சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்!

கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்!
யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)

சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்!
“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவனத்தில் அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!
‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். (புகாரி)

நோய் விசாரிக்கச் சென்றால் சுவனத்தில் ஒரு தோட்டம்!
ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே மாலையில் நோய்விசாரிக்கச் சென்றால் மறுநாள் காலை வரை ஏழாயிரம் வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு சுவனத்தில் ஒரு தோட்டம் இருக்கும். (திர்மிதீ)

நரகம் ஹராமாக்கப்பட வேண்டுமா?
‘எவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

மக்களை அதிகமாக சுவனத்தில் சேர்ப்பவைகள்!
மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது ‘இறையச்சமும் நற்குணமும் தான்’ எனக் கூறினார்கள்’ (திர்மிதீ)

உண்மை பேசுவது சுவனத்திற்கு வழிகோலும்!
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)

கோபத்தை அடக்கினால் சுவனத்து கண்ணழகிகளில் விரும்பியவரை மணக்கலாம்!
யார் கோபத்தை வெளிப்படுத்தும் சக்தியுள்ள நிலையில் அதை அடக்குகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் மத்தியில் அழைத்து ஹூருல் ஈன்களில் – சுவர்க்கத்து கண்ணழகிகளில் தாம் விரும்பியவரை அனுபவித்துக்கொள்ளக்கூடிய உரிமையை வழங்குவான் (திர்மிதீ)

பெற்றோரைப் பேணுவதால் சுவனம் கிடைக்கும்!
‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து (அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

இரண்டைப் பேணுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சுவர்க்கத்திற்கு பொறுப்பேற்பார்கள்!
“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில்!
“நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்” (புகாரி)

நான்கு விசயங்கள் ஒரே நாளில் ஒருவர் செய்தால் அவர் சுவனம் சென்று விட்டார்!
எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

விரும்பிய வாயிலின் வழியாக சுவனம் செல்ல!
எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)

சுன்னத்தான தொழுகைகளைப் பேணினால் சுவனத்தில் மாளிகை!
“ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.


நன்மைகளின் வாயில்கள்!

வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?
“ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்)

காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?
ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். (புகாரி ஹதீஸ் சுருக்கம்)

நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதன் சிறப்புகள்:
யார் நோன்பாளி நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்கின்றாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி கிடைக்கும். எனினும் நோன்பாளியின் கூலியில் எந்தக்குறைவும் ஏற்படாது. (திர்மிதீ)

பன்மடங்கு நன்மைகளை பெற குர்ஆனை ஓதுங்கள்!
“யார் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்கு. ‘அலிப்’ ‘லாம்’ ‘மீம்’ என்பது ஒரு எழுத்து இல்லை. ‘அலிஃப்’ ஒரு எழுத்து, ‘லாம்’ ஒரு எழுத்து, ‘மீம்’ ஒரு எழுத்து” (புகாரி, முஸ்லிம்)

இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா?
“எவர் ‘இஷாத்’ தொழுகையை ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் பாதி இரவை நின்று வணங்கியவர் போலாவார். எவர் சுப்ஹ் தொழுகையையும் ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் முழு இரவும் தொழுததைப் போன்றதாகும்.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு ஹஜ் செய்த நன்மையைப் பெற!
“ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஒரு ஹஜ் அல்லது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்குச் சமமானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மை வேண்டுமா?

لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்

(பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)

‘என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! (புகாரி)

பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்பட வேண்டுமா?

”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
(பொருள் : அல்லாஹ் துய்மையானவன், அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்).

ஒரு நாளைக்கு நூறு தடவைக் கூறினால் அவருடைய பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நுல்கள்: புஹாரி, முஸ்லிம்)

காலையிலும் மாலையிலும் நூறு தடவை கூறுபவரைவிட மறுமை நாளில் சிறந்த செயலுடன் யாரும் வரமாட்டார். ஆனால் இவரைப் போன்றோ அல்லது இவரைவிட அதிகமாகவோ திக்ர் செய்தவரைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)


இறைவனின் தராசில் நன்மையின் எடை கனமாக வேண்டுமா?

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
(பொருள் : அல்லாஹ் துய்மையானவன், அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்).

”சுப்ஹானல்லாஹில் அளீம்” سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
(பொருள் : கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துய்மையானவன் எனத் துதிக்கிறேன்)

இந்த இரண்டு வார்த்தைகளும் சொல்வதற்கு மிக எளிதானவை. இறைவனின் தராசில் மிக கனமானவை. இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)


அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிய வேண்டுமா?
“என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்பவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை வேண்டுமா?
(தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது,
அல்லாஹூம்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தித் தாம்மாத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல்ஃபளீலத்த வப்அஸ்ஹூ மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹூ

பொருள்: பரிபூரணமான இந்த அழைப்புக்கும் நிலைபெறப் போகும் தொழுகைக்கும் சொந்தக்காரணமாகிய அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ‘வஸீலா’ என்ற உயர் பதவியையும் சிறப்பையும் வழங்கி, அன்னாரை நீ வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தில் எழுப்புவாயாக!
என்று யார் ஓதுகின்றாரோ அவருக்கு எனது பரிந்துரையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

லுஹா தொழுகையின் சிறப்புகள்:
உங்களில் ஒருவர் தனது எலும்பு மூட்டுகளுக்காக தர்மம் வழங்க வேண்டும். (நீங்கள் கூறுகின்ற) ஒவ்வொரு சுபுஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும்.
நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது இவை அனைத்திற்கும் போதுமான தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

மலைகளைப் போல நன்மைகள் வேண்டுமா?
“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.