சூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்

திருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திகளும் பலவீனமான செய்திகளும் இடம் பெற்றுள்ளன. எனினும் ஆதாரமற்ற செய்திகளே அதிகம். அவற்றின் முழு விவரத்தைக் காண்போம்.

வானவர்கள் விரும்பும் அத்தியாயம்

பராவு (ரலி­) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை மேகம் சூழ்ந்து வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதி தான் அதுஎன்று கூறினார்கள்.
நூல்: புகாரி (5011)
ஸஹீஹ் முஸ்லிம் (1325)

திர்மிதி (2810)

அஹ்மத் (17776)

இப்னு ஹிப்பான் (பாகம்: 3, பக்கம்: 46),


தஜ்ஜா­டமிருந்து பாதுகாப்பு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல் கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் பெருங்குழப்பவாதியான தஜ்ஜா­டமிருந்து பாதுகாக்கப்படுவார்.
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (1475)
திர்மிதி (2811),

அபூதுôவூத் (3765),

அஹ்மத் (20720),

ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (பாகம்: 3, பக்கம்: 65),

ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

இவை தவிர மற்ற அனைத்து செய்திகளும் குறையுடைய பலவீனமான செய்திகளாகவே அமைந்துள்ளன. அவற்றின் விவரத்தைக் காண்போம்.


கியாமத் நாளில் ஒளி

யார் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும். யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது சாட்டப்பட்டாது. (அதாவது தஜ்ஜா­ன் தீங்கு ஏற்படாது)” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஹாகிம், பாகம்: 2, பக்கம்: 123
இதே கருத்தில் தப்ரானீ அவர்களின் அவ்ஸத் (பாகம்: 2, பக்கம்: 123),

ஸுனனுல் குப்ரா (பாகம்: 6, பக்கம்: 25)

முஸன்னப் இப்னு அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 1, பக்கம்: 186)

ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தி அபூஸயீத் அல்குத்ரீ (ரலி­) அவர்கள் வழியாக இரண்டு முறைகளில் இடம் பெற்றுள்ளது. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி­) அவர்களின் சொந்தக் கூற்றாகவும், மற்றொன்று நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நபித்தோழரின் கூற்று என்பதே சரியனது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வருவது தவறாகும். நபித்தோழரின் கூற்றே சரியானதாகும் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள்.

(நூல்: அமலுல் யவ்மி வல்லைலா, பாகம்: 1, பக்கம்: 173)
நபிகளாரின் கூற்றாக வந்துள்ளதை ஹாஸிம் அவர்கள் பலவீனமாக்கி உள்ளார்கள். இமாம் நஸயீ அவர்கள் நபித்தோழரின் கூற்றே சரி என்று கூறுகிறார்கள். இமாம் தாரகுத்னீ நபித்தோழரின் கூற்றுக்கே முன்னுரிமை வழங்குகிறார்கள். (தல்கீஸுல் ஹபீர், பாகம்: 1, பக்கம்: 102)
இதே செய்தி வேறு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது என்று ஷைக் அல்பானீ அவர்கள் தனது இர்வாவுல் கலீல் என்ற நூ­ல் குறிப்பிட்டுள்ளார்கள். அதன் முழுமையான அறிவிப்பாளர் வரிசை இல்லாததால் அதை நாம் ஆய்வு செய்ய முடியவில்லை.


முழுமையான ஒளி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”யார் சூரத்துல் கஹ்ஃபின் ஆரம்ப வசனங்களையும் அதன் இறுதியையும் ஓதுகிறாரோ அவருக்குக் கா­ல் இருந்து தலை வரை ஒளி உண்டாகும். யார் அதை முழுவதையும் ஓதுகிறாரோ வானத்தி­ருந்து பூமி வரை ஒளி உண்டாகும்
நூல்: அஹ்மத் (15073),

முஃஜமுல் கபீர்லிதப்ரானீ (பாகம்: 2, பக்கம்: 197)
அஹ்மதின் அறிவிப்பாளர் வரிசையில் மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெறுகின்றனர்.

முதலாவது அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர். இவர் பலவீனமானவர். இவரைப் பற்றி தெளிவாக, விரிவாக நாம் ஏகத்துவம் மாத இதழில் குறிப்பிட்டுள்ளோம்.
2.
ஸப்பான் பின் பாயித் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமான அறிவிப்பாளரே!
இமாம் அஹ்மத் அவர்கள் இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இப்னு மயீன் அவர்கள் பலவீனமானவர் என்றும் இப்னு ஹிப்பான் அவர்கள், ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இவர் ஸஹ்ல் பின் முஆத் என்பவர் வழியாக ஒரு ஏட்டின் மூலம் தனித்து அறிவிக்கிறார்; இது இட்டுக்கட்டதைப் போன்றதாகும்; இவரை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என்றும் கூறுகிறார்கள். இவரிடத்தில் நிராகரிக்கப்படவேண்டிய செய்திகள் உள்ளன என்று ஸாஜி குறிப்பிடுகிறார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 3, பக்கம்: 265)

3. ஸஹ்ல் பின் முஆத் என்பவரும் இடம் பெறுகிறார். இவரும் பலவீனமானவராவார்.
இப்னு மயீன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை ஸிகாத் என்ற கிதாபில் கூறிவிட்டு இவருடைய ஹதீஸை ஸபான் பின் பாயித் வழியாக அறிவித்தால் கணக்கில் கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்கள். (இந்த ஹதீஸ், ஸபான் பின் பாயித் வழியாகவே இடம் பெற்றுள்ளது)
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்
பாகம்:4, பக்கம்: 224
தப்ரானியின் அறிவிப்பில் நாம் முன்னர் குறிப்பிட்ட ஸப்பான் பின் பாயித் மற்றும் ஸஹ்ல் பின் முஆத் என்ற பலவீனமான அறிவிப்பாளரே இடம் பெற்றுள்ளனர்.
இதைப் போன்று இப்னுஸ் ஸின்னீ அவர்களின் அமலுல் யவ்மி வல்லைலா (676) நூ­ல் இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியிலும் நாம் முன்னர் குறிப்பிட்ட இப்னு லஹீஆ, ஸப்பான் பின் பாயித் மற்றும் ஸஹ்ல் பின் முஆத் என்ற பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதே செய்தி முஸன்னப் இப்னு அபீ ஷைபா (பாகம்: 3, பக்கம்: 377)ல் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. கதாதா என்பவரின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் நபித்தோழர் கூட கிடையாது. இவர்களின் சொந்தக் கூற்றுகள் மார்க்க ஆதாரமாக ஆகாது.


மக்கா வரை ஒளி

யார் வெள்ளிக்கிழமை அன்று கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதி பின்பு தஜ்ஜாலை அடைந்தால் தஜ்ஜால் அவருக்குத் தீங்கு இழைக்க முடியாது. யார் கஹ்ஃப் அத்தியாயத்தியாத்தின் இறுதியை ஓதுவாரோ அவருக்கும் மக்கா வரை ஒளி உண்டாகும் என்று அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: ஷுஅபுல் ஈமான் பாகம்: 3, பக்கம்: 112
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப் படவில்லை. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி­) அவர்களின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்மை, தீமைகள், ஹலால், ஹராம் போன்றவற்றை திருக்குர்ஆன் அல்லது நபி (ஸல்) அவர்கள் மட்டுமே கூற முடியும். அவர்கள் கூறியதை மட்டுமே மார்க்கமாக அங்கீகரிக்க முடியும். எனவே இதை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்த முடியாது.


மேகம் வரை ஒளி

யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை ஓதுவாரோ அவருக்கு மறுமை நாளில் அவரின் பாவத்தி­ருந்து வானத்தின் மேகம் வரை ஒளியை ஏற்படும். மேலும் இரண்டு வெள்ளிக்கிழமைக்கு இடையில் ஏற்படும் பாவங்கள் மன்னிக்கப்படும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி)
இந்தச் செய்தியை இப்னு மர்தவைஹி அவர்கள் தனது தப்ஸீரில் பதிவு செய்திருப்பதாக தப்ஸீர் இப்னுகஸீரில் அறிவிப்பாளர் வரிசையுடன் இடம்பெற்றுள்ளது.
இதில் இடம் பெற்றிருக்கும் கா­த் பின் ஸயீத் பின் அபீ மர்யம் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னுல் கத்தான் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள். இவர் யாரென நாம் அறியவில்லை என்று இப்னுல் மதீனீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(நூல்:தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 3, பக்கம்: 83)


அனைத்து சோதனையி­ருந்தும் பாதுகாப்பு

யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை அன்று ஓதுவாரோ அவர் ஒவ்வொரு சோதனையில் இருந்தும் எட்டு நாள் பாதுகாக்கப் படுவார். தஜ்ஜால் வெளியேறினால் அவனிடமிருந்து இவர் பாதுகாப்பு பெறுவார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி­)
நூல்: அல்அஹாதீஸில் முக்தார் (பாகம்: 2, பக்கம்:50)
இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் முஸ்அப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 201)


பத்து நாட்கள் பாதுகாப்பு

நான் உங்களுக்கு ஒரு அத்தியாயத்தை அறிவிக்கட்டுமா? அதன் மகத்துவம் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் உள்ள இடைப்பட்ட அளவாகும். அதை ஓதியவருக்கு இதுபோன்ற நன்மைகள் கிடைக்கும். யார் வெள்ளிக்கிழமை ஓதுவாரோ அவருக்கு அடுத்த வெள்ளிக்கிழமை வரை பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும் மூன்று நாட்கள் அது நீடிக்கப் படும் (அதை அறிவிக்கட்டுமா?)” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர் ஆம் என்றார்கள். ”அதுதான் கஹ்ஃப் அத்தியாயமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: தைலமீ)
இச்செய்தியில் ஹிஷாம் பின் அப்துல்லாஹ் பின் இக்ரிமா அல்மக்ஸமீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.
இவர் அடிப்படையற்ற செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(நூல்: அல்லுஃபாவு வல்மத்ரூகீன் லி இப்னுல் ஜவ்ஸீ, பாகம்:3, பக்கம்: 175)


அனைத்து நோயி­ருந்தும் பாதுகாப்பு

யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை இரவு ஓதுவாரோ அவர் ஓதிய இடத்தி­ருந்து மக்கா வரை ஒளி கொடுக்கப்படும். வெள்ளிக் கிழமையி­ருந்து அடுத்த ஜுமுஆ வரையிலும் மேலும் மூன்று நாட்கள் வரை பாவங்கள் மன்னிக்கப்படும். அவருக்காக காலை வரை வானவர்கள் ஆயிரம் தடவை பாவமன்னிப்புத் தேடுவார்கள். பைத்தியம், அனைத்து தொழுநோய், தஜ்ஜா­ன் சோதனையி­ருந்தும் காப்பாற்றப்படுவார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: தத்கிரத்துல் மவ்லூஆத் பாகம்: 1, பக்கம்: 565)
இந்தச் செய்தி நபிகளார் பெயரால் இட்டுக்கட்டிச் சொல்லப்பட்டது என்றும் இதில் இடம் பெறும் இஸ்மாயீல் என்பவர் பொய்யர் என்றும் நூலாசியர் குறிப்பிடுகிறார்.


அலீ (ரலி) அவர்களின் மகன் ஹஸன் இப்னு அலீ (ரலி­) அவர்கள் தன்னுடைய விரிப்புக்கு வந்து விட்டால் கஹ்ஃப் அத்தியாயம் எழுதப்பட்ட பலகையை கொண்டு வந்து அதை ஓதுவார்கள். மேலும் எந்த மனைவியிடத்தில் சென்றாலும் அதை அங்கே கொண்டு செல்வார்கள்.
நூல்: ஷுஅபுல் ஈமான், பாகம்: 2, பக்:475
இந்தச் செய்தியும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. ஹஸன்(ரலி­) அவர்களின் செயலாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்த முடியாது.


நரகத்திற்கும் மத்தியில் திரை

கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதியவரை தவ்ராத் வேதத்தில் அல்ஹாயிலா (தடுப்பு) என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவருக்கும் நரகத்திற்கும் மத்தியில் திரையாக அது அமைகிறது.
நூல்: முஸ்னத் அல் பிர்தவ்ஸ்
பாகம்: 3, பக்கம்: 215
இந்தச் செய்தியும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்த முடியாது.


நபிகளார் அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமாக வந்த செய்திகளின் அடிப்படையில் மட்டும் செயல்பட்டு இறையருளை அடைவோம்!