'குல் யா அய்யுஹல் காபிரூன் - காபிர்களே! என்று அழைக்கின்றான் .  அப்படியானால் இந்தக் கலிமாவின் நோக்கம்தான் என்ன என்ற வினாவெழுகின்றது . 
ஆம் இக்கலிமாவுக்கு கலிமத்துத் தௌஹீத் -- ஓரிறைக் கொள்கையின் வாசகம் என்று நாம் சொல்கின்றோம் .  தௌஹீத் எனும் போது மேற்சொன்னவாறு அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்து நிர்வகிப்பவன் என்று நம்புவதும் ஒரு பகுதிதான் .  ஆனால் அதை விட முக்கியமாக அவனை மாத்திரமே வணக்கத்துக்குரியவனாக ஆக்கி அவனல்லாத எந்த சக்திக்கும் அல்லாஹ்வின் ஆற்றலில் எவ்விதப் பங்குமில்லை என்று உறுதியாக நம்பி எந்த இபாதத் ஆகிலும் அல்லாஹ்வுக்காகவே அதைச் செய்வதுடன் அதன்படி செயற்படுவதே இந்தக்கலிமாவின் அடிப்படை நோக்கமாகும். 
இதைத்தான் குரைஷிக் காபிர்கள் செய்யத் தவறினார்கள் .  வெறுமனே அல்லாஹ்வை நம்பி விட்டு பின்னர் அல்லாஹ்வுக்கு இருக்கும் சக்தி வேறு சிலருக்கும் இருக்கின்றதென்ற நம்பிக்கையிலோ அல்லது அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தத்தைப் பெற்றுத்தர இவர்கள் வல்லவர்கள் என்ற நோக்கிலோ வேறு சில விக்ரகங்களுக்கும்; கடவுள்த் தன்மைகளைக் கற்பித்தார்கள்.  இதனைத்தான் நபியவர்கள் கண்டித்தார்கள்.  விமர்சித்தார்கள், எதிர்த்தார்கள்.  இதனாலேயே யுத்தமெல்லாம் கூட மூண்டன .  எனவே வெறுமனே கலிமாச் சொல்லிவிட்டு அதன்படி செயற்படா விட்டாலும் அந்த நம்பிக்கை போலியானது என்றே அர்த்தமாகும் .  எனவே லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் அர்த்தமே பக்தி எனும் பேரில் தப்லீக் முக்கியஸ்த்தர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு கட்டுப்படல் ,அவர்களின் வார்த்தைகளை வேத வாக்காக மதித்தல், அவர்களுக்கு மாறுசெய்தால் சாபம் ஏற்பட்டுவிடுடென எண்ணல், அவர்களது ஆசியால் நமக்கு பாக்கத் ஏற்படுமென நம்புதல், அவர்களுக்கு வேறுபல சக்திகள் இருப்பதாகக் கூட நம்புதல் போன்ற தப்லீக் கார்க்கூன்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் வேட்டு வைக்கின்றது .

அதேபோல் அல்லாஹ் தனது பெயர்நாமங்கள் தன்மைகள் பண்புகள் பற்றி அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் எவ்வாறு சொல்லியிருகின்றானோ அதே போன்று எவ்வித கூட்டல் குறைத்தலின்றி மாற்றல் மறைத்தலின்றி , திரிபு படுத்தல் இருட்டப்புச் செய்தலின்றி அப்படியே நம்பியாக வேண்டும் .  இந்த மூன்று விடயங்களையும் இந்த சிறிய கலிமா தன்னகத்தே உள்ளடக்கி யிருக்கின்றது .  இதனையே . .


1- அத்தௌஹீத் அர் ருபூபிய்யா .
2- அத்தௌஹீத் அல் உலூஹிய்யா .
3- தௌஹீதுல் அஸ்மாயி வஸ்ஸிபாத் .

என மூன்று தனித்தனிப் பெயர்கள் கொண்டு அழைக்கின்றோம் .

ஆனால் தப்லீக் ஜமாஅத் அமைப்பைப் பொறுத்த வரைக்கும் இந்த கலிமாவின் ஒரு பகுதியான அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தான் , அவன்தான் அனைத்தையும் இயக்குகின்றான் என்ற கோணத்தில் மாத்திரம்தான் விளக்கம் கொடுக்கப்படுகின்றதேயன்றி அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் வணக்கத்தில் எவ்வித பங்கும் கொடுத்துவிடக் கூடாது .  அவனது குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் ஹதீஸிலிருந்தும் மாத்திரமே இஸ்லாம் அமைக்கபட்டுள்ளது அதிலே எவருக்கும் கையாடல் செய்ய அனுமதியில்லை .  மீறினால் அது ஷிர்க்கான , பித் அத்தாக – மௌட்டீகமாக ஆகிவிடும் என்பது பற்றியோ , ஷிர்க் பித்அத்தின் விபரீதங்களை விளக்குவது பற்றியோ எவ்விதக் கரிசனையும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

இதன் பிரதிபலிப்பும் விபரீதமும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளில் தெட்டத் தெளிவாகத் தெரிய வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது நபியவர்கள் தமது பிரச்சாரத்தில் ஷிர்க் பித்அத்துக்களை ஒழிப்பதில் அதன் வாடையையே வேரடி மண்ணோடு பிடுங்கி எறிவதற்காகத்தான் இவ்வளவு பாடுபட்டார்கள் இன்னல்களைச் சகித்தார்கள் .  யுத்தங்கள் புரிந்தார்கள் .  ஆனால் இவ்விடயங்கள் பற்றி தப்லீக்கில் எவ்வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பதை அடித்துச் சொல்லலாம் .  சமூகத்தில் நிலவக்கூடிய ஷிர்க்கான – பித்அத்தான அனுஷட்டானங்களைப் பற்றி எங்காவது இவர்கள்பேசியதுண்டா ? சமூகச் சீர்கேடுகள் , பிரச்சினைகள் அதற்காகன தீர்வுகள் பற்றி யெல்லாம் எங்கேனும் இவர்களது இஜ்திமாக்களில் பேசப் பட்டதுண்டா ? கேட்டால் அதெல்லாம் துன்யாவுடைய விடயங்கள் என்று நழுவுவார்கள்; .  பகிரங்க ஷிர்க்கை எதிர்த்துப் பேசுவது துன்யாவுடைய விடயம் , இஸ்லாமிய லேபலை வைத்துக் கொண்டவர்கள் அதன் பெயரால் சமூகத்தில் நடத்தும் பித்அத்தான மௌட்டீகங்களைச் சுட்டிக்காட்டுவது துன்யாவுடைய விடயம் . முஸ்லிம்களுக்கெதிரான எதிரிகளின் சதிகளைப் பற்றிப் பேசுவது துன்யாவுடைய விடயம் , 3 நாள் அவர்களுடன் புறப்பட்டு விட்டால் மட்டும் அது தீனுடைய விடயமாகி விடும் . 

இதன் காரணமாகத்தான் ஒன்றுமறியா புதிய அப்பாவி தப்லீக் சகோதரர்கள் உற்பட அனைத்து தப்லீக் தொண்டர்களும் தமது பகுதி பள்ளிவாயல்கள் , அப்பகுதி தர்ஹாக்களில் இடம்பெறும் கந்தூரி , பாத்திஹா ,கொடியேற்றம் , மௌலீது மஜ்லிஸ் போன்றவற்றை எதிர்ப்பதிலோ அதை நிறுத்தும் முயற்சியிலோ ஈடுபடாதிருப்பதையும் அதை எதிர்ப்பவர்களைக் குழப்பவாதிகள் என்று எண்ணுவதையும் , இன்னும் சிலரோ இவை போன்ற சுப வைபவங்களில் தாராளமாகக் கலந்து கொண்டு சிறப்பித்து நார்ஸா- அன்னதானம் பெற்றுச் செல்வதையும் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது. 

இதைவிடப் பேராச்சரியத்துக்குரிய கவலைதரும் விடயம் யாதெனில் இந்த தப்லீக்கின் வேராகத் திகழும் பல உலமாக்களே ஒவ்வொரு பகுதிகளிலும் இவ்வாறான பித்அத்தான அனாச்சார நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கி பள்ளிகள் தோறும் அரங்கேற்றி வைத்து சிறப்பிப்பதைக் காணும் போது ?? நெஞ்சமே பற்றியெரிகின்றது . உங்களில் சிலருக்கு இது ஆச்சரியத்தைத் தரலாம் .  ஆனால் என்னிடம் அதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு அவ்வாறான நூற்றுக் கணக்கான உலமாக்களின் பெயர்ப்பட்டடியல் என்னிடமுண்டு .  அணுகினால் அள்ளித்தர நான் தயார் .

மேலும் இந்த தப்லீக் பெரியார்கள் கலிமத்துத் தௌஹீத் லாயிலாஹ இல்லல்லாஹ் விடயத்தில் தங்கள் மத்ஹபான மாத்துருதிய்யா ,அஷ்அரிய்யா போன்ற மத்ஹபுவாதிகளின் கருத்தையே கொண்டிருக்கின்றனர் .  இந்தப் பிரிவினரிடம் குர்ஆன் ஹதீஸூக்கு முற்றிலும் மாறுபட்ட கோற்பாடுகள் நிறையவே இருக்கின்றன .  உதாரணத்திற்கு அஷ்அரிய்யா எனும் பிரிவினர் அல்லாஹ் தனக்கு இருப்பதாகச் சொன்ன பண்புகளில் ஏழே ஏழு பண்புகளை மாத்திரம் ஏற்றுக் கொண்டு ஏனையவற்றை மறுக்கின்றனர்.  உதாரணத்திற்கு அல்லாஹ் அர்ஷிலே நிலை கொண்டிருப்பதாக குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இருக்க இவர்கள் அல்லாஹ் உலகெங்கும் இருக்கின்றான் என்கின்றனர் .  வேறு சில தப்லீக் மேதாவிகளோ அல்லாஹ் எங்கிருந்தாலும் நமக்கென்ன ? அதுவா முக்கியம் வக்தில் வெளிக்கிளம்புவது தானே முக்கியம் என்கின்றனர் அப்படியானால் முக்கியமற்ற ஒரு விடயத்தை அல்லாஹ் ஏன் குர்ஆனில் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் நபியவர்கள் நூற்றுக்கணக்கான இடங்களிலும் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டும் சிந்திப்போமாக .  இப்படி கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ்வோடு சம்பந்தப்பட்ட எவ்வளவோ விடயங்கள் ஒவ்வொரு முஸ்லிமும் வழிதவறி விடாமலிக்க அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள் தப்லீக்கில் சொல்லப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன கலிமாவுக்கு நபியவர்கள் சொல்லித்தந்த அர்த்தத்தில் மூன்றில் ஒன்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு மீதி இரண்டு பகுதிகளும் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன . 

இது ஒரு புறமிருக்க கலிமாவுக்குச் சொல்லப்படும் மூன்றிலொரு பகுதி விளக்கத்தையாவது அதே தூய்மையுடன் விட்டு வைக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை .  வஸ்த்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை.  அல்லாஹ்வுக்குக்தான் அனைத்து சக்திகளும் உண்டு என்று சொல்லப்படும் தத்துவம் காலப் போக்கில் சிதைய ஆரம்பித்து 4 மாதம் 1 வருடம் என்றெல்லாம் சென்று வந்தவுடன் தாங்கள் பின்பற்றும் தப்லீக் பெரியார்களுக்கும் ஆத்மீக சக்திகளுண்டு .  அவர்களால் உயிரோடும் மரணித்த பின்பும் கூட உலகில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை- நச்சுக் கருத்து தப்லீக் பெரியார்களாலேயே அவர்களுக்கு ஊட்டப்பட்டு விடுகின்றது .  எப்படி ஸூபித்துவ வாதிகள் அன்று இஸ்லாத்தின்-- ஷரீஆ எனும் பெயரை வைத்து மக்களைத் தம்பக்கம் அழைத்து பின்னர் தரீக்கா எனும் பேரில் அவர்களது இறை நம்பிக்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி தமக்கும் கடவுளின் சக்திகள் இருப்பதாக நம்பவைத்து தாம் கூறுபவை அனைத்தையும் எவ்வித சிந்தனையுமின்றி யோசிக்காமல் இஸ்லாம் என்பதாக ஏற்கும் தலையாட்டி பொம்மைகளாக மூளைச் சலவை செய்து விடுகின்றார்களோ அதே நிலைதான் இங்கு தப்லீக் பெரியார்களிடமும் காணப்படுகின்றது . 

இதனை வெறும் அனுமானமாகவோ அல்லது காழ்ப்புணர்ச்சியிலோ சொல்ல வில்லை .  ஆதாரத்துடன்தான் சொல்கின்றேன்.  அதுவும் அவர்களது புத்தகத்திலிருந்தே. .  இதைத் தொடர்ந்து படியுங்கள்

அஷ்ரப் அலி தானவி அவர்கள் தப்லீக்கின் பிரபல பெரியார்களில் ஒருவர்.  . இவர்களிடம் நிறைய சிஷ்யர்கள் பைஅத் ( ஞான தீட்சை) பெற்றிருந்தனர் .  ஒருமுறை அவரின் சிஷ்யர்களில் ஒருவர் ஒரு கனவு கண்டார் . கனவில் அவருக்கு சக்ராத் - இறுதி நேரம் நெருங்கி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார் .  அவ்வேளை கலிமாவை மொழிவதற்காக லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று சொல்ல முயற்சிக்கின்றார் .  ஆனால் அதற்குப் பதிலாக அவரின் வாயிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ரப்அலி தானவி ரஸூலுல்லாஹ் என்றுதான் வருகின்றது.  இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் இது ஷிர்க்கான விடயமாயிற்றே என்று பதை பதைத்து மீண்டும் தூங்கியதும் மீண்டும் அதே கனவு .  இப்படியே மூன்று தடவைகள் அதே கனவைக் கண்டதும் அச்சத்தினால் மறுதினம் விழித்ததும் நபியவர்களுக்கு ஸலவாத் சொல்ல முயற்சித்தார் .  அதற்கும் அல்லாஹூம்ம ஸல்லி அலா நபிய்யினா அஷ்ரப்அலிதானவி றஸூலுல்லாஹ் என்றுதான் நாவிலிருந்து வெளிப்பட்டது .  உடனே அச்சத்துடன் பெரியார் அவர்களிடம் வந்து இக்கனவைத் தெரிவித்தார்கள் .  அதற்கு அஷ்ரப் அலி தானவி அவர்கள் 'இது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை .  அது நல்ல கனவுதான் ஏனெனில் நானும் நபி அவர்களுடைய அந்தஸ்த்தில் உள்ளவன்தான் நீங்கள் அஷ்ரப்அலி தானவி றஸூலுல்லாஹ் என்று சொன்னால் அதுவும் சரிதான் அதனால் பயப்படத் தேவையில்லை என்று சொன்னார்கள் . 
இந்த விடயம் அன்றைய உலமாக்களுக்கிடையில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது .  மேற்படி பத்வா மார்க்கத்துக்கு முரணானது, குப்ரை ஏற்படுத்தக் கூடியது எனவே உடனடியாக அதனை வாபஸ் வாங்க வேண்டுமென அன்றைய அகில இந்திய உலமாக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது .  இதற்கு மறுப்பளித்து தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் எனும் நூலில் மேற்படி அஷ்ரப் அலி தஹானவியின் பத்வா சரியானதே என நியாயப் படுத்தி எழுதியுள்ளார்கள் ஷேகுல் ஹதீஸ் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் .  ( ஆதாரம் .  தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் . ப: 144-145 )
( அதாவது அஷ்ரப் அலி தானவியும் அவர்கள் அளவுக்குள்ள மவ்லானா மார்களும் நபிமார்களின் அந்தஸ்துக்குச் சமமா னவர்கள் .  எனவே அவர்கள் சொல்வதை யெல்லாம் வேதவாக்காக ஏற்று கண்ணை மூடிக்கொண்டே பின்பற்றலாம் என்பதே இதன் உள் அர்த்தம் . )

பாருங்கள் இதுதான் வஸ்துக்களின் பக்கம் இருக்கும் நம்பிக்கையை நீக்கி அல்லாஹ்வின் பக்கம் நம்பிக்கையை ஏற்படுத்தும் இலச்சனம்?? கலிமாவுக்கு அவர்கள் வழங்கும் வெளிப்படையான வியாக்கியானம் எப்படி ? இந்த ரசசிய வியாக்கினம் எப்படி ?
வஸ்த்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் எல்லா சக்தியுமுள்ளது என்பதை எப்படி நிரூபிக்கின்றார்கள் என்று பாருங்கள் .

ஹஜ்ஜின் சிறப்பு எனும் தப்லீக் நூலில்; வந்துள்ளதாவது . . . 
ஷேக் அபூ ஜஃபர் என்று ஒரு பெரியார் மதீனாவில் இருந்தார் அவர் ஒருமுறை மக்காவுக்குச் செல்லத் தயாரானார் .  அப்பொழுது அவரது சீடர்களில் ஒருவர் நானும் தங்களுடன் வருகின்றேன் என்று கேட்டுக்கொள்ள அதற்கு அப்பெரியார்
( ஹிள்று (அலை) மூஸா நபிக்குச் சொன்ன பாணியில்; ) அதற்கு நீ சக்தி பெற மாட்டாய் என்றார் அதனைக் கேட்காது சீடர் அடம்பிடிக்கவே பெரியார் அவர்கள் சரி அப்படியென்றால் நான் எடுத்து வைக்கும் காலடிச் சுவட்டின் மீதே நீயும் காலெடுத்து வைக்க வேண்டும் என்று நிபந்தனையிட அதற்குச் சம்மதித்து இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர் .  இஷாத் தொழுகையின் பின் பயணத்தைக் கால்நடையாகத்தான் மேற்கொண்டனர் .  அந்தச் சீடர் சொல்கின்றார். . .  .  இரவில் கொஞ்ச நேரந்தான் நடந்திருப்போம்.  தூரத்தில் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன .  அருகே நெருங்கிக் சென்றபோது மக்கா மஸ்ஜிதே ஆயிஷாவின்; விளக்குகளே அவை .  நேரம் அப்போது தான் தஹஜ்ஜத்துடைய வேளை .  இவ்வளவு குறுகிய நேரத்துக்குள் மதீனாவிலிருந்து மக்கா வந்து சேர்ந்தமை பற்றி எனக்கு ஆச்சரியம் . ஷேக் அவர்களின் வல்லமை ஒருசில மணிநேரத்துக்குள் கால்நடையாக மக்காவுக்கு வந்து விட்டார்கள் .  ( நபியவர்களுக்கே மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ள ஒரு வாரம் எடுத்தமை குறிப்பிடத்தக்கது . ) ஸூபஹூத் தொழுகையை முடித்ததும் அங்குள்ள சிலசகோதரர்களைச் சந்தித்தேன் எங்கிருந்து வந்ததாக அவர்கள் வினவினார்கள் . நான் மதீனாவிலிருந்து . .  என்றேன் .  எப்போது புறப்பட்டீர்கள் என்றதும் இரவு இஷாவுக்குப் பின்  என்றேன் .  எப்போது வந்து சேர்ந்தீர்கள் என்றதும் தஹஜ்ஜூத் நேரத்தில் என்றேன் .  அதைக் கேட்ட அவர்கள் ஆச்சரிய மேலீட்டால் யாருடன் வந்தீர்கள் என்றதும் நான் ஷேக்கின் பெயரைச் சொன்னேன் அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் இல்லை . .  எப்படி இது ?? ஷேக் அவர்கள் நேற்றிரவு இஷாவுக்குப் பின்னிருந்து தஹஜ்ஜூத் வரைக்கும் இங்கு மஸ்ஜிதுல் ஹராமில் எங்களுக்குப் பாடம் நடாத்திக் கொண்டிருந் தார்களே . .  என்று ஆச்சரியப்பட்டார்கள் . . . . . அதற்கு மற்றும் சிலர் அந்த ஷேக்கைப் பொறுத்த வரைக்கும் இதுவெல்லாம் சாதாரண விடயம் என்று கூறினர் .

வஸ்த்துக்களால் எதுவும் ஆவதில்லை என்பது தப்லீக் போதனை ஆனால் இந்தப் பெரியார்களால் அல்லாஹ்வால் முடியுமான அனைத்தும் செய்யமுடியும் .  அவர்கள் நினைத்தால் கணப் பொழுதில் உலகை வலம் வரலாம் .  ஒரே நேரத்தில் ஒருவர் பல இடங்களில் தரிசனத்தந்து – பல அவதாரமெடுத்து சாகசச் செயல்கள் செய்யலாம்.  இவையெல்லாம் இஸ்லாத்தின் கொள்கையா ? சூபிஸத்தின் கொள்கையா , தப்லீக் அமைப்பு இஸ்லாத்தை வளர்க்கின்றதா ஸூபிஸத்தை வளர்க்கின்றதா ? நீங்களே சொல்லுங்கள் .  இந்தக் கொள்கை - ஒரே நேரத்தில் பல இடங்களில் பல உருவமெடுக்கும் கொள்கை சூபிகளின் கொள்கையா இல்லையா ? அப்படியானால் தப்லீக்கும் சூபித்துவத்துக்கும் தொடர்பு இருக்கின்றதா இல்லையா ? சொல்லுங்கள் .
வஸ்த்துக்களால் எதுவும் ஆவதில்லை.  அல்லாஹ்வால்தான் அனைத்தும் ஆகின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ?? தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)

அதே போன்று இஸ்லாத்தின் ஆணிவேராகத் திகழ்வது இஸ்லாமிய அகீதா எனும் இறை நிர்ணயக் கோற்பாடு . அல்லாஹ்வைப் பற்றிய அவனது மலக்குகள் வேதங்கள் நபிமார்கள் பற்றிய விடயங்களெல்லாம் அகீதா - ஒவ்வொரு முஃமினும் கட்டாயம் நம்பிக்கை கொள்ள வேண்டிய பகுதியில் அமையும் . இவ்விடயத்தில் ஒரு முஸ்லிமிடம் சரியான நம்பிக்கை இருத்தல் அவசியம் . இதிலே கோளாறு இருந்தால் அவனது இறை நம்பிக்கையில் கோளாறு உள்ளதாகவே கருதப்படும் . ஆனால் தப்லீக்கின் பெரியார்களிடத்தில் இது சம்பந்தமாக இருந்த சில நம்பிக்கைகளைப் பார்க்கும் போது இந்துப் புராணங்கள்,மூடநம்பிக்கைகளே தோற்றுப் போகுமளவுக்கு அவை இருப்பதைக் காண முடிகின்றது .கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை முதலாவது நம்பராக வைத்துச் செயற்படும் தப்லீக் பெரியார்களிடமே இக்கலிமாவின் போதனைக்கு மாற்றமான ஈமானுக்கெதிரான எத்தனையோ ராங் நம்பர்கள் -தவறான நம்பிக்கைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது . அவற்றில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .

சம்பவம் இல: 1-
iஷேக் இல்யாஸ் (றஹ்) அவர்கள் சொல்கின்றார்கள்;...
'இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பப்படி உருவாக்க வில்லை . அது எனக்குக் கொடுக்கப்பட்டது அவ்வாறு செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது
இதற்கு விளக்கமாக மற்றொரு இடத்தில் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் 'அல்லாஹ்தான் இல்யாஸ் அவர்களுக்கு இந்த விடயத்தை உதிப்பாக்கி அவர்களது இதயத்தில் போட்டான்' என்கின்றார்கள் இவை இல்ஹாமாகவோ கனவிலோ அவர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டனவாம் .
 (ஆதாரம் - தப்லீக்கே தஹ்ரீக் ப:57)

கட்டளையிடப்பட்டது என்றால் யாரால்?? அதற்கு விடையாக அல்லாஹ்வால் என தெளிவாகக் கூறிவிடுறார்கள் . அல்லாஹ்வின் கட்டளை வருவது நபிக்கே அப்படியானால் அவர்களும் நபியோ ?? நபிமார்களைத் தவிர வேறு யாராகினும் ஒருவரின் எண்ணத்தில் கனவில் வருவதெல்லாம் உண்மையாக முடியாது . அவை சரியா தவறா? என குர்ஆன் ஹதீஸைக் கொண்டே முடிவு செய்ய வேண்டியுள்ளது . ஒவ்வொருவரும் எனது கனவில் அல்லாஹ் இப்படிக் கட்டளையிட்டான் , நபி வந்து இப்படிச் சொன்னார்கள் என்று சொல்ல ஆரம்பித்தால் குர்ஆன் எதற்கு ஹதீஸ் எதற்கு ??
எனவே கனவில் வருவது இறை வாக்கு என்று நம்புவதே ஈமானுக்கு முரணான விடயமாகும் . இல்ஹாமில் சொல்லப்பட்டது என்பதும் ஈமானுக்கு முறணானதாகும் .
'முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்' எனும் கலிமாவின் அர்த்தத்திலேயே இது விளக்கப்படுகின்றது .நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்வது நான்கு அம்சங்களை உள்ளடக்கியிருப்பதாக அல்குர்ஆன் போதிக்கின்றது .

 அவர்கள் இட்ட கட்டளைக்கு அடி பணிதல் ;
 அவர்கள்சொல்வதையெல்லாம் உண்மைப்படுத்தல்; .
 அவர்கள் தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து வாழுதல்
 -அவர்கள் சொல்லித்தந்தவாறே அல்லாஹ்வை வழி படல்.

ஆனால் தப்லீக்கில் இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டு அவர்களின் சொந்த வியாக்கியானங்களே இஸ்லாமெனப் போதிக்கப்படுகின்றன ..

சம்பவம் இல: .2-
அல்லாமா ஸூபி இக்பால் அவர்கள் தப்லீக் முக்கியஸ்த்தர்களில் ஒருவர் . இவர்கள் கூறுகின்றார்கள்..
மிகப்பெரிய தப்லீக் பெரியார் ஒருவர் இருந்தார்கள் . இவர்களிடம் கஸ்புடைய ஞானம் இருந்தது . இதன்மூலமாக அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் பிரசன்னமாகி உரையாடி மகிழ்வது வழக்கம் . அவர்களிடத்தில் ஷேக் சக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒரு முறை வருகை தந்து தான் ஒரு பயணம் செய்ய இருப்பதாகவும் அதற்காகத் தங்களிடத்தில் இஸ்திகாராத் தேடுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள் இதனைக் கேட்ட ஷேக் அவர்கள் 'ஜக்கரிய்யாவுடைய இதயத்தில் உதிப்பாகும் அனைத்து விடயங்களுமே மேலிடத்திலிருந்தே கிடைக்கின்றன . எனவே இந்தப் பணத்தை விடவும் சிறந்த ஒரு காரியம் கிடையாது' என்றார்கள் .
(மஹ்பூபுல் ஆரிபீன் 52)

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை எனும் கலிமாவின் அர்த்தமே எந்த வணக்கமானாலும் அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும் . அல்லாஹ் அல்லாத பிறருக்கு எவ்வித வணக்கத்தையேனும் செய்தால் அதுவே கொடிய ஷிர்க்காக ஆகி விடும் .இதைத்தான் குர்ஆனும் ஹதீஸூம் பல இடங்களில் போதிக்கின்றன . நபிகளிடத்தில் ஒருவர் மிகப்பெரிய பாவம் எது என்று கேட்டதற்கு அல்லாஹ் உன்னைப் படைத்திருக்கும் போது நீ அவனல்லாத ஒருவனை வணங்குவது என்றார்கள் . (புகாரி இல :9)

இங்கு ஷேகுல் ஹதீஸ் - ஹதீஸ்க்கலை மேதை எனப் போற்றப்படும் ஜக்கரிய்யா மவ்லானா அவர்களோ இஸ்திகாரா – நன்மை நாடல் எனும் இபாதத்தை தனது குருவான ஷேக் ஒருவருக்கு செய்திருக்கின்றார்கள் . குரு நாதர் என்ன சளைத்தவரா? அவர் அதைவிட ஒருபடி மேலே சென்று உங்கள் இதயத்தில் உதிப்பாகும் அனைத்துமே மேலிடத்திலிருந்தான் அதாவது அல்லாஹ்விடமிருந்துதான் வருகின்றது என்று சேர்ந்து பாடுகின்றார். குருவும் நல்ல குரு சிஷ்யனும் நல்ல சிஷ்யன் . அல்லாஹ்வை நேரில் சந்தித்து உரையாடல் எனும் வழி கெட்ட கொள்கை நபிவழிவந்ததா? சூபிகள் வழிவந்ததா? தப்லீக் அமைப்பு சூபிகள் வழிவந்தது என்பதை இப்போதாவது ஏற்கின்றீர்களா?

நபி(ஸல்) அவர்கள் கூட தான் செய்பவை, சொல்பவை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வருபவை என்று சொல்லவில்லை . மாறாக நானும் உங்களைப் போன்ற மனிதன்தான் தப்பு தவறு எனக்கும் ஏற்படும் என்றே சொல்லியுள்ளார்கள் .

 நபியவர்களுக்கு தொழுகையில் தவறு ஏற்பட்டது . (பார்க்க : புகாரி 460 -673)
 வழக்கு விசாரனையின் போது தீர்ப்புகளில் தனக்கு தவறு ஏற்படுமென கூறியுள்ளார்கள் .(புகாரி 227 -6452)
 போர் பற்றிய வியூகம் அமைப்பதில் அவர்களுக்குத் தவறு ஏற்பட்டுள்ளது . (பத்ர் யுத்தம்- ரஹீக் 128)

இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கலாம் . நபியவர்களுக்கே மார்க்க விடயங்களில் மாத்திரமே தவறு ஏற்படாது . ஏற்பட்டாலும் உடனே அல்லாஹ் சுட்டிக் காட்டி விடுவான் . இப்படியிருக்க தனது ஷேக்கிடம் இஸ்திகாரா தேடுவதுதான் லாயிலாஹ இல்லல்லாஹ் கலிமாவுக்கு இவர்கள் கொடுக்கும் மதிப்பா ?சம்பவம் : இல :3
ஷேக் அப்துர் ரஸீத் கன்கோயி எனும் தப்லீக் பெரியார் கூறுகின்றார் .
'பனாஃ எனும் (ஒருவகை மெய்மறந்த) நிலையில் நான் இருக்கும் போதெல்லாம் எந்த விடயத்தை முடிவு செய்வதாயினும் ஷேக் இம்தாதுல்லாஹ்விடம் ஆலோசித்தே செய்வது வழக்கம் . பின்பு பனாஃ நிலையின் உயர் அந்தஸ்த்துக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்களைக் கண்டு ஆலோசித்தே முப்பது வருடங்களாக எந்த வித முடிவையும் எடுத்து வருகின்றேன் . அதற்கு அடுத்த நிலை இஹ்ஸான் எனும் நிலைதான் என்றார்கள் (
தீஸ் மஜாலிஸ் ப: 311 , மஹ்பூபுல் ஆரிபீன் : ப: 57)

அதாவது இவர்களிடம் இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை நேரில் கண்டு அவனுடன் நேரடியாக உரையாடும் நிலையை அடைந்தேன் என்று அர்த்தம். பனாஃ எனப்படுவது சூபிகள் தமக்கு இருப்பதாகக் கூறும் ஒருவகை போதை நிலை . அதாவது தரீக்கத்தின் வழிநடந்த இவர்களுக்கு மூன்றாவது படிநிலையாக பிரபஞ்சம் அனைத்துமே அல்லாஹ்வின் வெளிப்பாடே என்பது புலப்படுமாம் .அந்த அதிர்ச்சியால் ஏற்படும் போதைக்கே பனாஃ எனப்படும் . இப்போது சொல்லுங்கள் தப்லீக் பெரியார்களின் கொள்கையும் சூபிகளின் கொள்கை களும் ஒன்றா இல்லையா? .

இதே போன்று தானே சூபிகளும் அல்லாஹ்வை நேரில் காண்பதாகப் புருடா விட்டுக் கொண்டிருந்தார்கள் . அப்படியாயின் இவ்விரு பிரிவினரும் ஒன்றா இல்லையா ? நீங்களே முடிவு செய்யுங்கள் .

முற்காலத்தில் வாழ்ந்த இப்னு அரபி , மன்ஸூர் கல்லாஜி போன்றோரும் கூட தாம் நபியுடன் நேரடியாக உரையாடுவதாகக் கூறியே ஹதீஸ்களை எடுக்க மறுத்தனர் .அல்லாஹ்வை நேரடியாகக் காண்பகதாகக் கூறி மார்க்கச் சட்டங்களைப் புறக்கணித்தனர் . இவையெல்லாம் மார்க்கத்துக்கு முரணானவையென அக்காலத்தில் வாழ்ந்த உலமாக்கள் மறுப்பளித்துள்ளனர் . எனவே அக்கால ஸூபிகளுக்கும் இக்கால தப்லீக் பெரியார்களுக்கும் வேறுபாடு என்ன இருக்கின்றது . ??


ஸூபிகள் பேசிய அத்வைதம் தப்லீக்கிலும் உண்டா??

அத்வைதம் என்பது 'இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வே , அனைத்தும் அவனிலிருந்து தோற்றம் பெற்றவைகளே' என்னும் கொள்கையைக் குறிக்கும் . இக்கொள்கையே ஸூபிகளின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது என்பதை முன்னர் நாம் அறிந்திருக்கின்றோம் . இதே கொள்கை தப்லீக்கின் பெரியார்களிடமும் இருக்கின்றதா? என்பது பற்றி பின்வரும் தகவல்களைப் படித்தபின் வாசகர்களான நீங்களே முடிவு செய்யவேண்டியுள்ளது.

இது சம்மந்தமான இன்னும் சில ஆச்சரியங்களை உங்களுக்கு எடுத்துக்காட்ட விளைகின்றேன் .

ஆச்சரியம் 1-
ஜக்கரிய்யா மௌலானா அவர்கள்; கூறுகின்றார்கள் ..
'அல்லாஹூத்தஆலாதான் உண்மையில் அனைத்து அழகினதும் ஊற்றாக இருக்கின்றான் . உண்மையில் உலகில் இருக்கும் அழகு அனைத்தும் அவனது அழகேயன்றி வேறில்லை . (தப்லீக் தஃலீம் தொகுப்பு ப: 300)

அதாவது உலகிலுள்ள அழகானவை அனைத்தும் அவனது பிரதிபலிப்பே என்பதே இதன் அர்த்தம்.

தனது மற்றுமொரு நூலில் ..
'ஒரு அடியான் தன் எஜமானான அல்லாஹ்வின் கட்டளை, வரம்புகளை மீறுவதன் ரகசியம் யாதெனில் அல்லாஹ் அடியார்களைத் தனது வடிவத்திலேயே படைத்துள்ளான் .எனவே அல்லாஹ்வுக்கு ஜலாலியத்தான (அதிகாரமிக்க) பண்புகள் இருப்பதால் அவனது அடியார்களிடத்திலும் அந்தப் பண்பின் வெளிப்பாடுகள் தோன்றுகின்றன அதனால்தான் அவனிடமிருந்து பாவச் செயல்கள் இடம்பெறுகின்றன (உம்முல் அம்ராழ் ப: 7)

அல்லாஹ் மனிதனின் உருவத்தை உடையவன் என்று சொல்வது மட்டுமின்றி அவன் ஏன் பாவம் புரிகின்றான் என்பதன் காரணத்தை விளக்கி பாவம் புரிவதை நியாயப்படுத்தும் விதத்தைப் பாருங்கள் . என்னே விளக்கம் ?? .அப்படியானால் பாவம் புரிந்தவனைத் தண்டிப்பதும் அர்த்தமற்றது தானே !

ஆச்சரியம் 2
ஜக்கரிய்யா மௌலானா தனது குருநாதர் ஷேக் இம்தாதுல்லாஹ் அவர்கள் நவின்றதாகக் கூறுகின்றார்கள் ..
'ஷேக் அவர்கள் ஹக்கீக்கத் (யதார்த்தத்தைக்) காணக் கூடியவர்களாக இருந்தார்கள் .(அதாவது அல்லாஹ்வை நேரடியாகக் காண்பவர்கள் என்பது அர்த்தம்) அவர்கள் சொல்வார்கள் 'ஒரு ஆண்; பெண்ணின் தோற்றத்தில் இருக்கின்றான்; . பெண்ணோ அல்லாஹ்வின் தோற்றத்தில் இருக்கின்றாள்; . ஆண்பெண்ணுக்குக் கண்ணாடியைப்போன்றவன். பெண் அல்லாஹ்வுக்குக் கண்ணாடியைப் போன்றவள் . எனவே பெண்ணும் அல்லாஹ்வைக் காட்டும் கண்ணாடி தானே ! அதனால்தான் அவளிலே அல்லாஹ்வின் அழகு வெளிப்பட்டுள்ளது . அதை அவசியம் நாம் காண வேண்டும் . (ஸமாயில் இம்தாதிய்யா ப:70)

ஆச்சரியம் 3
மேலும் ஜக்கரிய்யா மொலானா கூறுகின்றார்கள் .
'ஸூபித்துவத்தின் ஆரம்பமே வஹ்தத்துல் வுஜூத் (எல்லாம் அவனே எனும் அத்வைதக் கொள்கைதான்) என்று கூறிவிட்டு மற்றொரு இடத்தில் 'இப்போதுள்ள காலம் முழு மூச்சுடன் சூபித்துத்தின் பக்கம் அழைப்பதற்கும், அதன்படி செயற்படுவதற்கும் பொருத்தமான காலமாகும்' என்று கூறுகின்றார்கள் . (திக்ரு இஃதிகாப் கே அஹமிய்யத் ப: 95)

இப்போது புரிந்து விட்டதா ? இவர்களது சுய ரூபம் . எல்லாமே அல்லாஹ்தான் என்பதே சூபித்துவத்தின் அடிப்படை என அவர்களே ஏற்றுக் கொண்டு விட்டு பின்னர் அதன் பக்கம் முழு மூச்சுடன் அழைப்பதற்கான தருனம் இதுவே என்கின்றார்களே ! அப்படியானால் இவர்கள் 'எல்லாமே அல்லாஹ்வே' எனும் சூபித்துவத்தின் பக்கம்தான் அழைக்கின்றார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் என்னவிருக்கின்றது ?
.
ஆச்சரியம் 4-
மற்றுமொரு இடத்தில் ஜக்கரிய்யா மௌலானா சொல்கின்றார்கள்...
அல்லாஹூத்தஆலா குர்ஆனிலே 'ஹூவல் லாஹிறு' அவனே வெளியானவன் என்று கூறும் வார்த்தை உங்கள் சிந்தனையிலிருந்து நீங்காதிருக்க வேண்டும். நீங்கள் நன்கு சிந்தியுங்கள் ஒரு சிஷ்யனின் யதார்த்தத்திலும் வெளித்தோற்றத்திலும் அல்லாஹ்வே இருக்கின்றான் . இதனை அவன் நன்கு இதயத்தில் பதித்தால் அல்லாஹ்வின் தாத்துதான் (சடம் தான்) உலகத்திலும் (மனிதனாக) வெளியாகியுள்ளது என்பதை சிந்திப்பான் . (ஸக்காலத்துல் குலூப் ப: 89)

மௌலானா அவர்களின் கொள்கை 'எல்லாமே அல்லாஹ்தான்'; எனும் சூபிகளின் கொள்கைதான் என்பதில் இனியேனும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா?
அவர்கள் எல்லாம் இறைவனே எனும் கொள்கையில் இருந் தார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் வேறு என்ன வேண்டியிருக்கின்றது .

ஆச்சரியம் 5
சூபித்துவ பித்தரான 'எல்லாமே அல்லாஹ்தான்' எனும் கொள்கையின் ஆரம்பப்ப் பிரச்சாரகனாகிய மன்ஸூர் அல்ஹல்லாஜி என்பவனைப்; பாராட்டிக் கூறிய கவிதையொன்றில் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறுகின்றார்கள் ....
'மன்ஸூர் ஹல்லாஜியை (இஸ்லாமிய ஆட்சியாளர்கள்) சிலுவையில் அறைந்ததற்குக் காரணம் .அவர் அல்லாஹ்வுடைய விடயத்தில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். நான்தான் அல்லாஹ் என்று சொன்னார் . அவரது இந்த வார்த்தை உண்மைதான். எனினும் அதை அவர் அப்படிப் பகிரங்கப் படுத்தியிருக்கக் கூடாது . (வலிய் காமில் ப: 249)

நான்தான் அல்லாஹ் என அந்தக் கிறுக்கன் கூறியதையும் உண்மையெனக் கூறும் மௌலானாவை என்னவென்று கூறுவது என்று நீங்களே முடிவு செய்யுங்கள் .

ஆச்சரியம் - 6
திக்ர் செய்யும் ஒழுங்குகள் பற்றி மௌலானா ஜக்கரிய்யா அவர்கள் சொல்லும் போது...
'திக்ரின் போது அல்லாஹூ நூருஸ்ஸமாவாத்தி வல் அர்ழ் - அல்லாஹ் வானங்கள் ,பூமியுடைய ஒளியாவான் எனும் வசனத்தை மனதில் முன்னிறுத்த வேண்டும் .எல்லா இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றான் அவனது ஒளி அண்ட சராசரங்கள் அனைத்திலும் வியாபித்துள்ளது என்று எண்ணிக் கொண்டு அவனது ஒளியில் தானும் சங்கமித்து மூழ்கி விட்டதாக எண்ண வேண்டும் . (ஸகாலதுல் குலூப் ப: 144)

கலிமா லாயிஹ இல்லல்லாஹ் -- வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர எவருமில்லை . என்ற கலிமாவை தம் அடிப்படை விதிகளில் முதன்மையானதாக ஆக்கிய தப்லீக் பெரியார்கள் தமது நூல்களில் எழுதி வைத்துள்ள கலிமாவுக்கு முரணான விடயங்கள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன் இவை போன்ற நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விடயங் கள் இவர்களின் நூல்களில் மலிந்து கிடக்கின்றன . இவற்றிலிருந்து தெரிய வருவது யாதெனில் கலிமாவுக்குரிய அர்த்தத்தை விளங்குவதில் இவர்களும் சூபித்துவ வாதிகளை ஒத்த அதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றனர் . அதே அத்வைதக் கருத்துக்களைத் தமது புத்தகங்களில் பரவலாகக் கூறியிருப்பதிலிருந்தும் , அன்றைய உலமாக்களால் வழிகேடர்கள் என்று பத்வா – தீர்ப்புக் கொடுக்கப்பட்ட சூபிகளை முன்னிலைப்படுத்தி அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்து சூபியாக்கள் , பெரியார்கள் ,ஞானவான்கள் என்று தமது நூல்களில் போற்றுவதிலிலிருந்தும் இவை தெளிவாகின்றன .

பெரியார்கள் என்ற காரணத்தால் - நாம் விரும்புபவர்கள் எனும் காரணத்தால் , நாம் தொழுகையாளிகளாக மாறுவதற்குக் காரணமாயிருந்தவர்கள் எனும் காரணத்தால் அவர்கள் சொல்வது அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா ? அல்லாஹ் றஸூலுக்கு மாற்றமானதா இல்லையா என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டா =மா? இஸ்லாத்திக்கு மாற்றமான ஒரு கருத்தை ஒரு குருநாதர் சொல்லிவிட்டால் அது தவறானது என மாணவனுக்கும் தெரிந்தி =ருந்தால் அந்தத் தவறை குருவுக்குப் பக்குவமாகச் சுட்டிக் காட்டிப் புரிய வைப்பதுதான் ஒரு உண்மையான சிஷ்யனுக்கு இலட்சனமேயன்றி அவர் சொல்லிவிட்டால் அது எப்படித் தவறாக முடியும்? என வறட்டுப் பிடிவாதம் பிடிப்பது அறிவற்ற மூடர்களின் செயலாகும் . நபியவர்களுக்கே தவறு ஏற்பட்டிருக்கும் போது இவர்களுக்குத் தவறு ஏற்படுவது என்ன ஆச்சரியமா ? எல்லோருமே மனிதர்கள்தானே !

அன்றாடம் தப்லீக் சகோதரர்களால் தஃலீம் எனும் பெயரில் வாசிக்கப்படும் நூற்களான .அமல்களின் சிறப்பு , ஸதகாவின் சிறப்பு , ஹஜ்ஜின் சிறப்பு போன்ற நூல்களில் கூட இவ்வாறான நச்சுக்கருத்துக்கள் பரவலாகக் காணப்பபடுகின்றன . ஆனால் இவற்றை மொழிபெயர்த்த வல்லவர் தந்திரமாக இப்படியாக அத்வைதக் கருத்துக்களை பாமர மக்களுக்கு எழிதில் புரியாத வண்ணம் மிக்க சமயோசிதமாக மொழிபெயர்த்துள்ளார் .

ஆனால் இதுவரை தமிழில் பெயர்க்கப்படாத தப்லீக் பெரியார்களின் நூல்களில் இவ்வாறான நச்சுக்கருத்துக்கள் தாராளமாக பச்சை பச்சையாகச் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைத்தான் மேலே சுட்டிக்காட்டியுள்ளேன் . தப்லீக் சகோதரர்கள் நபிவழி எது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இவைகளைக் கூறுகின்றேன் . வேறு எவ்வித நோக்கங்களோ காழ்ப்புணர்வோ அல்லாஹ் மீது சத்தியமாக தப்லீக் சகோதரர்கள் மீது எனக்கில்லை என்பதை சத்தியமிட்டுக் கூறுகின்றேன் . ஒரு சில பயபக்தி மிகு பேணுதலான கார்க்கூன்கள் கூட 'உயிரோடு உள்ளவர்களைப் பற்றியே விமர்சிப்பது புறம்பேசியதாக ஆகி விடும் போது மரணித்த இந்த மௌலானாக்களைப் பற்றி எப்படி தாறுமாறாகப் பேசுவது ஆகும் இது புறம்பேசுவதாகாதா ? மரணித்தவர்களைப் பற்றி நல்லவற்றையேயன்றி வேறு எதையும் பேச வேண்டாமென நபியவர்கள் கூறியுள்ளார்களே' என்றெல்லாம் சொல்லி தப்லீக் அமைப்பிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டும் பிரசுரங்களைப் படிக்க வேண்டாமென மக்களைத் தடுக்கின்றனர் .
இதுவும் ஒரு அர்த்தமற்ற வாதமாகும் . உதாரணத்திற்கு ஒருவர் நல்ல ஆட்டிறைச்சி என்று சொல்லிக் கொண்டு செத்த ஆட்டின் இறைச்சியை விற்றுக் கொண்டிருக்கின்றார் . நீங்கள் அதை அவருக்கு இதமாக எடுத்துச் சொல்லியும் , கண்டித்தும் எவ்விதப் பலனும் இல்லை .இப்போது அவனது செயலைப் பற்றிப் பேசினால் புறம்பேசியதாகி விடும் என எண்ணிக் கொண்டு வாய் மூடி இருக்க வேண்டுமா ? அல்லது இது பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமா? இதைச் சுட்டிக்காட்டுவது புறமா? அவதூறா ? இல்லை . இது ஒரு இஸ்லாமியக் கடமை மாத்திரமல்ல . தார்மீகக் கடமையும் கூட . அப்படித்தான் இங்கும் தீன் என்று சொல்லிக் கொண்டு - இஸ்லாம் எனும் லேபிளை ஒட்டிக் கொண்டு தீனுக்கு மாற்றமான எத்தனையோ விடயங்கள் இன்னும் சொல்லப் போனால் ஷிர்க்கான பித்அத்தான விடயங்கள் கூட இஸ்லாம் என்று போதிக்கப்படுகின்றன . எனவே இதனை விடயம் தெரிந்த அனைவருமே சுட்டிக்காட்ட வேண்டும் எதிர்க்கவும் வேண்டும் . நபியவர்கள் பிர்அவ்ன் ஹாமான், அபூ ஜஹ்ல் போன்றவர்களைப் பற்றி உம்மத்துக்கு எச்சரித்தமை எப்படி புறம்பேசியதாகாதோ – கவாரிஜ் எனும் இஸ்லாத்துக்கு மாற்றமான ,ஆனால் நிறைய வணக்கம்புரியக் கூடியவர்களைப் பற்றி எச்சரித்தமை எப்படிப் புறம் பேசியதாகாதோ அப்படித்தான் இதுவும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)
அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கின்றானா ?

அல்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் அல்லாஹூத்தஆலா தனது அர்ஷ் எனும் பீடத்தில் நிலைபெற்றிருப்பதாகவும் தன் படைப்பினரின் அனைத்து செயற்பாடுகளையும் அவதானித்த வண்ணம் இருப்பதாகவும் கூறியிருப்பதைக் காணக் கூடியதாயிருக்கின்றது .

றஹ்மானான அல்லாஹ் அர்ஸிலே நிலை கொண்டிருக்கின்றான். (ஸூரா தாஹா 5ம் வசனம்)
இதுபற்றி மேலும் விளக்கமாக அன்ஆம் 18,முல்க் 16, பாதிர் 10,மஆரிஜ் 4, ஆல இம்ரான் 55,நஹ்ல் 102, ஸஜதா5, போன்ற இன்னும் பல வசனங்களில் தெளிவு படுத்தியுள்ளான். இதன் விதம் முறைமையைப் பொறுத்த வரை படைப்புக்களின் கற்பனைக்கு மாற்றமாகவே இருக்கும் எனவும் நாம் அறிய முடிகின்றது. நபியவர்கள் அல்லாஹ் மேலே அர்ஷிலே நிலை பெற்றிருக்கின்றான் என்பதை பல்வேறு நபிமொழிகளில் தெளிவு படுத்தியிருக்கி;றார்கள் 'வானத்திலுள்ளவனே நம்பிய என்னை நீங்கள் நம்ப மாட்டீர்களா? என சிலரிடம் வினவியுள்ளார்கள்; .( புகாரி ப:4004)

ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கிருக்கின்றான் என்று நபியவர்கள் கேட்க அவள் வானத்தில் (மேலே) என பதிலளிக்க இவள் முஃமின் இவளை விடுதலை செய்யுங்கள் என்றார்கள். ( முஸ்லிம் 836)

அனைத்து ஸஹாபாத்தோழர்களும் இந்த விடயத்தில் இவ்வாறே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
இது இப்படியிருக்க தப்லீக் பெரியார்கள் அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கின்றான் எனும் இந்துக்களின் கொள்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட மாத்துர்தியா, அஷ்அரிய்யா போன்றோரின் கொள்கையினையே கொண்டிருக்கின்றனர் என்பதை அறியும் போது தான் வேதனையாக இருக்கின்றது. இந்துக்கள் தான் கடவுள் தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் எனும் வழிகெட்ட கொள்கைக்குரியவர்கள் அவர்கள் காபிர்களாதலால் இக்கொள்கையைச் சொல்வது ஆச்சரியமல்ல ஆனால் தப்லீக் பெரியார்கள் ??

திக்ரின் சிறப்புப் பற்றி ஜக்கரிய்யா மௌலானா கூறும் போது 'அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கின்றான். அவனது ஒளி உலகையே வியாபித்திருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு திக்ர் செய்ய வேண்டும்' என்கின்றர்கள். ( ஸக்காலத்துல6; குலூப் 144)

தப்லீக் சகோதரர்களே ! நாம் அனைவரும் நேர்வழியை அடைய வேண்டுமெனும் நோக்கில்தானே இவ்வளவு சிரமப்பட்டு தியாகத்துக்கு மத்தியில் வெயில் மழையைப் பொருட்படுத்தாது பாடு படுகின்றோம். எதற்காக ? எம்மால் ஒருவன் நேர்வழி பெற்று விட்டால் அதன் அளப்பரிய நன்மை முழுக்க எமக்குக் கிடைக்கும் எனும் ஆசையால் தானே ! அப்படியாயின் நாம் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதும் நூற்றுக்கு நூறு நபிவழியில் உள்ளதுதானா? என்று பார்க்க வேண்டும் தானே ! இல்லா விட்டால் நாம் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இஸ்லாம் என்று சொல்லிக் கொடுத்து விட்டால் , அதன் படி அவன் அமல் செய்தால் அதனால் கிடைக்கும் குற்றத்திலும் எமக்குப் பங்கு ண்டுதானே ! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அப்படி நடந்து விட்டால் எமது நிலை என்ன ? குளிக்கப் போய் சேறு பூசியதாகவல்லவா ஆகி விடும் ? எனவே நீங்களும் பெரியார்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றையெல்லாம் கூறுகின்றேன். உண்மை சற்று கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் புரிந்து விட்டால் அதுவே கரும்பாகி விடும். எனவே பொறுமையுடன் வாசியுங்கள் .


பெரியார்களின் நபி வழிக்கெதிரான செயல்கள், கருத்துக்கள்

'தப்லீக் ஜமாஅத்துக்கெதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்' என்று ஒரு புத்தகமுண்டு. ஜக்கரிய்யா மொலானா தனது கைப்பட எழுதியது. அதில் தேவ்பந்த் ஆலிம்கள் பெரியார்களின் ஏகோபித்த கொள்கைகள் பற்றி அவரது ஷேக் மௌலானா மதனீ எழுதியதைப் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றார் .

1- தேவ்பந்து பெரியார்கள் உஸூல், புரூஉ ஆகிய அனைத்து விடயங்களிலும் இமாம் அபூஹனீபாவைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறு பின்பற்றுவது வாஜிப் என்று சொல்பவர்களுமாவார்கள் இவர்கள் வஹ்ஹாபிகளுக்கு எதிரானவவர்கள். வஹாபிகள் தம்மை ஹம்பலி மத்ஹபு எனக் கூறிக் கொண்டாலும் அதன் சட்டங்களிலொன்றை ஹதீஸூக்கு மாற்றமெனக் கருதினால் அதனை விட்டு விடுவார்கள் .ஆனால் நாங்கள் ஹனபி மத்ஹபைப் பின் பற்றுவது கட்டாயக் கடமை என்பவர்கள் .

2- தேவ்பந் பெரியார்கள் நபியவர்கள் தமது கப்ரில் இவ்வுலகில் இருந்தது போலவே ஹயாத்தாக இருக்கின்றார்கள் .உலகில் ஒருவர் தனிமையிலிருந்து தியானம் செய்வது போல் நபியவர்கள் தனிமையில் இருக்கின்றார்கள் எனும் கருத்தையுடையவர்கள்.

3- நபியவர்களின் சிறப்புகள் அனைத்தும் நிரந்தரமானவை. உலகில் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருப்பவை இனி ஏற்படுபவை அனைத்தும் அவர்களது பொருட்டாலேயே ஏற்படுகின்றன அவர்களே எல்லாவற்றுக்கும் அசல் - சூரியனைப் போன்றவர்கள் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாம் என்பதே தேவ்பந் உலமாக்களின் முடிவான சொல்லாகும்.

4-தஸவ்வுப் - மெஞ்ஞானம் மிகவும் பலன் மிக்கது. ஷேக்கிடம் பைஅத் செய்து கொள்வது மார்க்க முன்னேற்றத்துக்குக் காரணமாக ஆகும் .

5- நபியவர்களுக்கு மார்க்க அறிவு மாத்திரமின்றி இறைவனைப் பற்றிய எல்லா அறிவும் , மற்ற வகையான எல்லா அறிவுகளும் இருந்தன. முன்னோர் பின்னோர் அனைவரின் அறிவும் அவர்களுக்கு இருந்தது. அவர்களுக்குச் சமனான அறிவுள்ள எவரும் பிறக்கவுமில்லை பிறக்கப் போவதுமில்லை.

6-தலாயிலுல் கைராத், புர்தா ஷரீப் போன்றவற்றை ஓதுவதும் அதிகம் பலனளிப்பதாகும். தேவ்பந் பெரியார்கள் இவற்றில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளதோடு புர்தா போல் தாமே இயற்றியுமுள்ளனர் நபியவர்களின் பிறப்பு (மீலாதுன்நபி) மட்டுமல்ல அவர்களைப் பற்றி எதைப் பேசினாலும் அதனால் நன்மையும் பரக்கத்தும் உண்டாகும். . (தப்லீக்- கு - பதில்கள் 180)

இவையனைத்தும் தேவ்பந் உலமாக்களின் கொள்கையென ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறியவைகள். இவற்றிலுள்ள மார்க்க முறணான விடயங்களை நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள். விளக்க வேண்டியதில்லை என நினைக்கின்றேன் .

பாமர மக்களுக்கு தப்லீக் அமைப்பின் மீதும் அதன் பெரியார்கள் மீதும் அளவு கடந்த பற்றும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்திலோ என்னவோ இந்தப் பெரியார்களில் சிலர் தம்மைப் பற்றியோ ,பிற சகபெரியார்களைப் பற்றியோ சில எல்லை மீறிய பேச்சுக்களையும் இவர்கள் வெளிப்படுத்தத் தவ வதில்லை. அதிலே இருக்கும் மார்க்க விரோத விடயங்களைக் கண்டு கொள்வதில்லையோ அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுகின்றார்களோ அல்லாஹ்வுக்கே வெளிச்சம் .

முஹம்மதுர் றஸூலுல்லாஹ் - நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்ற கலிமாவை நாம் மொழிந்து இஸ்லாமாகியிருக்கின்றோம். தப்லீக் சகோதரர்களும் கலிமாவுடைய வாழ்க்கை வர வேண்டும் என்பதற்காகவே தாமும் பாடுபடுவதாக வாதிடுகின்றனர். அப்படியானால் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்றால் என்ன? நபி (ஸல்) அவர்களை ஏற்று அவர்களை வாழ்க்கை வழி காட்டியாக்கி அவர்கள் ஏவியதை எடுத்து நடக்க வேண்டும். தடுத்தவற்றை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நபியவர்களை அன்புவைத்தவர்களாகவும் அவர்கள் வழி நடந்தவர்களாகவும் ஆக முடியும். இதில் தப்லீக் சகோதரர்களுக்கென்ன ? எந்த முஸ்லிமுக்கும் மாற்றக் கருத்துக் கிடையாது. மாற்றுக் கருத்துடையவர் முஸ்லிமாக இருக்கவும் முடியாது .இதனை மனதில் பதித்துக் கொண்டு பின்வரும் சம்பவங்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் .

1- ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் சொல்கின்றார்கள் ..
'எனக்கேற்பட்ட கைசேதமே அந்தோ பரிதாபம் , உங்கள் மீது சத்தியமாகச் சொல்கின்றேன் எனக்கு விரக்தியாக இருக்கின்றது.
என்னை விட்டு விடுங்கள் நான் அப்படியே பாலை வனம் செல்ல விரும்புகின்றேன் .( அகாபிர் கே ஸூலூக் வ இஹ்ஸான். ப: 230)

பாலை வனத்துக்கென்ன ? அசோக வனத்துக்கு வேண்டுமானாலும் போய்வரட்டும். ஆனால் 'உங்கள் மீது சத்தியமாக' என்ற வார்த்தையைக் கவனியுங்கள். சத்தியம் செய்வதாயின் அல்லாஹ்வின் மீது மாத்திரம் செய்யுங்கள் ,அல்லது வாய் மூடியிருங்கள் என்று நபியவர்கள் கூறியிருக்க நபிவழியின் பக்கம் அழைப்பதாகக் கூறும் ஷேக்குல் ஹதீஸ் - ஹதீஸ்கலை மேதைகளே இப்படிச் சொன்னால் .... பிறகு பாமர தப்லீக் சகோதரர்களின் நிலை என்னவோ ?

2- ஜக்கரிய்யா மௌலானா இயம்புகின்றார்கள்...
இப்ராஹீம் இப்னு அத்ஹம் எனும் ஸூபி மகான் ஒரு தடவை இஷாத்தொழுகையை முடித்து விட்டு போர்வையால் போர்த்திக் கொண்டு ஒருக்கணித்துத் தூங்க ஆரம்பித்து விட்டார்கள். பின்னர் எழுந்து உளுச் செய்யாமலேயே ஸூபஹூத் தொழுகையை நிறைவேற்றினார்கள் .நீங்கள் உளுச் செய்யவில்லையே என அன்னாரிடம் கேட்கப்பட்டபோது நானெங்கே தூங்கினேன் ? இரவு முழுக்க சொர்க்கத்துப் பூங்காக்களுக்கிடையிலும் நரகத்தின் ஓடைகளுக்கிடையேயுமல்லவா சதா சுற்றிக் கொண்டிருந்தேன் என்றார்கள் .(திஸ்திய்யா ஷேக்மார் வரலாறு 162)

நபி (ஸல்) அவர்கள் பற்றி தப்லீக்கில்...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தினர் அனைவருக்கும் தூதராகவும் வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்டிருக்கின்றார்கள் அவர்கள் இறுதி நபி அவர்களுக்குப்பின் நபிமாரின் வருகை முற்றுப் பெற்று விட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாதவர்களும் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறியவர்களாகவே கணிக்கப்படுவார்கள். நபியர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி எனும் இறைகட்டளைகளைப் பெற்று அதனை மக்களுக்குச் சொல்வதற்குப் பணிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கென தனிப்பட்ட முறையில் அரிதாக சில சட்டதிட்டங்களை அல்லாஹ் அவர்களுக்கு அருளியுள்ளான் .இது தவிர்ந்த ஏனைய விடயங்களில் அவர்களும் எம் போன்ற மனிதரே... அன்றாட மனிதனுக்கு ஏற்படக் கூடிய பசிதாகம் , ஊன் உறக்கம் .நோய்நொடிகள், கோபம் மகிழ்ச்சி , பிறப்பு இறப்பு போன்ற அனைத்து விடயங்களிலும் அவர்கள் எம்மைப் போன்ற மனிதரே .

இது பற்றி அல்குர்ஆனில்.....
'நபியே நிச்சயமாக நானும் உங்களைப்போன்ற மனிதனே , எனக்கு வஹி அறிவிக்கப்படுகின்றது. (நான் இறைவனல்ல) உங்களின் இறைவன் ஒருவனே என்று நபியே நீங்கள் கூறுங்கள்'. (ஸூரத்துல் கஹ்பு110 ம் வசனம்)

இவ்வாரே உலக விடயங்களில் நான் உங்க ளைப்போன்றவன்தான் என்று நபியவர்கள் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்கள். ஆனால் நபியவர்களைப்பற்றி தப்லீக் பெரியார்களின் நம்பிக்கை எப்படி இருக்கின்றது என்பதைத் தெளிவு படுத்துவதற்காக அவர்களால் கைப்பட எழுதப்பட்ட சில நூல்களிலிருந்தே ஒரு சில தகவல்களைத் தருகின்றேன். அசந்து போய் விடாதீர்கள். ஆச்சரியப் படாதீர்கள். படித்து விட்டு உண்மைதானா என ஆராய்ந்தும் பார்த்ததன் பின் அல்லாஹ்வுக்குப் பயந்து சரியானதொரு முடிவை தப்லீக் சகோதரர்கள் எடுக்க வேண்டும் .


1- பெரியார்களை தரிசிக்க வரும் நபி (ஸல்) அவர்கள் .
ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் சொல்கின்றார்கள்...
எனது மாமிக்கு மரண வேளை நெருங்கிய போது அவர்கள் 'என்னைத்தூக்கி இருத்துங்கள் இதோ நபியவர்கள் என்னிடம் வந்திருக்கின்றார்கள்' என்றார்கள். அதன் பின் அவர்களது இன்னுயிர் பிரிந்தது. எனது பாட்டனார் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் மரணித்த போது அவர்களின் மரண ஊர்வலத்தின் அளவே மூன்று மைல் தூரம் நீளமாயிருந்தது. அவர்களில் கஸ்புடைய ஞானம் கொடுக்கப்பட்ட ஒருவரும் இருந்தார். அவர் ஷேக் அவர்கள் என்னை விரைவாக அடக்கம் செய்யுங்கள் எனக்கு வெட்கமாக இருக்கின்றது .ஏனெனில் நபியவர்கள் எனது வரவை எதிர்பார்த்த வண்ணம் நின்று கொண்டிருக்கின்றார்கள் ' என்று கூறியதாகக் சொன்னார். (தீஸ் மஜாலிஸ்134 ,மொலானா இஸ்யாஸ் ஓர் தீனீ தஃவத் )

அப்படியானால் நபியவர்கள் இன்னும் மரணிக்க வில்லையோ ?? நாம் நபியவர்கள் மரணித்து விட்டதாகவல்லவா நம்பியிருக்கின்றோம். எது சரி ?

இது பற்றி ஸவூதி அரேபிய உலமாக்கள் பத்வாக் குழுவிடம் கேட்கப்பட்ட போது இப்படியான நிகழ்வுகள் நிகந்ததாககக் கூறுவதெல்லாம் குர்ஆன் ஹதீஸூக்கு முற்றிலும் மாற்றமானதாகும். நபியவர்கள் நேரடியாகவோ அல்லது அவர்களது உருவம் மாத்திரமோ மரணிக்கவிருப்பவரிடம் வருவதென்பது அல்குர்ஆன் ஹதீஸூக்கு முரணான விடயமாகும். அவர்களை மறுமையில் அனைவரும் எழுப்பப்பட்டதன் பின் சந்திக்கும் வரைக்கும் யாராலும் காண முடியாது என்றுபல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் பத்வா மார்க்கத் தீர்ப்பு அளித்துள்ளனர். . பார்க்க :( பதாவா இஸ்லாமியா 1- 134 )

2- நபிமார்களைப் போல் பாசாங்கு பண்ணும் மௌலானாக்கள் .
மௌலானா நானூத்வி அவர்கள் கூறுகின்றார்கள். 'நான் சில வேளைகளில் தஸ்பீஹ் மணியைத் தூக்கும் போது அதன் ஒவ்வொரு மணியும் பாறாங்கற்களைப் போன்று சுமையாக இருப்பதை உணர்வேன். இதயத்திலும் நாவிலும் ஒரு வித அடைப்பு ஏற்படுவது போன்றும் உணர்ந்தேன். இது பற்றி மௌலானா ஹாஜி மக்கி அவர்களிடம் வினவிய போது 'இந்தச் சுமை இருக்கின்றதே... இதுதான் அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெறும் போது நபிமார்களுக்கும் ஏற்பட்டது. உமக்கும் அல்லாஹ் நபிமார்களுடைய பொறுப்பைத் தரப்போகின்றான் என்றார்கள். இதே போன்ற நிகழ்வு இல்யாஸ் மொலானா அவர்களுக்கும் ஏற்பட்டது. அது பற்றி றஸீத் அஹ்மத் கான்கோயியிடம் கேட்ட போது அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டு நபியவர்களுக்கும் இதே நிலைதான் வஹி வரும் போது ஏற்பட்டது என்றார்கள். ( ஸவானிஹ் காஸிமி 1- 134)

அல்லாஹ்வின் இறை தியானத்தில் லயித்துப் போன ஒருவர் நபியவர்களைச் சந்தித்த போது அவர்கள் இவ்வாறு கூறினார்களாம் ஜக்கரிய்யா மௌலானா அவர்களது இதயத்திலிருந்து உதிப்பாகக் கூடிய அனைத்துமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைப்பவையே என்றார்களாம். (மஜாலிஸ் திக்ர். ப :12 )

அன்புமிகு சகோதரர்களே.. சற்று ஆழமாகச் சிந்தியுங்கள். அன்று சூபியாக்கள் தம்மை மகான்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு தம் மீது முரீதுகளுக்குப் பிடிப்பும் நம்பகத்தன்மையும் ஒருவகை அச்ச உணர்வும் இருக்க வேண்டுமென்பதற்காக இப்படித்தான் தம்மைப் பற்றி திகிலூட்டக்கூடிய சாகசக் கதைகளையும் , பஞ்ச தந்திரப் புதிர்களையும் முரீதுகளுக்கு அள்ளி வீசி அவர்களை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் வீழ்த்தி தாம் சொல்பவை அனைத்துமே வேத வாக்கு என்று நம்பும் அளவுக்குப் பண்ணி விட்டார்கள். அதற்கும் இந்த தப்லீக் பெரியார்களின் பேச்சுக்களுக்கும் எவ்வித வித்தியாசமும் எனக்குத் தெரிவில்லை. இவற்றைச் சொல்வதன் நோக்கம் அவர்கள் மீது பக்தர்களுக்கு அபார மதிப்பு ஏற்பட வேண்டும் என்பதைத் தவிர- அவர்களது பேச்சை வஹியென நம்பி மாற்றுப் பேச்சு பேசக் கூடாது என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும். இஸ்லாத்தின் பக்கம் அழைப்பவர். குர்ஆன் ஹதீஸின் பக்கம் அழைப்பவர் ; தன்னைப்பற்றிய சுய புகழாரம் பாடுவதன் - தம் குரு நாதர்கள் பற்றித் தேவாரம் பாடுவதக் ரகசியம் என்ன?. புகழ் விரும்பினால் கூட புகழ்ந்து கொள்ளட்டும். ஆனால் எதற்காக நபிமார்களின் சம்பவங்கள் போல் தமக்கும் நிகழ்ந்ததாகக் கூறி நபி போன்று பாசாங்கு பண்ண வேண்டும்??

சற்று சிந்தியுங்கள் நபியவர்களின் வாயிலிருந்து வருபவைகளைப் பொறுத்த வரையிலும் கூட மார்க்க விடயங்கள் மாத்திரமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருபவை. இது தவிர ஏனைய நேரங்களில் அவர்களுக்கே பல தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்படியிருக்க நபியவர்களே நேரில் வந்து அந்தப் பெரியாரிடம் ஜக்கரிய்யா மொலானாவின் இதயத்தில் உதிப்பாகும் அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும் என் எப்படிச் சொல்லியிருக்க முடியும்?. ஒன்று அப்பெரியார் நபியவர்களின் பெயரில் பச்சைப் பொய்யைக் கூறியிருக்க வேண்டும் அல்லது அவரிடம் ஷைத்தான் ஆஜராகி மேற்படி விடயத்தைக் கூறியிருக்க வேண்டும் அப்படியல்ல அது உண்மைதான் என்று வாதிடும் சகோதரர்களைப் பொறுத்த வரை ஜக்கரிய்யா மௌலானா நபியவர்களை விட உயர்ந்தவர்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர் என்றே அர்த்தம். ஏனெனில் தான் சொல்பவை செய்பவை இதயத்தில் உதிப்பவை அனைத்தும் அல்லாஹ்வின் புறத்தலிருந்து வருபவை என்பது நபியவர்களுக்கே கொடுக்கப்படாத ஒரு அந்தஸ்த்து அல்லவா ?
மௌலானா தகிய்யுத்தீன் அலி நத்வி அவர்கள் கூறுகையில் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் தூங்குவார்கள் ஆனால் நபியவர்களைப் போன்று அவர்களின் கண்கள்தான் தூங்கும் இதயம் தூங்காது. (தீஸ் மஜாலிஸ் ப: 29 )

பேசாமல் ஜக்கரிய்யா மௌலானாவும் ஒரு நபிதான் என்று இவர்கள் சொல்லி ஒரு போடு போட்டாலும் ஆச்சரியப்படுவத ற்கில்லை .

3- நபியவர்கள் மரணிக்க வில்லையா ??

அல்குர்ஆன் ஹதீஸ் போதனைப்படி நபியவர்கள் இவ்வுலகை விட்டும் மரணித்து விட்டார்கள். மரணித்தவர்கள் மீண்டும் மஹ்ஷரில் எழுப்பப்படும் வரை கப்ரிலே பர்ஸக் உடைய வாழ் வில் இருக்கின்றனர். இவர்களால் எதையும் கேட்கவோ பார்க்கவோ, செய்யவோ, பதிலளிக்கவோ முடியாது. இந்த வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அல்லாஹ்தான் அறிவான். அனால் இது உலக வாழ்க்கைக்கு முற்றிலும் வேறுபட்டது. நபியவர்கள் மீது நாம் ஸலவாத் சொல்லும் போது அவர்களது உயிரை அல்லாஹ் மீட்டிக் கொடுத்தே பதிலளிக்க வைக்கின்றான் என்று நபியவர்களே கூறியிருக்கின்றார்கள். எனவே அல்லாஹ் உயிரை மீட்டி மக்கள் ஸலாம் சொன்ன விடயத்தை அறிவிக்காத வரை நபியவர்களுக்கே அது பற்றி எதுவும் தெரியாது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது .
ஆனால் தப்லீக் பெரியார்களின் கருத்து இந்த விடயத்தில் எப்படியிருக்கின்றது என்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா ???

ஜக்கரிய்யா மொலானா அவர்கள் சொல்வது ....
'முல்லா ஜாமி அவர்கள் ஹஜ்ஜூக்குச் சென்றார்கள் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு நபியவர்களைப் புகழ்ந்து பாடலொன்றை இயற்றிக்கொண்டு மதீனா செல்லத் தயாரானார்கள் . அப்போது மக்கா அமீரின் கனவில் நபியவர்கள் தோன்றி அவரை மதீனாவுக்குச் செல்ல விடாமல் தடுக்குமாறு சொன்னார்கள் . இதையறிந்த அப்பெரியார் யாருக்கும் தெரியாமல் ஒழித்து மதீனா செல்லத் தயாரானார் . மீண்டும் நபியவர்கள் அமீரின் கனவில் தோன்றி இவரைத் தடுக்குமாறு கூற அமீரானவர் காவலர்களை அனுப்பி அவரைப் பிடித்து சிறையில் அடைத்து நையப் புடைக்க ஆரம்பித்தார்கள் . பின் நபியவர்கள் மறுமுறையும் கனவில் தோன்றி ஏன் அவரைத் துன்புறுத்துகின்றீர்கள் . அவர் எவ்வித குற்றமும் செய்யவில்லை மாறாக அவர் ஒரு பாடலைப் புனைந்து வைத்திருக்கின்றார் . அதை அவர் என் முன்னிலையில் பாடினால் முஸாபஹாச் செய்வதற்காக நான் என் கையை வெளியே கொண்டு வர வேண்டியிருக்கும் . அதனால் மக்கள் மத்தியில் பித்னா ஏற்படும் என்று அஞ்சுகின்றேன் என நபியவர்கள் கூறினார்கள் .  ( ஹஜ்ஜின் சிறப்பு 803 )

இப்றாஹீம் பின் ஸைபான் என்பவர் நபியவர்களின் ஜியாரத்துக்குச் சென்று ஸலாம் கூறிய போது வஅலைக்கஸ்ஸலாம் என அசரீரி கேட்டது . (ஹஜ்ஜின் சிறப்பு 153 )

இது போன்ற சம்பவங்கள் இன்னும் பலருக்கு ஏற்பட்ட விபரங்களை ஜக்கரிய்யா மௌலானா எடுத்துக்கூறி நபியவர்கள் கப்ரில் எம்மைப் போன்று உயிருடன் இருக்கின்றார்கள் நாம் பேசுவதை அவர்கள் கேட்கின்றார்கள் . அதற்கு பதிலும் அளிக்கின்றார்கள் எனும் நபி வழிக்கு மாற்றமான கருத்தை நிலை நாட்டுகின்றார்கள் . தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியவர்களுடைய வாழ்க்கை முறையும் என்று இவர்கள் போடும் கோஷத்திற்கு இதுதான் அர்த்தமோ ? இப்படி தனது கப்ரில் வந்து மண்டியிட்டு பாடல் இசைக்குமாறுதான் நபியவர்கள் வழிகாட்டிச் சென்றார்களோ ?

மற்றுமொரு அதிசய நிகழ்ச்சி ...
றிபாய் நாயகம் அவர்கள் நபியவர்களை ஜியாரத் செய்ய வந்த வேளை கப்ரின் முன்னால் நின்று கொண்டு ஒரு பாடலைப் பாடினார்கள் . அதன் கருத்தாவது ...

நான் உம்மை விட்டும் தூரத்தில் இருந்த போது உம்மை சந்திக்க என் உயிரைத் தூதனுப்பினேன் .பூமி எனது கோரிக்கையை ஏற்று என்சார்பாக என்னுயிரை உம்மிடம் அழைத்து வந்தது . இப்போது நானே உங்கள் சமூகத்துக்கு வந்துள்ளேன் . என்னுதடுகள் (முத்தமிட்டு) பேறு பெறுவதற்காக உம் கரத்தை நீட்டுங்கள் என்று பாடினார்கள் . உடனே நபியவர்களின் கை கப்ரிலிருந்து வெளிப்பட்டது . அதனை றிபாய் நாயகமவர்கள் முத்தமிட்டார்கள் இதனை அவ்வருடம் ஹஜ்ஜூச் செய்த தொண்ணூறாயிரம் பேர் தமது கண்களால் கண்டார்கள் அவர்களில் அப்துல் காதிர் ஜீலானியும் ஒருவராவார்கள் . (ஸதகாவின் சிறப்பு ப : 941 )4- நபியவர்களிடம் நேரடியாக பேசும் பெரியார்கள்.

ஸூபிகள் மாத்திரம் தான் நபியவர்களை நேரடியாகச்சந்தித்து தமக்குத் தேவையான சட்டதிட்டங்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என எண்ணுகின்றீர்களா? அதே இஸ்லாத்துக்கு முரணான கொள்கை தப்லீக் பெரியார்களிடமும் தாராளமாக உள்ளதே! நம்பமுடிய வில்லையா? இதைப் படியுங்கள்.

ஜக்கரிய்யா மௌலானா தமது 21 ஆவது மஜ்லிஸில் கூறியதாக ஷேக் தகிய்யுத்தீன் அவர்கள் கூறுகின்றார்கள்.
'ஷேக் நிலாமுத்தீன் அவ்லியா, கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் அவர்கள் (இவர்களது தர்ஹா இன்றைய டில்லி தப்லீக் மர்க்கஸின் வளாகத்தில் உள்ளது குறிப்பித்தக்கது) இசை கேட்கும் வழக்கமுடையவராயிருந்தார்கள்.  அப்போது டில்லியின் முப்தியாக இருந்த காழி ளியாஉத்தீன் அவர்கள் இதனைக் கடுமையாகக் கண்டித்து வந்தார்கள்.  ஆனால் ஷேக் அவர்களோ எனக்கு மாத்திரம் இசை கேட்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.  ஏனெனில் அது சில நோய்களுக்கு நிவாரணியாகும் என்றார்கள்.  ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத முப்தி அவர்கள் கடுமையாக விமர்சிக்கவே ஷேக்கவர்கள் ' நான் நபியவர்களிடம் எனக்கு இசை கேட்பது ஆகுமென அனுமதியெடுத்துத் தந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என முப்தியிடம் கேட்க அவர்களும் சம்மதித்தார்கள் அன்றிரவு முப்தியவர்களின் கனவில் நபியவர்கள் தோன்றி ஷேக் நிழாமுத்தீன் அவர்கள் இசை கேட்பது ஆகும் அவர்களுக்கு சலுகையளிக்கப்பட்டுள்ளது என்றார்கள்.  அதற்கு முப்தியவர்கள் யா றஸூலல்லாஹ் மார்க்கத்தின் படி தீர்ப்பளிக்கவா? அல்லது கனவில் கண்டபடி தீர்ப்பளிக்கவா? என வினவினார்கள்.
அடுத்த நாள்க் காலை முப்தியைச் சந்தித்த ஷேக் அவர்கள் இனியாவது என்னுடைய விடயத்தில் தலையிடாமல் என்னை விட்டு விடுவீர்களல்லவா? என்றார்கள்.  (தீன் மஜாலிஸ் எனும் நூலில்)

ஜக்கரிய்யா மௌலானாவை தரிசிக்க வந்த நபியவர்கள்.

ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை தம் மஜ்லிஸில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது நபியவர்கள் அவ்விடத்தில் சற்று உயர்ந்த மஜ்லிஸில் உட்காந்திருந்தார்கள்.  அவர்களுக்கு முன்னிலையில் அழகிய புத்தகங்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  அவை அனைத்துக்கும் மேலே ஹஜ்ஜின் சிறப்பு என்ற தஃலீம் புத்தகம் இருந்தது. அதற்குக் கீழ் ஸலவாத்தின் சிறப்பும், அதன்கீழ் ஹயாத்துஸ் ஸஹாபா கிதாபும் இருந்தன.  அவ்வேளை அங்கே யூஸூப் பின்னூரி அவர்கள் வந்து நபியவர்களும் ஜக்கரிய்யா மௌலானாவும் பேசிக் கொண்டிருப்பதைக் செவியுற்று புன்னகைத்த வண்ணமே சென்றார்கள்.
(அறிவிப்பவர் அப்துல் ஹமீம் மௌலானா(ஆப் பைத்தீ ப: 134)

ஹஜ்ஜின் சிறப்பு, ஹயாத்துஸ் ஸஹாபா ஆகிய இரு நூல்களிலும் உள்ள கதைகள் சம்பவங்கள் அனைத்துமே நூற்றுக்கு நூறு உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட அவை புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்களையும் தாண்டி முதலாவது இடத்தில் இருப்பதாகக் கூறி தப்லீக் நூல்களே அனைத்து கிரந்தங்களையும் விட சிறந்தது என்ற தவறான கருத்தை மறைமுகமாகச் சித்தரிக்கின்றார்களே!! பார்த்தீர்களா?.  தமது தவறான வழிகெட்ட சூபிக் கொள்கையை மக்களுக்கு வலுக்கட்டாயமாகத் திணிக்க எப்படியெல்லாம் நாடகமாடுகின்றார்கள் பாருங்கள்.இபாதத்தின் பெயரால் அரங்கேறும் ஷிர்க்குகள்.

இப்பகுதியில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வைப் போல் தெய்வீக தன்மை வாய்ந்தவாகளாகச் சித்தரித்து அவர்களின் பெயரால் செய்யப்படும் ஷிர்க்கான விடயங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டுகின்றேன். இவர்களது வழக்கமான வழிமுறை யாதெனில் முதலில் நபியவர்களைப் புகழ்வதாகக் காட்டிக் கொள்வார்கள் பின்னர் அவர்கள் தம்மையும் தரிசிக்க வருவதாகக் கதையளப்பார்கள், அதன்பின் நபியவர்களுக்கு தெய்வீகத் தன்மைகள் இருப்பது போன்று சித்தரிப்பார்கள், இறுதியில் தமக்கும் அவ்வாரான ஆற்றல் உள்ளதாக வாதிப்பார்கள்.  இது இவர்கள் சூபிகளிடமிருந்து தத்தெடுத்த வழிமுறை.  இங்கு அதற்கான சில ஆதாரங்களை முன் வைக்கின்றேன்.

அல்லாஹ் அல்லாதவர்களிடத்தில் பிரார்த்திப்பது, உதவி தேடுவது கொடிய ஷிர்க்காகும் என அல்லாஹ்வும் நபியவர்களும் போதித்திருக்கின்றனர்.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். ..
அல்லாஹ்வை விடுத்து நீங்கள் பிரார்த்திக்கும் எவருமே அணுவளவு உதவியும் செய்ய சக்தியற்றவர்களாகும். நீங்கள் அவர்களிடம் பிரார்த்தித்தாலும் அவர்களால் அதைக் கேட்க முடியாது.  அப்படித்தான் கேட்டாலும் அதற்குப் பதிலளிக்க முடியாது.  மறுமையில் நீங்கள் ஷிர்க் வைத்ததனால் உங்களை அவர்களும் (காப்பாற்ற) மறுத்து விடுவார்கள்.  (ஸூரா பாதிர் 13-14)

மற்றுமொரு இடத்தில்..

قُلْ لا أَمْلِكُ لِنَفْسِي نَفْعاً وَلا ضَرّاً إِلاَّ مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لاسْتَكْثَرْتُ مِنْ الْخَيْرِ وَمَا مَسَّنِي السُّوءُ إِنْ أَنَا إِلاَّ نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُون الأعراف 188  
நபியே சொல்லுங்கள்.  நான் எவ்வித நன்மை கொடுக்கும் சக் தியையோ, (மக்களுக்குநேரும்) தீங்கைத் தடுக்கும் சக்தியோ சொந்தமாக்கியிருக்க வில்லை.  எனக்கு மறைவான விடயங்கள் பற்றிய ஞானம் இருந்திருப்பின் நல்லவற்றை மாத்திரமே அதி கமதிகம் நான் செய்திருப்பேன், அத்துடன் எனக்கு எவ்வித கெடுதி களும் ஏற்பட்டிருக்காத (வாறும் செய்திருப்பேன்.) (ஸூரத்துல் அஃராப் 188)

நபியவர்களிடத்தில் ஒருவர் மிகவும் கொடிய செயல் எது? எனக் கேட்ட போது அல்லாஹ்வே உன்னைப் படைத்திருக்கும் போது அவனுக்கு நிகராக ஒருவரை ஆக்குவதே மிகக் கொடிய பாவமாகும் என்றார்கள்.  (ஆதாரம் புகாரி 4117.)

இது இப்படியிருக்க தப்லீக் பெரியார்கள் செய்த சில காரியங்களை இந்த நபி மொழியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

1- ஜக்கரிய்யா மௌலானா தான் ஹஜ்ஜூச் செய்த வரலாறு பற்றி எழுதுகையில் ' ஹஜ்ஜ10_க்குப் புறப்பட்டு நாற்பது தினங்கள் சென்ற பிறகு நாங்கள் நபியவர்களின் கப்ருக்கு முன்னால் வந்து நின்று நபியவர்களை நோக்கி 'நாங்கள் பிறருக்கு ஹஜ்ஜூச் செய்ய வந்துள்ளோம், எங்களுக்கு வாகன வசதி கிடைக்காவிட்டால் மிகுந்த சிரமமேற்படும் நபிகளாரே! என்று முறையிட்டோம்.  என்ன ஆச்சரியம் நாங்கள் கூட்டி வந்த காட்டறபிக்கு ஒட்டகமொன்று கிடைத்தது.  (தீஸ் மஜாலிஸ் ப: 44)

2-ஸதகாவின் சிறப்பில் வருவதாவது. .
மதீனாவை அண்மித்த பகுதியில் ஒரு ஹாஷிம் குலப் பெண் வாழ்ந்து வந்தாள்.  அங்கிருந்த சில வேலையாற்கள் அவளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தனர்.  இவர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் அவள் நபியவர்களிடத்தில் தனக்கு அபயமளிக்குமாறு பிரார்த்தித்தாள்.  அப்போது (றவ்ழா) நபியவர்களின் கப்ரிலிருந்து என்னிடம் உனக்கு நல்வழிகாட்டல் இல்லையா? பொறுமையைக் கடைப்பிடிப்பாயாக என அசரீரி கேட்டது.  அதன் பின் விரைவிலேயே அந்த மூன்று நபர்களும் மரணித்து விட்டனர், அவர்களது தொல்லையும் முடிவுற்று விட்டது.  (ஸதகாவின் சிறப்பு 961)

நபியவர்கள் தம் கப்ரிலிந்தவாறே பணம் கொடுத்த அதிசயம்.

ஸதகாவின் சிறப்பில் வருவதாவது. ..
முஹம்மதிப்னு முன்கதிர் என்பவர் சொல்கின்றார்.  எனது தந்தையிடத்தில் ஒருவர் ஒருதொகைப் பணத்தை அமானிதமாக ஒப்படைத்து விட்டு ஜிஹாதுக்குச் சென்றார்.  உமக்குத் தேவைப்பட்டால் அதை எடுத்துச் செலவு செய்யுங்கள் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிச் சென்றார்.  எனது தந்தைக்கு அவசியத்தேவை ஏற்பட்டதனால் அதை எடுத்துச் செலவு செய்யும்படியாகி விட்டது.  பின்னர் அம்மனிதர் வந்து தனது பணத்தைக் கேட்ட போது (அவரிடம் பணமில்லை) அடுத்த நாள் தருகின்றேன் என்று வாக்களித்து விட்டார்கள்.  பின்பு கவலையுடன் நபியவர்களுடைய கப்றுக்குச் சென்று அங்கு தனது பிரச்சினையை நபியவர்களிடம் முறையிட்டுப் பிரார்த்தித்தார்கள்.  பின் மிம்பறுக்குப் பக்கத்திலும் சென்று பிரார்த்தித்தார்கள். ஸூபஹ் வேளை நெருங்கியிருக்கும்.  எனது தந்தை கப்ரிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். என்ன ஆச்சரியம் !! இருளிலே ஒரு அசரீரி. . முஹம்மதின் தந்தையே இதைப் பிடியுங்கள்! என்று ஒரு சத்தம்.  என் தந்தை கை யை நீட்டியதும் ஒரு பணப்பையை நபியவர்கள் கப்றுக்குள் இருந்தவாறே கொடுத்தார்கள்.  அதை எடுத்து தனது அமானிதத்தை தந்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.  (ஸதகாவின் சிறப்பு 943)

தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையும் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் அல்லாஹ்வும் நபியவர்களும் தடுத்த ,நபியவர்கள் தமது வாழ்நாள் அனைத்தையும் எதை ஒழித்துக்கட்டப் பாடுபட்டார்களோ அந்த ஷிர்க்கையும் தர்ஹா வழிபாட்டையும் இபாதத் எனும் பேரில் பாவமறியா பாமர வெள்ளை உள்ளம் கொண்ட மக்களிடம் விதைக்கும் இந்த நிலையை யாரிடம் முறையிடுவது? அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும்.  இவ்வாறான விடயங்கள் தீனுடையவை என்பதை இவர்களுக்கு அல்லாஹ் சொன்னானா? நபியவர்கள் சொன்னார்களா? இவையெல்லாம் பச்சை ஷிர்க் என்று அல்லாஹ்வும் றஸூலும் சொல்லவில்லையா? அப்படியிருக்க குர்ஆன் ஹதீஸில் தடுக்கப்பட்டவைகளையெல்லாம் இபாதத் என அறிமுகப்படுத்தும் இவர்கள் தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியுடைய வழியும் என்று சொல்லி அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி!

இந்த பச்சை ஷிர்க்கான தர்ஹா வழிபாடும் கப்ரில் மரணித்தவர்களிடம் பிரார்த்திப்பதும் இவர்களைப் பொறுத்தவரை இபாதத்களாகக் கருதப்படுவதால்தானோ என்னவோ தப்லீக்கின் கேந்திர ஸ்த்தலமாகி;ய டில்லி மர்க்கஸின் முன் இருக்கும் தர்ஹாவில் நடக்கும் அத்தனை அனாச்சாரங்களையும் வேடிக் கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  டில்லி மர்கஸ் பள்ளிவளாகத்திலும் மூன்று கப்ருகள் இன்று வரைக்கும் அகற் றப்படாமல் உள்ளன.  இவர்களைப் பொறுத்த வரைக்கும் கப்ர் வணக்கமெல்லாம் இபாதத்களல்லவா? அவற்றை எப்படி அகற்ற முடியும்?.

 • இது போல ஹஜ்ஜூக்குச் சென்ற ஒருவர் பசியேற்பட்ட போது நபியவர்களிடம் நான் உங்கள் விருந்தாளி என்று கப்ரில் சொல்லி விட்டு உட்காந்திருக்க கப்ரிலிருந்து நபியவர்களின் கைவெளிப்பட்டு ஒரு பண முடிப்பைக் கொடுத்தாகவும் அதிலுள்ள பணத்தின் பரக்கத் காரணமாக நீண்ட நாட்களுக்கு அதை செலவுசெய்த கதையைப் பாருங்கள் (பளாயிலுல் ஹஜ் 925)

 • நபியவர்கள் கப்ரிலிருந்தவாறே ஒருவருக்குப் போர்வை கொடுத்த கதை பார்க்க: ஹஜ்ஜின் சிறப்பு 944.

 • நபியவர்கள் கப்ரிலிருந்தவாறே ரொட்டி கொடுத்த சம்பவம் பார்க்க வேண்டுமா? பாருங்கள் ஹஜ்ஜின் சிறப்பு பக்கம் 797

 • மற்றுமொருவர் நபியவர்களிடம் பசிக்கு உணவளிக்குமாறு பிரார்த்தித்ததும் கிச்சடியும் குழம்பும் கொடுத்த நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பின் புரட்டுங்கள் ஹஜ்ஜின் சிறப்பு பக்கம் 945

 • ஹ் வலிய்யுல்லாஹ் ஒருமுறை நபியவர்களிடம் உணவு கேட்டு முறையிட்ட போது நபியவர்கள் கனவில் சுவையான சோறும் நெய்யும் அடங்கிய மரவையைக் கொடுத்தாகவும் பின்னர் நீர் புகட்டியதாகவும் விழித்துப் பார்த்த போது கையில் உணவின் நெய்மணம் வீசியதாகவுமுள்ள சம்பவத்தைப் பார்க்க ஸதகாவின் சிறப்பு பக்கம் 799
நபியவர்கள் தமது தோழர்களுக்குப் போதனை செய்த போது நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள் எவ்வித உதவி தேடுவதாயினும் அல்லாஹ்விடமே தேடு என்று போதித்தார்களல்லவா? அவர்களின் கப்ரின் முன்னாலேயே அவர்களது பெயரிலேயே இத்தனை அனாச்சாரங்களும்; அரங்கேற்றப்படுகின்றன. இத்தனைக்கும் வஸ்த்துக்களால் எதுவும் ஆவதில்லை. அல்லாஹ்வினால்தான் அனைத்துமே ஆகின்றன என்றும் சொல்லிக் கொள்வார்கள். அப்படியானால் நபிகளார் உட்பட கப்ரில் அடக்கப்பட்டிருக்கும் அனைவருமே அல்லாஹ்தானோ? நஊது பில்லாஹ்.

கப்ர் வணக்கம் கூடுமா? கப்ரிடம் பரக்கத் தேடலாமா? கப்ராளிகளுக்கு நல்லமல்கள் செய்து அனுப்பலாமா? அவர்களுக்கு நடப்பவை எமக்குத் தெரியுமா? எமக்கு நடப்பவை அவர்களுக்குத் தெரியுமா?

ஆம் என்பதே தப்லீக் நூல்களிலிருந்தும் அதன் பெரியார்களின் வழிகாட்டல்களிலிருந்தும் எமக்குக் கிடைக்கும் பதிலாகும். அதற்கு முன் இதைப் பற்றி நபியவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள் ?

நபியவர்கள் சொல்லியுள்ளார்கள். .
எனது கப்ரை விழா எடுக்கப்படும் இடமாக்கி விடாதீர்கள். யூத கிறிஷதவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.  ஏனெனில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரை அடக்கி விட்டு (அதில் கட்டடம் கட்டி) அதனை வணங்குமிடமாக்கிக் கொள்வார்கள்.  இவர்கள்தான் படைப் பினங்களிலேயே மிகக் கெட்டவர்கள் என்றார்கள்.  (ஆதாரம் புகாரி 480) .

அதே போன்றே கப்ரை வலம் வரல், கப்ரின் மண்ணை எடுத்து பரக்கத்துப் பெறல், அதன் பெயரில் நேர்ச்சை செய்தல், கப்ராளிகளுக்கு நன்மைகளைச் செய்து ஹதிய்யாச் செய்தல் அனைத்துமே இஸ்லாம் தடை செய்த பித்அத்தான ஷிர்க்கான விடயங்களாகும். 

இந்த அனைத்து விடயங்களும் தப்லீக் பெரியார்களால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் ஏன்? அவர்களே முன்னின்று இந்த விடயங்களைச் செய்ததற்காக ஆதாரங்களைக் காணும் போது தான் ஆச்சரியங்கலந்த வேதனையாகவிருக்கின்றது.

மௌலானா ஜக்கரிய்யா சொல்கின்றார்கள். ..
'கப்றிலுள்ள பெரியார்களுக்கு நல்லமல்களைச் செய்து அனுப்புவதில் அதிக கவனஞ் செலுத்துங்கள்.  ஏனெனில் நீங்கள் இப்படிச் செய்யும் போது கப்ராளிகளுடைய றூஹூகள் உங்களின் பக்கம் திரும்பும் அவற்றிலிருந்து பல பரக்கத்துக்களும் உதவிகளும் உங்களுக்கு உண்டாகும்.  (தீஸ் மஜாலிஸ் 211)

மேற்படி செய்த அல்லாஹ்வின் கட்டளையா? நபியின் வழிமுறையா?,

மற்றுமொரு இடத்தில். .. அவ்லியாக்களுடைய கப்ருகளைத் தரிசித்து அதன் மூலம் ஏதேனும் உதவிகளை ஒருவர் பெற்றால் அது தான் பைஅத் செய்திருக்கும் குருநாதர் - ஷேக்கிடமிருந்தே உண்டானது என எண்ண வேண்டும்.  ஏனெனில் அந்த அவ்லியாவின் கப்ரிலிருந்து கிடைத்த பரக்கத் இந்த ஷேய்க்கின் ஊடாகவே கிடைத்திருக்கின்றது.  (ஸக்காலத்துல் குலூப் 137)

ஸவானிஹூ முஹம்மத் எனும் தப்லீக் பெரியாரின் நூலொன்றில் உள்ளதாவது. ..
'ஜக்கரிய்யா மௌலானா அவர்களது சீடர்களில் ஒருவர் ஷேய்க் கன்கோயி அவர்களின் கப்ரைத் தரிசித்தார்.  அப்போது ஷேக் அவர்கள் கப்ரினுள் 'கவ்கப் துர்ரிய'; எனும் கிதாபை வாசித்துக் கொண்டிருக்கக் கண்டார்.  அதே போல் கன்கோயி அவர்கள் மரணித்த வேளை செய்யித் முஹம்மத் என்பவர் அவர்களது கப்ருக்கு அருகிலேயே முறாக்கபாவில் இருந்து கொண்டிருந்தார்கள்.  (ஸவானிவ் முஹம்மது யூஸூப் 135)

ஷேய்க் சர்தார் முஹம்மது பாக்கிஸ்த்தானி அவர்கள் கூறுகின்றார்கள் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியின் அல் மஜீத் கதவுக்குட்பட்ட இடம் பத்து வருடங்களாக தப்லீக் ஜமா அத்தினரின் கேந்திர ஸ்த்தலமாக இருந்து வந்தது. அப்போது தப்லீக்கின் அமீராக இருந்த முஹம்மது யூஸூப் திஹ்லவி அவர்களுடன் டில்லியில் நிலாமுத்தீன் பகுதியில் இருந்த இல்யாஸ் (றஹ்) அவர்களின் கப்றுக்கு நள்ளிரவில் செல்வோம் அங்கு கப்ரைச் சுற்றி நீண்ட நேரம் தலைகளைத் தாழ்த்தியவர்களாக முறாக்கபா எனும் சிந்தனையில் இருப்போம்.  அப்போது(ஹயாத்துஸ் ஸஹாபா) எனும் நூலை எழுதிய யூஸூப் (றஹ்); சொல்வார்கள் 'நிச்சயமாக இந்தக் கப்றிலிருக்கும் மௌலானா இல்யாஸ் (றஹ்) அவர்கள் தனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் ஒளியினைத் தமது சீடர்களுக்கு அவரவர் தரீக்காவின் மீது கொண்ட பற்று நம்பிக்கைக் கேற்ப பங்கு வைத்துக் கொடுப்பார்கள்' என்று கூறினார்கள்.  (தப்லீக் ஜமாஅத் எனும் நூல் 63-65)


மறைவான ஞானத்தை மனிதனும் அறியலாமா ?

அல்லாஹ்கூறுகின்றான்...
நபியே சொல்லுங்கள்.  அல்லாஹ்வைத்தவிர வானத்திலோ பூமியிலோ உள்ள எவருமே மறைவான விடயங்களை அறிய மாட் டார்கள்.  (அந் நம்ல் 65)


நபியே கூறுங்கள்.. எனக்கு மறைவான விடயங்கள் தெரியுமென்றிருந்தால் எனக்கு நன்மை பயப்பவைகளை மாத்திமே செய்து கொண்டிருந்திருப்பேன். எவ்வித தீங்குகளும் எனக்கு ஏற்பட்டிருக்காது. . (அல் அன்பால் 188)

இவற்றைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் பெரியார்கள் பற்றிய திகிலூட்டும் சம்பவங்களையும் வாசியுங்கள்.

1-தான் மரணிக்கும் நேரத்தை முன்கூட்டியே சொன்ன பெரியார்கள்.
யஃகூப் அஸ்ஸனூஸிய் சொன்னதாக ஜக்கரியா மௌலானா சொல்கின்றார்கள். .
'எனது சீடர்களில் ஒருவர் என்னிடத்தில் வந்து நான் நாளை ளுஹருக்குப் பின் மரணிப்பேன் என்றார். மறுநாள் ளுஹர் நேர மானதும் சென்று கஃபாவைத் தவாபு செய்தார். அதன் பின் சொன்னது போன்றே மரணித்து விட்டார்.  நானே அவரைக் குளிப்பாட்டி கபனும் செய்தேன்.  கப்றுக்குள் அவரை வைத்த போது கண்களைத் திறந்து விட்டார்.  நானோ ஆச்சரியத்துடன் மரணித்ததன் பின் எப்படி உயிர் பெற்றாய்? என்றதும் ஆம் நான் உயிருடன் தான் இருக்கின்றேன் அல்லாஹ்வின் மீது காதல் வைத்திருக்கும் எவரும் மரணிப்பதில்லை என்றார். (ஸதக்காவின் சிறப்பு 657)

இதில் எத்தனை அபத்தங்கள் என்பதைப் பார்ப்போம்.

 • ஷேக்குக்கே தெரியாத ஞானம் சிஷயனுக்குத் தெரிந்திருக்கின்றது.  இவ்வகையில் இவர் குருவைமிஞ்சிய சீடன்.

 • இவர் மரணமடைந்த நேரம் நாள் போன்றவற்றைத் துல்லியமாக அறிந்து வைத்திருந்திருக்கின்றார்.  அப்படியானால் அல்லாஹ் குர்ஆனில் கூறும் பின்வரும் வசனம்? பற்றி
  எந்தவொரு ஆத்மாவும் நாளைக்கு என்ன நடக்குமென அறியாது. எந்த ஆத்மாவும் எவ்விடத்தில் மரணிக்குமென்றும் அறியாது அல்லாஹ்தான் நிச்சயமாக அனைத்தையும் அறிந் தவனும் ஞானமுள்ளவனுமாகும். (ஸூரா 34)
  என்று சொல்வது பொய்யோ? எதை நம்புவது ??

 • இவர் உயிரோடு இருந்திருப்பின் தன்னைப் பிறர் குளிப்பாட்டி தனது மறைவிடங்களைப் பார்க்க அனுமதித்திருக்கின்றாரே! இவருக்கு வெட்கம் சூடு சொறணை எதுவுமில்லையா? வெட்கம் ஈமானின் ஒரு பகுதியென நபியவர்கள் சொல்லியிருக்கின்றார்களே அப்படியாயின் ஈமான் முழுமையற்ற இவர் எப்படி இறை நேசராக முடிந்தது.?

 • இவர் உயிரோடிருக்கின்றார் என்று அறிந்து கொண்டே இவரது குரு இவரைப் புதைத்திருக்கின்றார்.  இது பாரதூர மானதொரு கொலைக்குற்றமாகும். இஸ்லாமியச் சட்டத்தின் படி இவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமே?

இது போன்றே ஜக்கரிய்யா மௌலானாவின் தாயும் சிறிய தந்தையும் தாம் மரணிக்கும் நேரத்தைத் துல்லியமாகக் குறித்துக் கூறியதாகவும் அதே நேரத்தில் சொன்னபடி மரணமடைந்ததாகவும் சொல்லும் அதிசய நிகழ்ச்சி. பார்க்க : (வழாயிபு றமழான் 22)

மௌலானா யூஸூபுக்கும் இன்ஆமுல் ஹஸன் இருவருக்குமிடையில் நடந்த உரையாடல். .
யூஸூப் : நான் என் கடமையைச் செய்து முடித்து விட்டேன் இனி நான் உலகிலிருக்க வேண்டிய அவசியமில்லை. 
இன்ஆம் : அப்படியல்ல.  நீங்கள் செய்ய வேண்டிய நிறைய வேலைகள் பாக்கியிருக்கின்றனவே.
யூஸூப் : எனக்கு எத்தனை வயது தெரியுமா?
இன்ஆம் : நாப்பத்தியெட்டு வயது.
யூஸூப் : இந்த வயது போதும்.
இன்ஆம் : இல்லையில்லை. உலகிக்கு நீர் செய்ய வேண்டிய சேவைகள் நிறையவே இருக்கின்றன.
யூஸூப் : 48 வருடங்கள் சேவை செய்தது போதாதா?. 
இன்ஆம் : எதற்காக இப்படிப் பேசுகின்றீர்கள்.  மரணம் என்பது எப்போதும் வரக் கூடியதே, அதை விட்டும் யாரும் தப்பிக்க முடியாது.  ஆனால் நீங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டிய விசயங்கள் இருக்கின்றனவே.
யூஸூப் : நல்லது நீங்கள் உங்களுக்குள் மஸூராச் செய்து நான் எவ்வளவு காலம் இருந்து எனது பணிகளைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொல்லுங்கள் என்றதும் இதில் மஸூராப் பண்ண என்ன தேவையிருக்கின்றது.  அஜல் முடிந்தால் மறுமைக்குக் செல்ல வேண்டியதுதான் என்றார்.
யூஸூப் : அப்படியாயின் எனக்கு 48 வயது போதும் நான் எனது திட்டத்தை முடித்து விட்டேன்.  மீதமுள்ளதை இருப்பவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.  நான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

உண்மைதான் அன்றைக்கு அடுத்த நாளே அவர்கள் இறையடி யெய்தி விட்டார்கள்.  இன்னா லில்லாஹி
இப்படி தான் மரணிக்கும் தருணம் ஒருவருக்குத் தெரிந்திருந்தால் மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருக்கின்றது என்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.  இப்படி அறிய முடியுமாயின் காலம் முழுதும் ஒருவன் பாவஞ் செய்து விட்டு இறுதியில் தான் மரணிக்க முன் தவ்பாச் செய்து கொண்டால் போதுமென ஒவ்வொருவரும் நினைத்தால் இந்த சரீஅத் சட்டங்களின் நிலை என்னவோ?. இவ்வாறெல்லாம் இவர்கள் கூறுவதன் உள் நோக்கம் யாதெனில் தம்மை சாதாரண மக்களை விட ஒரு படி உயர்த்தி யாருக்கும் தெரியாத சில விடயங்கள் தமக்குத் தெரியும் என்பதாக பாமரர்களை நம்பவைத்து ஒருவித குருபக்தியை உருவாக்குவதேயன்றி வேறென்னஇருக்கமுடியும் ?.


தப்லீக் பெரியார்களின் மற்றும் சில மார்க்க விரோதக் கருத்துக்கள்.

1- கஃபாவைப் பற்றி. ..
2- மரணித்தவர்கள் பற்றி....
3- தரீக்காக்கள் பற்றி...
4- பைஅத் செய்வது பற்றி. .
5- ஜிஹாத் செய்வது பற்றி. ...
இவ்வாறு எத்தனையோ விடயங்களில் தப்லீக் பெரியார்கள் சரீஆவுக்கு முரண்படும் விடயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.  முடிந்தளவு அவை பற்றி விளக்க முயற்சிக்கின்றேன். 


இரண்டாம் நம்பர் தொழுகை .


இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களில் இரண்டாவது இடத்தை வகிப்பது தொழுகையாகும் . தொழுகையை விட்டவன் முஸ்லிமாக இருக்க முடியாது . தொழுகையின் முக்கியத்துவம் சிறப்பு அதனை விடுவதால் ஏற்படும் இன்னல்கள் பற்றியெல்லாம் அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் அதிக இடங்களில் விபரித்துக் கூறப்பட்டுள்ளன .

தப்லீக் ஜமாஅத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் தஃலீம் தொகுப்பான அமல்களின் சிறப்பில் தொழுகைக்காக ஒரு பகுதியே ஒதுக்கப்பட்டுள்ளது . அதிலே தொழுகையின் அவசியம், அதன் சிறப்புகள், தொழுகையை விட்டவர்களுக்குரிய தண்டணைகள் பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதையெல்லாம் எவரும் குறை கூற வேண்டியதில்லை.

தஃலீம் தொகுப்பு புத்தகத்தின் வடிவமைப்பே வித்தியாசமானது திட்டமிட்டு இதனை ஜக்கரிய்யா மௌலானா மிக்க வியூகம் வகுத்து தமது மார்க்க விரோதக் கருத்துக்கள் பாரரர்களுக்கு இலகுவில் புரிந்து விடாதபடி திட்டமிட்டு வகுத்திருக்கின்றார்கள். அதைத் தமிழில் தந்த நிஜாமுத்தீன் அதைவிடமேலே சென்று மௌலானா கூறிய மார்க்க விரோதக் கருத்துக்களை இலகுவில் புரியாத வகையில் இலக்கிய நயம்பட இலைமறை காயாக ஆங்காங்கே புகுத்தியிருக்கின்றார்கள் . ஆரம்பத்தில் அல்குர்ஆன் வசனங்களை அரபியில் போட்டு அதன் அர்த்தத்தையும் தருவார்கள் இதன் பின் ஆதாரப்பூர்வமான நபி மொழிகள் சிலதைக் கூறி விடயத்துக்கு வலுவூட்டுவார்கள். இதனால் வாககர்கள் கவரப்பட்டு ஆர்வத்துடன் தொடர்ந்து படிக்க முற்படுவார்கள் . அதன் பின் சில பலவீனமான ஹதீஸ்களின் விளக்கங்கங்கள் வரும். பின்னர் புனையப்பட்ட முகவரியில்லாத சில விடயங்கள்

'ஒரு ஹதீஸில் வருவதாவது, ஒரு அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது ' எனும் பெயரில் இடம் பெறும் . அதன்பின்னர் பெரியார்களின் வரலாறு எனும் பெயரில் பல்வேறு விதமான போலிக்கதைகளும் நடக்காத கற்பனைச் சம்பவங்களும் சாகசச் செயல்களாகச் சித்தரிக்கப்பட்டு நவரசக் கதைகளுக்கு உரமூட்டுவது போல் அசந்து போன மக்களுக்கு உற்சாகப் பானமாக ஊட்டப்படும். ஏமாந்து பழகிப்போன எம் சமூதாயம் அவை அனைத்துமே இஸ்லாம் தான்என்று எண்ணித் தொலைத்து விடும் இது தான் தஃலீமைப் பற்றிய சுருக்கம் .


விரிவாகக் கூறுவதாயின் ...
தப்லீக் சகோதரர்கள் மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்றார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது . ஏனெனில் எனக்கே தப்லீக்கில் பலதடவைகள் நீண்ட வக்துக்களில் வெளிக்கிளம்பிச்சென்ற அனுபவமுண்டு . இவர்களது முயற்சியால் பலர் தொழுகையாளர்களாக ஆனதையும் பல பாழடைந்த பள்ளிகள் எழுச்சி பெற்றதையும் கூட மறுக்க முடியாது . அவையெல்லாம் இதனால் கிடைக்கும் நன்மைகள். அதே போல் இதிலுள்ள பாதகங்களையும் கவனிக்கத்தானே வேண்டும். ஒரு மனிதன் ஐவேளை தொழக் கூடியவனாக இருக்கின்றான் என்பதற்காக அவன் செய்கின்ற ஏனைய தவறுகள் எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடமுடியுமா?முடியாதுதானே! அப்படியானால் இப்போது இங்கு தொழுகை விடயத்தில் தப்லீக் மக்களிடத்திலுள்ள தவறுகளையும் சொல்லத்தானே வேண்டும் .அது தானே நீதி ?

எனவே தப்லீக் சகோதரர்களாயினும் ஏனைய பொது சகோதரர்களாயினும் சரி பின்வரும் குற்றச் சாட்டுக்களைச் செவிமடுங்கள் . அவதானியுங்கள் பின் அது சரிதானா? என சிந்தியுங்கள் . தீர்ப்புக் கூறுவது உங்கள் கைகளில் . அல்லாஹ்வுக்குப் பயந்து நாளை மறுமையில் அவன் எம்மை விசாரிப்பான் என்பதை உள்மனதில் நிறுத்தி வாசியுங்கள் . சரியாயின் அதை ஏற்றுக்கொண்டு உங்கள் முடிவை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை . பிடிவாதத்தை விடுங்கள் அதனால் மறுமையில் எமக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதுமில்லை .அல்லாஹ் நாளை மறுமையில் எம்மை விசாரிக்கும் போது குர்ஆன் சொன்ன படி வாழ்ந்தாயா ? நபிகளின் வழிகாட்டல்களின் படி வாழ்ந்தாயா ? என்றே விசாரிப்பான் . நீ அந்த ஜமாஅத்தை ஆதரித்தாயா ? இந்த இயக்கத்துக்காகப் பாடுபட்டாயா ? என்றெல்லாம் கேட்கப் போவதில்லை . ஒரு அமைப்பை ஒருவர் ஆதரிப்பதும் புறக்கணிப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது . ஆனால் நபி வழியை ஒவ்வொருவரும் ஆதரித்தே ஆகவேண்டும் . அதன்படியே வாழ்ந்தாக வேண்டும் .இல்லாவிட்டால் செல்லுமிடம் நரகந்தான் . இப்போது விடயத்துக்கு வருவோம்.

முறைப்பாடு : . 1 (தப்லீக் பெரியார்களும் மத்ஹபு வெறியும்...?)

முஸ்லிம்களில் மத்தியில் நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும் அனைத்து அறிஞர்களுமே நபிவழிக்கு மாற்றமாக மத்ஹபுச் சட்டங்கள் அமையும்போது நபி வழிப்படியே நடக்க வேண்டுமென்ற முடி விலுள்ளனர் . அதுவே சரியானதுமாகும் . நான்பு மத்ஹபுகள் என்பது அந்த நான்கு இமாம்களும் திட்டமிட்டு உருவாக்கி விட்டு இதைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் செய்ததன்று . மாறாக அவர்கள் வழங்கிய தீர்ப்புக்கள் கருத்துக்கள் போன்றன காலப்போக்கில் மக்களால் பின்பற்றப்பட்டு வந்ததால் ஏதேச்சையாக உருவானதே மத்ஹபுகளாகும் . அப்போதும் கூட அந்த இமாம்கள் தாம் கூறிய கருத்துக்களும் தீர்ப்புக்களும் நபிவழிக்கு மாற்றமாக இருப்பின் தமது கருத்தைத் தூக்கியெறிந்து விட்டு நபிவழிப்படி அமல் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்கள் .

இமாம் ஷjபி அவர்கள் கூறுகின்றார்கள் ..
எம்மில் ஒருவர் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸூக்கு மாற்றமாகச் சொன்னால் அதை யாருமே எடுத்துச் செயற்படுத்தக் கூடாது என்பதே எனது கருத்தாகும் . எந்த ஒரு அறிஞருக்கும் ஆதாரப் பூர்வமான ஹதீஸூக்கு மாற்றமாகப் பேசும் உரிமை கிடையாது. . ( நூல் : றிஸாலா 219ம் பக்கம் )

எங்களுடைய பேச்சுக்களை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு நாங்கள் எங்கிருந்து (என்னஆதாரத்தின் அடிப்படையில்) சொன்னோம் என அறியாமல் தீர்ப்பு வழங்குவது யாருக்கும் கூடாது என இமாம் அபூஹனீபா, மாலிக் ஷாபிஃ, அஹ்மத் ஆகிய நால்வருமே கூறியுள்ளார்கள் . (நூல் : அல் இன்திகாஃ 145 பக்கம் ).

நான் ஒரு விடயத்தைச் சொல்லியிருந்தால் அதனை அல்லாஹ்வின் வேதத்தோடும் நபியவர்களின் ஸூன்னத்தோடும் உரசிப் பாருங்கள் .அவ்விரண்டுக்கும் மாற்றமாக என் சொல் இருந்தால் என் சொல்லைச் சுவற்றில் தூக்கி வீசி விடுங்கள் .என்று நான்கு இமாம்களும் கூறியுள்ளார்கள் . ( நவவியின் அல் மஜ்மூஃ 1-63)

இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்கள் மார்க்கத்தீர்ப்பு வழங்கிவிட்டு இவ்வாறு கூறுவார்களாம் ..இதுதான் என்னுடைய அறிவுக்கு எட்டிய விளக்கம் .இதைவிடத் தெளிவான விளக்கம் யாருக்கும் கிடைத்தால் அவர் அதைப் பின்பற்றுவதுதான் சரியானது .
( தன்பீஹூல் காபிலீன் முன்னுரை )

அது மாத்திரமல்ல இவர்களுக்குப் பின்வந்த எவ்வளவோ இமாம்கள் தான் ஒரு குறிப்பிட்ட மத்ஹபுடைய இமாம்களாக கணிக்கப்பட்டாலும் கூட எத்தனையோ விடயங்களில் மத்ஹபுவைப் பின்பற்றுவது கட்டாயமில்லை என வலியுறுத்தியுள்ளதைப் பார்க்கலாம் .

ஹனபி மத்ஹபின் மேதையாகிய முல்லா அலிகாரி அவர்கள் சொல்கின்றார்கள் ..
'இந்த சமூதாயத்தில் யாரும் ஹனபியாகவோ, மாலிக்காகவோ ஷாபியாகவோ, ஹன்பலியாகவோ இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை .நான்கு இமாம்களும் அறிஞர்கள்தான் எனவே யார் ஒரு அறிஞரைப் பின்தொடர்கின்றாரோ அவர் நிம்மதியாக இறைவனைச் சந்திப்பார் என்று சொல்லப்படுகின்றது . ஆனால் பருவ வயதையடைந்த ஒவ்வொருவரும் நபிமார்களின் தலைவரான முஹம்மது நபி அவர்களைப் பின்பற்றுமாறே கட்டளையிடப்பட்டுள்ளனர் . அவர்கள் தான் பின்பற்றப்படவேண்டிய இமாம் ஆவார்கள் .

ஹனபி மத்ஹபு மேதையான அப்துல் ஹக் திஹ்லவி அவர்கள் கூறும் போது ' பின்பற்றப்பட வேண்டிய ஒரே இமாம் முஹம்மது நபியவர்கள் மட்டுமே. அவர்கள் அல்லாதவர்களைப் பின்பற்றுவது அறிவுக்குப் பொருந்தாது . இதுதான் ஆரம்பக் கால நல்லோர்கள் கடைப்பிடித்த நல்ல முறையாகும் . அல்லாஹ் நம்மையும் அவர்களுடன் சேர்ப்பானாக, ( ஷரஹ-ஸ்ஸிராத்தல் முஸ்தகீம் .)

இது இப்படியிருக்க தப்லீக் ஜமாஅத்தின் பெரியார்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியவர்களின் வாழ்க்கை வழிமுறையுமாகும் என்று சொல்லிக் கொள்கின்றார்கள் . ஆனால் ஹனபி மத்ஹபில் உள்ள சட்டங்களை அச்சரம் பிசகாமல் பின்பற்றுவதில் பைத்தியகாரத்தனமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது . அவ்வாறு செய்வது கடமை என்று பகிரங்கமாகவே பிரகடனப் படுத்துகின்றவர்கள் இவர்கள் . நபி வழி எக்கேடு கெட்டாவது போகட்டும் . ஹனபி மத்ஹபே எமது வழி எனும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் இருப்பதை நன்றாகவே நாம் அவதானிக்கலாம் . ஏனைய மத்ஹபுவைச் சார்ந்த தப்லீக் தொண்டர்கள் ஹனபி மத்ஹபைத்தான் பின்பற்ற வேண்டுமென்று இவர்கள் வெளிப்படையாக வலியுத்துவதில்லை .

இருந்தாலும் இவர்களிடம் பாடம் பெற்று மூளைச் சலவைக்கு உற்படுத்தப்பட்ட கார்க்கூன்களும் காலப்போக்கில் இவர்களைப் பின்பற்றி அவர்கள் செய்வதைப் போன்றே செய்வதையும், இன்னும் சிலர் இதே பிடிவாதத்தை தமது மத்ஹபான ஷாபி மத்ஹபு எனும் பேரில் ஊர் வழக்கில் உள்ள மௌட்டீக அனுஷட்டானங்களை பக்திப் பரவசத்துடன் செய்து வருவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது . சுருக்கமாசச் சொல்வதாயின் இன்றைய டில்லி, ட்ரைவிங் மர்க்கஸின் தப்லீக் பெரியார்கள் ஹனபி மத்ஹபைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனர் . இவர்கள் நேர்வழி காட்டுவார்கள் என்று இவர்களை நம்பி தப்லீக்கில் தம்மை இணைத்துக் கொண்ட அப்பாவி கார்க்கூன்கள் நபி வழியைப் பின்பற்றுகின்றோம் என்று எண்ணிக்கொண்டு டில்லி மர்க்கஸ் பெரியார்களையும், ட்ரைவிங் மர்க்கஸ் பெரியார்களையும் பின் பற்றுகின்றார்கள் . இருவருமே நபிவழியைத் தூக்கி வீசி விட்டார்கள் .

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ;;;
'நான் எவ்வாறு தொழுவதை நீங்கள் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் . ஆதாரம் (புகாரி 595 )

ஆனால் தப்லீக் பெரியார்கள் இன்று வரைக்கும் ஹனபி மத்ஹபின் மீது கொண்டுள்ள ஒருவகை வெறியால் தொழுகை விடயத்தில் எந்தனையோ மஸாயில்களில் - தம் அம்மத்ஹபு நபிவழிக்கு மாற்றமாக இருந்தும் ஹதீஸைத் தூக்கியெறிந்து விட்டு மத்ஹபின் படியல்லவோ தொழுகின்றனர் ...உதாரணத்துக்கு சில உண்மைகள் ...

1- தொழுகைக்குப் பின் ஓதப்படும் கூட்டு துஆ நபியவர்கள் சொல்லித்தராத பித்அத்தாகும் . ஹனபி தப்லீக் பெரியார்கள் இதைச் செய்வதில்லை . நபிவழிக்கு மாறானது என்பதற்காக அல்ல. தமது மத்ஹபில் இல்லை என்பதனால்தான் . நபி வழியில் இல்லை என்பதற்காகத்தான் இவர்கள் செய்யாதிருக்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டால் ஷாபி மத்ஹபு தப்லீக் வாதிகள் கூட்டு துஆ ஓதும் போது இவர்களும் சேர்ந்து ஜால்ரா போடுவார்களா ? ஆனால் போடுகின்றார்களே .. . ஆக மொத்தத்தில் நபிவழிப்படி நடப்பதில் இருசாராருக்கும் பிடிப்பில்லை . ஒரு சில உள்ளுர் தப்லீக் மர்க்கஸ்களின் பொறுப்புதாரிகள் டில்லி மர்கஸில் நடப்பது போல்தான் இங்கும் நடை பெற வேண்டும் என்பதற்காக கூட்டுதுஆவை விடவேண்டுமென அடம்பிடித்த சம்பவங்களும் உண்டு. எனவே யார் எந்த மத்ஹபை, எந்த வழிகெட்ட இயக்கத்தைச் சேர்ந்தோராக இருப்பினும் தப்லீக் ஜமாஅத் அவர்களை ஏற்றுக் கொள்ளும் . அவர்களிடம் இருக்கும் எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாது .

எனது ஊரில் உள்ள தப்லீக் மர்க்கஸில் ஜூமைராத் பயான் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இஷாத் தொழுகைக்கு ஏனைய பள்ளிகளில் அதான் சொல்லப்படும் போது மர்க்கஸிலும் அதான் சொல்வதா அல்லது பயானைத் தொடரலாமா ? எனும் சர்ச்சை ஒன்று ஏற்பட்டது . இது பற்றி நபிவழியில் ஸூன்னாவில் தீர்வு இருந்தும் கூட, 100க்கும் மேற்பட்ட உலமாக்கள் ஊரில் இருந்தும் கூட, உலமாக்கள் ஒன்றிமே அவ்வூரில் இருந்தும் கூட ,பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இருந்தும் கூட இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு இவ்விடயத்தை கொழும்பு பெரிய மர்க்கஸின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து டில்லி மர்க்கஸூக்கு அனுப்பப்பட்டே முடிவு பெறப்பட்டது . ஏற்கனவே பல உலமாக்கள் சொன்ன முடிவுதான் அது. இது எதைக் காட்டுகின்றது ? இவர்களுக்கு டில்லி தப்லீக் பெரியார்கள் மீது ஏற்பட்ட குருபக்தியும், தனி; மனித வழிபாடும் நபி வழியையும் மறக்கச் செய்து - தான் சார்ந்திருந்த மத்ஹபையும் மறக்கச் செய்து குருவழி நடக்கும்; குருடர்களாக்கி விட்டதே ....

2- நபிவழிதான் நம்வழியென ஒன்றுமறியாத அப்பாவி தப்லீக் தொண்டர்கள் கூறிக்கொண்டு திரிகின்றார்கள் . ஆனால் இவர்களின் தலைவரான ஜக்கரிய்யா மௌலானா தப்லீக் அமைப்பு வஹாபிஸ அமைப்பு என்றோருக்கு மறுப்பாக என்னகூறுகின்றார் என்று பாருங்கள்...

நாங்கள் வஹ்ஹாபிகளல்ல . 'வஹ்ஹாபிகள் எனப்படுவோர் ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டாலும் அந்த மத்ஹபில் ஏதாவது ஒன்றை ஹதீஸூக்கு மாற்றமென அவர்கள் கருதினால் உடனே மத்ஹபை விட்டு விடுவார்கள் . ஆனால் தப்லீக் பெரியார்களான தேவ்பந்த் ஆலிம்களோஇமாம் அபூஹனீபா அவர்களைப் பின்பற்றுகின்றவர்கள் ஹனபி மத்ஹபுப்படி நடப்பவர்கள் . அவ்வாறு பின்பற்றுவது வாஜிப் என்று கூறுகின்றவர்கள். (தப்லீக் பற்றிய குற்றச்சாட்டுக்களும் பதில்களும் ப:176)

நபிவழியே தீன் என்ற இவர்களின் கூற்று உண்மையாயின் மேற்படி ஜக்கரியாமொலானாவின் வாக்கு மூலத்தின்கதிஎன்ன ??? சிந்திப்போமாக .

3- தொழுகைக்காக அதான் சொல்லும் போது ஒவ்வொரு வாசகங்களையும் இரு முறை சொல்லும்படியும் இகாமத்தின் போது ஒவ்வொரு தடவை சொல்லும் படியும் நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் . ஆதாரம் : ( புகாரி 167)

இதற்கு மாற்றமாக தப்லீக் மர்க்கஸ்களென்ன ? ஏனைய ஹனபி தப்லீக் கார்க்கூன்களின் மஸ்ஜித்களிலும் ஹனபி மத்ஹபின் படி இருதடவைகள் அதானைப் போன்றே இகாமத்தும் சொல்லப் படுகின்றது .ஷாபி மத்ஹபு பள்ளிகளுக்கு இவர்கள் வந்தால் - அங்கு தமது மத்ஹபின் படி அங்கு நடக்க முற்பட்டால் - மத்ஹபு வெறியை வெளிப்படுத்தினால் சர்ச்சை ஏற்பட்டு ஷாபியிகள் தப்லீக் வக்தில் கிளம்புவது தடைப்படலாம் என்ற அச்சத்தால் பெரியார்களே அந்தந்த இடங்களில் எப்படித் தொழுகின்றார்களோ அப்படியே தொழுது கொள்ளுங்கள் என்று கார்க்கூன்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர்.

எனவே இவர்களைப் பிடித்துள்ள மத்ஹபு வெறி ஸூன்னாவைக் கண்டெல்லாம் நீங்காது . மாறாக தம் இயக்கத்தின் எண்ணிக்கை பாதிக்கப்படலாம் எனும் போது அவரவர் மத்ஹப்படி செய்யலாம் என சலுகையளிக்கப்படும் . எனவே தம் மத்ஹபு மீது இவர்களுக்குள்ள நம்பிக்கை கூட நபியின் ஸூன்னாவின் மீது கிடையாது என்பதே உண்மை,

4-அதே போன்று தொழுகையில் பாத்திஹா ஸூராவுக்குப்பின் சத்தமிட்டு ஆமீன் கூறுவது நபி வழியாகும் .
உங்களுக்குத் தொழுகை நடத்தும் இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள் .ஏனெனில் எவரின் ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு நேர்படுகின்றதோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன என நபியவர்கள் கூறியுள்ளார்கள் . (புகாரி முஸ்லிம் 738 )

ஹனபி மதஹபுக்காரர்கள் இவ்வாறு சத்தமிட்டு ஆமீன் சொல்வதில்லை . இதே மத்ஹபின் அடிப்படையினையே தப்லீக் பெரியார்களும் தமது டில்லி ட்ரைவிங் மர்கஸ்களில் அமுல்ப் படுத்துகின்றார்கள் .

5-இவ்வாறே மஃரிபுடைய அதானுக்குப்பின்னர் இரண்டு ரக்அத் ஸூன்னத்து விரும்பியவர்கள் தொழுது கொள்ள நபியவர்கள் அனுமதித்துள்ளனர் . ஹனபி மத்ஹபில் இதுகிடையாது ஆகவே தப்லீக் பெரியார்களிடமும் கிடையாது . இவ்வாறே றுகூஉக் குப்பின் கைகளை உயர்த்துவது நபிவழியாகும் ஹனபிகளிடம் அது இல்லாததால் தப்லீக் பெரியார்களிடமும் இல்லை .

இவையெல்லாம் உதாரணத்துக்குத்தான். இது போன்ற எத்தனையோ ஸூன்னாவுக்கு எதிரான மத்ஹபு சட்டங்களுக்கு தப்லீக் பெரியார்கள் கட்டுப்பட்டு ஸூன்னாவை விட மத்ஹபே பெரிதென வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .அவ்வாறு கற்றும் கொடுக் கின்றனர்.

இத்தனையும் செய்து கொண்டு அசலான நபிகளின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்பதில் தான் துன்யா ஆகிரா இரண்டின் வெற்றியுமிருக்கின்றது என்று சங்கூதவும் செய்கின்றனர் .முறைப்பாடு : 2
தொழுகையின் சிறப்பும். .. தஃலீம் தொகுப்பும். ..

தொழுகையானது இஸ்லாத்தின் இரண்டாவது தூணாகும்.  இதை விட்டவனுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என்பதும் நபிமொழியாகும்.  தப்லீக் தஃலீம் தொகுப்பில் தொழுகைக்காக ஒரு தனிப் பகுதியே ஒதுக்கப் பட்டுள்ளது.  இதில் தொழுகையின் சிறப்புகள், அதனால் கிடைக்கும் நன்மைகள், விடுவதால் ஏற்படும் தண்டணைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.  இதை எவரும் மறுக்க முடியாது.  ஆனால் நபியவர்கள் தொழுகையின் சிறப்புகளைக் கூறியது போல, தொழாதவர்களுக்குரிய தண்டணைகள் பற்றிக் கூறியது போல, எவ்வாறு தொழவேண்டுமெனவும் கூறினார்களா இல்லையா?  அப்படியாயின் நபி வழிப்படி தொழும் முறையோ, தொழுகையின் சட்ட திட்டங்களோ ஏன் தப்லீக்கில் போதிக்கப்படுவதில்லை ?.

உதாரணமாக ஒரு பாடசாலையில் கம்யூட்டர் கல்வியின் சிறப்பு அதன் முக்கியத்துவம் பற்றி மாத்திரம் போதிக்கப்படுகின்றது கம்யூட்டர்க் கல்வி போதிக்கப்படுவதில்லை.  இந்நிலையில் இந்தக் கல்வியால் மாணவர்களுக்குக் கிடைக்கும் பயன் யாது?  பூச்சியம் தான் மிச்சம்.  இதுதான் இன்று தப்லீக்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.  நபி வழிப்படி தொழும் முறை பற்றி அதன் சட்டதிட்டங்கள் பற்றி, தொழுகையில் ஓத வேண்டியவை, வுழூ, தொழுகையின் பர்ழு ஷர்த்து, சுன்னத்துக்கள், தொழுகையை முறிப்பவைகள் பற்றியெல்லாம் ஏராளமான ஹதீஸ்களும் சட்டதிட்டங்களும் உள்ளன.  இவை தஃலீம் தொகுப்பில் மருந்துக்கேனும் உண்டா?.  இல்லை தப்லீக் முக்கியஸ்த்தர்களுக்கேனும் தெரியுமா?
அவர்களாவது 40 நாள் உடல் பொருள், தொழிலைத் தியாகம் செய்து தப்லீக்கில் வெளிக் கிளம்பும் அப்பாவிக்கார்க்கூன்களுக்கு அன்றாட மஸூராவில் ஒரு நேரம் ஒதுக்கிக் கற்றுக் கொடுக்கின்றார்களா? ஓவ்வொரு நாளும் தஃலீம் வாசிக்க 6-7 மணிநேரங்கள் ஒதுக்கப்படுகின்றதே.  நபியவர்கள் சொல்லித்தந்த சட்டதிட்டங்கள் பற்றிக் கற்பிக்க அரைமணி நேரமாவது ஒதுக்கப்படுகின்றதா?  இல்லையே?  அன்பின் கார்க்கூன்களே! நீங்கள் எவ்வளவு தடவைகள் வக்தில் வெளிக்கிளம்பியுள்ளீர்கள்.  மார்க்க சட்ட திட்டங்கள் பற்றி எந்தளவுக்கு நீங்கள் தப்லீக்கில் சென்று கற்றுக் கொண்டீர்கள் என்று உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்லுங்கள். 

இது பற்றி அவர்களிடம் வினவினால் தயாராக ஒரு பதில் வைத்திருக்கின்றார்கள்.  'பழாயில்களைப் பற்றி தஃலீம் புத்தகத்தில் படிப்பது, மஸாயில்களை (சட்டங்களை) ஆலிம் உலமாக்களை அணுகி கால்மடித்து ஹதிய்யாக்களைக் கொடுத்துப் படித்துக் கொள்வது' இதுதான் பதில்.  சரி 40 நாள் 4 மாதம் என்றெல்லாம் நீண்ட காலங்கள் தொழில் துறை, உத்தி யோகம் பொறுப்புக்களைத் துறந்து மக்கள் வெளிக்கிளம்பிச் செல்கின்றார்கள்.  இதிலாவது தொழுகை பற்றிய இன்னும் மார்க்க சம்பத்தப்பட்ட எந்தநிகழ்ச்சியாவது இடம்பெறுகின்றதா?  அங்கும் அதே தஃலீம் அதே அமல்களின் சிறப்பு, சலித்துப் போனால் உசார் படுத்த ஹஜ்ஜின் சிறப்பு ஸதக்காவின் சிறப்பு எனும் பெயரில் இரு நாவல்கள்.  இதிலே துப்பறியும் கதைகளும், மெய்சிலிர்க்க வைக்கும் கதைகளும் தாராளமாக எவ்வித முகவரியுமில்லாது அவிழ்த்து விடப்படுகின்றன. 
இந்தப் பொன்னான நேரத்தை மார்க்க தொழுகை விடயங்களைக் கற்பிப்பதில் செலவிடலாமே என்று சொல்லிப் பாருங்கள்.  அதற்கும் ஒரு ரெடிமேட் பதில் 'ஆறு நம்பருக்கு அப்பால் பேசுவது உஸூலுக்கு மாற்றமானது.  அதைப் பெரியார்கள் அனுமதிப்பதில்லை.  கண்ட கண்ட மௌலவி மார்களிடமெல்லாம் மார்க்கம் கற்கக் கூடாது.  பேணுதலான, இந்த ஹக்கான வேலையில் ஊறியவர்களிடத்திலேயே மார்க்கம் படிக்க வேண்டுமென்று' தத்துவம் பேசுவார்கள்.  அவர்களிடமாவது கேட்டுப்படிக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.
இன்றைக்கு ஒவ்வொரு ஊர் கிராமங்களிலும் கூட 4மாதங்கள் ஒருவருடம் வக்து முடித்தவர்கள் கூட உண்டு.  இவர்களிடம் எந்தளவு மார்க்க விடயங்களைத் தேடிப் படித்துள்ளீர்கள், தொழுகை துஆக்கள், அதன் சட்டங்கள், இன்னும் தொழுகை பற்றித் தெரிய வேண்டிய நூற்றுக் கணக்கான சட்டங்கள் உள்ளனவே!! இவற்றில் சிறிதளவாவது தெரியுமா?  என்று விசாரித்துப் பாருங்கள். அப்படி ஒரு சிலருக்குத் தெரிந்திருந்தாலும் அது அவரது தனிப்பட்ட முயற்சியால் - ஏனைய இஸ்லாமிய நூல்களைப் படித்ததால் கற்ற விடயங்களாகத்தான் இருக்கும்.  இதை நீங்கள் ஏற்கத் தயங்கினால் நீங்களே பத்து தப்லீக் கார்க்கூன்களை அழைத்து அவர்களிடத்தில் சில தொழுகையின் சட்டங்களைக் கேட்டுப்பாருங்கள் எத்தனை பேர் சரியான பதில் சொல்கின்றார்கள் என்று பாருங்கள். ??

தப்லீக் பெரியார்கள் மார்க்க சட்டதிட்டங்களைப் பற்றி தமது தப்லீக் கார்க்கூன்களுக்கு கற்றுக் கொடுக்கத் தயங்குவதிலும் ஒரு உண்மை மறைந்திருக்கின்றது.  அதாவது டில்லி பெரியார்கள் ஹதீஸின் அடிப்படையிலுள்ள சட்டங்களை ஏற்றுக் கொள்வதில்லை அவர்களது ஹனபி மத்ஹபு நூலிலுள்ள சட்டங்களே இஸ்லாம் என்றும் அதைத்தான் பின்பற்றுவது கடமையென்றும் கூறி நபிவழிச் சட்டங்களை மட்டுமன்றி, ஏனைய மத்ஹபுச் சட்டங்களையும் புறக்கணிப்பவர்கள்.  எனவே மார்க்க சட்டங்கள் கற்பிப்பதென்றால் ஹனபி மத்ஹபுப் படிதான் கற்பிக்க வேண்டுமென்பதில் இவர்களுக்கு வெறி ஆனால் ஏனைய மத்ஹபுகளைச் சார்ந்த கார்க்கூன்கள், தப்லீக் உலமாக்கள் இதனை ஜீரணிக்க மாட்டார்கள்.  ஆகவே இந்த மத்ஹபுச் சட்டப் பிரச்சினையால் தப்லீக்கின் இயக்க ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தடைப்படலாம் என்ற குறுகிய சுயநல எண்ணத்தாலேயே இவர்கள் ஆறு நம்பருக்கு அப்பால் போய் சட்டதிட்டங்கள் போதிக்கப்படுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். தமது இயக்கத்தை வளர்ப்பதற்காக இஸ்லாத்தின் ஆணிவேரான மார்க்க சட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேராமல் தடை வேலி போட்டிருக்கிக்கும் இவர்கள்தான் நபியவர்களை நேசிப்பவர்களா? நபிவழிப்படி வாழ்பவர்களா?  சிந்திப்பீர்களாக. .

முறைப்பாடு : -3
ஹதீஸ் போதனையா. . கப்ஸா போதனையா ??

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எம்மனைவருக்கும் ஈருலக வழிகாட்டியாக வந்தவர்கள்.  எமக்குத் தேவையான எவ்விடயத்தையும் அவர்கள் சொல்லித்தராமல் விட்டதில்லை. எனவே ஒரு முஸ்லிம் எப்படித்தொழ வேண்டும் என அறிந்து கொள்ள விரும்பினால் ஹதீஸின் ஒளியில் எவ்வித சந்தேகங்களும் மீதியிருக்காத அளவுக்குத் தெட்டத் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு தொழும் முறை, அதன் சிறப்பு, அதை முறிப்பவை, அதனை விட்டால் கிடைக்கும் தண்டணை இப்படி ஏராளமான நபி மொழிகள் இருக்கின்றன. 
ஆனால் தப்லீக் தஃலீம் தொகுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதில் தொழுகை பற்றிய பகுதியின் ஆரம்பத்தில் மாத்திரம் சில அல்குர்ஆன் வசனங்களும் சில நபி மொழிகளும் இடம் பெறும் அதற்கு அடுத்த கட்டமாக 'ஒரு ஹதீஸில் வருவதாவது.... ' ஒரு அறிவிப்பில் வருவதாவது... ' என்ற பெயரில் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் இடம்பெறும். 
ஜக்கரிய்யா மௌலானாவோ ஹதீஸ்கலை மேதையாகிற்றே. . 20-25 வருடங்கள் புகாரி – முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்கள் நடத்தியவர்களாயிற்றே. . புகாரி முஸ்லிமில் தொழுகை பற்றி ஹதீஸ்களே இல்லையா?  என்று உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். 
உண்மைதான் அதில் வரும் ஹதீஸ்களையெல்லாம் சொன்னால் மக்கள் நபிவழிப்படி தொழ ஆரம்பித்து விடுவார்களே ஹனபி -ஷாபி மத்ஹபின் ஹதீஸூக்கு மாற்றமான சட்டங்களை அலட்சியம் செய்து விடுவார்களே. . அதன் பின்பு எல்லோரும் நபிகளுக்குத்தான் மதிப்பளிப்பார்கள்.  பெரியார்களுக்கு மதிப்பளிக்க மாட்டார்களே!. நபிவழியைப் படித்துக் கொடுத்தால் இவர்களது திஸ்த் திய்யாத்தரிக்காவிடம் பைஅத் செய்ய எவன் வரப்போகின்றான். ?? எனவேதான் தமது நோக்கம் நிறைவேற வேண்டுமென்பதற்காகவே ஆதாரப்பூர்வமான சட்ட சம் பந்தப்பட்ட ஹதீஸ்களைக் கூறுவதைத் திட்டமிட்டுத் தவிர்த்துள்ளார்கள்.  இவர்களது நோக்கம் பாரரர்களை ஹனபி ஷாபி மத்ஹபுக்குள்ளேயே வைத்துக் கொண்டு - அதை விட்டு வெளி யேற விடாது, இபாதத் எனும் போர்வையிலேயே ஹதீஸ் எனும் பெயரிலேயே பெரியார்களின் வீர தீர சாகசக் கதைகளைக் கூறி பெரியார்கள் மீது குறுட்டுப் பக்தியை உண்டு பண்ணி பின்னர் திஸ்த்திய்யாத் தரீக்காவுக்குள் உள் வாங்கிக் கொள்வதுதான் இவர்களது அந்தரங்க உள் நோக்கம்.  இதை நீங்கள் இப் போது ஒப்புக்கொள்ளா விட்டாலும் போகக் போக ஏற்றுக் கொள்வீர்கள். . என்னைப் போன்று. ..

உதாரணத்துக்கு சில பலவீனமான ஹதீஸ்கள். ..

1-தொழுகையைப் பேணித் தொழுபவருக்கு 5வித உபகாரமும் விடுபவருக்கு 15 வகை தண்டனையும்.  ஹதீஸில் வருவதாக சிலர் சொல்கின்றார்கள் என்று இச்சம்பவம் ஆரம்பிக்கின்றது.  (அமல்களின் சிறப்பு பக்கம் 50) நன்மை தண்டணையெல்லாம் மறுமை பற்றிய விடயம்.  அதைக் குர்ஆன் ஹதீஸில் இருந்தால் மட்டுமே ஏற்க முடியும்.  அப்படியென்றால் இந்த 'சிலருக்கு'' இவற்றைச் சொல்லிக் கொடுத்தது யார்? 

2- ஒரு ஹதீஸில் வருவதாவது. ..தொழுகையைப் பேணுவதால் மஃரிபா எனும் இறை ஞான ஒளி உண்டாகின்றது.  58ம் பக்கம்
இந்த ஹதீஸ் எங்கிருக்கின்றது.  அதன்தரம் என்ன என்று எடுத்துக் காட்ட முடியுமா?

3 தொழுகையை விட்டவனைப் பார்த்து சொர்க்கம் உனக்காக நானில்லை எனக்காக நீயில்லையென்றும், நரகம் என்னிடம் வந்துவிடு உனக்காக நீ எனக்காக நான் என்றும் கூறும்.  ப: 63

4 நரகத்தில் 'லம்லம்' எனும் காடுண்டு அதில் ஒட்டகக் கழுத்துள்ள பாம்புண்டு அதன் நீளம் ஒரு மாதம் நடந்து செல்லுமளவுக்கு இருக்கும்.  தொழுகையை விட்டோர் அதில் போடப்படுவார்கள். 
5.நரகத்தில் ஜூப்புல் ஹூஜ்ன் எனும் மைதானம் இருக்கின்றது.  அதில் கோவேறு கழுதையின் அளவு பெரிய தேள் இருக்கின்றது.  தொழுகையை விட்டவர்களை அது வேதனை செய்கின்றது என ஒரு ஹதீஸில் வந்துள்ளது.  (பக்கம் 63 அதே அமல்களின் சிறப்பு)

இவையெல்லாம் மறைவான விடயங்களல்லவா?  இப்படியான செய்திகளைச் சொல்லும் போது அவற்றின் நம்பகத் தன்மையை உறுதி செய்வது அவசியமல்லவா?  மக்களைப் பயம்காட்ட வேண்டுமென்பதற்காக நினைத்ததையெல்லாம் சொல்லி விட முடியுமா? .
6-எவனொருவனின் முதல் வார்த்தையும் இறுதி வார்த்தையும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவாக இருக்கின்றதோ அவர் ஆயிரம் வருடங்கள்தான் வாழ்ந்த போதிலும் தான் செய்த எந்தப் பாவத்தைப் பற்றியும் விசாரணை செய்யப்பட மாட்டார். 
(தப்லீக் தஃலீம் தொகுப்பு ப: 596)

இதன் அறிவிப்பாளர் வரிசையில் பல குளறுபடிகள் இருந்தும் அவற்றையெல்லாம் வேண்டுமென்றே ஜக்கரிய்யா மொலானா கண்டு கொள்ளாமல்ப் புறக்கணித்திருக்கின்றார்.  இந்த ஹதீஸின் படி கலிமாச் சொன்ன ஒருவன் என்னதான் குற்றம் செய்தாலும் அதற்கு விசாரணையோ தண்டணையோ இல்லை யென விளங்குகின்றது.  இது தவறாகும்.  என்னதான் முஃமினாக இருந்தாலும் அவன் செய்த குற்றத்திற்காக விசாரிக்கபடாதவரை, அதற்காக தண்டனை பெறாத வரை அல்லது அதை அல்லாஹ் மன்னிக்காத வரை எவனும் சொர்க்கம் செல்ல முடியாதென்றும், கலிமாவை ஏற்றுக் கொண்ட லட்சக் கணக்கான பாவிகள் வேதனை செய்யப்பட்டதன் பின்னர் நரகை விட்டும் வெளியேற்றப்படுவதாகவும் பல்வேறு ஹதீஸ்களில் வந்துள்ளதே,

7- யார் வெள்ளிக்கிழமை தினத்தில் எண்பது தடவைகள் தொழுகின்றாறோ அவரது எண்பது வருடத்துப் பாவங்கள் மன்னிக்கப்படும்.  பக்கம் 721 இதுவும் மிகப்பலவீனமான ஹதீஸாகும். 

8- ஜூமைராத் இரவில் பள்ளியில் தங்குவதை ஆர்வ மூட்டுவதற்காக ' அல்லாஹ்வின் நாட்டத்தை விரும்பி யார் ஒருநாள் பள்ளியில் இஃதிகாப் இருக்கின்றாறோ அல்லாஹ் அவரை மூன்று கன்தக் தூரம் நரகை விட்டும் தூரமாக்குவான் ஒவ்வொரு கன்தக்குக்கும் இடைப்பட்ட தூரம் வானம் பூமிக்கு இடைப்பட்ட தூரத்தை விட அதிகமானதாகும் என்று ஹதீஸில் உள்ளது'.  என எழுதி வைத்திருக்கின்றார்.  (அமல்களின் சிறப்பு பக்கம் 466).

இதையும் பலவீனமானதென்று தெரிந்து கொண்டே மௌலானா அவர்கள் ஜூமைராத் நிகழ்ச்சியை திறம்பட நடத்துவதற்காக இடம்பெறச் செய்துள்ளார்கள்.

9-யார் தினமும் ஸூரத்துல் வாகிஆவை ஓதி வருகின்றாரோ அவ ருக்கு வறுமையே வராது.  இப்னு மஸ்ஊத் அவர்கள் தன் பெண் மக்களுக்கு இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருந்தார்கள்.  யார் யாஸீன் ஸூராவை ஓதுகின்றாரோ அவரது முன்னைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ப: 292, 293) இவையும் ஆதாரத்துக்கு எடுக்க முடியாத பலவீனமானவையாகும்.

10- உங்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்லுமளவுக்கு அல்லது முனாபிக் என்று மக்கள் சொல்லுமளவுக்கு நீங்கள்
(சத்தமிட்டு) திக்ர் செய்யுங்கள். என்ற ஹதீஸ் அமல்களின் சிறப்பு நூலில் உள்ளது.  'சத்தமிட்டு' எனும் சொல் ஹதீஸில் இல்லாதிருந்தும் மௌலானா தமது தரீக்காவின் கூட்டு திக்ரை நியாயப்படுத்த அதை அடைப்புக்குறிக்குள் இட்டுள்ளார்கள். இந்த ஹதீஸூம் கடும் பலவீனமான ஹதீஸாகும் பார்க்க: (சிலிசிலா 518)

11- எனது புறக்கணிக்கப்பட்ட ஸூன்னத்துக்களில் ஒன்றை உயிர்ப்பிப்பவருக்கு நூறு ஷஹீத்களுடைய நன்மை கிடைக்குமென நபியவர்கள் கூறினார்கள்.  (126) இதுவும் தப்லீக்கில் அடிக்கடி கூறப்படும் ஹதீஸ் ஆனால் இது பலவீனமானது.  இதன் அறிவிப்பாளர் வரிசையில் இனந்தெரியாத சிலர் உள்ளனர்.  (மஜ்மஉஸ்ஸவாயித் 1-172)

12- யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என ஒரு தடவை சொன்னால் அவரது 50 வருட பாவங்கள் மன்னிக்கப்படுமென நபியவர்கள் கூறிய போது அவரிடம் 50வருட பாவங்கள் இல்லாதிருப்பின் ?? என தோழர்கள் கேட்க அவரது பெற்றோர் உறவினர்களுடைய 50 வருட பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள்.  (தப்லீக் தஃலீம் 596)

இந்த ஹதீஸ்படி ஒரு குடும்பத்தில் ஒருவன் மாத்திரம் இதை ஒரு தடவை சொல்லி விட்டு ஏனைய அனைவரும் அவர்களது ஆயுள் வரைக்கும் நினைத்த அனைத்துப் பாவங்களையும் செய்யலாம்?  இறுதியில் அனைவருக்கும் சொர்க்கம்தான்?  அப்படியானால் தொழுகை எதற்கு நோன்பு எதற்கு? ஹராம் ஹலால் எதற்கு?  இன்று கிருஷதவர்களின் கொள்கையும் இதுதான்.
சிந்தித்துப் பாருங்கள் ஒரு பலவீனமான ஹதீஸால் ஏற்படும் விளைவு என்னவென்று?  இதன்படி ஒருவர் ஒரு தடவை கலிமா சொல்லி விட்டு 50 வருடம் பாவம் செய்தால் மறுமையில் அல்லாஹ் அவரை நரகுக்கு அனுப்பும் போது ஜக்கரிய்யா மௌலானாவால் அவரைக் காப்பாற்ற முடியுமா?

இது போன்ற நூற்றுக்கணக்கான பலவீனமான ஹதீஸ்கள் இதில் இடம் பெறுகின்றன.  இவற்றுக்குப் பதில் புகாரி முஸ்லிமில் உள்ள ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களை இடம்பெறச் செய்திருக்கலாம் தானே. 

இப்படிக்கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் பலவீனமான ஹதீஸ்களையும் மக்களுக்கு ஆர்வமூட்டும் நோக்கில் சொன்னால் என்ன?: நல்லதுதானே எத்தனையோ அறபு நூல்களில் பலவீனமான ஹதீஸ்கள் இடம்பெறவில்லையா?  என பதிலளிப்பர்.  அறபு நூல்களில் பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பதை இவர்கள் ஆதாரமாகக்; கூற முடியாது.  ஏனெனில் அவை சில நூற்களில் இடம்பெற்றிருப்பினும் அவை மூல நூல்கள்.  பெரும் ஏடுகள்.  அறிஞர்களுக்கென எழுதப்பட்டவை இவற்றைப் படிப்பவர்களும் பெரிய பெரிய ஹதீஸ் பற்றி அறிந்த அறிஞர்களே. அவர்கள் அதில் இருப்பதை யெல்லாம் அப்படியே ஏற்கப்போவதில்லை.  தேடி ஆராய்ந்ததன்பின் பலவீனமானவற்றைப் புறந்தள்ளிவிடுவர்.  ஆனால் பாமரர்களுக்காக வேறு எத்தனையோ நூல்கள் உள்ளன.  பாமர அப்பாவி மக்களுக்குச் சொல்லும் விடயங்கள் உண்மைதானா? ஆதாரப்பூர்வமானவைதானா எனப் பார்த்துச் சொல்வது உலமாக்களின் கடமையல்லவா?  அவர்கள் - உலமாக்கள் இஸ்லாத்தையே சொல்கின்றனர் என்று எண்ணி ஆலிம்களை நாடி வரும் போது பலவீனமான, பொய்யான செய்திகளை இஸ்லாம் எனும் பெயரில் சொல்வது அவர்களுக்குச் செய்யும் நம்பிக்கைத் துரொகமல்லவா?  மோசடியல்லவா?.

இது மட்டுமின்றி தப்லீக் தஃலீம் தொகுப்பில் பலவீனமான பல ஹதீஸ்களைக் கூறிய மௌலானா அவர்கள் அந்த ஹதீஸின் நூலாசிரியரே அதன் கீழ் இந்த ஹதீஸ் பலவீனமானது, அறிவிப்பாளர் வரிசை சீரற்றது என்று கூறியிருந்தும் -- அதனை அறபியில் மாத்திரம் இடம்பெறச் செய்து விட்டு மொழி பெயர்ப்பின்போது அது பெயர்க்கபடாமல் இருட்டிப்புச் செய்யப் பட்டுள்ளது.  இதுவும் பாமர மக்களுக்குச் செய்த மற்றுமொரு நம்பிக்கைத் துரோகமாகும்.

ஆர்வமூட்டுவதற்காக பலவீனமானவற்றை மக்களுக்குக் சொல்லலாமென்ற கருத்தை ஒரு சிலரைத் தவிர ஏனைய அறிஞர்கள் ஏற்கவில்லை.  சில அறிஞர்கள் அவ்வாறு சொல்லியிருப்பினும் பல நிபந்தனைகளுடன்தான் சொல்லியிருக்கின்றனர். அதில் முதல் நிபந்தனை அகதா -இறை நம்பிக்கை பற்றிய, மறைவான விடயங்கள் பற்றிய தகவல்கள் கூறும் பலவீனமான ஹதீஸ்களை ஆர்வமூட்டும் நோக்கில் கூட கூற முடியாது என்ற ஒருமித்த முடிவில் உள்ளனர். எனவே இங்கு தொழுகையின் சிறப்பு பகுதியில் கூறப்பட்டிருக்கும் பலவீனமான ஹதீஸ்கள் மறைவான விடயங்கள் பற்றிப் பேசுபவையாகவே உள்ளன,.  சுவர்க்கத்தில் நடப்பவை, நரகத்தில் நடப்பவை, கப்ரில் நடப்பவை பற்றியெல்லாம் சொல்லும் ஹதீஸ் பலவீனமாயிருந்தால் அதை புறந்தள்ள வேண்டியது தான்.  ஒருபோதும் ஆதாரத்துக்கு எடுக்க முடியாது. . இது அனைத்து இஸ்லாமிய அறிஞர்களினதும் ஒருமித்த கருத்தாகும்.  தப்லீக் பெரியார்கள் இவ்விடயத்தில் மாறுசெய்கின்றார்கள்.

சரி இதைத்தான் விட்டு விடுவோம்.  இத்தோடு ஜக்கரிய்யா மௌலானா நிறுத்தித் கொண்டார்களா?  இவற்றுக்கு அடுத்த படியாக விளக்கவுரை எனும் பெயரில் ஆரம்பமாகும் கப்ஸாப்பகுதியில் ஆயிரக்கணக்கான முகவரியில்லாத சம்பவங்கள். .. ஒரு பெரியார்; சொன்னது, ஆரிபீன்கள் சொன்னது, சூபியாக்கள் சொன்னது, நல்லடியார்கள் வாழ்வில் நடை பெற்றது, உண்மைச் சம்பவம் எனும் பெயர்களிலெல்லாம் நவரசக் கதைகள், பெரியார்களின் சாத்தியமற்ற சாதனைகள், தூள் கிளப்புகின்றன.  அல்குர்ஆனையும் ஹதீஸையும் படிக்க வேண்டும் அதன் வழிநடக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் தமது உடல் பொருள் தொழில் போன்றவற்றைத் தியாகம் செய்து வரும் அப்பாவி மக்களின் நேரங்களை இப்படி முகவரியற்ற கப்ஸாக்களை வாசித்துப் பாழ்படுத்துவது தகுமா? அல்லாஹ்வுக்குப் பொருந்துமா?. 

இது ஒரு புறமிருக்க இந்தக் கதைகளும் கப்ஸாக்களும் நேரத்தைக் கடத்துவதற்காக அல்லது மக்களின் தூக்கத்தைக் கலைத்து விழிப்பையும் புத்துணர்ச்சியையும் தருவதற்காக என்று கூடச் சொல்லி சில வேளை நியாயப்படுத்தி விடலாம்.  ஆனால் இக்கதைகள் கொண்டுள்ள அபத்தங்கள், மார்க்க முரண்பாடுகள், நபிகளாருக்கும் உத்தம சஹாபாக்களுக்கும் இழுக்கை அவமானத்தை ஈட்டித்தரும் அவர்களை மறைமுகமாகக் கொச்சைப் படுத்தும் நிகழ்வுகள், இஸ்லாமிய அகீதா - இறை நம்பிக்கைக்கு மாற்றமான விடயங்கள் எல்லாம் இக்கதைகளில் மறைமுகமாகப் போதிக்கப்படுவதால் தான் இவற்றை காரசாரமாக விமர்சிக்க வேண்டியுள்ளது சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.


இதில் வரும் கப்ஸாக்களை இருபெரும் பிரிவுகளாக வகைப் படுத்தலாம்

1- பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நடைமுறைச் சாத்தியமற்றவை...

2-இஸ்லாத்திற்கு – அதன் ஓரிரைக் கொள்கைக்கு வேட்டு வைக்கக் கூடியவை. ....
புரிந்து கொள்வதற்காக சில உதாரணங்கள். ..

பகுத்தறிவு ஏற்காத சாத்தியமற்றவை சில....

தொழுகையில் உள்ளச்சம் இருக்க வேண்டியது உண்மைதான்; முஃமின்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருப்பார்கள் என்று அல்லாஹ் பிரஸ்த்தாபிக்கின்றான். நபி(ஸல்) அவர்களும் தொழுகையை உள்ளச்சத்துடன் தொழ வேண்டும் என்று போதித்திருக்கின்றார்கள்.  அவர்களை விட அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை.  அவர்களை விட பய பக்தியுடன் தொழுதவர்களும் எவருமில்லை.  இருப்பினும் நபியவர்கள் பயபக்தியுடன் தொழுவித்த போதே பின்னால் உள்ள மஃமூம்களின் செயற்பாடுகளையும் அவதானித்திருக்கின்றார்கள்.  நபியவர்கள் தொழும் போது பாதணியில் நஜீஸ் இருந்ததால் பாதணியைக்கழட்ட பின்னால் நின்றவர்களும் கழட்ட அதைக் கண்டு நபியவர்கள் தொழுகையின் பின் விசாரித்திருக்கின்றார்கள் (புகாரி 376)

அதே போல் நபியவர்கள் தொழுவிக்கும் போது பின்னால் உள்ளவர்கள் ஓதிய ஓதல்களைச் செவியுற்று தொழுது முடிந்ததும் அது பற்றி விசாரித்து விட்டு ஸூரத்துல் பாத்திஹாவைத் தவிர வேறு எதையும் தனக்குப்பின்னால் நின்று கொண்டு ஓத வேண்டாம் என்று போதித்துள்ளார்கள்.  (அபூதாவூத் 701, )
இதற்கு மாற்றமாக தஃலீம் தொகுப்பில் தொழுகையில் பெரியார்களின் பயபக்தி எனும் தலைப்பில் பல அர்த்தமற்ற சாத்தியமற்ற இன்னும்சொன்னால் முகவரியேயற்ற சம்பவங்கள் ஏராளம் ஏராளம்....