தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)

ஒரு சிலவற்றை மாத்திரம் தொட்டுக் காட்டுகின்றேன்.

1-ஹஜ்ரத் அலி (றழி)யின் சம்பவம் பிரபலமானதாகும் அவர்கள் உடம்பில் அம்பு தைத்து விட்டது.  அதை அவர்கள் தொழும் போது எடுத்து விடலாம் என்றெண்ணி அவ்வாறே செய்தனர் தொழுது முடிந்ததும் அம்பை எடுக்கவா வந்தீர்கள்?  என அலி (றழி) கேட்க நாங்கள் எடுத்து விட்டோமே என்றனர்.  (தொழுகையின் சிறப்பு 143)
இந்தப் பிரபல சம்பவம் எங்கிருந்து கிடைத்ததோ??? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.
2-ஒரு பெரியாரின் உடலுறுப்பு பழுதடைந்து விட்டது.  அதை வெட்டியெடுக்க வேண்டியேற்பட்டது.  அவர் தொழ தக்பீர் கட்டியதும் அதை வெட்டியெடுத்து விட்டனர்.  அவருக்கு எதுவுமே தெரியவில்லை.  (தொழுகையின் சிறப்பு 144)

இந்தச் சம்பவங்களெல்லாம் முகவரியற்றவை, பிரமிப்பூட்டு வதற்காகச் சொல்லப்படுபவை என்பதில் சந்தேகமில்லை.
இப்படியெல்லாம் அம்பைஉடலிலிருந்து உருவியெடுப்பதையே அறிய முடியாதளவுக்கு தொழுகையில் லயித்தல் என்பது மனித சுபாவத்திற்கே அப்பற்பட்டது.  நபியவர்களுக்கே இப்படி யெல்லாம் ஏற்பட வில்லையே! ; இவற்றைப் பகுத்தறிவு கூட ஏற்க மறுக்கின்றதே...எப்படி? நபியவர்களுக்கே தொழுகையில் இப்படியானதொரு பக்தி ஏற்படவில்லை.  நான்தான் உங்கள் அனைவரையும் விட பக்தி மிக்கவன் எனவும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். அப்படியென்றால் ?....
நபியவர்களுக்கே ஏற்படாத பக்தி அலியவர்களுக்குஏற்பட்டதா ?
இப்பவடியொரு நிகழ்வு அலி(றழி)க்கு இடம்பெற்றதாக எவ்வித ஆதாரப்பூர்வமான தகவலும் இல்லை. 
இப்படியான சம்பவங்களை இவர்கள் புனைந்து சொல்வதற்கு மற்றுமொரு உள்நோக்கமும் உண்டு அதாவது வலிமார்கள், ஷேக்மார்களின் தொழுகை, வணக்கங்கள் நம்போன்ற பாமரர்களின் தொழுகை போன்றதல்ல.  அவை உயிரோட்டமுள்ளவை எனும் போலி பிரமையை பாமரருக்கு ஏற்படுத்தி அதன் மூலம் குருபக்தியை அதிகரிப்பதே இதன் உள்நோக்கம். 


இரலெல்லாம் தொழுது பகலெல்லாம் நோன்பிருப்பது நபிவழியா?? நாச வழியா??

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வீட்டுக்கு சில நபித் தோழர்கள் வந்து நபிகளாரது வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களின் மனைவியிடம் கேட்டனர் . அதற்கு அவர் கூறிய பதில் திருப்தியளிக்காததால் 'நாங்களும் நபியவர்களும் ஒன்றா? நாமோ பாவிகள் அவர்களோ முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் . எனவே நாம் நபிகளாரை விட அதிகம் வணக்கம் புரிய வேண்டும் எனமுடிவெடுத்தனர்' அவர்களில் ஒருவர் நான் இன்று முதல் இரவில் தூங்கவே மாட்டேன் .இரவு முழுக்க தொழுது கொண்டிருப்பேன் என்றும் மற்றவர் நான் இனிமேல் காலமெல்லாம் நோன்பு நோற்றுக் கொண்டிருப்பேன். என்றும் மூன்றாமவர் இனி நான் மனைவியிடம் நெருங்கவே மாட்டேன் என்றும் சத்தியம் செய்து கொண்டனர். இந்தச் செய்தி நபியவர்களின் காதுக்குச் சென்றதும் நபியவர்கள் இம்மூவரையும் அழைத்து நீங்கள்தானா இவ்வாறெல்லாம் சத்தியம் செய்து கொண்டவர்கள்?? . அறிந்து கொள்ளுங்கள் . அல்லாஹ்வின் மீது சத்தியமாக நானே உங்கள் அனைவரை விடவும் அல்லாஹ்வுக்கு மிகப் பயப்படுபவனும் தக்வா உடையவனுமாவேன். இருப்பினும் தான் இரவில் தொழவும் செய்கின்றேன் தூங்கவும் செய்கின்றேன், சில நாள் பகலில் நோன்பும் நோற்கின்றேன், சில நாள் நோன்பை விட்டு சாப்பிடவும் செய்கின்றேன், பல மனைவியரை மணந்து இன்பம் அனுபவிக்கவும் செய்கின்றேன். எனவே இதுதான் எனது வழிமுறை, எனதுவழிமுறையைப் புறக்கணிப்பவன் என்னைச் சார்ந்தவனல்ல என நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் புகாரி 4675 முஸ்லிம் 2487)

நபித்தோழர் ஸல்மான் பாரிஸியும் அபூதர்தாவும் நெருங்கிய நண்பர்கள் . ஒருநாள் சல்மான் தனது நண்பர் அபூதர்தாவின் வீட்டுக்குச் சென்றார் . அங்கு அவரது மனைவி அலங்கோலமான அழுக்கடைந்த ஆடைகளுடன் இருப்பதைக் கண்டு அபூதர்தா எங்கே ? நீங்கள் ஏன் இப்படி அவலட்சனமான ஆடையுடன் இருக்கின்றீர்கள்? என வினவினார் .அதற்கு அந்த அம்மையார் 'எனது கணவருக்கு துன்யாவில் எவ்வித தேவையுமே இல்லை . எப்போதும் வணக்க வழிபாடுகளழலேயே அவர் ஈடுபட்டிருப்பார் . என பதிலளித்தார்' இதன் பின் ஸல்மான் தன் நன்பரைச் சந்தித்து நன்பரே' வாருங்கள் சாப்பிடுவோம் என அழைக்க அவர் நான் நோன்பு என்றார் . நோன்பை விடச் சொல்லி விட்டு இருவரும் சாப்பிட்டனர் . இரவானதும் அபூதர்தா தொழ ஆரம்பித்து விட்டார் .உடனே ஸல்மான் வேண்டாம் இப்போது தூங்கு என்று தூங்க வைத்தார்.பின்னிரவில் இருவரும் எழுந்து தொழுதனர் . காலையில் அவரை நோக்கி அபூதர்தாவே நீங்கள் உங்கள் உடலுக்குச் செய்யும் கடமைகள் சில உள்ளன, உம் மனைவிக்குச் செய்யும் சில கடமைகள் உள்ளன, அல்லாஹ்வுக்குச் செய்யும் சில கடமைகளும் உள்ளன . எனவே ஒவ்வொரு கடமையையும் ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் எனப் போதித்தார் . பின்னர் இது பற்றி அபூதர்தா நபியவர்களிடம் முறையிட்ட போது 'ஸல்மான் சொல்வது உண்மைதான் ' எனநபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி 1823 )

இது தான் நபியவர்கள் முஸ்லிம்களுக்குக் கற்றுத்தந்த வணக்க வழிமுறை . இதைப்புறக்கணித்து நடப்பவர் என்னைச் சார்ந்தவரல்லர் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்து விட்டார்கள் .இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் சம்பவங்களைப் படியுங்கள்.

1- பகலெல்லாம் நோன்பு நோற்றதாலும் இரவெல்லாம் நின்று வணங்கியதாலும் இளைத்துக் களைத்து இளவயதிலேயே மரணமடைந்து விட்ட ஏழை வாலிபர்களின் சம்பவம். - ( தொழுகையின் சிறப்பு 10ம் ஹதீஸ் விளக்கம் .)

இச்சம்பவத்தில் அவரிடம் ஏன் இப்படி உடலை வருத்தி இபாதத் செய்கின்றீர்கள் என ஒருவர் கேட்டதற்கு 'நாங்கள் சில வாலிபர்கள் அதிக இபாதத் செய்பவர் யார் எனப் போட்டி வைத்தோம் . மற்ற அனைவரும் இபாதத் செய்தே மரணித்து விட்டனர் நான் மாத்திரமே மிஞ்சியிருக்கின்றேன் . ஒவ்வொரு நாளும் இரு தடவைகள் என்அமல்கள் அவர்களுக்கு எடுத்துக்காட்டப்படும் நிலையில் அதில் அவர்கள் குறை கண்டால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்றார் வாலிபர் .
இவர் செய்த இபாதத் முறை நபிவழிக்கு எதிரானது . அப்படியே சரியென வைத்துக் கொண்டாலும் தன் நண்பர்களுக்கு தன் இபாதத் காட்டப்படும் போது அதில் அவர்கள் குறைகாணக் கூடாது எனும் எண்ணத்தில் அமல் செய்திருப்பதால் இதுவே இவரது அமலை இக்லாஸற்ற முகஸ்த்துதிக்குரியதாக்கி விட்டது

2-கப்ரில் தொழுத பெரியாரின் சம்பவம் ( தொழுகையின் சிறப்பு 14ம் சம்பவம் . )

.
தாபித் அல் பன்னானி எனும் பெயருடைய இப்பெரியாரின் புதல் விதம் தந்தை 50 ஆண்டுகளாக இரவு முழுக்க விழித்து வணங்கி ஸூப்ஹூ நேரத்தில் தனக்கு கப்ரில் தொழும் பாக்கியத்தைத் தருமாறு துஆ கேட்டதாகச் சொல்கின்றார் .
ஹதீஸ்க்கலை மேதையான இவர் நபிவழிக்கு மாற்றமாக எப்படி 50 ஆண்டு இரவு முழுதும் வணங்கியிருக்க முடியும் ? கப்ரில் கேள்வி கணக்கு முடிவுற்றதும் மறுமைநாள் வரை தூங்கு எனச் சொல்லி விட்டு மலக்குகள் சென்று விடுவார்கள் என நபிகளார் கூறியிருக்க இவர் எப்படி கப்ரில் எழுந்து தொழுதிருக்க முடியும் ? .
இதைத்தான் விட்டு விடுவோம் இதை நேரில் கண்டதாகச் சொல் கின்றாரே.. அவரைச் சற்று குறுக்கு விசாரணை செய்வோம்.

'மையித்தை அடக்கிக் கொண்டிருக்கும் போது செங்கல் விழுந்து துவாரமேற்பட்டதால் அதனூடாக பெரியார் தொழுததைப் பார்த்திருக்கின்றார் இவர். மய்யித் அடக்கப்பட்டு அதன் உறவினர் சற்று தூரம் சென்றதன் பின்னரே மலக்குகள் வந்துஉயிர் கொடுத்து அவரை எழுப்பி விசாரிக்கின்றனர் . அது வரைக்கும் அவரால் எதுவும் செய்ய முடியாது .தொழுவதாயினும் நோன்பு பிடிப்பதாயினும் அது உயிர் கொடுத்ததன் பின்னரே சாத்தியப்படும். அப்படியிருக்க அதற்கு முன் பெரியார் தொழுவதை இவர் பார்த்திருக்க முடியுமா ?
'கப்ருக்குள் ஒருவர் அடக்கப்பட்டதும் அவருக்கும் உலகுக்குமிடையில் திரையிடப்பட்டு விடுகின்றது . இது பற்றி அல்லாஹ்
'அவர்களுக்குப் பின்னால் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரைக்கும் ஒரு திரை போடப்பட்டிருக்கின்றது .'என்கின்றான் .
( ஸூரா முஃமினூன் )

இவ்வசனம் கப்றில் நடக்கும் விடயங்கள் மறைவானவை . அவற்றை சாதாரண எம்போன்ற மனிதர்களால் பார்க்க முடியாது என் பதைத்திட்டவட்டமாக எடுத்துரைக்கின்றது .

நீங்கள் இறந்தவர்களை அடக்காது விட்டு விடுவீர்களோ எனும் அச்சம் எனக்கில்லாது விட்டால் நான் செவியுறும் கப்ருடைய வேதனையை நீங்களும் செவியுறுமாறு செய்திருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள் .. ( ஆதாரம் முஸ்லிம் )

நபியவர்களைத்தவிர வேறு எவரும் கப்ரில் நடப்பவற்றைச் செவியுற மாட்டார்கள் என சொல்லியிருக்க மேற்படி நபர் எங்ஙனம் பெரியார் தொழுததைப்பார்த்திருக்க முடியும் .

கப்ரில் நடக்கும் விசாரணை மலக்குகள் அவரை எழுப்பி இருக்க வைப்பது, வேதனை செய்வது, நல்லவர்களின் கப்று தொலைதூரத்திற்கு விசாலமாக்கப்படுவதெல்லாம் ஹதீஸில் வந்துள்ளது . ஆனால் இவை நாம் விசாரிப்பது போன்றோ, நாம் எழுந்திருப்பது போன்றோ அல்ல . இதன் முறை எப்படி யென்பதை அல்லாஹ்வே அறிவான் . இவர் பெரியார் கப்ரில் தொழுவதைப் பார்த்திருந்தால் வழக்கமாக மனிதர்கள் தொழும் முறையில் தொழுவதையே பார்த்திருக்க வேண்டும் . அது எப்படி மூன்றடி உயர கப்ரினுள் நிகழ்வது சாத்தியமாகும் ?.
அதே போல் அறபு நாட்டு கப்றின் அமைப்பும் வித்தியாசமானது . இதற்கு லஹ்த் எனப்படும் . வழக்கமான கப்று போல்த் தோண்டியதன் பின் அதன் வலது பக்கமாக பக்க வாட்டில் பொந்து போன்று உள்அறை ஒன்று தோண்டி அதனுள்ளேயே ஜனாஸா வைக்கப்படும். பின் அவ்வறை கற்களால் மூடப்படும் . கப்றுக்கு மண்போட முன்பு கூட வெளியே இருப்பவர்களுக்கு ஜனாஸா தெரியும் வாய்ப்பே கிடையாது.

இவை அனைத்தையும் வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது மேற்படி சம்பவத்துக்கு ஆதாரமிக்க சான்று இல்லாததாலும், இச்சம்பவம் ஹதீஸூக்கு முரணாவதாலும் பகுத்தறிவும் ஏற்க மறுப்பதாலும் இது பெரியார்கள் மீது பக்தியை உருவாக்குவதற்காகப் புனையப்பட்ட சம்பவம் என்பது தெளிவாகின்றது .

3-அறுபது ஆண்டுகள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்த பெரியார். தொழுகை சிறப்பு 2ம் சம்பவம் .

4-அறுபது ஆண்டுகளாக இஷாவுக்குச் செய்த ஒழுவுடன் ஸூபஹ் தொழுத பெரியார் . தொழுகை சிறப்பு 17ம் சம்பவம் .


5-தூங்கவே மாட்டேன் என சத்தியம் செய்து 40 ஆண்டுகளாகத் தூங்காத பெரியார் . தொழுகை சிறப்பு 1ம் சம்பவம் .


6-எழுபது ஆண்டுகளாக இடைவிடாது வணங்கிய பெரியார் .தொழுகை சிறப்பு 15 ம் சம்பவம் .


7-பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து படுக்காத பெரியார் தொழுகை சிறப்பு 11ம் சம்பவம் .


8- அரசனானது முதல் மனைவியுடன் உறவு கொள்ளாத உமர் இப்னு அப்துல் அஸீஸின் சம்பவம். (தொ சிறப்பு 12ம் சம்பவம்.).
நபிவழி வாழ்ந்த ஒரு நீதியான அரசர் இப்படி மனைவியின் ஹக்குகளைப் பாழ்படுத்தியிருப்பாரா?


9-நாற்பது ஆண்டுகள் இரவெல்லாம் அழுது கொண்டும் பகலெல்லாம் நோன்பு வைத்துக் கொண்டுமிருந்த பெரியார் .
( தொ..சிறப்பு 13ம் சம்பவம் .)


10- பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை சாப்பிட்ட பெரியார் .
(தொழுகை சிறப்பு  7ம் ஹதீஸின் விளக்கம் )

இப்படி பெரியார்களின் சாதனைப் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன . இவையெல்லாம் ஆசாபாசங்கள், உலக தேவைகளுடன் படைக்கப்பட்டிருக்கும் மனிதர்களிடமிருந்து நடப்பது சாத்தியமா? என்பது இரண்டாவது விடயம் . சரி நடந்தது என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம் . ஆனால் இதற்கு மார்க்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதா ? என்பதே கேள்வி . மார்க்கம் தடுத்திருக்கும் விடயத்தைச் செய்து விட்டு இபாதத் செய்து விட்டேன் என்று எப்படிச் சொல்ல முடியும் .? தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளும் என்று பெரியார்கள் சொல்லித்தந்த மந்திரத்தை பள்ளியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் எனதன்பின் கார்க்கூன் சகோதரர்களே!!
மேற்படி பெரியார்களின் வாழ்க்கைச் சாகச நிகழ்வுகள் அல்லாஹ்வின் கட்டளையா ? அல்லது நபியவர்களுடைய வாழ்க்கை வழி முறையா?என்று ஒரு தடவையேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா ? சிந்தியுங்கள் இஸ்லாம் சிந்திக்கக் தூண்டும் மார்க்கம் . பகுத்தறிவுக்கு வேலை கொடுக்கும் மார்க்கம் இஸ்லாத்தை ஏற்க வரும் அன்னிய மதத்தினரைக் கூட இஸ்லாத்தைப் பற்றிச் சிந்தித்து அதன் சீரிய நேரிய தன்மையை அறிந்து விளங்கி ஏற்றுக் கொள்ளுமாறே அது தூண்டுகின்றது . எத்தனையோ மாற்றுமத நண்பர்கள் இஸ்லாத்தை அறிய விரும்பி குர்ஆன் ஹதீஸைப் படித்து இஸ்லாத்தின் மாண்புகளை அறிந்து அதனை ஏற்ற வரலாறுகள் நிறைய உண்டல்லவா? அப்படியாயின் பரம்பரை முஸ்லிம்களான நாம் ஏன் இப்படி குர்ஆன் ஹதீஸைப் படிப்பது விளங்குவதை விட்டும் எமக்கு நாமே தடைவேலி போட்டுக் கொள்ள வேண்டும் . குர்ஆன் ஹதீஸ் நமக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கை இருந்தால் இன்றே அதன் பக்கம் வாருங்கள் . அதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றிப் படியுங்கள் . கேவலம் பத்து ரூபாவுக்கு மண்பானை ஒன்றை நீங்கள் வாங்கும் போதும் அதில் வெடிப்பேதும் உள்ளதா எனப் பதினைந்து தடவைகள் தடவிப் பார்க்கின்றீர்கள் .எதற்காக ? நாம் பத்து ரூபாய் விடயத்தில் கூட ஏமாந்து விடக் கூடாதென்பதில் ஜாக்கிரதையாக இருக்கின்றீர்கள்
இந்த மண்பானை விடயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட மார்க்க விடயத்துக்குக் கொடுக்க மாட்டேன் என்கின்றீர்களே ! ஏன்இப்படி? எனவே யார் எதைச் சொன்னாலும் சட்டென நம்பி விடாமல் குர்ஆன் ஹதீஸில் உள்ளதா ? என்று ஆதாரத்துடன் மார்க்கத்தைப் படியுங்கள் . நிச்சயமாக அல்லாஹ் எம் அனைவருக்கும்நேர்வழி காட்டுவான் . அல்லாஹ் நேர்வழி காட்ட நாடியவர்களை எவராலும் வழிகெடுக்க முடியாது இது இறைவன் வாக்கு. கடவுளை நம்பினார் கைவிடப் படார்!!!.

புத்திக்குப் பொருந்தாத புதிர்ச் சரிதைகள்.

ஹஜ்ரத் ஷக்கீக் பல்கி எனும் சூபி மகான் கூறுவதாவது ..
நாங்கள் ஐந்து விடயங்களைத் தேடினோம் அவற்றை ஐந்து இடங்களில் பெற்றுக்கொண்டோம் .
-இரணத்தில் பரக்கத்து ளுஹாத் தொழுகையிலும் ..
- கப்ருக்கு ஒளி தஹஜ்ஜத் தொழுகையிலும் ..
- முன்கர் நகீரின் கேள்விக்கு பதில் கிராஅத்திலும் .
-சிராத்தல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக் கடப்பது நோன்பிலும் ஸதக்காவிலும் ..
-அர்ஷ_டைய நிழல் தனிமையிலிருப்பதிலும் கிடைக்கப் பெற்றோம் . ( தொழு ..சிறப்பு 32ம் பக்கம் . )

இரணத்தில் பரக்கத் ஏற்பட்டிருக்கலாம் .அது லுஹாத் தொழுகையால்தான் என்று எப்படி இவர் அறிந்தார்? குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் வைத்திருக்கின்றாரா?. அல்லது இவருக்குத் தனிப்பட்ட முறையில் வஹி வந்ததா ? கப்ருக்கு ஒளி தஹஜ்ஜூத் தொழுகையிலென்றால் இவர் கப்ருக்குச் சென்று பார்த்து விட்டு வந்தாரா? ஸிராத்தல் முஸ்தகீம் பாலத்தையும் பார்த்திருக்கின்றார் போலும் . அர்ஷின் கீழும் சென்று உட்கார்ந்து விட்டு வந்திருக்கின்றாரோ??....மக்களின் மார்க்க அறியாமையை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு என்னவெல்லாம் சொல்லுகின்றார்கள் ? உண்மையிலேயே இபாதத்தின் மீது மக்களுக்கு ஆசை ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அதற்காக குர்ஆன் ஹதீஸிலே நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உள்ளன . நபியவர்கள் போற்றிச் சென்ற மூன்று சிறந்த நூற்றாண்டு காலப் படுதியில் நபிவழியை அச்சொட்டாகப் பின்பற்றி வாழ்ந்த நல்லோரின் வாழ்க்கைக் குறிப்பு ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் இருக்கின்றன .இவற்றையெல்லாம் விட்டு விட்டு முகவரியற்றவர்களின் மூடத்தனமான - நபிவழிக்கு முரணான, பகுத்தறிவு பழித்துரைக்கும் ஆதாரமற்ற சம்பவங்களை பக்திக் பரவசத்துடன் பள்ளியில் உட்கார்ந்து படிப்பதால் இஸ்லாத்தை அறிய முயுமா? பெரியார்கள் பெரியார்கள் என்று அவர்கள் மீது ஒரு குறுட்டுப் பக்தியை ஏற்படுத்தி பின்னர் தங்களையும் மக்கள் பெரியாகளாக மதிக்க வேண்டும் என்ற குறுகிய – சுயநல நோக்கத்துடன்தான் இவையெல்லாம் திட்டமிட்டு எழுதப்பட்டனவா ? என்று எண்ணத் தோன்றுகின்றது.

நபியவர்களை விடச் சிறந்த பெரியார் யார் ? ஸஹாபாத் தோழர்களை விடச் சிறந்த பெரியார்கள் யார்? இவர்களுடைய வாழ்க்கை எமக்கு முன்மாதிரியாக இருப்பதற்குப் போதாவிட்டால் நம்மை விட மோசமான வழிகேடர் யாரும் இருக்க முடியாது . ஸஹாபாக்களின் சம்பவங்களும் தஃலீம் தொகுப்பில் கூறப்பட்டுள்ளதுதானே என சிலர் வினவலாம் . ஸஹாபாக்களின் சம்பவங்களும் இதில் கூறப்பட்டுள்ள பெரியார்களின் சம்பவங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை . ஸஹாபாக்களின் சம்பவங்கள் நபிவழியை மையமாக வைத்து இடம்பெற்றிருப்பவை .இந்தப் பெரியார்களின் வாழ்வில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் சம்பவங்கள் முழுக்க முழுக்க நபிவழிக்கு முரணானவை . இதை ஏற்றால் அதை மறுக்க வேண்டும் .அதை ஏற்றால் இதை மறுக்க வேண்டும் . இரவெல்லாம் நின்று வணங்குவது நபிவழியா ? பகலெல்லாம் நோன்பு நோற்பது நபிவழியா ? மனைவியுடன் உறவு கொள்ளாமல் இருப்பது நபி வழியா ? ,கப்ரில் அடக்கப்பட்டவர்களிடம் துஆக் கேட்பது நபி வழியா ? துறவறம் பூண்டு காடே கதியெனச் செல்வது நபிவழியா? சொல்லுங்கள் . சற்று சிந்தித்துப்பாருங்கள் . எந்த வழி நமக்கு வேண்டும் ? நபிவழியா அல்லது இந்த முகவரியற்ற பெரியார்களின் வழியா ? நீங்களே சிந்தியுங்கள் ,நீங்களே முடிவு செய்யுங்கள் . நாளை அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். கப்ரிலே ஒவ்வொருவருக்கும் கேள்வி கணக்கு உண்டு .

நபியவர்களை ஒவ்வொருவருக்கும் காட்டப்பட்டு இவரைப்பற்றி என்ன கூறுகின்றாய் என்று கேட்கப்படும் . அப்போது நபிவழிப்படி நடந்த நல்லவர்கள் 'இவர்தான் எங்கள் நபி முஹம்மது . இவர் எங்களுக்கு நேர் வழியைக் காட்டினார் .அதை நாங்கள் பின்பற்றி நடந்தோம்' என்றும் நபிவழியைப்புறக்கணித்து வாழ்ந்தவர்கள் ' இவரா? இவரை எனக்குத் தெரியாதே இவரைப்பற்றி யாராரோ என்னெ ன்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள் நானும் அதையே சொல்லிக் கொண்டு திரிந்தேன் ' என பதிலளிப்பார்.
( புகாரி 1252 -முஸ்லிம் 1557)

இவ்விரு சாராரில் எந்தப் பிரிவில் நாம் சேர வேண்டுமென்று நீங்களே முடிவெடுங்கள் .அதற்காக என்ன செய்ய வேண்டுமென்றும் முடிவெடுங்கள் . நாமும் நபிவழிப்படி நடந்திருந்தால் தானே தக்க பதிலை அளிக்க முடியும் . இதை மனதில் கொண்டு நாம் செல்லும் பாதையை சீர்படுத்திக் கொள்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் .




மூன்றாவது அடிப்படை . இல்மு திக்ரு .

ஆரம்பத்தில் அல்லாஹூத்தஆலா துன்யா ஆகிராவுடைய வெற்றியை தீனில் வைத்திருக்கின்றான் . தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை, நபி  ஸல் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறை . இந்த வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமு தாயத்திடத்திலும் வருவதற்கான ஒரு உழைப்பே தப்லீக் செய்யும் வேலை எனும் கோஷமே தப்லீக்கில் மூலை முடுக்கெங்கும் பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்யப்படும் . ஆனால் அங்கே அல்லாஹ்வுடைய கட்டளையும் நபி (ஸல் ) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையும் தான் போதிக் கப்படுகின்றதா ? என்பதே கேள்விக்குறியாகும் .
இல்மின் சிறப்பு பற்றி தப்லீக்கில் ' இல்முடைய மஜ்லிஸில் ஒரு ஸாஅத்து நேரம் அமர்ந்திருப்பது இந்த உலகம் உலகிலுள்ள வஸ்த்துக்கள் அனைத்தை விடவும் சிறந்தது 'என்றும் திக்ரின் சிறப்புப் பற்றி'திக்ருடையவன் உயிருடையவன் திக்ரற்றவன் உயிரற்ற பிணம்' என்றும் ஒவ்வொருத்தராக ஜமாஅ த்தில் எழுந்து இந்த வசனத்தைச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் .

இல்ம் என்றால் மார்க்க அறிவு என்று அர்த்தம் . மார்க்க அறிவெனும் போது அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்தவைகளுக்கே மார்க்க அறிவு எனப்படும் . இது தவிர இவற்றை சரி வரக் கற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் கலைகளுக்கும் இல்ம் என்று சொல்லப்படும் .

ஆனால் மார்க்க அறிவு பற்றி எந்தளவு குறுகிய கண்ணோட்டத்துடன் இவர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் சற்று விரிவாக அறிய வேண்டியுள்ளது. சுருங்கக் கூறுவதாயின் இவர்களிடத்தில் இல்ம்-- மார்க்க அறிவு அவசியம் என்று சொல்லப்படும், பேசப்படும் விடயங்களில் 25 சத வீதமானவை பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவும் . 25 வீதமானவை நபியவர்கள் எச்சரித்துச் சென்ற பித்அத்தான மௌட்டீக விடயங்களாகவும் இன்னும் 25 வீதமானவை சிர்க்கை - இணை வைப்பை வளர்க்கும், ஆதரிக்கும் விடயங்களாகவும் இருப்பதை அறியமுடிகின்றது . ஆக கால்வாசி தூய மார்க்க அறிவும் கால்வாசி பித்அத்துக்களும் இன்னும் கால்வாசி ஷிர்க்குக்குத் துணைபோகும் விடயங்களும் மற்றும் கால்ப்பகுதி பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் வழிவந்த செய்திகளையும் கலந்த கலவையால் உருவானதே தப்லீக் அமைப்பு எனலாம் இனி இவை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம் .

பலவீனமான, புனையப்பட்ட ஹதீஸில் உருவான இல்மு திக்ர் போதனை ...
ஸஹீஹ் என்றால் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும். நபியவர்களிடமிருந்து தாம் பெற்றதாக நேர்மையான, நினைவாற்றல் மிக்கஅறிவிப்பாளர்கள் எவ்வித குளறுபடிகளோ,மாற்றமோ இன்றி அறிவிக்கும் ஹதீஸ்களே ஆதாரப்பூர்வமாக ஹதீஸ் எனக் கொள்ளப்படும் .

இதற்கு மாற்றமான ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்களாகும். பலவீனமான ஹதீஸ்களை ஆதாரத்துக்கு எடுக்க முடியாது என்பதே ஹதீஸ்க்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். ஆனால் தப்லீக் பெரியார்களைப் பொறுத்த வரைக்கும் இது விடயத்தில் எவ்விதக் கவனமும் இல்லாது அலட்சியமாக நடந்து கொள்வதே அவர்களின் வழக்கமாகும் .

இவர்கள் போற்றிப் புகழும் ஸூபித்துவப் பித்தர்களில் ஒருவனான இப்னு அறபி என்பவன் ஹதீஸ் பற்றி என்ன கூறுகின்றான் பாருங்கள் ...
'எத்தனையோ ஹதீஸ்களை துன்யாவுடைய உலமாக்கள் ஸஹீஹ் என்று நினைத்து அமல் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் நாங்கள் கஸ்புடைய ஞான நிலையில் நபிகளை நேரடியாகச் சந்தித்து இந்த ஹதீஸை நீங்கள் சொன்னீர்களா உங்களுடையதுதானா ? என வினவும்போது இல்லையே ! என்று மறுத்து விடுவார்கள் . எனவே நேரடியாக நபியிடமிருந்து கிடைத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நாங்கள் அந்த ஹதீஸின்படி அமல் செய்வதை விட்டு விடுகின்றோம் . அவ்வாறே பலவீனமான ஹதீஸை துன்யாவுடைய உலமாக்கள் புறக்கணிக்கின்றார்கள் .ஆனால் நாங்கள் நபியிடத்தில் நேரடியாக சந்தித்து இது பற்றிக் கேட்ட வேளை இல்லையே நான் தானே அதைச் சொன்னேன் என்பார்கள் . எனவேதான் துன்யாவுடைய குறுகிய அறிவுள்ள இந்த ஹதீஸ்கலை உலமாக்களின் 'இந்த ஹதீஸ் பலவீனமானது .அது இட்டுக்கட்டப்பட்டது' எனும் பேச்சையெல்லாம் நாம் பொருட்படுத்துவதில்லை என்று உளறுகின்றான் .

இது போன்று தான் தப்லீக் உலமாக்களின் ஹதீஸ் பற்றிய அணுகுமுறையும் உள்ளது . பாமர தப்லீக் சகோதரர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு நபிவழியைத்தான் பின்பற்ற வேண்டும் எனும் வைராக்கியம் இருந்தாலும் கூட அவர்களுக்குப் போதிக்கப்படும் தவறான விளக்கங்களால் அவர்களும் இவ்விடயத்தில் ஒரு வகை அறிவீனத்துடனேயே செயற்படும் அவல நிலையைக் காண முடிகின்றது .

உதாரணத்துக்கு சில நிகழ்வுகள் ....

1- நான் தப்லீக் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த காலத்தில் ஓரு முறை வக்தை முடித்து விட்டு வீடு திரும்ப இருந்த வேளை. வக்து முடித்துச் செல்பவர்களுக்கு வாப்பஸ் பயான் எனும் ஒரு பயான் நடை பெறுவது வழக்கம் . அதனை நிகழ்த்த ஒரு கார்க்கூன் வந்திருந்தார் . எனக்கு நன்கு தெரிந்தவர் இன்றும் உயி;ரோடு இருக்கின்றார் . பெயரைக் கூறாது விடயத் தைத் கூறுகின்றேன் . இவர் தனது பயானில் உயர் பீட தப்லீக் பெரியார்கள் சொன்னதாக எங்களுக்குச் சொன்னசெய்தி...
'நாம் நபியவர்கள் மீது எப்படி மஹப்பத் வைக்க வேண்டு மென்றால் நபியவர்கள் சொன்னதாக, செய்ததாக எந்தச் செய்தியை அறிந்தாலும் - அது முடியுமா முடியாதா ? சாத்தியமா ? என்றெல்லாம் எதுவும் யோசிக்காது அதைத் செய்யத் துணிந்து விட வேண்டும். மாறாக அது புகாரியில் உள்ளதா ,முஸ்லிமில் உள்ளதா? ,மிஷக்காத்தில் உள்ளதா ? ஸஹீஹா, ளயீபா ? என்றெல்லாம் ஆராயக் கூடாது . இவ்வாறு துருவி ஆராய்வது நபியை முஹப்பத் வைக்கும் பக்திமான்களின் செயலல்ல ' என்று விளக்கம் கூறினார் .
(இதனை நேரில் கேட்ட சாட்சிகள் இன்னும் பலர் உள்ளனர் .)

2-இதே போன்று கொழும்பு பெரிய மர்கஸூக்கு டில்லி மர்க்கஸில் இருந்து 2002ம் ஆண்டு சில முக்கிய பெரியார்கள் வந்திருந்தனர் . இவர்கள் ஸஹீஹ்-ளயீபான ஹதீஸூக்கு ஒரு அதிசய விளக்கத்தைக் கொடுத்தார்கள் ..
.
பயானில் அப்பொரியார் சொன்னார் ' ஸஹீஹான ஹதீஸ் என் பது பால்த்தேனீர் போன்றது ,ளயீபான ஹதீஸ் சாதாரண தேனீர் போன்றது . பால்த்தேனீர் கிடைக்கா விட்டால் நாம் சாதாரண தேனீரைப் பருகுவதில்லையா ? அது போன்று தான் ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கா விட்டால் பலவீனமான ஹதீஸின்படி அமல்ச் செய்வதில் எவ்விதத் தவறும் இல்லை ' என்று திருவாய் மலர்ந்தார் . இன்னுமோரிடத்தில் ' ளயீபான ஹதீஸ் என்றால் என்ன தெரியுமா ? பெரிதாக ஒன்றுமில்லை . அதை அறிவித்த அறிவிப்பாளர் எப்போதாவது காலில் செருப்புப் போடாமல் நடந்திருப்பார், எப்போதாவது நின்று கொண்டு தண்ணீர் குடித்திருப்பார் . அதனால் அவர் அறிவித்த ஹதீஸைப் புறந்தள்ளி விட்டார்கள். எனவே இவர் செய்த இந்தச் சிறிய தவறுக்காக நாம் அந்த ஹதீஸையே மறுத்து விட முடியுமா ? ' என்று வினாத் தொடுத்தார் . (இதனை நேரில் கேட்ட சாட்சிகள் பலர் இன்றும் உள்ளனர் .)

பலவீனமான ஹதீஸால் இல்மு திக்ர் போதனை...
இது போன்றே ஜக்கரிய்யா மௌலானா தனது அமல்களின் சிறப்பு எனும் நூலிலே ஏகப்பட்ட கதைகளையும் முகவரியற்ற கப்ஸாக்களையும் அள்ளி விதைத்து விட்டுப் பின்வருமாறு இயம்புகின்றார்கள் .

'(பளாயில்)சிறப்புகளைக் குறிப்பிடும் அறிவிப்புக்களைக் கூறுவதில் முஹத்திதீன்கள் மத்தியில் சற்றுத் தாராளமான நிலை இருக்கின்றது . எனவே சாதாரணமான பலவீனமான அறிவிப்புக்களும் இப்புத்தகத்தில்; கூறப்பட்டுள்ளன . சூபிய்யாக்களுடைய சம்பவங்கள் சரித்திர வகையைச் சார்ந்ததாகும் . அவை ஹதீஸின் அந்தஸ்த்தை விடக் குறைவானவை என்பதும் தெளிவான விடயமாகும் . எனவே இந்நூலிலுள்ள பலவீனமான ஹதீஸ்கள் சம்பவங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே'.. ( அமல்களின் சிறப்பு ப: 147 )

சிறப்புகள் பற்றி பேசும் ஹதீஸ்களில் மிக அதிகமான உலமாக்கள் பலவீனமானவற்றை அறிவிக்கவே கூடாது என்று ஒரேயடியாகத் தடை விதித்துவிட்டனர். ஒரு சில முஹத்திதீன்கள்; கடுமையான நிபந்தனைகளின் பின் பலவீனமான ஹதீஸ்களைக்குறிப்பிடுவது கூடும் என்கின்றனர். அவர்கள் விதித்த நிபந்தனைகளைப் பாருங்கள் .

1-ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களினால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயத்துக்கு வலுவூட்டும் வகையிலேயே ளயீபான ஹதீஸ் இருத்தல் வேண்டும் .
2-அகீதா -இறை நம்பிக்கை, மறைவானவை பற்றிய விடயமாகவோ, சட்டதிட்டங்கள் பற்றியதாகவோ இல்லாதிருத்தல் வேண்டும் .
3- ளயீபான ஹதீஸ் மூலம் செய்யும் அமலுக்குக் கூலி கிடைக்குமென்று உறுதி கொள்ளாதிருத்தல் வேண்டும் .

சிறப்பு பற்றிய ளயீபான ஹதீஸ்களில் இவ்வளவு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் ஜக்கரிய்யா மௌலானா இப்படிப் பொத்தம் பொதுவாக ' தாராளமாக ளயீபானவற்றை வைத்து அமல் செய்யலாம் என்று சொல்லியிருப்பது எப்படி நியாயமாகும் .

சூபியாக்களின் சம்பவங்கள் ஹதீஸை விடத் தரம் குறைந்தவை என்று சொல்லி விட்டு ' எனவே இதிலுள்ள ஹதீஸ்களும் சம்பவங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே 'என்று சொல்கின்றார் . ளயீபான ஹதீஸ்களை அறிவிக்க அறிஞர்களின் சலுகை இருக்கின்றது என நியாயம் கூறியவர் அதை விட தரம் குறைந்த சூபியாக்களின் சம்பவங்களை நியாயப்படுத்த எவ்வித காரணமும் கூறாது நழுவி ' சூபியாக்களின் சம்பவங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே'என்று மாத்திரம் கூறிமுடிக்கின்றார் .

இதிலிருந்து தெரிவது யாதெனில் தப்லீக் பெரியார்களானவர்கள் ஹதீஸ் கலை அறிஞர்கள் நபிமொழிகளை தரம்காணக் கடைப்பிடித்த வழி முறைகள் அனைத்தையுமே உதறித்தள்ளி விட்டு நமது கருத்தை, நோக்கத்தை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மாத்திரமல்ல இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடிய ஷிர்க்கான சம்பவங்களையும் தாராளமாகக் கூறத்தயங்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம் .

ஆனால் ஆச்சரியம் !!! இவையெல்லாம் இல்மு எனும் பெயரில் தப்லீக் சகோதரர்களால் பள்ளிவாயல்கள் தோறும் அரங்கேற்றப்படுகின்றன .

இது அமல்களில் சிறப்பில் இருக்கும் அந்தரங்கங்கள் அடுத்த தஃலீம் நூல்களான ஸதக்காவின் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு போன்றவற்றைப் பற்றி சொல்ல முடியாதளவுக்கு குப்பைகள் நிறைந்துள்ளன . அதிலுல்ல அனைத்து விடயங்களையும் ஒருவன் சரியென்று நம்பினால் அவனுடைய ஈமானே பறிபோய் விடும் என்று சொல்லும் அளவுக்கு இறைநம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் விடயங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆழமாகப் படித்தால் இவை அழகாகப் புலப்படும் . இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கிக் காட்டுவது முடியாத காரியமாதலால் முதலில் ஒவ்வொரு முஸ்லிமும் ஈமானுக்கு ஊறு விளைவிக்கும் ஷிர்க், பித்அத் பற்றி ஒரளவு அறிந்து வைத்திருந்தால் - ஈமான் எனும் டாச்லைட்டை உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு அதன் ஒளியில் இந்த இரு புத்தகங்களிலுமுள்ள விடயங்களை அலசினால் . பக்கத்துக்குப் பக்கம், பந்திக்குப் பந்தி ,வரிக்குவரி மார்க்க விரோதக் கருத்துக்களைத் தாங்கிய நச்சுக் கருத்துக்கள் வழி நெடுகிலும் இருப்பதை நீங்களாகவே ஏற்றுக் கொள்வீர்கள் .


இல்மு திக்ர் எனும் பெயரில் அரங்கேரும் பித்அத்துகள் ...

'பித்அத்து' என்றால் நபியவர்களிpன் வழிகாட்டலுக்கு மாற்றமாக மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படும் நூதன அனுஷ்ட்டானங்களைக் குறிக்கும்;. நபியவர்கள் எதை மார்க்க விடயமெனப் போதித்தார்களோ அவை மாத்திரமே தீன் ஆகும். நபியவர்கள் பித்அத் பற்றியும் அதன் தீய விளைவுகள் பற்றியும் மிக முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்குப் போதித்ததை நாம் அவதானிக்க முடிகின்றது . எந்த அளவுக்கென்றால் நபியவர்கள் ஏதாவது உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போது பித்அத் பற்றிய எச்சரிக்கையை விடுத்தவண்ணம் பின்வருமாறு தமது உரையைத் தொடங்குவார்கள்.


'புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே ..அவனைப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகின்றேன் . பேச்சில் சிறந்தது அல்லாஹ்வின் கலாமாகிய அல்குர்ஆனாகும் . வழிகாட்டல்களில் சிறந்தது நபி முஹம்மத் அவர்களின் வழிகாட்டலாகும் . அனைத்திலும் மிகக் கெட்ட விடயம் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பித்அத்துகள் - இஸ்லாத்தில் இல்லாத மௌட்டீகங்களாகும் . இவை அனைத்துமே பித்அத்தாகும் .பித்அத்துகள் அனைத்துமே வழிகேடாகும் . அனைத்து வழிகேடுகளும் நரகத்தின் பக்கமே கொண்டுபோய்ச் சேர்க்கும்' என்று கூறியே ஆரம்பிப்பார்கள் (அபூதாவூத் 1060 நஸாயி 3991) .

மேலும் நபியவர்கள் கூறினார்கள் ...
'எனது மார்க்கமான இஸ்லாத்தில் எவர் அதிலில்லாத ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றாறோ அது நிராகரிக்கப்பட்டதாகும்'; என்றும் 'எவர் நாங்கள் சொல்லாத ஒருகாரியத்தை மார்க்கத்தின் பெயரால் செய்கின்றாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்' எனவும் எச்சரித்துள்ளார்கள் . ( ஆதாரம் புகாரி முஸ்லிம் .)

எனவே பித்அத் எனப்படுவது சொல், செயல் எண்ணம் போன்ற மூன்றின் மூலமும் ஏற்பட முடியும். தப்லீக் அமைப்பினரிடம் அப்படி என்ன பித்அத்துக்கள் இருக்கின்றன. ???
தப்லீக் உஸூலின் பிரகாரம் இவர்கள் 3நாள் ,40 நாள் ,4மாதம் ஒருவருடம் என வெளிக்கிளம்பிச் செல்கின்றார்கள் . இந்த நாட்களை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்தீர்கள் என்று கேட்டால் துமாமா எனும் காபிரான உளவாளியை நபியவர்கள் 3 நாட்கள் கட்டிப்போட்டார்கள், மூஸா நபியை அல்லாஹ் தன்னுடன் உரையாட 40 நாட்கள் அழைத்தான், 4 மாதத்தில் கருவில் சிசுவுக்கு உயிர் கொடுக்கப்படுகின்றது என்று ஏதேதோ சம்பந்தமில்லாத காரணங்களையும் ஆதாரங்களையும் கூறி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். அப்படியென்றால் நபியவர்களின் தாய் அவர்களின் ஆறாவது வயதில் இறந்தார்கள். அதற்காக ஆறு வருடங்களும், நபியவர்கள் 40 வயதில் நபியானார்கள் என்பதற்காக 40 வருடங்களும் வெளிக்கிழம்பிச் செல்வார்களா ? எங்கள் தனிப்பட்ட நலனுக்காக நிர்ணயித்தோம் என்றால் விடயம் முடிகின்றது . ஆனால் அப்படிச் செய்ய மாட்டார்கள் . அதாவது சுற்றி வளைத்து தமது எண்ணம் தேவைக்கேற்ப நாட்களின் அளவை நிர்ணயித்து விட்டு அதற்கு மார்க்க சாயம் பூச முற்படுவதுதான் ஆச்சரியமான விடயம் . இனி விடயத்துக்கு வருவோம் ....

1- தப்லீக்கில் செல்ல தமது வசதிக்கேற்ப நாள் நிர்ணயிப்பதைத் தவறென்று சொல்ல முடியாது. அது அவரவர் வசதிக்கேற்ப நிர்ணயிக்கப்படும் விடயம் .ஆனால் இந்த தப்லீக் பெரியார்கள் மாதத்தில் ஒருவர் 3 நாள் வெளிக்கிழம்புவதே ஒரு மிகப்பெரிய வணக்கம் என்பது போன்ற பிரமையை உருவாக்கி 3 நாள் செல்லாவிட்டால் அவர் மாபெரியதொரு தெய்வக் குற்றத்தைச் செய்து விட்டார் என்பது போன்ற ஒரு போலி அச்சத்தை உருவாக்கி விடுகின்றனர் . 3நாள் செல்லா விட்டால் அல்லாஹ்வின் சாபம் வந்துவிடும், அவனது வேதனை நம்மைச் சும்மா விடாது . எதற்காகப் போகாது விட்டோமோ அந்தக் காரியமும் நிறைவேறாது என்பது போன்ற போலி பக்தியை, பயத்தை இவர்கள் பாமரர்களுக்குத் தோற்றுவிக்கின்றார்கள் .3 நாட்கள் சென்ற ஒருவர் அத்தியாவசிய வேலை நிமிர்த்தம் வீடு செல்ல ஏற்பட்டால் சில முக்கியஸ்த்தர்கள் ' அப்படிச் சென்றால் வக்து முறிந்து விடும் என்று கூறிப் பயமுறுத்துவதும் உண்டு. இதன் மூலம் இதுவும் தொழுகை நோன்பு போன்றதொரு வணக்கம் என்பது போன்று சித்தரிக்க முயல்கின்றனர் . இது ஒரு பித்அத் ஆகும் . வெறுமனே ஊரை விட்டு வெளிக்கிளம்புவது வணக்கமாகுமா? வெளிக்கிளம்பாமலிப்பது குற்றமாகுமா? இல்லையே!! அப்படியிருக்க ஏன் இவ்வாறு மார்க்கத்தின் பெயரால் இயக்கத்துக்கு ஆள் சேர்க்கின்றார்கள் ??
இன்று தப்லீக்கின் முக்கியஸ்த்தராக இருக்கும் காத்தான் குடியைச் சேர்ந்த எனது உஸ்தாது ஒருவர் அடிக்கடி இப்படிச் சொல்வார்..

' ஊரில் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும் அபாயம் ஏற்பட்டால் உடனே ஊரிலுள்ள ஜமாத் வெளியே நிற்கின்றதா ? அல்லது வெளி ஜமாஅத் ஊரில் வேலை செய்கின்றதா ? என்று பார்ப்பேன் . அப்படியிருந்தால் அல்ஹம்து லில்லாஹ் நிச்சயம் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது என்று எண்ணிக் கொள்வேன். ஏனென்றால் ஊரில் ஜமாத் நிற்கும் போது எவ்வித வேதனையையும் அல்லாஹ் அனுப்ப மாட்டான் என்று கூறுவார்கள்.

இதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொன்னார்கள் . இது பித்அத்தான பேச்சு இல்லையா? அப்படியானால் கொழும்பு தப்லீக் மர்க்கஸிலிருந்து தினமும் ஜமாத்கள் வெளிக்கிழம்பிக் கொண்டு தானே இருக்கின்றன . ஆனால் இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பிரச்சினைகள் குறைந்த பாடில்லையே . ஜமாஅத்கள் வெளிக் கிழம்பியிருந்த காலப்பகுதியிலேயே காத்தான்குடியில் பல பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளதே ... இன்னும் பல இடங்களில் இவ்வாறு இடம்பெற்றுள்ளதே...





2- ஜிஹாத் என்பது இஸ்லாத்தை நிலைநிறுத்துவதற்காக இஸ்லாத்தின் விரோதிகளுடன் ஆயதமேந்திச் செய்யப்படும் புனிதப் போராகும். இதன் சிறப்பு தனியானது .உயர்வானது . இதிலே கலந்து கொள்பவர்களுக்கு அளப்பரிய நன்மைகள் கிடைப்பதாகவும் அவர் முஃமினாக மரணிப்பார் என்ற நற்சோபனமும் , இதிலே கலந்து கொண்டு தனது இன்னுயிரை நீற்பவர் ' ஷஹீத் ' தியாகி பட்டம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்படுவதாகவும்; இவரது பாவங்கள் இவரின் முதல்த்துளி இரத்தம் தரையில் சிந்தப்பட முன்பே மன்னிக்கப்பட்டு விடுவதாகவும் அல்குர்ஆனும் அல்ஹதீஸூம் சொல்லிக் கொண்டிருக்கின்றன .

இது தவிர இஸ்லாத்தின் உயர்வுக்காக இஸ்லாத்தின் பக்கம் முஸ்லிமல்லாத மக்களை அழைப்பதற்கான முயற்சியை தஃவா முயற்சி எனப்படும். இதற்கும் பல சிறப்புக்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இது வேறு ஜிஹாத் வேறு . முஸ்லிம் மக்களுக்கே அவர்களுக்குத் தேவையான மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்களைக் கற்றுக் கொடுப்பது அதற்காக வெளிக்கிழம்புவது வேறு இதற்கு தஃலீம், தர்பியா -அறப்போதனை எனப்படும். இவையனைத்துமே நல்ல விடயங்களாயிருப்பினும் இவை வெவ்வேறானவை . இவற்றுக்குக் கொடுக்கப்படும் நன்மைகளும் வெவ்வேறானவை . ஆக நபியவர்களின் காலத்தில் வாளேந்தி ஜிஹாத் செய்வதற்காகவும் நபியவர்கள் பல ஜமாஅத்துக்களை அனுப்பி வைத்தார்கள் . முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்காகவும் பல ஜமாஅத்களை அனுப்பியுள்ளார்கள். முஸ்லிம்களுக்கு மார்க்க விடயங்களைக் கற்றுக் கொடுப்பதற்கும் ஜமாஅத்துக்களை அனுப்பியிருக்கின்றார்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு வகை நன்மை கிடைப்பதாகவும் வாக்களித்துள்ளார்கள் .

ஆனால் இன்றைய தப்லீக் பெரியார்கள் இவ்விடயத்தில் மாபெரும் மோசடியையும் பித்அத் ஒன்றையும் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஜிஹாத் சம்பந்தமாக , அதில் செல்வதன் சிறப்பு அதில் ஈடுபடுபவருக்குக் கிடைக்கும் நன்மைகள் சம்பந்தமாக வந்துள்ள நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் மாற்றித் திருபுபடுத்தி அவற்றையெல்லாம் இவர்கள் புரியும் தப்லீக் முயற்சி சம்பந்தமான, அதற்கு ஆதாரமாக வந்துள்ள வசனங்களாக அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் புரிந்து வருகின்றனர் . இது இவர்கள் அல்குர்ஆன் வசனங்களுக்கு பொருள் சொல்லும் விடயத்தில் புரியும் மகா பெரிய பித்அத்துகளில் ஒன்றாகும் . அதே போன்று இவர்களது ஜமாஅத்தில் வெளிக்கிளம்பாதவர்களை ஜிஹாதுக்குச் செல்லாதிருந்தவர்களைக் கண்டித்து இறங்கிய வசனங்களை ஆதாரமாகக் காட்டி சாடுகின்றனர் ,தூற்றுகின்றனர் , அச்சுறுத்துகின்றனர் . இது எவ்வளவு பெரிய குற்றம் என்று தெரியுமா ?? இப்படியான இறை வசனங்களில் மோசடிசெய்த எஹூதிகளைக் கண்டித்து அல்லாஹ்...

'அவர்கள் (இறை வசனங்களை) அதன் இடத்தை விட்டும் திரிபு படுத்துகின்றனர் . இவர்களது இதயங்களைத் தூய்மையாக்க அல்லாஹ் விரும்பவில்லை . இவர்களுக்கு உலகத்திலேயே பெருங்கேவலமும் , மறுமையில் அல்லாஹ்வின் கடுமையான வேதனையும் உண்டு ' என்று கூறுகின்றான் .
(அல் மாயிதா 41ம் வசனம் )

நபியவர்களும் 'யார் அல்குர்ஆனுக்கு தமது மனோ இச்சைப்படி – தனது அபிப்பிராயத்தின் படி வியாகியானம் வழங்குகின்றாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்றும் ஒருவர் தனது சொந்த அபிப்பிராயத்தின் படி குர்ஆனுக்கு விளக்கமளிக்க முற்பட்டால் அவர் சரியாகச் சொன்னாலும் தவறிழைத்தவராகவே கருதப்படுவார் எனவும் கூறியுள்ளார்கள் . (ஆதாரம் திர்மிதி 3676 )

ஆனால் இவர்களோ இவ்வாறு ஜிஹாத் சம்பத்தப்பட்ட வசனங்களையும் நபிமொழிகளையும் தமது இயக்கத்துக்கு ஆள்ச் சேர்க்கப் பயன்படுத்தியதன் விளைவு இன்று ஜிஹாத் என்றாலே குலை நடுங்கமளவுக்குக் கோழைத்தனமும் , ஜிஹாதைப் பற்றிய தவறான கண்ணோட்டம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேயே உருவாகியுள்ளது. ஏதோ நபியவர்களே தப்லீக் ஜமாஅத்தின் அமீராக இருந்து ஜமாஅத்துக்களை அனுப்பி வைத்தது போன்று 'நபியவர்கள் ஜமாத் ஒன்றை அனுப்பினாங்கோ ' என்று தமது பயான்களில் அல்லாஹ்வுக்குக் கொஞ்சமும் பயப்படாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் . அல்லாஹ்தான் நேர்வழிகாட்ட வேண்டும்.

3- தீன் என்பதன் பொருள் ஆளமானது , விரிவானது . ஒரு மனிதன் இஸ்லாத்தின் வழிகாட்டல்ப்படி செய்யும் மார்க்க உலக சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்துமே தீன் என்ற சொல்லுக்குள் அடங்கும் . நபியவர்கள் ஒருவன் தனது மனைவிக்கு ஒரு கவளம் உணவு ஊட்டி விடுவதைக்கூட ஏன்.. தன் அவன் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதைக்கூட தீனுடைய விடயம் , நன்மையை ஈட்டித்தரும் விடயம் என்று கூறியுள்ளார்கள் . ( புகாரீ )
.
ஆனால் இன்றைய தப்லீக் பெரியார்கள் தீன் என்ற சொல்லைச் சுருக்கி குறுகிய வட்டத்துக்குள்ளாக்கி தப்லீக் ஜமாஅத்தில் செல்வதும் அதன்பெரியார்கள் அங்கீகரித்தவற்றில் ஈடுபடுவதும் , தஃலீம் புத்தகங்களை பக்தியுடன் வாசிப்பது மாத்திரமே தீன் என்று பாமர கார்க்கூன்கள் புரியுமளவுக்கு ஆக்கிவிட்டார்களா இல்லையா? இதற்குப் பெயர் பித்அத்தா இல்லையா,? நீங்களே சொல்லுங்கள் .

இன்று தப்லீக் கார்க்கூன்கள் தமக்குள் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொள்ளும் போது அவர் எவ்வளவுதான் நல்லவராக ஆலிமாகக் கூட இருப்பினும் தப்லீக்குடன் தொடர்பில்லாதவராயின் ' அவர் தீனை விட்டும் தூரமானவர்' என்று சொல்கின்றார்களா இல்லையா? நீங்களே தீர்ப்பளியுங்கள் .

இந்த தப்லீக் பெரியார்கள் இவர்களது ஜமாஅத் மாத்திரம் தான் தீன் வழி நடக்கும் ஜமாஅத் . இதில் பங்கெடுக்காதவர்கள் தீனை விட்டும் தூரமானவர்கள் . இதில் வாசிக்கப்படும் - இவர்களது உலமாக்களால்ப் போதிக்கப்படும் விடயங்கள் மாத்திமே தீனுடைய விடயங்கள் ஏனைய அனைத்துமே தீனுக்கு அப்பாற்பட்டவை என்று இவர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளதால் தப்லீக் கார்க்கூன்கள் இப்படிப் பேசித்திரிவதை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது .இதுவும் இஸ்லாத்துக்குத் தவறானதொரு வடிவம் கொடுக்கும் மகா பெரிய பித்அத்துக்களில் ஒன்றாகும் . இந்த ஹக்கான தீனுடைய வேலையில் நாம் இஸ்த்திகாமத்தாக இருக்க வேண்டும் . இதில் குறை காண்பவர் இதை விட்டும் வெளியேற்றப்படுவார் ' போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இவர்களிடம் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்படுகின்றன . இவை மிக அபாயகரமான வார்த்தைகள் . தப்லீக்கில் இல்லாத அனைவரும் வழிகேட்டில் இருக்கின்றார்கள் என்று மறைமுகமாக உணர்த்தும் வார்த்தைகள் .

என்னை ஒரு தடவை தப்லீக்கில் பயான் செய்வதற்காக அழைத்திருந்தார்கள். எனக்கும் தப்லீக்கும் இருந்த தொடர்பு குறைய ஆரம்பித்திருந்த காலம் அது. நான் நல்லபடியாகவே பயான் செய்து விட்டு தஷ;க்கீல் பண்ணும் போது(வக்தில் வெளிக்; கிளம்ப ஆள்த்திரட்டல்) பயானில் இருந்தவர்களைப்பார்த்து 'சகோதரர்களே! இன்று ஒவ்வொருவரும் தீனைப்பற்றி அறிந்திருக்க வேண்டியிருக்கின்றது . இன்று தீனைத் தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன .அதிலொன்றுதான் இந்த தப்லீக் ஜமாஅத் அமைப்பாகும் எனவே தயங்காது பெயர்களைத் தாருங்கள் என்றேன் ' அவ்வளவுதான் . பயானின் பின்னர் அவர்கள் என்னோடு நடந்து கொண்ட விதமே வேறு . அதுதான் நான்தப்லீக்கில் செய்த இறுதி பயானாகும் . அதன் பின்பு எந்த பயானுக்கும் என்னை அழைப்பது கிடையாது . அவர்களது குற்றச்சாட்டு என்ன தெரியுமா ? நான் 'இன்று இஸ்லாத்தை – தீனை அறிந்து கொள்வதற்குரிய ஒரே வழி தப்லீக்கில் வெளிக் கிளம்பிச் செல்வது மாத்திரம்தான் ' என்று சொல்லியிருந்தால் பாராட்டியிருப்பார்கள் . பிரியாணி சாப்பாடும் தந்து உபசரித்திருப்பார்கள் . ஆனால்??.. இதன்பின் நான் தப்லீக்கில் இருந்து ஓரங்கட்டட்பட்டு விட்டேன் . எப்போதாவது இவர்களின் ஜூமைராத் பயானில் இருந்து விட்டால் ஒற்றர்களைப் பார்ப்பது போது மிகவும் எச்சரிக்கையுடன் எனது நடவடிக்கைகளை அவதானிப்பார்கள் .

இன்று இந்த அமைப்புக்கு ஆதரவு வழங்குவது போல் செயற்படும் அதிக மௌலவிமார் தாம் இந்த அமைப்பினருக்கு ஆதரவாக இருக்காவிட்டால் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு விடுவோம் . ஆதரவளித்தால் கண்ணியத்துடன் நடத்துவார்கள் என்ற குறுகிய நோக்கத்துடனேயே செயற்படுகின்றார்கள் . அவர்களிடம் நீங்கள் மனந்திறந்து பேசும் போது இது உண்மையென்பதை அறிந்து கொள்வீர்கள் . இதை நான் பலமுறை பல உலமாக்களிடம் பரீட்சித்தறிந்திருக்கின்றேன் .


4- பைதல் (கால்நடையாக ) ஜமாஅத்தில் செல்லுதல் .

கால்நடையாக ஜமாஅத்தில் செல்வதை மிகப்பெரியதொரு மார்க்கப்போர் செய்வது போன்று இவர்களுக்குச் சித்தரிக்கப்படுகின்றது . யாருடைய இரு பாதங்களும் இறைபாதையில் புழுதி படிந்தனவாகின்றதோ அவற்றை அல்லாஹ் நரகத்துக்கு ஹராமாக்கி விடுகின்றான் எனும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர். இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானதுதான் .( புகாரி , திர்மிதி, தாரமி,அஹ்மத்,மஜ்மஉஸ்ஸவாயித்)

ஆனால் இவர்களது செயலுக்கு அது ஆதாரமாகாது . ஏனெனில் அல்லாஹ்வின் பாதை என்பது ஜிஹாதையே குறிக்கும். றிவைத் தேடும் பயணத்துக்கும் சில வேளை அல்லாஹ்வின் பாதை எனும்பெயர் உபயோகப்படுத்தப்பட்டாலும் இந்த ஹதீஸைப் பொறுத்தவரைக்கும் அது பொருந்தாது .காரணம் இந்த ஹதீஸின் தொடரிலேயே எவர் அல்லாஹ்வின்; பாதையில் காயமுற்று அதன் மூலம் இறக்கின்றாறோ அவரது இரத்தம் மறுமையில் கஸ்த்தூரி வாடையை விடவும் மணம் வீசும் எனவும் உள்ளது . எனவே இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் பாதையென்பது ஜிஹாதையே குறிக்கும் என்பது தெளிவாகின்றது .

ஒரு பேச்சுக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் கூட எதேர்ச்சையாக அவரது கால் மண்ணில் மிதிபட்டு புழுதி படிவதே இங்கு நோக்கமேயன்றி வேண்டுமென்று புழுதியில் போட்டு காலைப் புரட்டியெடுப்பது நோக்கமன்று . ஆனால் தப்லீக்கின் கால்நடை ஜமாஅத்தின் நோக்கம் இதுவாகவே உள்ளது . எல்லா வாகன வசதியிருந்தும் பிரயாணத்துக்குரிய செலவினங்களிருந்தும் இவ்வாறு நடந்து செல்வது பிறருக்கு தாம் செய்யும் தியாகத்தை வெளிக்காட்டி ஒருவித செயற்கை பக்தியை உருவாக்குவதே இவர்களது உள்நோக்கம் .

ரோமாபுரிப்போரின் போது மாலிக் எனும் ஒரு நபித்தோழர் வாகனமிருந்தும் தரையில் நடந்து சென்றதாகவும் மற்ற முஸ்லிம்கள் அவரிடம் இது பற்றிக் கேட்ட போது மேற்படி ஹதீஸைக் கூறியதாகவும் அதன் பின்பு அங்கிருந்தவர்களில் அதிகம் பேர் வாகனத்தை விட்டு இறங்கி காலில் புழுதி படிய வேண்டுமென்பதற்காக கால்நடையாக வந்ததாகவும் ஒரு சம்பவம் உள்ளது . இது நபியவர்களது காலத்திற்குப் பிறகு நடந்தது . இதற்கு நபியவர்களின் அங்கீகாரம் இல்லாததால் இது ஹதீஸ் இல்லை ஒரு சில நபித்தோழர்களின் தனிப்பட்ட செயலே இது .எனவே இதை ஆதாரத்துக்கு எடுக்க முடியாது . மேலும் இது வேறு சில நபிமொழிகளுக்கும் முரண்படுகின்றது . எப்படி?,

நபியவர்கள் ஒருமுறை பள்ளிக்கு வந்த போது ஒரு மனிதர் மிகு ந்த நேரமாக வெயிலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அது பற்றி ஒருவரிடம் வினவ அவர் ' பகல்முழுதும் வேகும் வெயி லில் நின்ற நிலையிலேயே உட்காராமல் நோன்பு நோற்பதற்கு நேர்ச்சை வைத்திருப்பதாகக் கூறினார் . அதற்கு நபியவர்கள் அவரது நோன்பை நிறைவேற்றச் சொல்லுங்கள் . வெயிலில் நிற்கவோ , உட்காராமல் நின்றுகொண்டிருக்கவோ வேண்டாம் . நீங்கள் படும் இந்த வீண்சிரமத்தை விட்டும் அல்லாஹ் தேவை யற்றவன் என்றார்கள் . ( ஆதாரம் முஸ்லிம் 3100 )

மற்றுமொரு நபித்தோழர் தான் கால்நடையாக நடந்துசென்று ஹஜ்ஜூச் செய்ய நேர்ச்சை வைத்திருப்பதாகக் கூறியபோது நிச்சயமாக இவ்வாறு ஒருவர் தன் உடம்பை வருத்திக் கொள்வதில் எவ்விதத் தேவையுமில்லை அவர் வாகனத்தில் ஏறிச் சென்றே ஹஜ் செய்யட்டும் என்று கட்டளையிட்டார்கள் . ( புகாரி 1732 முஸ்லிம் 3100)

எனவே நபியவர்கள் தடுத்த ஒரு விடயத்தை இன்று தப்லீக் அமைப்பினர் தீன் என்ற போர்வையில் செய்து மக்களின் அனுதாபத்தைத் தம் பக்கம் திருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் . எனவே நபியவர்கள் இபாதத் இல்லை என்று சொன்ன ஒரு செயலை(பைதல் ஜமாஅத்தை) இபாதத்தின் பெயரால் செய்வதற்குப் பெயர் என்ன ? பித்அத்தா? ஸூன்னத்தா ? நீங்களே முடிவு செய்யுங்கள் .

5- இவர்களின் தஃவா கஸ்துகளின் போது கூட்டு துஆ ஓதி விட்டு வெளியேறிச் செல்லல் . இதுவும் நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தாகும் . நபியவர்கள் எத்தனையே ஸஹாபாக்களை மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் , போருக்காகவும் அனுப்பியிருக்கின்றார்களே ! அவ்வேளை கூட்டுப்பிரார்த்தனை புரிந்து விட்டுத்தான் வழியனுப்பினார்களா ? இதற்கான சரியான ஆதாரத்தை நபிவழியிலிருந்து காட்ட முடியுமா? எனவே இந்தக் கூட்டுப் பிரார்த்தனை நபிவழியா? அல்லது அவர்கள் எச்சரித்த பித்அத்தா ?

6- காலை மாலை திக்ர் எனும் பெயரில் ஹதீஸில் வந்த திக்ரு முறைக்கு மாற்றமாகவும் , இவர்களின் பெரியார்கள் சொல்லிக் கொடுத்த பித்அத்தான முறையிலும் திக்ர் செய்தல் .

காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் திக்ர் செய்யுங்கள் என அல்குர்ஆனில் அல்லாஹ்வே சொல்லுகின்றானே! எனக் கூறினால்... உண்மைதான் . தொழுமாறும் அல்லாஹ் கூறுகின்றான் அதற்காக 6 வேளை தொழ முடியுமா ? ளுஹ்ரை 5 ரக்அத்துகளாகத் தொழ முடியுமா ? ஏன் முடியாது நபியவர்கள் அப்படிச் செய்யவில்லை என்கின்றோம். அப்படியானால் திக்ரை மட்டும் எப்படி காலை மாலையில் நபிவழிக்கு மாற்றமாக நூறு ,நூறு தடவைகள் செய்ய முடியும் ?. லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை மாத்திரமே 100 தடவைகள் காலை மாலையில் ஓதி வருவதற்கு ஆதாரமிருக்கின்றது. ஏனையவற்றுக்கு ??

7- ஜூமைராத் எனும் பெயரில் வெள்ளிக் கிழமை இரவில் ஒன்று கூடி அன்றிரவு பள்ளியில் இஃதிகாப் இருந்து வணக்கங்கள் புரிதல் வெள்ளிக்கிழமை இரவை மாத்திரம் வணக்கங்கள் புரிவதன் மூலம் விசேஷப்படுத்தக் கூடாதென நபியவர்கள் தடை செய்துள்ளதால் இது பித்அத்தாகின்றது. எதேச்சையாகத்தான் மக்களின் வசதிக்கேற்ப இந்த நாள் தெரிவு செய்யப்பட்தென்று சொல்ல முடியாது ஏனெனில் வெள்ளியிரவில் இபாதத் செய்தல் ஆரம்பத்திலிருந்தே சூபிகளின் மரபு வழிவந்த வழிமுறைகளில் உள்ளதாகும் .

எனவே நான் மேலே சுட்டிக்காட்டியபடி தப்லீக் ஜமாஅத்தில் இல்மு – மார்க்க அறிவு எனும் பெயரில் பலவீனமான ,இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் போதிக்கும் பாடங்களும் , இஸ்லாத்திலில்லாத பித்அத்தான மௌட்டீக விடயங்களும், ஏன் ஷிர்க்கான விடயங்களும் தாராளமாகப் போதிக்கப்படுகின்றன என்பதை முடிந்தளவு ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டியுள்ளேன் .

இது தவிர இல்மு திக்ரின் போர்வையில் பல்வேறு ஷிர்க்கான விடயங்களும் இந்த அமைப்பில் போதிக்கப்படுகின்றன . விரிவஞ்சி அவற்றைத் தவிர்த்துக் கொள்கின்றேன் .

இவைகளும் இல்மு திக்ர் தானா???

ஜிஸ்திய்யாத் தரீக்காவின் ஷேகுமார் வரலாறு என்று ஒரு புத்தகமுண்டு . ஜக்கரிய்யா மௌலானா அவர்களே தமது கைப்பட எழுதியது . இதில் ஷேக்மார்களின் கராமத் எனும் பெயரில் சில சம்பவங்களைக் கூறுகின்றார்கள் . இவை நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லாதது தனி விடயம் . இருப்பினும் இது எப்படி இஸ்லாத்துக்கு முரண்படுகின்றது என்பதைக் கூட கவனிக்காது ஷேகுல் ஹதீஸ் - ஹதீஸ்க்கலை மேதையான இவர்கள் எழுதியுள்ளதே ஆச்சரியமான விடயமாகும் . அவற்றில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன் .

1- ஹஸன் பஸரி என்பவர்கள் பிலபலமான தாபியீன்களில் ஒருவராவார்கள் . இவர்களுக்கும் தரீக்காக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை .இருந்தும் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் இவர்களை ஜிஸ்தியா தரீக்காவின் ஐந்தாவது ஷேக்காக குறிப்பிட்டிருக்கின்றார்கள் . நபியவர்களையே ஜிஸ்திய்யாவின் முதலாவது ஷேக் என்றவருக்கு இது பெரிய விடயமா ? அவர்களது பொன்மொழிகள் என கூறுவதாவது ...

நீங்கள் ஹறாமான பொருட்களின் மீது கூட வெறுப்புக் காட்டுவதில்லை .ஆனால் ஹலாலான பொருட்களின் மீதே வெறுப்புக் காட்டும் பெரியார்களை நாம் சந்தித்திருக்கின்றோம் . ( ஜிஸ்தியா ஷேக்கள் வரலாறு 153 )

ஹலாலானவற்றை உண்ணாமல் தவிர்ந்திருப்பது வேறு விடயம் ஹலாலானவற்றை வெறுப்பவர் எப்படிப் பெரியாராக இருக்க முடியும்.? இதை ஹஸன் பஸரி சொல்லியிருப்பாரா ?

ஹஸன் பஸரியவர்கள் பல தடவைகள் நாயைக் கண்டால் யா அல்லாஹ் இந்த நாயின் பொருட்டால் என்னை ஏற்றுக் கொள்வாயாக .. என்று பிரார்த்திப்பார்கள் .
( ஜிஸ்தியா ஷேக்கள் வரலாறு 150 )

நாய் என்ன அல்லாஹ்வுக்கு நெருக்கமா நல்லடியாரா ? இது அல்லாஹ்வையே அவமானப்படுத்துவது போலில்லையா ? இந்த வகை வஸீலாவே தடைசெய்யப்பட்டதாகும் . அப்படியிருக்க கேவலம் நாயின் பொருட்டால் கேட்பது ?? ஹஸன் பஸரி ஒரு ஹதீஸ்கலை மேதை இதை அவர்கள் சொல்லியிருப்பார்களா ? நிரூபித்துக்காட்ட முடியுமா?

2- காஜா அப்துல் வாஹித் :
இவர்கள் பற்றிக்கூறும் போது இவர்கள் இரவெல்லாம் நின்று வணங்குபவராகவும்,பகலில் நோன்பு நோற்பவராகவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறையே நோன்பு திறப்பவராகவும் இருந்தார் . ( அதே நூல் 154)

இவையெல்லாம் நபிகள் தடைசெய்த விடயங்களல்லவா ? இவற்றை ஒரு ஆலிம் இறைநேசச் செல்வர் எப்படிச் செய்ய முடியும் .சரி அவரை விடுவோம் .இதை இபாதத் என சித்தரித்து எழுதும் ஆசிரியர்; ஜக்கரிய்யா மௌலானா பெரிய ஷேகுல் ஹதீஸ் ஹதீஸ்க்கலை மேதையாச்சே.. அவரா இப்படி ?

3- புளைல் இப்னு இயாழ் அவர்களைப் பற்றிக் கூறும் போது ..
' இவர்கள் ஒளூச் செய்கையில் ஒருமுறை ஒவ்வொறு உறுப்புக்களையும் மூன்று தடவை கழுவுவதற்குப் பதிலாக இரண்டு தடவைகள் கழுவி விட்டார்கள் . அன்றிரவு நபியவர்கள் இவரைச் சந்தித்து ( நினைவிலேயே!!) புளைலே ! என்னுடைய ஸூன்னத்தை விட்டதற்காக நீர் தூரமாகி விட்டீர் என்றார்கள் . இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காக அவர்கள் ஒருவருடம் தினமும் ஐநூறு றக்அத்துக்கள் நபில்த் தொழுவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டார்கள் . மேலும் என்னை யார் சந்திக்காமலும் நான் நோய்வாய்ப்பட்டால் நலன் விசாரிக்க வராமலும் இருக்கின்றாரோ அவருக்கு நான் நன்றி கூறுவேன் என்றார்களாம் . ( அதே நூல் ப: 168-169 )

உழூவின் போது உறுப்புக்களை இரண்டு தடவைகள் கழுவு வதும் நபிவழியே ! நபியவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்
ஆதாரம்: (புகாரி 154) இப்படியிருக்க நபியவர்கள் எங்ஙனம் எமது ஸூன்னத்தைப் புறக்கணித்து விட்டாய் எனக் கூற முடியும் நோயுற்றவரைச் சந்திக்கச் செல்வது நபிவழி . அதை இவர் எப்படி உதாசீனம் செய்ய முடியும் ?? . அதற்கு மேல் ஷேகுல் ஹதீஸூக்கு எப்படி இவையெல்லாம் கிடைத்திருக்க முடியும் . எப்படி கிடைத்ததையெல்லாம் இஸ்லாத்துக்கு முரணாகின்றதா என ஆராந்து பார்க்காமல் எப்படி எழுத முடியும் ?? .

3-இப்றாஹீம் இப்னு அத்ஹமைப் பற்றிக் கூறும் போது ..
இவர்கள் தொடர்ந்து நோன்பு நோற்று நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நோன்பு திறப்பார்களாம் . அதுவும் புற்பூண்டுகளைக் கொண்டுதான் நோன்பு திறப்பார்களாம் ( அதே நூல் ப: 174)

இவ்வாறு செய்வது நபிவழியா? இதைத் தான் நபியவர்கள் போதித்தார்களா ? . உண்மையில் அத்ஹம் இப்படிச் செய்திருந்தாலும் கூட அது அவரது அறியாமையே ! ஆனால் ஷேகுல் ஹதீஸ் இதை எப்படி எழுத முடியும்? . இதை அவ்லியாக்களின் அற்புத வரலாறாகக் கூற முடியும் ? . இதைப் பின்பற்றிப் பிறரும் இப்படிச் செய்தால் அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற முடியுமா ?.

நபியவர்கள் நோன்பு திறக்கும் போது கனிந்த பேரீச்சை கொண்டும் அது இல்லையெனில் காய்ந்த பழத்தாலும் அதுவும் இல்லையெனில் தண்ணீரைக் கொண்டுமே நோன்பு திறப்பார்கள் . ( திர்மிதி : 657 )

இதை விடுத்து புற்பூண்டுகளால் நோன்பு திறப்பது நபி வழியா ? ஷைத்தானின் வழியா ?

இவர்கள் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த போது ஒருவன் வந்து இவரிடம் பழம் கேட்க இவர் மறுக்கவே அவன் தலையில் அடித்து விட்டான் . உடனே இவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் இத்தலை அடிவாங்குவதற்குரியதே எனக்கூறினார்கள் . ( அதே நூல் பு 178 )

3- ஹாஜா ஹூதைபதுல் மர்அஸி...

இவர்கள் ஞானத் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள் . ஆறு நாள்களுக்கு ஒரு தடவையே நோன்பு திறப்பார்கள் . இது பற்றிக் கேட்டால் ஆன்மீக மக்களின் உணவு லாயிலாஹ இல்லல்லாஹ் ஆகும்' என்று கூறுவார்கள் .

அப்படியாயின் ஆறு நாட்களுக்கொரு முறை எதற்காக ஆன்மீக மக்களின் உணவைப் புறக்கணித்து விட்டு உலக மக்களின் உணவை உண்டு நோன்பை முறிக்க வேண்டும் ?

நன்மைகள் அனைத்திலும் சிறந்தது மனிதன் தனது வீட்டிலேயே இருப்பதாகும் .பர்ழுத் தொழுகைக்காக பள்ளிக்குப் போக வேண்யதில்லையென்றால் நான் வீட்டிலேயே இருப்பேன் என்றார்கள்

எப்போதும் வீட்டிலேயே முடங்கியிருப்பது நபியவர்கள் காட்டித்தந்த வழியா ? துறவிகளின் வழியா? வீட்டிலேயே இருந் தால் எப்படி மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பது .??

காஜா மம்ஷாத் அலவி அவர்கள் குழந்தைப்பருவத்திலும் பகலில் ஒருபோதும் பால்க்குடிப்பதில்லை . ஆகவே இவர்கள் குழந்தையிலேயே அவ்லியாவாக இருந்தார்கள் என்று கூறுவர்.

இந்த அறியாமையை என்னவென்று விபரிப்பது .

இவர்கள் இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர் இவருக்கு சுவனத்தைக் கொடுக்குமாறு இறைவனிடம் பிரார்த்தித்தார். இதனைக் கேட்ட இவர் முப்பது வருடமாக சுவர்க்கம் தன்னைப் பூரணமாக அலங்கரித்துக் கொண்டு என்முன் வந்து கொண்டிருந்தது நான் ஒரு முறை கூட அதனை ஏறெடுத்தும் பார்க்க வில்லை .நான் சுவர்க்கத்தின்எஜமானனை ஆசிக்கின்றேன் என்றார்கள் ( அதே நூல் ப: 192 )

அடப் பாவமே ! நபியவர்கள் சொர்க்கத்தைக் கேட்டுப் பிரார்த் திக்குமாறு கூற இவர்களோ ....

காஜா ஸையித் அபூ யூஸூப் ..
' இவர்களது சன்னிதானத்தில் ஒரு மனிதன் மூன்று நாட்கள் தங்கியிருந்தால் அவன் கராமத் உடையவனாகி விடுவானாம் . இவர் ஒரு முறை தர்வேஸ் ஒருவரின் வீட்டில் விருந்தினராகத் தங்கினார் . அன்றிரவு அவரின் மகள் பௌர்ணமி நிலவுவானத்திலிருந்து தன் மடியில் இறங்குவது போல் கனவு கண்டார் . காலையில் அவர் ஹஜ்ரத்திடம் விளக்கம் கேட்கச் சென்ற போது அவர் கனவைச் சொல்வதற்கு முன்பே ஹஜ்ரத்தவர்கள் அப்பெண் கண்ட கனவையும் அதற்காக விளக்கத்தையும் கூறினார் . அதன் பின் தர்வேஷ; தன்மகளை அவருக்கே மணமுடித்து வைத்தார் . ஒரு முறை இவர்களுக்கு வணக்கத்தில் கொஞ்சம் சோம்பல் ஏற்படவே அதற்காக இருபது ஆண்டுகள் வரை தண்ணீரே குடிக்காமல் இருந்தார்கள் . வீட்டில் ஒரு தனியறை அமைத்து அதில் தனித்திருந்து பன்னிரண்டு வருடம் வணக்கம் புரிந்தார்கள் .( அதே நூல் பக்கம் : 201)

இது உண்மையாக இருக்குமா ? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

காஜா மவ்தூத் ஜிஷதி ...
இவர்களுக்கு பூமியை நொடிப்பொழுதில் கடக்கும் சக்தி இருந்தது. கஃபாவை தவாப் செய்ய மனம் நாடினால் காற்றின் மூலமாக மக்கா சென்று விடுவார்கள் . ஒரு நாள் ஒரு அரச குமாரன் இவர்களிடத்தில் வந்து பரக்கத்துக்காக தனக்கு ஏதேனும் கொடுக்குமாறு வேண்டினான் . ஷேக் முதலில் மறுத்து விட்டு பின் சிபாரிஷின் பேரில் ஒரு தொப்பியை அவனுக்குக் கொடுத்து இதைப் பாதுகாக்கா விட்டால் வருந்த வேண்டியேற்படும் எனக் கூறினார்கள் அவன் அது விடயத்தில் கவனயீனமாக இருப்பது தெரிய வந்ததும் தொப்பி தன் வேலையைச் செய்யவில்லையா ? என்றார்கள் . இதனால் அவன் ஒரு குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவனது இரு கண்களும் தோண்டப்பட்டன . ( அதே நூல் ப: 204 )

காஜா உஸ்மான் ஹாரூனி...
இவர்கள் ஒரு நதியைக் கடக்க வேண்டியிருந்தது . உடனே தன்னிடமிருந்தவர்களிடம் கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார்கள் . அதன் பின் கண்திறந்து பார்த்த போது அனைவரும் நதியைக் கடந்திருந்தார்கள் . எப்படிக் கடந்தார்கள் என்றே தெரியவில்லை . ஒரு முறை ஒருமனிதர் வந்து தனது மகனைக் காணவில்லையென்றும் கண்டுபிடித்துத் தரமாறும் சொன்னார் .அதற்கு அவர்கள் உன் மகன் உன் வீட்டிலிருக்கின்றான் என்றார்கள் .அவர் ஆச்சரியத்துடன் சென்று பார்த்த போது அங்கே மகன் இருக்கக் கண்டார்கள் . அவனிடம் இது பற்றிக் கேட்க நான் ஒரு காட்டில் அடைக்கப்பட்டிருந்தேன் .அப்போது இந்த ஷேக் வந்து என்னை அவிழ்த்து என்கால் மீது தன் காலை வைத்தார் .உடனே கண்ணைத்திறந்து பார்த்த போது நான் என் வீட்டிலிருந்தேன் .என்றான். ( அதே நூல் ப: 211 )

காஜா முயீனுதீன் திஸ்தி சொல்கின்றார்கள் . ' நான் ஒரு முரீதை அடக்கம் செய்வதில் கலந்து கொண்டேன் . அடக்கம் செய்த பின் எல்லோரும் போய் விட்டார்கள் . கப்ரடியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் . ஒரு குற்றத்துக்காக அதாபு செய்யும் மலக்கு அவரிடம் வந்தார் . அப்போது ஷேக் உத்மான் காரூனி வந்து இவர் என்னைச் சார்ந்தவர் என்றதும் கப்றாளியின் வேதனை நிறுத்தப்பட்டது . ( அதேநூல் 212 ம் பக்கம் .)

இப்படி இந்தப்புத்தகத்தை நீங்கள் கையிலெடுத்தால் எத்தனையோ ஷிர்க்கான விவகாரங்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் . ஷேக்மார்களின் காலில் விழுந்து பக்தர்கள் கும்பிடுபோட்டதாகவும் , இந்த முஸ்லிம் பெயர் தாங்கிய துறவிகள் தம்மை எதிர்த்தவர்களுக்கு சாபமிட்டு நரகத்துக்கு அனுப்பியதாகவும் , தமது பக்தர்களை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் பொறுப்பை ஏற்றதாகவும் ஆயிரக் கணக்கான கப்ஸாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் உள்ளவற்றை ஒருவன் உண்மைப் படுத்தினால் அவனின் ஈமான் பறிபோய்விடும் என்பது மட்டும் உண்மை .ஆனால் இவற்றை தான் சார்ந்திருக்கும் திஷ்த்திய்யாத் தரீக்காவின் அவ்லியாக்களுக்கு நடந்த கராமத்துக்கள் என ஷேகுல் ஹதீஸ் ஹதீஸ்க்கலை மேதையான ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் சொல்கின்றார்கள் . அவைகளையும் இல்மு திக்ர் என ஏற்று நீங்களும் திஸ்திய்யாத் தரீக்காவில் இணைந்து அவர்களின் ஆசார பக்தராக ஆக வேண்டுமென விரும்புகின்றார்கள் . நீங்கள் தயாரா?

அப்படி நீங்கள் தயாராகி விட்டால் அந்தத் தரீக்காவின் ஷேக்மார்களே உங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நீங்கள் என்னதான் பாவியாக , குற்றவாளியாக இருந்தாலும் அவற்றைப் பொறுத்து உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று விடுவார்கள் ?. சொர்க்கத்தின் திறப்பு- சாவி அவர்களின் கரங்களில்தானே இருக்கின்றது ?. அதன் பின்பு கூட நீங்கள் வேண்டிய பாவங்களைத் தாராளமாகச் செய்து கொள்ளலாம் ?. நீங்கள் அவர்களின் முரீதாக சீடனாக இருக்கும் காலமெல்லாம் இந்தப் பாவமெல்லாம் உங்களின் சொர்க்கப் பிரவேசத்தை ஒருபோதும் தடுத்து விடாது ? .

இப்போது உங்கள் முன்னிலையில் இரண்டு பாதைகள் உள்ளன . ஒன்று நபியவர்கள் காட்டித்தந்த பாதை . அடுத்தது ஜிஷ்த்திய்யாத் தரீக்காவின் ஷேக்மார்கள் காட்டித்தந்த பாதை . இரண்டில் எதைத் தெரிவு செய்வது எனும் உரிமை உங்கள் கையில் உள்ளது . முடிவெடுப்பதும் நீங்கள்தான் அதற்கான பலனைப் பெறுவதும் நீங்கள்தான் . நபிவழி நடந்தால் நரகமில்லை . அதை நாடாதவர்களுக்குச் சொர்க்கமில்லை . சொர்க்கமில்லை .  





நான்காம் நம்பர் .இக்ராம் - முஸ்லிம்களைக் கண்ணியப்படுத்தல்.

இந்த உஸூல் இஸ்லாம் வலியுறுத்திய ஒரு விடயம் என்பதில் சந்தேகமுமில்லை . ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரன் என்பது நபிமொழி . ஒரு முஃமினுக்கும் மற்ற முஃமினுக்குமுரிய உதாரணம் ஒரு கட்டடத்தைப் போன்றது அதன் ஒவ்வொரு பகுதியும் மற்றப் பகுதியைப் பலமாகப் பிடித்திருக்கின்றது என்றும்,  முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் கொண்டிருக்கும் நட்பு பாசம் என்பவற்றுக்கு உதாரணம் ஒரு உடம்பின் பல பகுதிகளைப் போன்றது . அவற்றில் ஒருபகுதி நோயால் பீடிக்கப்படும் போது ஏனைய உறுப்புக்கள் அனைத்துமே துன்பம் அனுபவிக்கின்றன என்பது போன்ற நிறைய நபிமொழிகளும் இது விடயமாக நிறையவே வந்துள்ளன .

தப்லீக் சகோதரர்களுக்கு அல்லாஹ் றஹ்மத்துச் செய்வானாக . மற்றவர்களை விட இவர்கள் இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்துவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது . இருப்பினும் இவர்களது இக்ராம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருப்பதுதான் வருத்தமான விடயமாக இருக்கின்றது .

ஒரு முஸ்லிம் பள்ளிக்கு வர வேண்டும் தொழுகையாளியாக மாற வேண்டும் என்பதில் இவர்கள் தமது சொந்த வேலையைக் கூட விட்டு விட்டுச் செயற்படுவது பாரட்டத்தக்கதே . ஆனால் இவர்களது இந்த எண்ணத்தில் இப்போது தவறானதொரு கருத்துக் கண்ணோட்டம் உருவாகி விட்டது . அதாவது இவர்களது உதவியை, உபசரிப்பை, இக்ராமை ஒருவர் பெற வேண்டுமானால் அவர் தப்லீக் ஜமாஅத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவராக இருக்க வேண்டும்,  அல்லது அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் . குறைந்த பட்சம் எதிலும் சம்பந்தப்படாதவராக ஒரு அப்பாவி மகனாக இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக அவர் தப்லீக்கில் செல்லாதவராக அதனை விமர்சிப்பவராக,  அல்லது வேறு ஒரு அமைப்பில் இருப்பவராயின் அவர்களுக்கு தப்லீக் அமைப்பினர் இக்ராம் செய்வது ஒரு புறமிருக்க அவர்களை எதிரிகளை,  காபிர்களைப் பார்ப்பது போல் ஒருவித விரோதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை சாதாரணமாக நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது .
அது மாத்திரமல்ல தப்லீக் அமைப்பினரிடம் உள்ள இஸ்லாமிய முரண்பாடுகளை ஏனைய உலமாக்கள் சுட்டிக்காட்டிய சமயம் அதனை ஏற்றும் கொள்ளாது,  அல்லது அவர்களிடம் அறிவு ரீதியாக தம் அமைப்பின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்புமளிக்காது அவர்களை அச்சுறுத்தல்,  ஆள்வைத்துத் தாக்குதல் போன்ற ரவுடிச் செயல்களில் ஈடுபடுவதையும் மேலிடம் இதைக் கண்டும் காணாமல் இருப்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது .

இவற்றையெல்லாம் இஸ்லாத்தின் எதிரிகளை வீழ்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் அறப்போர் என்ற கருத்தோட்டம் மேலிடங்களிலிருந்தே இவர்களுக்குப் போதிக்கபடுவது தான் வருந்தத்தக்க உண்மை.

இவர்கள் இலங்கையில் மாத்திரம் மேற்கொண்ட தாக்குதல்கள், கத்திக்குத்துக்கள், வாள்வெட்டுக்கள்,படுகொலை மிரட்டல்களைத் திரட்டினால் தனியாக ஒரு புத்தகமாகவே வெளியிடலாம் .

இதனாலேயே இதன் வளர்ச்சி ஏனைய நாடுகளை விட இலங்கையில் அதிக வீறு நடை போடுகின்றது . காரணம் இவர்களை விமர்சிக்கவே அறிஞர்கள் பயப்படுகின்றனர் . தமக்கும் மிரட்டல் வருமோ, தாக்குதல் நடக்குமோ ஓதுக்கி விடுவார்களோ என்ற அச்சத்தால் அதிகம் பேர் பேசாமடந்தைகளாக வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். இன்று உலக அளவில் இலங்கையை தப்லீக்கின் துரித வளர்ச்சிக்கு முன்னுதாரணமாகச் சொல்லப்படுகின்றது .'இந்த வேலையைச் செய்யும் முறையைச் சரிவரப் படிப்பதென்றால் சிலோனுக்குச் செல்லுங்கள்' என்று டில்லிப் பெரியார்களே சிலோனை முன்னுதாரணமாகக் காட்டுவதன் ரகசியம் இதுதான். இங்கு தப்லீக்குக்கு எதிராக மறுபேச்சுப் பேச முடியாது மீறிப் பேசினால் இருட்டடி,  இனந்தெரியாத நபரின் தாக்குதல்,  அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் . இந்த அராஜகப் போக்கே இலங்கையின் குறிப்பாக கொழும்பு போன்ற பகுதிகளின் தீவிர தப்லீக் வளர்ச்சியின் ரகசியம் .

எனக்குத் தெரிந்த ஒருவர்தான் றம்ஸான் மௌலவி. கொழும்பைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் இதன் தீவிர கார்க்கூனாக இருந்தவர் .4 மாதங்கள் இந்தியா பாக்கிஸ்தான் சென்று வந்ததன் பின் தஃலீம் புத்தகத்தில் வரும் 'கப்ரில் தொழுத பெரியார்' சம்பவம் கூட சாத்தியம் தான் என் பயான் செய்தவர் பின்னர் மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி கற்றதன் பின் தப்லீக்கிலிருந்து விலகிக் கொன்டவர் . இவரை அந்த பகுதி மஸ்ஜிதின் நிர்வாகிகள் ஜூம்ஆ குத்பா நிகழ்த்துமாறு வேண்டினர் .
அவர் அதற்குத் தயாராக இருந்த வேளை அன்றிரவு சில தப்லீக் இயக்கத்தினர் இவர் வீடு வந்து ' நாளை நீங்கள் குத்பா நிகழ்த்தினால் நாங்கள்தான் உங்களுக்கு ஜனாஸா தொழுவிக்க வேண்டி வரும்' என இரு தடவைகள் மிரட்டினர் . இதற்குப் பயந்து அவர் அன்று குத்பா நிகழ்த்தவில்லை .

இவர் இன்று ஹயாத்தாக இருக்கின்றார் முடிந்தால் அவரைக் கேளுங்கள் முகவரி தருகின்றேன் . ( இப்படி உண்மையில் நடந்ததா? என அவரிடம் அன்று நான் உறுதிப்படுத்தியதற்கு ஆச்சரியத்துடன் 'இதிலென்ன சந்தேகம் என்றதுடன், இவ்வாறு இன்னும் பல நிகழ்வுகள் உள்ளன என்றார் .

இப்படி நிறைய சம்பவங்களைச் சொல்ல முடியும் .

எனவே இவர்களிடத்தில் இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிம்களைக் கண்ணியப்படுத்தல் எனும் விடயம் உஸூலில் ஒன்றாக இருந்தாலும் 'முஸ்லிம் ' என்பதன் பொருளையே இவர்கள் சுருக்கி குறுகிய வட்டத்திற்குள் வரையறுத்து விட்டார்கள் . இந்த அமைப்பைக் குறைகூறும், எதிர்க்கும் நபர் எவ்வளவுதான் பெரிய தக்வாதாரியாயினும் படித்தவராயினும் அவர் இவர்கள் வரையறுத்த முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டு வெளியேறி விட்டவராகவே கருதப்படுகின்றார் . போத்தலும் கையுமாகத் திரியும் ரவுடி - காவாலிகளைக் கூட இவர்கள் அனுதாபக் கண் கொண்டு பார்ப்பார்கள் . அவனுக்கு இக்ராம் செய்து அவன் வீடு சென்று சந்திப்பார்கள். அனால் இவர்களை விமர்சிப்போரை இஸ்லாத்தின் விரோதியாகச் சித்தரித்து தமது கார்க்கூன்களுக்கும் அவ்வாறே அறிமுகம் செய்து விடுவார்கள் . அதுமட்டுமன்றி அவர்மீது இல்லாத குற்றச்சாட்டுக்களையும் பொய்களையும் கட்டவிழ்த்து விடுவதற்கும் தயங்க மாட்டார்கள் . உண்மையில் இவர்களது நடவடிக்கைகள் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இருக்குமாயின் குற்றச்சாட்டுகளுக்கு அறிவியல் ரீதியாக, குர்ஆன் ஹதீஸிலிருந்து பதிலளிக்க ஏன் தயங்குகின்றார்கள் ?? இல்மு திக்ரை முக்கிய உஸூலாக்கிப் போதிப்பவர்கள் இல்மின் மூலம் பதிலளித்தால் என்ன ? அரிவாளை வீசி விட்டு அறிவால் பதிலளிக்க முடியாதா? தூய இஸ்லாமிய அறிவு இவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தால் இந்த நிலைநிச்சயம் ஏற்பட்டிருக்காது .

உதாரணத்துக்கு மதீனாவிலுள்ள அல்ஜாமிஆ இஸ்லாமியா இஸ்லாமியக் கலாபீடம் இவர்களுக்கு பெரியதொரு தலையிடியைக் கொடுக்கும் விடயம் . காரணம் தமது தப்லீக் அமைப்பில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்த எத்தனையோ மத்ரஸா மாணவர்கள் -- தப்லீக்கின் எதிர்கால வாரிசுகள் என முக்கியஸ்த்தர் மனப்பால் குடித்துக் கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் மதீனாவுக்கு ஓதச் சென்ற பின்னர் தலைகீழாக மாறி விட்டார்கள் . இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் அம்மாணவர்கள் தப்லீக் அமைப்போடு இணைந்து செயற்படாததன் நியாயங்களை -அவர்களின் குற்றச் சாட்டுக்களை ஏற்றும் கொள்ளாது,  அதற்கு அறிவியல் ரீதியாக மறுப்பும் தெரிவிக்காது பல்வேறு அபாண்டங்களை ஜாமியா மீதும் அம்மாணவர்கள் மீதும் இன்றும் சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள் .

உலக வங்கியிலிருந்து அது ஒதுக்கும் வட்டிப்பணத்திலேயே ஜாமிஆ இயங்குகின்றதென்றும், இங்கு படித்துக் கொடுப்பவர்கள் யஹூதிகளும் நஸாராக்களுமாவார்கள் என்றும்,  யஹூதிய்யத்தையும் நஸ்ரானிய்யத்தையுமே இங்கு போதிக்கின்றார்கள் என்றும், அதனாலேயே இவர்கள் தப்லீக்கை எதிர்க்கின்றார்கள் என்றும், இங்குள்ள ஆசிரியர்கள் தாடியில்லாமல்,  ட்ரவுஸர் அணிந்து சிக்ரேட் புகைத்தவர்களாகவே படிப்பிப்பார்கள் என்றும் மாணவர்களுக்கு பணத்தாசை காட்டி கிருஷத்தவப் பிரச்சாரர்களாக மாற்றுகின்றார்கள் என்றும், எனவே ஹராத்தையே ஊட்டப்பட்டு ஹராத்திலேயே வளர்ந்த இவர்களிடமிருந்து ஹராமான விடயங்களே வெளிப்படுகின்றன என்றும் எத்தனையோ அபாண்டங்களைக் கட்டவிழ்வித்து விட்டிருக்கின்றார்கள் .

இது வெறும் ஆதாரமற்ற பேச்சில்லை . மாறாக பல கார்க்கூன்களுக்குரிய விஷேட பயான்களில் இது கூறப்படுகின்றது . அது மட்டுமின்றி இவ்வாறு கூறித்திரிந்த ஒரு தப்லீக் முக்கியஸ்த்தர் ஒருவரை அணுகி இது பற்றி விசாரித்தவிடத்து அவர் சிரித்துக் கொண்டே மௌனம் சாதித்தார் அவரிடமிருந்து நேரடியாக இதைக் கேட்ட சாட்சிகளும் இன்றும் உள்ளனர் .

ஐந்தாம் நம்பர் .இக்லாஸ் : மனத் தூய்மை.

இக்லாஸ் எனும் சொல் மனத்தூய்மை, கலப்பற்ற எண்ணம் போன்ற பொருள்களைக் கொண்டிருக்கின்றது மார்க்க சம்பந்தப்பட்ட விடயத்தைச் செய்யும் போது அதில் முகஸ்த்துதியோ,  உலக நோக்கங்களோ இல்லாது முழுக்க முழுக்க அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு செய்யப்படும் போதே அது இக்லாஸான அமல் எனும் பெயரைப் பெறுகின்றது .

அல்லாஹ் சொல்கின்றான்...


'நாம் அவர்கள் செய்த அமல்களின் பக்கம் வந்து நோட்ட மிட்டு விட்டு (அவை இக்லாஸூடன் செய்யப்படாததன் காரணமாக) அவற்றை வீசியெறியப்பட்ட புழுதியைப் போன்று ஆக்கி விட்டோம்' என்கின்றான் . (ஸூரத்துல் புர்க்கான் வசனம் 23)

எனவே ஒரு முஸ்லிம் குறிப்பிட்ட ஒரு இபாதத்தை இறைவனுக்காக இக்லாஸூடன் செய்கின்றானா? அல்லது அவனது எண்ணத்தில் முகஸ்த்துதி கலந்து விட்டதா?,  அல்லது உலக இலக்கை மையமாக வைத்துச் செய்கின்றானா? என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட விடயம். அல்லாஹ்வைத் தவிர உள்ளத்தில் உள்ளதை அறிவோர் யாருமில்லை .இருப்பினும் ஒருவரின் புறச் செயற்பாடுகள் நடவடிக்கைகளின் மூலமாக அவரது நோக்கம் என்னவென்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடியும் .
தப்லீக் அமைப்பினரைப் பொறுத்த வரைக்கும் அவர்களை இந்த இக்லாஸ் விடயத்தில் நடுத்தர தப்லீக் பொறுப்புதாரிகள், அதியுயர் தப்லீக் முக்கியஸ்த்தர்கள் என இரு பிரிவாகப் பிரிக்கலாம் .

இவர்களில் நடுத்தர மட்டத்தில் உள்ள கார்க்கூன்கள் மஹல்லா, ஏரியாப்பொறுப்புதாரிகள் போன்றோர் பாமர மக்களைப் பள்ளியுடன் தொடர்பு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தூய்மையாக இக்லாஸூடன் நடந்து கொள்வதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது .

மக்கள் நல்வழி நடக்க வேண்டுமென்பதற்காக அவர்களது வீடு வரை தேடிச்சென்று அவர்களிடம் உரையாடல்,  குஸூஸி உமூமி கஸ்த்துக்களில் ஈடுபடுவதற்காக தமது அந்தஸ்த்து தொழில் வர்த்தகம் அனைத்தையும் தியாகங்செய்து நேரமொதுக்கல், அலைந்து திரிந்து மூலை முடுக்குகளெல்லாம் செல்வதால் ஏற்படும் சிரமங்களை அல்லாஹ்வுக்காகப் பொறுத்துக் கொள்ளல்,  எவ்வித சுயநல உலக நோக்கமுமின்றி தன்னை விடப்படிப்பில் அந்தஸ்த்தில் செல்வ நிலையில் தாழ்ந்தவர்களிடத்தில் கூட அவர்களின் காலடிக்குச் சென்று பள்ளிக்கு அழைத்தல்,  ஒரு காரியத்தைத் திட்டம;ட்டு மஸூரா அடிப்படை யில் செய்தல் போன்ற விடயங்களைச் சொல்லலாம் . இவர்களிடம் இவ்விடயங்களில் உலக நோக்கங்கள் எதுவும் இல்லை- இவற்றை இவர்கள் பூரண இக்லாஸூடனேயே செய்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன . இதற்காக இவர்களை அனைவரும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

ஆனால் இவர்கள் தமது ஆத்மீக வழிகாட்டிகளாக அல்குர்ஆன்-ஹதீஸை நம்பியிருக்காமல் இதை விடுத்து இவர்களது மேலிடத்து உத்தரவுகளையும் வழிகாட்டல்களையுமே நூற்றுக்கு நூறு நம்பியிருப்பதால் இவர்களிடம் ஷிர்க்கான பித்அத்தான விடயங்கள் பல இவர்களையறியாமலே ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தப்லீக் பெரியார்களின் வேத நூலான அமல்களின் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு, ஸதக்காவின் சிறப்பு போன்றவற்றிலுள்ள அனைத்து விடயங்களையும் இவர்கள் உண்மைப்படுத்துவதால், சரியானவையென உறுதிப்படுத்துவதால் அதிலுள்ள நான் முன்னர் சுட்டிக்காட்டிய காட்டாத அனைத்தையும் நம்பித்தொலைத்து விடுவதால்; அதன் மூலம் பலவித பித்அத்தான ஷிர்க்கான நம்பிக்கைகள் இவர்களிடம் தோன்றி விடுகின்றன .
எனவே இவர்களைப் பொறுத்த வரைக்கும் அல்குர்ஆனுக்கோ ஹதீஸூக்கோ முரணான எந்தவொரு விடயத்தையும் இவர்கள் செய்வதில்லை அதைத் தமது மேலிடத்துப் பெரியார்கள் வலியுத்தினாலும் சரிதான்,  மேலும் அவர்கள் சொல்பவை இஸ்லாத்துக்கு மாற்றமானதா இல்லையா? எனப் பார்த்தே எடுத்து நடப்போம் என இவர்கள் முடி வெடுத்தால்தான் இவர்கள் புரியும் இக்லாஸான தப்லீக் நடவடிக் கைகளுக்கு அல்லாஹ்விடத்தில் நற்கூலி கொடுக்கப்படுமென அடித்துச் சொல்ல முடியும் . ஏனெனில் நாம் புரியும் ஒரு இபாதத்து ஸாலிஹான அமலாக அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் அது முழுக்க இக்லாஸூடனும் செய்யப்பட வேண்டும் . அதேபோல் நபியின் வழிகாட்டல்ப்படியும் செய்யப்பட வேண்டும் என்பதை அல்குர்ஆனும் நபிமொழிகளும் உறுதிப்படுத்துகின்றன .

இவர்களில் அடுத்த வர்க்கத்தினர் தப்லீக் உயர்மேலிடங்கள் . டில்லி ட்ரைவிந் போன்ற மர்க்கஸ்களின்; முக்கியஸ்தர்கள் . இவர்களில் சுயரூபம் தப்லீக் கார்க்கூன்களான பக்தர்களுக்கே சரிவரத் தெரியாது . இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டுமெனப் போதிப்பார்கள். ஆனால் தாம்சொல்பவைதான் இஸ்லாம் என வாதிப்பார்கள். நபிவழிதான் நம்வழியென பயான்களில் முழங்குவார்கள் ஆனால் முதலாம் நம்பர் ஹனபி மத்ஹபு வெறியர்களாக இருப்பார்கள் . ஹனபி மத்ஹபைப் பின்பற்றுவது வாஜிப் என்பார்கள் . அல்லாஹ் தான் எல்லாவற்றையும் படைத்தவன் ரிஸ்க் அளிப்பவன் அனைத்து சக்தியுமுள்ளவன் - வஸ்த்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை என பயான்களில் சொல்வார்கள்,  ஆனால் மறுபக்கம் தமது விஷேட பயான்களில் தம் ஷேக்மார், குருமார்களுக்கு அற்புதங்கள் எனும் பேரில் நடந்த இஸ்லாத்தையே அழிக்கும் ஷிர்க்கான விடயங்களைக் கராமத் எனும் பெயரில் கட்டவிழ்த்து விட்டு கப்ர் வழிபாட்டுக்கு நியாயம் கற்பிப்பார்கள் அதன் பக்கம் மக்களை அழைக்கவும் செய்வார்கள் . பாமர அறபியல்லாத மக்களுக்கு வாசிக்க அமல்களின் சிறப்பு . .அறபிகளைக் கண்டால் றியாலுஸ் ஸாலிஹீன் ஹதீஸ்க் கிதாபைக் காட்டி நடிப்பு . ஏன் இது வரை இந்த அமல்களில் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு போன்றவை இத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டது போன்று அறபியில் பெயர்க்கப்படவில்லை தெரியுமா? . அங்குதான் ரகசியமுள்ளது . முழு அறபு உலகத்தின் எதிர்ப்பையும் அதனால் சம்பாதித்து தமது திட்டங்கள் செயலற்றுவிடும் என்ற பயம்தான் காரணம்

 ஸஹாபாக்களின் வாழ்க்கை எம்மிடம் வரவேண்டுமெனக் கூறி விட்டு தமது தஃலீம் புத்தகத்தில் ஏதேதோ சிர்க் நிறைந்த குப்பைகளை யார்யாருக்கோ நடந்ததாக எழுதி வைத்திருக்கின்றார்கள் . எனவே இவர்களுக்கு இரு பக்கமுண்டு .இரட்டை வேடமுண்டு . இவர்கள் தம்மை இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் இவர்களது உண்மையான நோக்கம் இவர்கள் சொல்வதைக் கேட்டு அதே போன்று செயற்படக்கூடிய ஒருபக்தர் கூட்டத்திற்கு இவர்கள் தலைமை வகிப்பதே. யதார்த்தத்தில் இவர்கலெல்லாம் சூபிகள், தரீக்காவாதிகள் . வாழையடி வாழையாக சூபித்துவக் குருக்களிடம் பைஅத் பெற்று ஆயிரக் கணக்கான மக்களிடமிருந்து பைஅத்தும் வாங்கியுள்ளனர் . சூபித்துவம், தரீக்கா என்றெல்லாம் மக்கள் மத்தியில் தம்மை அறிமுகப்படுத்தினால் போதிய ஆதரவு கிடைக்காது எனும் காரணத்தால் இப்போதுள்ள புதிய பெயரில் தமது தரீக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இவர்கள் இக்லாஸூடன் செயற்படுகின்றார்கள் என்று பாமரர்கள் நம்புவது வேடிக்கையான விடயம் .

இத்தகவல்கள் சிலருக்கு வியப்பைத் தரலாம் .அப்படிப்பட்டவர்கள்; மேற்கொண்டு இது சம்பந்தமாக ஆராய்ந்து உறுதிப்படுத்தியதன் பின்- தப்லீக் முக்கியஸ்த்தர்களிடமே இது பற்றி வினாவெழுப்பி தப்லீக்கின் நடவடிக்கைகள் அனைத்தையும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக்கூறி நிரூபிக்குமாறு வலியுறுத்தி சரியானமுடிவெடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் . மற்றும் சிலருக்கு இது ஆத்திரத்தையளிக்கலாம் . அப்படிப்பட்டவர்கள் உணர்ச்சி வசப்பட்டு விடாமல் ஆத்திரத்தைத் தூக்கியெறிந்து விட்டு அமைதியடைந்து மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தப்லீக் அமைப்பில் இருக்கின்றதா? என அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் . நபிவழிதான் நம்வழி எனும் கொள்கையை ஏற்றவர்களாயிருந்தால் நீங்கள் நிச்சயம் இப்படிச் செய்வீர்கள் . இதற்கு மாற்றமாக குருவழியே குடியானவன்; வழி ஆசான்வழியே அடியேன்வழி எனும் கொள்கையில் வாழ்பவர்களுக்கு இதுவெல்லாம் பயனளிக்காது . அல்லாஹ் நாடினால் - அவனாக இவர்களுக்கு நேர்வழிகாட்டினால்த்தான் உண்டு . அதற்காகவும் நாம் பிரார்த்திப்போம் .