Showing posts with label நோன்பு பற்றிய தலைப்புகள். Show all posts
Showing posts with label நோன்பு பற்றிய தலைப்புகள். Show all posts

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

முன்னுரை

அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

1. திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும், 'அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது' என்ற சிறப்பைப் பெறுகிறது.

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:

﴿ شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ ﴾

'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)

2. நோன்புக்குரிய மாதம்.

உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.

அல்லாஹ் சொல்கிறான்:

﴿ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ﴾

'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)

3. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.

إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ

'ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)

மற்றொரு நபிமொழியில்,

..... وَفُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ...

'..சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை...' நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)

முஃமின்களின் ஒரே குறிக்கோள் சொர்க்கத்தை அடைவதாகும், அந்த சொர்க்கத்தின் வாசல் கதவுகள் ரமளான் மாதத்தில் தட்டாமலேயே திறக்கப்படுகின்றன.

அந்த சொர்க்கத்தில் நுழைவதற்குறிய தகுதியை அடைவதற்கு சிறந்த மாதம் தான் ரமளான் மாதமாகும்.

மொத்தத்தில் சொர்க்கத்தில் நுழைவதற்கு முஃமின்கள் இதன் மூலம் ஆர்வமூட்டப்படுகிறார்கள். அதாவது சொர்க்க வாசலை திறந்து வைத்து, அதில் நுழைவதற்குரிய முயற்சியில் ஈடுபடுமாறு அல்லாஹ் முஃமின்களை அழைக்கிறான்.

4. வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.

إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِحَتْ اَبْوَابُ السَمَاء .....

'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன...' - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1899)

வானத்தின் வாயில்கள் இரண்டே சமயங்களில் தான் திறக்கப்படும். ஒன்று ரமளான் மாதம் மற்றொன்று கியாமத்து நாள். அல்லாஹ் சொல்கிறான்:

﴿ وَّ فُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ اَبْوَابَا ﴾

'வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும'; - (அல்குர்ஆன் 78 : 19)

ரமளான் மாதத்தில் வானவர்களுக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கும், ஏனெனில் அம்மாதத்தில் அவர்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

5. அருளின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.

إِذَا كَانَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ الرَحْمَةِ .....

'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'.... - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)

அருள் வாயில்கள் திறக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் ரமளான் மாதத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அபரிமிதமாக அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.

6. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்.

... وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ .....

'....நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன....' - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1956)

மற்றொரு நபிமொழியில்,

... وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ .....

'...நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை...' நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)

7. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம்.

وَسُلْسِلَتِ الشَّيَاطِيْنُ .....

'....ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)

8. நல்லதைத் தேடுவோர் அழைக்கப்படும் மாதம்.

...وَيُنَادِيْ مُنَادٍ يَابَاغِيَ الْخَيْرِ اَقْبِلْ وَيَابَاغِيَ الشَّرِّ اَقْصِرْ .....

'...நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்...' - நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
மற்றொரு அறிவிப்பில் 'ஒரு வானவர் அழைக்கிறார்' என்று வந்துள்ளது.

9. நரகவாதிகள் விடுதலை அடையும் மாதம்.

...وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَارِ وَذَلِكَ كُلُّ لَيْلَةٍ .....

'...நரகத்திலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். (இவ்வாறு விடுவிப்பது) ஒவ்வொரு இரவிலுமாகும்...' - நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)

10. லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட மாதம்.

ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது.

...تَحَرُّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الغَسْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

'...ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)

11. முன் பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.

...مَنْ صَامَ رَمَضَانَ وَقَامَهُ إيْمَانًا وَاحْتِسَابًا غُفِّرَ لَهُ مَاتَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 619)

12. தக்வா பயிற்சிக்குரிய மாதம்.

தக்வா எனும் இறையச்சத்தை பெறுவதற்கு சிறந்த பயிற்சியளிக்கும் மாதம். அல்லாஹ் சொல்கிறான்.

﴿ يَأَيُّهَا الَّذِيْنَ اَمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ﴾

'ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் தக்வா உடையோராகலாம்'. (அல்குர்ஆன் 2:184)

13. அருள் செய்யப்பட்ட மாதம்.

قَدْ جَاءَكُمْ شَهْرُ مُبَارَكٌ .....

'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது....' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

முடிவுரை

மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!

நோன்பின் சிறப்புகள்

முன்னுரை

ரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

ஹதீஸ் - 1

'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். நபிமொழி (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761)

சிறப்புகள்: 1. எழுநூறு மடங்குக்கும் அதிகமான நன்மை 2. அல்லாஹ்வின் நேரடி கூலி 3. கேடயம் 4. கஸ்தூரியை விட சிறந்த வாய் வாசம்.

நன்மையான காரியங்களுக்கு எழுநூறு மடங்கு கூலியை அல்லாஹ் தருகிறான், ஆனால் நோன்பிற்கு அதை விடவும் அதிகமாக தருகிறான். நோன்பு நரகத்திலிருந்து நம்மை காக்கும் கேடயமாகும். நோன்பு பிடித்திருக்கும் போது இயல்பாகவே ஏற்படும் வாய் வாசம் கூட அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட சிறந்ததாகும்.

ஹதீஸ் - 2

அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நற்செயல்களைச் சொல்லுங்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நோன்பிருப்பாயாக, அதற்கு நிகரானது எதுவுமில்லை' என்றார்கள். மீண்டும் அவர்களிடம் சென்றேன்;, அவர்கள் 'நோன்பிருப்பாயாக!' என்று சொன்னார்கள். (நூல்கள்: அஹ்மது, நஸயீ, ஹாக்கிம்)

சிறப்புகள்: 5. சொர்க்கத்திற்கு உத்திரவாதம்.

சொர்க்கம் செல்ல நபி (ஸல்) அவர்களால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது தான் நோன்பு.

ஹதீஸ் - 3

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், 'இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு'. குர்ஆன் சொல்லும், 'நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு'. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது)

சிறப்புகள்: 6. மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு.

குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமளான் என்ற இறுக்கமான தொடர்பு இருப்பதால் நோன்பும் குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக சிபாரிசு செய்கிறது.

ஹதீஸ் - 4

யார் அல்லாஹ்வின் பாதையில் சென்றிருக்கும் போது ஒரு நாள் நோன்பு வைக்கிறாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்குப் பகரமாக அல்லாஹ் அந்த அடியானின் முகத்தை எழுபது வருட காலம் நரக நெருப்பை விட்டு தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2122, நஸயி 2248, ரியாலுஸ்ஸாலிஹீன் 1218)

சிறப்புகள்: 7. நரகத்திலிருந்து பாதுகாப்பு.

நரக நெருப்பை விட்டும் தூரமாக்கக்கூடியது நோன்பு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

ஹதீஸ் - 5

நீங்கள் மிம்பருக்குச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்' என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்' என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்' என்றனர்.

இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்' என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்' என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்' என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)

சிறப்புகள்: 8. பாவமன்னிப்புக்கு உத்திரவாதம்.

நமது பாவங்கள் மன்னிக்கப்பட சிறந்த வசந்த காலம் ரமளான் நோன்பு. பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய வகையில் நமது செயல்பாடுகளை அம்மாதத்தில் அமைத்துக் கொள்ளாதவர் நஷ்டவாளிகளே!

ஹதீஸ் - 6

சொர்க்கத்தில் 'ரய்யான்' என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)

சிறப்புகள்: 9. சொர்க்கம் பரிசு 10. விஷேசமான சிறப்பு வழி.

நோன்பாளிகள் சொர்க்கம் செல்வார்கள் என்பதையும் அவர்கள் விஷேசமான வழியில் நுழைவார்கள் என்பதையும் அவ்வாயிலில் நுழைபவர்களுக்கு தாகம் ஏற்படாது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

ஹதீஸ் - 7

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

சிறப்புகள்: 11. இறைவனின் சந்திப்பு. 12. அதனால் மகிழ்ச்சி.

நோன்பாளிகள் இறைவனை சந்திப்பார்கள் என்பதையும் அப்போது அவர்கள் மகிழ்வார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவாக்குகிறது.

முடிவுரை

மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!

ரமளானின் முதல் பிறை

முன்னுரை

ரமளானின் முதல் பிறையை கணக்கிடுவதற்கு, அதற்கு முந்தைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் ஆரம்ப, கடைசி நாட்களை கணக்கிடுவதிலும், ரமளானை அடுத்த ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை கணக்கிடுவதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

1. ஷஃபான் மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை

'ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்' என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி 682)

'பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி 1909, திர்மிதி 624)

'ரமளானுக்கு முன் நோன்பு நோற்காதீர்கள்...' நபிமொழி. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்: அஹ்மத் நஸயீ, திர்மிதி 624)

ஷஃபான் மாதம் சந்திர ஆண்டின் 8 வது மாதமாகும். இது ரமளானுக்கு முந்திய மாதம்.
ரமளான் மாதம் சந்திர ஆண்டின் 9 வது மாதமாகும். நோன்பு வைப்பதற்காக இறைவன் தேர்வு செய்த மாதம்.
ஷவ்வால் மாதம் சந்திர ஆண்டின் 10 வது மாதமாகும். இது ரமளானுக்கு அடுத்த மாதம்.

ரமளான் மாதத்தின் முதல் பிறையை முடிவு செய்வதற்கு, ஷஃபான் மாதத்தின் பிறையை கணக்கிட்டு வர வேண்டும். அதாவது அம்மாதத்தின் முதல் பிறையையும் கடைசி பிறையையும் பார்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதல் ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

ரமளான் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பு வைக்க வேண்டும். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பை விட வேண்டும். ரமளான் மாதத்தின் முதல் பிறை மேக மூட்டத்தின் காரணமாக தென்பட வில்லையானால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்த வேண்டும். அடுத்த நாள் ரமளானின் முதல் நோன்பை வைக்க வேண்டும் என்பதை இரண்டாம் ஹதீஸிலிருந்தும், ஷஃபானின் இறுதி நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்பதை மூன்றாவது ஹதீஸிருந்தும் விளங்க முடிகிறது. (ஒருவரின் வழமையான நோன்பு அந்நாட்களில் அமைந்து அவர் நோன்பு நோற்றால் தவறில்லை என்பதை மற்றொரு நபிமொழி கூறுகிறது)

'ரமளானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1914, திர்மிதி 621)

2. ரமளான் மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை

'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 1907)

ரமளான் மாதத்தின் முதல் பிறை மேகமூட்டத்தால் தென்படவில்லையானால் எவ்வாறு ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமோ அதே போன்று ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை அதே காரணத்திற்காக தென்படவில்லையானால் ரமளான் மாதத்தையும் முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும் என்பதையும் கவனத்தில் கொண்டு பிறையை பார்க்க முயற்சிக்க வேண்டும். மற்றொரு ஹதீஸில் 30 நாட்கள் என்றும் வந்துள்ளது.

'நபி (ஸல்) அவர்களுடன் நான் 29 நாட்கள் நோன்பு நோற்றது, முப்பது நாட்கள் நோற்றதை விட அதிகமாகும்' என்று இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அபூதாவூது 2315, திர்மிதி 625)

நோன்பு என்றால் முப்பது நாட்கள் தான் என்றும் அவ்வாறு முப்பது நாட்கள் அமைய வில்லையென்றால் மனவருத்தம் கொள்வதும் திருப்தி அடையாதிருப்பதும், சிலவேளை ரமளான் மாதத்தின் முதல் பிறையை பார்த்த தகவல்களை அறிந்து மக்களுக்குச் சொல்லும் ஆலிம் அல்லது டவுன்ஹாஜியை திட்டுவதும் அறியாமையால் நடைமுறையில் இருந்து வரும் நிகழ்வுகளாகும். ஆனால் நபித்தோழர் இப்னு மஸ்வூது அவர்களின் கூற்று அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல அறிவுரையாக அமைந்துள்ளது. 30 நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் என்பதற்காக ரமளானுக்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தின் இறுதியில் நோன்பு வைப்பதற்கு தடை உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முடிவுரை

பிறையைப் பார்ப்பதும் அதன்படி நோன்பு வைப்பதும் முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் பொருப்பும் கடமையுமாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக!

நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்

முன்னுரை

ரமளானின் மாதத்தில் ஆண் பெண் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. சூழ்நிலை காரணமாக சிலரால் நோன்பு நோற்க முடிவதில்லை. அப்படிப்பட்டோரின் இயலாமையை அறிந்து அல்லாஹ் பலருக்கு அம்மாதத்தில் நோன்பு நோற்பதிலிருந்து சலுகைகளை வழங்கியுள்ளான். இஸ்லாம் மிக இலகுவானது என்பதை இந்த சலுகைகள் உணர்த்துகின்றன. அவற்றையும் நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

நோன்பு கட்டாயக் கடமை

'ஈமான் கொண்டோரே! உங்களுக்கு முன்பிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையோராகலாம்' (அல்குர்ஆன் 2:183)

'ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்துக் காட்டக் கூடிய அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்'. (அல்குர்ஆன் 2:183)

இவ்வசனங்கள் இரண்டும் ஆண் பெண் அனைவர் மீதும் நோன்பு கடமை என்பதைச் சொல்லுகிறது.

இருப்பினும் நோன்பை விடுவதற்கு சிலருக்கு தற்காலிக சலுகையும், சிலருக்கு நிரந்தர சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.

1. பிரயாணிகள்:

பயணம் மேற்கொள்பவர் அவரது பயணம் கடினமானதாக இருந்தாலும் சரி, அவ்வாறு இல்லா விட்டாலும் சரி அவர் ரமளான் மாத நோன்பை விட்டு விட்டு பின்னர் வைத்துக் கொள்ள சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

'.....எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்'. (அல்குர்ஆன் 2:185)

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். 'கதீத்' என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டு விட்டார்கள். மக்களும் நோன்பை விட்டு விட்டனர் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரி 1944)

2. நோயாளிகள்:

நோய்களில் தீரும் நோய் என்றும் தீராத நோய் என்றும் இரண்டு வகைகள் உண்டு.

முதல் வகை நோய்க்கு இலக்கானவர்கள் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்ததும் அந்த நோன்பை நோற்க வேண்டும்.

'....எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் பின்னர் வரும் நாட்களில் நோற்க வேண்டும்'. (அல்குர்ஆன் 2:184)

இரண்டாம் வகை நோய்க்கு இலக்கானவர்கள் நோன்பை விட்டு விட்டு 'ஃபித்யா' (பரிகாரம்) கொடுக்க வேண்டும்.

'....எனினும் நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பகரமாக ஃபித்யாவாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்'. (அல்குர்ஆன் 2:184)

3. மாதவிடாய்ப் பெண்கள்:

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதிலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளனர். அச்சமயத்தில் நோன்பு நோற்பதிலிருந்து தடுக்கப்பட்டும் உள்ளார்கள். ஆனாலும் பின்னர் அந்த நோன்பை நோற்க வேண்டும்.

'....ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டு விடுவதில்லையா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி), புகாரி 304)

'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களா செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா)

4. கர்ப்பிணிகள்:

5. பாலூட்டும் தாய்மார்கள்:

ரமளான் மாதத்தின் நோன்பை கர்ப்பிணிகளும் பாலூட்டுவோரும் தற்காலிகமாக விட்டுவிட சலுகை அளிக்கப்பட்டுள்ளார்கள். விடுபட்ட நாட்களை அவர்கள் களா செய்ய வேண்டும்.

'கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகையளித்தனர்' என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

6. முதியவர்கள்:

தீராத நோய்க்கு இலக்கானவர்கள் எவ்வாறு நோன்பை விட்டு விட்டு ஃபித்யா கொடுக்க வேண்டுமோ அதுபோன்று முதியவர்கள் நோன்பிற்கு பதிலாக ஃபித்யா கொடுக்க வேண்டும்.

'ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு (அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பை விட்டதற்கு) பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்' என்ற 2:184 வது வசனத்தை ஓதிக்காட்டி, இது மாற்றப்பட்ட வசனம் அன்று. நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும், அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (நூல்: புகாரி 4505)

7. போராளிகள்:

ஜிஹாதில் பங்கு கொள்ளக் கூடியவர்கள் ரமளான் மாதத்தின் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் களா செய்ய வேண்டும்.

'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு மக்கா வெற்றியின் போது போருக்கு ஆயத்தமானார்கள். குதைத், உஸ்பான் ஆகிய இடங்களுக்கு இடையே கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டார்கள். அம்மாதம் (ரமளான் மாதம்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

முடிவுரை

நாம் கடமையாகிய நோன்பை நோற்க வேண்டும், இயலாமையினால் அதைச் செய்ய இயலாதவர்கள் ஃபித்யா கொடுக்க வேண்டும், அதற்கும் இயலாதவர்கள் ஃபித்யா கொடுப்பது கூட அவசியமில்லை - ஒருவரது சக்திக்கு மீறி அல்லாஹ் அவருக்கு சிரமம் கொடுப்பதில்லை - என்ற அளவுக்கு இஸ்லாம் எளிமையான மார்க்கம் என்பதை விளங்கிக் கொள்வதோடு, நோன்பு நோற்பது தான் மிகவும் சிறந்தது என்பதையும் விளங்கிக் கொள்வோமாக!

ஸஹர் செய்தல்

முன்னுரை

நோன்பை தொடங்கும் முகமாக பின்னிரவில், பஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர். இது தொடர்பாக ஏராளமான செய்திகள் குர்ஆன் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.

1. ஸஹர் செய்வதன் சிறப்பு:

'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642)

நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும் போது நபித்தோழர் ஒருவர் வந்தார், 'ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல்: நஸயீ 2164)

'நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே வித்தியாசமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூற்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி 643)

'ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது, எனவே அதை விட்டு விடாதீர்கள், ஒரு மிடரு தண்ணீரையாவது குடியுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான், வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்: அஹ்மது)

ஸஹரின் சிறப்புகள்: 1.பரக்கத் 2.ஸஹர் நமக்கு மட்டும் உரியது 3.அல்லாஹ்வின் அருள் 4.வானவர்களின் துஆ.

2. ஸஹர் நேரம்:

'பஜ்ர் எனும் வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (அல்குர்ஆன் 2:187)

'வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (2:187) என்ற திருக்குர்ஆன் வசனத்தின் பொருளாவது, இரவின் கருமையும் விடியலின் வெண்மையும் தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூற்கள்: புகாரி 1916, நஸயீ 2171)

'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர் (அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்' என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2002, திர்மிதி 699)

நோன்பின் ஆரம்ப நேரம் பஜ்ர் என்பதால் அந்த நேரத்தை அடையும் வரை ஸஹர் செய்யலாம். அந்த நேரத்திற்கும் சுப்ஹுதொழுகைக்கும் இடையே குர்ஆனின் ஐம்பது வசனங்களை ஓதும் கால அளவு என்பதையும் இரண்டாம் ஹதீஸ் விளக்குகிறது. ஐம்பது வசனங்களை ஓதுவதற்கு சுமார் பத்து நிமிடங்களாவது ஆகும் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. ஸஹர் உணவு:

'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642)

நபி (ஸல்) அவர்கள் ஸஹர் நேரத்தில், 'அனஸே! நான் நோன்பு இருப்பதற்கு ஏதேனும் கொடுங்கள்' என்று கேட்டார்கள். பிலால் (ரலி) அவர்களின் பாங்குக்குப் பிறகு நான் பேரீத்தம்பழங்களையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவர்களுக்கு கொடுத்தேன். 'அனஸே! என்னோடு உணவு அருந்த யாரையேனும் பாருங்களேன்;' என்று நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள். நான் ஜைது பின் தாபித் (ரலி) அவர்களை கூப்பிட்டேன், அவரும் வந்தார், நான் ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியைக் குடித்து விட்டேன், அதைக் கொண்டே நோன்பிருந்து கொள்கிறேன்' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நானும் நோன்பிருந்து கொள்கிறேன்' என்றார்கள். எங்களோடு ஸஹர் செய்த பிறகு இரண்டு ரக்அத் தொழுதார்கள், பிறகு தொழுகைக்கு சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: நஸயீ 2169)

அன்றைய அரேபியர்களின் உணவு பேரீத்தம் பழங்களும் ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. இந்த உணவை உண்பதற்கு பத்து நிமிடங்கள் என்பது அதிகமேயாகும் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

4. ஸஹருக்கான அறிவிப்பு:

நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ர் தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ர் நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ர் தொழுகைக்கான அழைப்பாகும்.

பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. ஏனெனில் அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 1994, அபூதாவூது, நஸயீ 2172)

பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்! நபிமொழி. (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) நூற்கள்: புகாரி 1918, முஸ்லிம், நஸயீ)

பல ஊர்களில் ஸஹருக்காக மக்களை எழுப்புவதற்காக 'தப்ஸ்' எனும் கொட்டு அடித்துக் கொண்டு ஒருவர் வருவது வழக்கமாக இருக்கிறது. பல சமயங்களில் நாய் கடிக்கு அவர் ஆளாக நேர்வதையும் அதனால் அந்த பகுதிக்கு அவர் வருவதை தவிர்ப்பதையும் நாம் அறிவோம். ஆனால் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையை பின்பற்றினால் இந்த சிக்கலில் இருந்து தவிர்ந்து கொள்ள இயலும். ஒரு நபிவழியை பின்பற்றிய நன்மையும் நமக்கு உண்டு. இரண்டு முஅத்தின்களை நியமியத்து இரண்டு பாங்கு சொல்ல வைக்க வேண்டும்.

5. விடி ஸஹர்:

விடி ஸஹரில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணத்திலும், ஸஹர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் படுக்கைக்குச் செல்வோர் நேரத்தை தவற விட்டு விட்டு ஸஹர் நேரம் முடிந்த பிறகு எழுந்திருப்பர். இவர்கள் எதுவும் சாப்பிடாமல் நோன்பைத் தொடர்வர். இப்படிப்பட்ட விடி ஸஹர் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவர்களிடம் உள்ளது.

இவர்களது நோன்பு கூடி விடும், ஆனால் இவர்கள் ஸஹரின் பாக்கியத்தை இழந்து விட்டார்கள்.

மற்றொன்று ஸஹர் நேரம் முடிந்த பிறகு எழுந்து சாப்பிட்டு விட்டு நோன்பு இருப்பார்கள். இப்படிப்பட்ட விடி ஸஹர் இன்னும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவர்களிடம் உள்ளது.

இவர்களது நோன்பு, நோன்பு ஆகாது.

6. ஸஹரை தாமதிப்பது:

'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர் (அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்' என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, திர்மிதி 699)

சுப்ஹ்க்குரிய பாங்குக்கு நெருக்கத்தில் சுமார் பத்து நிமிடங்களுக்கு முன்பிலிருந்து ஸஹர் செய்வது நபிவழி என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

7. ஸஹரை வரவேற்பது:

ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள், 'அருள் நிறைந்த ஸஹ்ரே வருக! வருக!' என்று வரவேற்பார்கள். (அறிவிப்பவர்: அல்இர்பால் பின் சாரியா (ரலி), நூல்: நஸயீ 2165)

8. பிரத்தியேக ஸஹர்:

ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே! என்று தோழர்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல. எனக்கு குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் சில அறிவிப்பில், 'எனது இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1922, முஸ்லிம் 2010)

9.சந்தேகமான பஜ்ர்:

'உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு ஏமாற்றி (தடுத்து) விட வேண்டாம். நீளவாக்கில் (செங்குத்தாக) தென்படும் இந்த வெண்மையானது (அடிவானில்) பரவலாகத் தெரியும் வரை அதுவும் உங்களை ஏமாற்றி (தடுத்து) விட வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), முஸ்லிம் 1996)

நபி (ஸல்) அவர்கள், தமது கையை கீழே தாழ்த்தி பின்னர் மேலே உயர்த்திக் காட்டி, இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாக தெரியும் வெளிச்சம் ஃபஜ்ர்) அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கை விரல்களை விரித்துக் காட்டி இவ்வாறு (அடிவானத்தில் நாலாபக்கமும் பரவலாகத் தெரியும் வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்) என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), முஸ்லிம் 1994)

செங்குத்தான கதிர்கள் அடிவானில் இருப்பது பஜ்ரின் அடையாளம் அல்ல என்பதும் பஜ்ரின் நேரம் வெளிச்சம் பரவலாக தெரிய வேண்டும் என்பதும் நபி (ஸல்) அவர்கள் பஜ்ர் நேரத்தை அறிந்து கொள்ள கற்றுத் தந்த முறையாகும்.

10. ஸஹரில் நிய்யத்:

பஜ்ர் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்கப் போவதை முடிவு செய்து விட வேண்டும்.

'பஜ்ருக்கு முன்பு யார் (நோன்பிருக்க) முடிவு செய்யவில்லையோ அது நோன்பு அல்ல' (அறிவிப்பவர்: ஹப்ஸா (ரலி), நூற்கள்: அபூதாவூது, அஹ்மது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

சுன்னத்தான நோன்புகளுக்கு இந்த நிபந்தனை இல்லை என்பதையும், விடிந்த பிறகும் கூட நோன்பு இருக்கப் போவதாக நபி (ஸல்) அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

முடிவுரை:

ஸஹருக்கு பல மணி நேரத்திற்கு முன்பே உணவருந்தி விட்டு படுக்கைக்குச் செல்வோர் சங்கைக்குரிய ஸஹரை இழந்ததோடு சில வேளை ஃபஜ்ர் தொழுகையையும் இழந்து விடுகிறார்கள். ஸஹர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!

நோன்பு திறத்தல்

முன்னுரை:

நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

1. நோன்பு திறக்கும் நேரம்:

'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)

'....நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்' என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி), நூல்: புகாரி 1956)

'பகல் பின்னோக்கிச் சென்று, இரவு முன்னோக்கி வந்து சூரியனும் மறைந்து விட்டால் நீ நோன்பு திறப்பாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), திர்மிதி 634)

சூரியன் மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். அதாவது மஃரிப் நேரத்தின் ஆரம்பம் தான் நோன்பு திறக்கும் நேரமாகும்.

2. விரைவாக நோன்பு திறப்பது:

'விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)

மற்றொரு அறிவிப்பில், 'யூதர்கள் தான் நோன்பு திறப்பதை தாமதிப்பார்கள்' என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா 1698)

நோன்பு திறப்பதற்கான நேரத்தை அடைந்து விட்டால் உடனே நோன்பை திறந்து விட வேண்டும், தாமதிக்கக் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.

3. நோன்பு திறக்கும் உணவு:

'உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு திறக்கட்டும்! அது கிடைக்கா விட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூற்கள்: திர்மிதி 631, இப்னுமாஜா 1699)

4. துஆ ஏற்றக்கொள்ளப்படும் நேரம்:

'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள். ...' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668)

நோன்பாளி தனது நோன்பை திறக்குமுன் செய்யப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பது இதன் விளக்கம்.

5. நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது,

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

'தஹபள் ளமவு, வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்' என்று ஓதுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூது 2350)

பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்.

'அல்லாஹும்ம லக சும்து....' என்ற துஆ முஆத் பின் ஸஹ்ரா என்பவரால் அறிவிக்கப்பட்டு அபூதாவூதில் இடம் பெற்றிருக்கிறது. இது முர்ஸல் வகையைச் சேர்ந்ததாகும். இதே துஆ தப்ரானி, தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இவை பலவீனமான ஹதீஸ்களாகும். அதனால் இந்த துஆவை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

6. நோன்பு திறக்க உதவுவதன் சிறப்பு:

'யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி), நூல்: திர்மிதி 735)

நோன்பிற்கான நன்மையை இரட்டிப்பாக்கிக் கொள்ள மற்றவரை நோன்பு திறக்கச் செய்வது ஓர் அரிய வாய்ப்பாகும்.

7. நோன்பு திறத்தலின் போது ஏற்படும் மகிழ்ச்சி:

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

முடிவுரை:

நோன்பு திறத்தலின் போது நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பேணி நடந்து கொள்வோமாக!

நோன்பை முறிப்பவையும் முறிக்காதவையும்

முன்னுரை:

நோன்பை சில செயல்கள் முறிக்கும் சில செயல்கள் முறிக்காது. அதோடு சில செயல்களை தவிர்ந்தும் இருக்க வேண்டும். அவற்றையும் தெரிந்து கொண்டால் தான் நோன்பின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும்.

1. உண்பதும் பருகுவதும்:

'இன்னும் ஃபஜ்ர் எனும் வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரும் வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)

ஃபஜ்ரு வரை உண்ணலாம் பருகலாம் என்பதிலிருந்து அதற்கு மேல் உண்டாலோ பருகினாலோ நோன்பு முறிந்து விடும் என்பதை விளங்கலாம்.

2. தாம்பத்திய உறவு கொள்வது:

'நோன்புகால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது' (அல்குர்ஆன் 2:187)

இந்த வசனம் நோன்புகால இரவில் உடலுறவில் ஈடுபட அனுமதிக்கிறது, பகலில் அனுமதி இல்லை என்பதை தெரிவிக்கிறது. அதாவது பகலில் உடலுறவில் ஈடுபட்டால் நோன்பு முறியும்.

1. பொய்யும் செயலும்:

'யார் பொய்யான பேச்சையோ பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1903, அபூதாவூது 2355)

நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் இறையச்சம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக என்றிருக்கும் போது பொய்யும் நடிப்பும் இதற்கு இசைவான செயல்கள் அல்ல. அதனால் நோன்பு நோற்பவர் இவற்றை விட வேண்டும். இவற்றை விடாதவர் நோன்பின் பயனை அடைந்தவராக கருதப்பட மாட்டார்.

2. கெட்ட வார்த்தையும் சண்டையிடுவதும்:

'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1904, முஸ்லிம் 2118, அபூதாவூது 2356)

நோன்பு நோற்பவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதையும் சண்டை சச்சரவு செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். நோன்பின் போது எடுக்கும் பயிற்சி அதன் பின்வரும் நாட்களிலும் தொடர வேண்டும்.

1. மறதியாக உண்பதும் குடிப்பதும்:

'ஒருவர் நோன்பாளியாக இருக்கும் போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான்' நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா)

'களாச் செய்ய வேண்டியதில்லை' என்று தாரகுத்னி, பைஹக்கீ, ஹாக்கிம் ஆகிய நுல்களில் பதிவாகியுள்ளது.

உண்டாலும் குடித்தாலும் நோன்பு முறிந்து விடும், ஆனாலும் மறதியாக உண்டாலும் குடித்தாலும் நோன்பு முறியாது. நினைவுக்கு வந்ததும் உண்பதையும் குடிப்பதையும் நிறுத்தி விட்டு தொடர்ந்து நோன்பாக இருந்து கொள்ள வேண்டும்.

2. மனைவியை முத்தமிடுவது:

'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!' என்று சொல்லி விட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள். (நூல்: புகாரி 1928)

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது முத்தமிடுவார்கள், கட்டிப்பிடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)

உணர்களை கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் நோன்பிருக்கும் போது மனைவியை முத்தமிடலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

3. தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுதல்:

நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். ரமளானில் நோன்பு நோற்பார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது)

இந்த ஹதீஸ் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு குளிக்காமல் கூட நோன்பு வைத்துக் கொண்டதை தெரிவிக்கிறது. அதே போல தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டு குளிப்புக் கடமையானவருக்கும் இதே ஹதீஸ் பொருந்தும். நோன்பு முறியாது.

'வாந்தியோ, ஸ்கலிதமோ, இத்தம் குத்தி எடுப்பதோ ஒருவரது நோன்பை முறிக்காது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழர் அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூது 2370)

4. குளிப்பது:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மது, அபூதாவூது 2359, நஸயீ)

5. பல் துலக்குவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். (அறிவிப்பவர்: ஆமிர் பின் ரபிஆ (ரலி), நூற்கள்: அபூதாவூது, திர்மிதி)

6. வாய் கொப்பளிப்பது:

'...பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்....' இதுதான் நபி (ஸல்) அவர்களின் உளூ என்று அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புகாரி 1911, இப்னுமாஜா 405)

ஒலுவின் போது வாய் கொப்பளிக்க வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளை. அது நோன்பு நோற்றிருந்தாலும் சரி, நோன்பு வைக்காமல் இருந்தாலும் சரி, ஒலுவின் போது வாய் கொப்பளிக்க வேண்டும்.

7. மூக்குக்கு தண்ணீர் செலுத்துதல்:

'நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் சமயத்தில் தவிர மற்ற சமயங்களில் மூக்கை நன்றாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்யுங்கள்' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி), நூற்கள்: நஸயீ, அபூதாவூது 2360, திர்மிதி 718, இப்னுமாஜா 407)

நோன்பு நோற்றிருக்கும் போது மூக்குக்கு தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்தால் தண்ணீர் தொண்டையை அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. எச்சிலை விழுங்குவது:

உண்பதும் குடிப்பதும் இல்லறத்தில் ஈடுபடுவதும் தான் நோன்பை முறிக்கும், எச்சிலை விழுங்குவது நோன்பை முறிக்காது. ஏனெனில் அது உணவோ குடிப்போ இல்லை.

9. உணவை ருசி பார்ப்பது:

நோன்பாளி உண்பதற்குத் தான் தடுக்கப்பட்டுள்ளார். உணவு சமைப்பவர்கள் அந்த உணவை ருசி பார்க்க தடை இல்லை. எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கிய நபி (ஸல்) அவர்களின் ஹதீஸே இதற்கும் ஆதாரமாகும். பற்குச்சியில் ஒரு வகை ருசி இருக்கத்தான் செய்கிறது. அந்த ருசியை நாக்கு உணர்வது நோன்பை முறிக்காது என்றால் உணவின் ருசியும் நோன்பை முறிக்காது. ஆனால் ருசி பார்த்த உணவை துப்பிவிட வேண்டும்.

10. இரத்த தானம் செய்வது:

'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார். (நூல்: புகாரி 1939)

';;;...நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: தாரகுத்னீ)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னானி (ரலி), நூல்: புகாரி)

மருத்துவ சோதனைக்காகவும் உயிர்காக்கும் நோக்கத்தில் இரத்த தானம் செய்வதற்கும் இந்த ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது.

11. வாந்தி எடுப்பது:

'தானாக ஒருவருக்கு வாந்தி வந்தால் அவர் (நோன்பைக்) களாச் செய்ய வேண்டியதில்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் களாச் செய்ய வேண்டும்' என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், தாரகுத்னி, ஹாக்கிம்)

12. ஊசி போட்டுக் கொள்வது:

நோயாளி நோன்பை விட்டு விட்டு வேறோரு நாளில் அதை களாச் செய்ய வேண்டும் என்பதற்கு அனுமதி இருந்தாலும், ஊசி போட்டுக் கொண்டால் அல்லது மருந்து தடவிக் கொள்வது போன்ற சிறு மருத்துவ உதவி அளித்தால் நோய் நீங்கி விடும் என்ற நிலையில் இருப்பவர்கள் நோன்பிருந்து கொண்டே செய்து கொள்ளலாம். ஆனால் மாத்திரை டானிக் போன்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் நோன்பு திறந்த பிறகு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் அல்லது நோன்பை விட்டு விட்டு களாச் செய்ய வேண்டும்.

13. சொட்டு மருந்து இட்டுக் கொள்வது:

நோன்பிருந்து கொண்டே கண், காது, மூக்கு போன்ற உறுப்புகளுக்கு சொட்டு மருந்து இட்டுக் கொள்ள முடியும் அதனால் நோன்பு முறியாது. மூக்குக்கு இடும் சொட்டு மருந்து தொண்டையை கடந்து விடும் என்றிருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. நோன்பு திறந்த பிறகு அதை இட்டுக் கொள்ள வேண்டும்.

முடிவுரை:

நோன்பு வைப்பவர்களுக்கு இதுபோன்ற செயல்களினால் நோன்பு முறிந்து விட்டதோ என்ற சந்தேகம் அடிக்கடி நிகழ்வதை நாம் கண்டுவருகிறோம். அவற்றை நாம் இங்கே பட்டியல் இட்டுள்ளோம். இவற்றை அறிந்து நோன்பை பூரணமாக நிறைவேற்றவோமாக!

லைலத்துல் கத்ர் இரவு

முன்னுரை:

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

1. சிறப்புகள்:

'இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்'. (அல்குர்ஆன் 97:1-3)
சிறப்புகள்: 1. அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு. 2. ரமளான் மாதத்தில் ஒரு இரவு 3. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு.

2. அது எந்த இரவு?:

'..ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)

'நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவர்களுடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூற்கள்: முஸ்லிம், அஹ்மது)

மேற்கண்ட ஹதீஸ்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

'லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

இந்த ஹதீஸில் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டதால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.

3. லைலத்துல் கத்ரை தேடுவது:

'நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னுமாஜா, அஹ்மது, திர்மிதி 726)

4. லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு:

'ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்' இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)

5. (இஃதிகாப்) பள்ளியில் தங்குதல்:

'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்'. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)

6. இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)

7. லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'

முடிவுரை:

லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!

நோன்புப் பெருநாள் தர்மம்

முன்னுரை:

ஜகாத்துல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

1. கடமை:

'முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

'கடமையாக்கினார்கள்' என்ற வாசகத்திலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கடமை என்பதை புரிந்து கொள்ளலாம்.

2. நேரம்:

'நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸயீ, திர்மிதி)

நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புஹாரி)

நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். அவற்றை ஏழைகளுக்கு வினியோகிக்கும் பொருட்டு முன்னரே கொடுப்பது நல்லது.

3. நோக்கமும் பயனும்:

'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும் எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)

இந்த ஹதீஸில் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதின் நோக்கம் கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகைக்கு பின்பு நிறைவேற்றுவது ஸகாத்துல் பித்ராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சாதாரண தர்மமாகவே அமைந்து விடும்.

4. அளவு:

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்' என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட கொள்ளளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன் தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.

5. கூட்டாக வசூல் செய்வது:

'ரமளானில் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 3275)

நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்டமான பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் இந்த பேரீத்தம் பழங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி), நூல்: ஹாக்கிம்)

நோன்புப் பெருநாள் தர்மத்தை கூட்டாக வசூல் செய்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. 'ரமளானில் ஸகாத்தைப்' என்ற வாசகம் அது நோன்புப் பெருநாள் தர்மம்தான் என்பதைச் சொல்கிறது.

முறையாக வசூல் செய்து வினியோகம் செய்யும் போது நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சென்று குவிந்து விடாமல் தடுக்கப்படுவதோடு, 'பெருநாளின் போது ஏழைகளை கையேந்த வைக்காதீர்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு ஏற்ப ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று வினியோகம் செய்ய வேண்டும்.

முடிவுரை:

நோன்புப் பெருநாள் தர்மத்தை வசூல் செய்து வினியோகம் செய்ய ஒரு குழுவினரை நியமிப்பது அவசியம். அந்த கடமையை நிறைவேற்றுபவர்கள் தனியொரு நபருக்கு கொடுப்பதை தவிர்த்து, இப்படிப்பட்ட குழுவினரை அடையாளம் கண்டு செலுத்துவதும் அவசியத்திலும் அவசியம்.

நோன்பு பற்றிய கேள்வி பதில்


1 கேள்வி : கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் ரமளான் நோன்பு நோற்க வேண்டுமா? (முபாரக் ஹெச்.அலி யாகூமெயில் மூலமாக)

ரமளான் நோன்பைப் பொறுத்த வரை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் நோயாளிகள் போன்றே கருதப்படுவர். அவர்களுக்கு நோன்பு நோற்பது சிரமமாக இருக்குமென்றிருந்தால் அச்சமயத்தில் நோன்பு நோற்காமல் விட்டு விட்டு பின்னர் அதனை களாச் செய்ய வேண்டும்.

சில அறிஞர்கள், 'கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும், நோன்பை விட்டு விட்டு அதற்கு பரிகாரமாக ஒவ்வொரு நாளைக்கும் ஒரு ஏழை என்ற வீதத்தில் உணவு வழங்கினால் போதுமானது' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இக்கருத்து பலவீனமானதாகும்.

நோயாளி மற்றும் பயணியைப் போல் நோன்பை விட்டு விட்டு பின்னர் களா செய்து கொள்ள வேண்டுமென்பதே சரியான கருத்தாகும்.

'உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டு (நோன்பு நோற்றுக்) கொள்ளலாம்....' (அல்குர்ஆன் அல்பகரா 2:184)

'நிச்சயமாக அல்லாஹ் பயணிக்கு நோன்பை விடுவதற்கும், தொழுகையை (அரைவாசியாக) குறைத்துக் கொள்வதற்கும் அனுமதி அளித்துள்ளான். கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை அளித்துள்ளான்' என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்கள்: அபூதாவூத், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா)

(இது அஷ்ஷெய்க் இப்னு பாஸ் அவர்கள் வழங்கிய ஃபத்வா)

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2 கேள்வி : பள்ளியில் நோன்பு திறப்பது சுன்னத் என்பது சரியா? (இக்பால் ரஹீமா சவூதி அரேபியா - யாகூமெயில் மூலமாக)

நோன்பு திறப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்.

'ஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சி ஒன்று. மற்றது அல்லாஹ்வை சந்திக்கும் போது மறுமையில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நோன்பை எங்கு திறந்தாலும் சுன்னத் நிறைவேறிவிடும். பள்ளியில் திறப்பது சுன்னத் என்பதைக் கூறும் நபி மொழி ஏதும் கிடையாது. எனவே பள்ளியிலும் திறக்கலாம், வேறு இடங்களிலும் திறக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3 கேள்வி : பள்ளியில் நோன்பு திறப்பது சுன்னத் என்பது சரியா? என்ற கேள்விக்கு வழிமுறை என்பது இல்லை என கூறியுள்ளீர்கள். இங்கு உள்ள பள்ளிகளில் குறிப்பாக ரஹிமாவில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யும் தஃவா சென்டரில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் (ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பள்ளி வெளி வாயிலில் வைத்து) வசூல் செய்து அதிலிருந்து தான் ஏற்பாடு செய்கிறார்கள். நோன்பு திறக்க தம்மிடம் வசதியிருந்தும் சில சகோதரர்கள் பள்ளிக்கு சென்று நோன்பு திறப்பதினால் அவர்களுக்கு வசூல் செய்யும் சுமை கூடுதலாகின்றது, இவ்வாறு செய்வது கூடுமா? விளக்கவும். (அப்துல் குத்தூஸ் - ரஹிமா, அராம்கோ மெயில் மூலமாக)

'யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கும் அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் நன்மையளவு நன்மை உண்டு' என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (நூல்கள்: அஹ்மது, திர்மிதி, இப்னுமாஜா, தாரமி)

நோன்பு திறக்க வைப்பது மிகச் சிறந்த அமலாகும். அந்த அமலின்பால் மக்களை ஆர்வப்படுத்தும் வகையில் பள்ளிவாசலில் வைத்து வசூல் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது. குறிப்பாக இப்படியான நல்ல அமல்களின் மீது மக்கள் நாட்டமில்லாமல் ஒதுங்கிக் செலலக்கூடிய இன்றைய காலத்தில் இந்தச் செயல் மிகவும் முக்கியமானதாகும். அதேவேளை இந்த வசூல் பலவந்தமாக செய்யப்படுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

4 கேள்வி : நோன்பிற்கான நிய்யத் (வாஜிபு) எவ்வாறு செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? (ராஷித், சூபாநெட் மெயில் மூலமாக)

'ரமழான் நோன்பு வாஜிபானது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக நம்ப வேண்டும். நாளை ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது என்று அறிந்தால் நோன்பு நோற்பதற்கு நிய்யத் வைப்பது அவசியம். நிய்யத்திற்குரிய இடம் உள்ளமாகும். நிய்யத்தை வாயால் மொழிவது வாஜிப் அல்ல என்பது எல்லா முஸ்லிம்களாலும் ஏகோபிக்கப்பட்ட விஷயம்' என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (மஜ்மூகூ ஃபதாவா 24-214)

ரமளான் நோன்பிற்குறிய நிய்யத்தை ஒவ்வொரு நாள் இரவும் வைக்க வேண்டும். வாயால் (நவைத்து......) என்று கூறுவது கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ அவ்வாறு கூறியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5 கேள்வி : நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு வைக்க வேண்டாம் (வெள்ளி மட்டும்) யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள் என்று கூறியதாக ஹதீஸ் உள்ளதே. அப்படியிருக்க உங்கள் கேள்வி பதில் பகுதியில் திங்கள் வியாளன் தினங்கள் நபி (ஸல்) நோன்பு நோற்ற பல ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன. தயவு செய்து விளக்கவும். (முகம்மது நஸான் - சிரிலங்கா, யாகூ மெயில் மூலமாக)

உங்கள் கேள்வியில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத் தக்கதாகும்.

1. ஒரு நாள் நோன்பு நோற்க வேண்டாம் (வெள்ளிக் கிழமை) என்று ஹதீஸ் உள்ளதே? ஆனால் நபி (ஸல்) அவர்கள் திங்கள் - வியாழன் போன்ற நாட்களில் ஒரு நாள் நோன்பு வைத்துள்ளார்களே? என்பது முதல் விஷயம்.

தெளிவான ஹதீஸை தவறுதலாக நீங்கள் விளங்கி இருக்கிறீர்கள். இது தொடர்பாக வரும் ஹதீஸைப் பாருங்கள்.
இறை இல்லம் கஃபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்த ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் நான், 'வெள்ளிக் கிழமை (ஒரு நாள் மட்டும்) நோன்பு நோற்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு 'ஆம், இந்த இல்லத்தின் அதிபதி மீது ஆணையாக!' என்று ஜாபிர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபர் (ரலி), நூற்கள்: புகாரி 1984, முஸ்லிம் 2101, இப்னுமாஜா 1724)

வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்க வேண்டாம் என்பது இதன் பொருள்.

மற்றொரு ஹதீஸ் இன்னும் தெளிவைத் தருகிறது,

'உங்களில் ஒருவர் வெள்ளிக் கிழமைக்கு முன்பு ஒருநாள் அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்க வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1985, முஸ்லிம் 2102, அபூதாவூது 2414, திர்மிதி 674, இப்னுமாஜா 1723)

வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்க இந்த ஹதீஸ்களில் தடை உள்ளது, ஆனால் வெள்ளிக்கிழமை தவிர்ந்த மற்ற நாட்களில் ஒரு நாள் தனித்து நோன்பு இருக்க தடை இல்லை. குறிப்பாக திங்கள், வியாழன் தினங்களில் தனித்து நோன்பு இருக்கலாம். இந்த ஹதீஸ் அந்த நோன்புகளை தடுக்காது. வெள்ளிக்கிழமை நோன்பு வைப்பதாக இருந்தால் அதற்கு முன்பு ஒருநாள் அல்லது அதற்கு பின்பு ஒரு நாளை சேர்த்து நோன்பு இருக்க வேண்டும். மேலும் ஒருவர் வழமையாக நோற்கும் நோன்பு வெள்ளிக்கிழமையில் தனித்து அமைந்து விட்டால் கூட அன்று அவர் நோன்பு நோற்பதில் தவறில்லை என்பதை அடுத்து வரும் ஹதீஸ் மேலும் விளக்குகிறது.

'இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்து விட்டால் தவிர' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் 2103)

இந்த ஹதீஸ் வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்கக் கூடாது என்பதையும் யாரெல்லாம் அவ்வாறு நோன்பு வைக்கலாம் என்பதையும் தெளிவாக கூறுகிறது.

'ஒரு நாள் நோன்பு நோற்க வேண்டாம்' என்ற வாசகம் எல்லா நாட்களையும் உள்ளடக்கக் கூடியது என்பதையும், 'வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் நோன்பு நோற்காதீர்கள்' என்ற வாசகம் வெள்ளிக்கிழமையை மட்டும் குறிக்கும் என்பதையும் விளங்கிக் கொள்வது அவசியம். இங்கே 'வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் நோன்பு நோற்காதீர்கள்' என்ற வாசகமே மேற்கண்ட ஹதீஸில் இடம் பெற்றுள்ளதை கவனியுங்கள்.

2. வெள்ளிக்கிழமை நோன்பு நோற்காது இருப்பது யூதர்களுக்கு மாறுசெய்வதாகும் என்று ஹதீஸ் இருக்கிறதே, என்பதும் உங்கள் கேள்வியில் உள்ள அடுத்த விஷயம்.

வெள்ளிக்கிழமைக்கும் யூதர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. ஆனால் மேலே நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்காது இருப்பதற்கான காரணம் சொல்லப்பட்டிருப்பதை விளங்க முடிகிறது.

வெள்ளிக்கிழமை என்பது வார நாட்களில் ஒரு விஷேசமான நாள் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அதற்காக அந்த நாளில் மட்டும் இரவுத் தொழுகையை தொழுவது, அந்த நாளில் மட்டும் நோன்பு நோற்பது என்பது இயல்பாகவே மனிதர்கள் செய்ய நினைக்கும் விஷயங்கள் தான். இன்றும் கூட அந்த வழக்கம் பலரிடம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கத்தை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பது முதல் காரணம்.

மகிழ்ச்சிக்குரிய நாளான பெருநாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்க தடை செய்தார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அதுபோல ஹஜ்ஜின் மிகமுக்கிய கிரியையான அரஃபாத்தில் தங்கி இருத்தலின் போதும் அங்கே நிகழ்;த்தப்படும் குத்பா உரையை செவிமடுக்கும் ஜாஹிகள் நோன்பு நோற்க வலியுறுத்தப்படவில்லை. அதே தினத்தில் அரபாவில் தங்கியிராத மற்றவர்கள் நோன்பு நோற்க கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள். அதுபோல சூரியன் உதிக்கும் நாட்களிலெல்லாம் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை என்ற சிறப்பைப் பெற்ற இந்த நாளில் தனித்து ஒரு நாள் மட்டும் நோன்பிருக்க நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பது இரண்டாவது காரணம்.

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை என்பது வாராந்திர பெருநாள் போன்றதாகும், அதனாலேயே அந்த நாளில் நோன்பு நோற்க தடுக்கப்பட்டுள்ளது என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'நிச்சயமாக வெள்ளிக்கிழமை உங்களுக்கு பெருநாளாகும். ஆகவே அதற்கு முன்போ அல்லது பின்போ நோன்பு நோற்றாலே தவிர, அதில் நோன்பு நோற்காதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் அல் அஸரி (ரலி), நூல்: அல்பஸ்ஸார்)

ஒரு நாள் நோன்பு என்பது வெள்ளிக்கிழமைக்கு மட்டும் குறிப்பாக சொல்லப்பட்ட ஒன்று, அது பொதுவானது அல்ல. யூதர்களுக்கு மாறு செய்வதற்காக அந்த நோன்பை வைக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக எந்த குறிப்பும் இல்லை.