சுலைமான் நபி வரலாறு

சுலைமான்(سليمان) நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ வழங்குவாயாக!' என்பது தான் அந்த கோரிக்கை.

அதன்படி அல்லாஹ் அவருக்கு மிகப்பெரும் அரசாங்கத்தை வழங்கினான். பளிங்குகளிலான மாளிகையை அமைத்து வாழ்ந்தார்கள்.

அவர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் ஜின்களையும் பறவைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும் இருந்தார்கள். [பறவைகளின் மொழியை] அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.

மேலும் காற்றையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். அந்தக் காற்று அவர்களைச் சுமந்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்லும்.

கட்டிடங்களை கட்டும் ஜின்களையும் முத்துக் குளிக்கும் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.

==கண்காணிக்கும் பணி==

ஒரு நாள் சுலைமான் (அலை) அவர்கள் பறவைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் பறவைகளை அல்லாஹ் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். அதாவது பறவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

பறவைகளுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அவை உடனே நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களுக்கு பறவைகளின் பாஷையை கற்றுக் கொடுத்திருந்தான்.

அவர்கள் பறவைகளின் கூட்டத்தை பார்வையிட்ட போது ஹூது ஹூது என்னும் பறவையை காணவில்லை, அதனால் சுலைமான் (அலை) அவர்கள்,

'ஹுது ஹுது பறவை எங்கே போனது? அதை நான் காணவில்லை, சரியான காரணத்தை அது சொல்லவில்லை என்றால் நான் அதை தண்டிப்பேன் அல்லது கொன்று விடுவேன்' என்று கூறினார்கள்.

==ஹுது ஹுது பறவையின் பதில்==

சிறிது நேரத்தில் ஹுது ஹுது பறவை அங்கே வந்து சேர்ந்தது.

'நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் கொண்டு வந்துள்ளேன்' என்று அந்த பறவை சொன்னது.
'ஸபாவிலிருந்து நான் உண்மை செய்தியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன்' என்று தொடர்ந்தும் சொன்னது.

அங்கே ஒரு பெண் (பல்கீஸ் ராணி) அம்மக்களை ஆட்சி செய்வதைக் கண்டேன். அவளுக்குத் தேவையான எல்லாமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளிடத்தில் சிறப்பான அரியாசனமும் இருக்கிறது. ஆனால் அவளும் அவளைச் சார்ந்த மக்களும் அல்லாஹ்வை வணங்குவதற்குப் பதிலாக [சூரியனை வணங்குகிறார்கள்].

அவர்களுடைய இத்தவறான செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகானதாக காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். அதனால் அவர்கள் அல்லாஹ்வை வணங்கவில்லை.

வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டாமா?

அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை, அவன் மகத்தான அர்ஷுக்கு(அரியாசனம்) உரிய இறைவன் என்றும் கூறியது.

==சுலைமான் (அலை) அவர்களின் கடிதம்==

சுலைமான் (அலை) அவர்கள் ஒரு கடிதத்தை ஹுது ஹுது பறவையிடம் கொடுத்து, அந்த ராணியிடம் கொடுத்து விடும் படி கூறினார்கள். அதில்

''நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' (என்று எழுதப்பட்டிருக்கிறது).

அதோடு இந்தக் கடிதம் விஷயமாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை அறிந்து விட்டு விரும்படியும் கூறினார்கள்.

அரசி அவளது பிரமுகர்களிடம் இக்கடிதம் பற்றி ஆலோசனை செய்தாள். அவர்கள் சுலைமானுக்கு எதிராக போர் தொடுக்கும்படி பரிந்துரை செய்தார்கள். ஆனால் அரசி, 'அரசர்கள் ஒரு நகரத்தினுள் படையெடுத்து நுழைவார்களானால் நிச்சயமாக அதனை அழித்து விடுவார்கள், அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை சிறுமைப்படுத்தி விடுவார்கள். அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்' என்று புத்திசாலித்தனமாக கூறினாள்.

அவள் பல பரிசுப் பொருட்களை சுலைமான் (அலை) அவர்களுக்கு அனுப்பினாள். ஆனால் அவர்கள் அதை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். பிறகு சுலைமான் (அலை) அவர்களை நேரில் சந்திக்க புறப்பட்டாள்.

==அரசியின் அரியாசனம்==

பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிப்பட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர்? என்று சுலைமான் (அலை) அவர்கள் கேட்டார்கள்.
ஜின்களில் பலம் பொருந்திய 'இப்ரித்' அதற்கு முன்வந்தது. நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறியது.

ஆனால் இறைவேதத்தின் ஞானத்தை பெற்றிருந்த ஒருவர், உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள் அதை உங்களிடம் கொண்டு வருவேன் என்று கூறினார்.

அவர் சொன்னவாறே அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் சந்தோசமடைந்தார்கள். அதனால் அவர்கள் பெருமை கொள்ளவில்லை.

இது என்னுடைய இறைவனின் அருட்கொடையாகும். நான் நன்றியுடன் இருக்கிறேனா அல்லது மாறு செய்கிறேனா என்று இறைவன் என்னை சோதிக்கிறான். எவன் ஒருவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே நன்மையாகும். எவன் மாறு செய்கின்றானோ அது அவனுக்கே இழப்பாகும். ஏனென்றால் என் இறைவன் எவரிடத்தும் தேவைப்படாதவன், கண்ணியம் மிக்கவன் என்று சுலைமான் (அலை) கூறினார்கள்.

==அரசியின் மனமாற்றம்==

--(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.'' என்று சுலைமான் (அலை) கூறினார்கள்.(அல்குர்ஆன் 27:41)

--ஆகவே, அவள் வந்த பொழுது, ''உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்; ''நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது'' என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்). (அல்குர்ஆன் 27:42)

அவளிடம்; ''இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!'' என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தணிணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள், (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), ''அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!'' என்று கூறினார். (அதற்கு அவள்) ''இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் (முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்'' எனக் கூறினாள். (அல்குர்ஆன் 27:44)

==சுலைமான் நபியும் எறும்புகளும்==

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் [[எறும்பு]] (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று. ( குர்ஆன் 27:18)

==சில குறிப்புகள்==

# சுலைமான் (அலை) அவர்களது படையில் ஜின்கள் மனிதர்கள் பறவைகள் இருந்தனர்.
# எறும்புகளின் மொழியையும் அறியக்கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
# சுலைமான் (அலை) அவர்களை எறும்புகளும் அறியக்கூடியவைகளாக இருந்தன.
# சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட [[பிரார்த்தனை|துஆ]]:

''என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!''