அத்தியாயம் என்றும் கூறப்படுகிறது. இந்த அத்தியாயத்தைப் பற்றி வந்துள்ள
ஆதாரமற்ற செய்திகளைப் பார்ப்போம்.
கப்ரு வேதனை குறையும்
நபித்தோழர்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது, அது கப்ரு என்று அறியாமல் கூடாரம்அமைத்தார். அப்போது கப்ரில் ஒரு மனிதர், ”தபாரக்கல்லதீ பி யதிஹில் முல்க்…”
என்று முழுமையாக ஓதி முடித்தார். இதைக் கண்ட அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் கப்ரு என்று அறியாமல் என் கூடாரத்தை அங்கு அமைத்து விட்டேன். அப்போது கப்ரில் இருந்த ஒரு மனிதர் தபாரக்கல்லதீ பி யதிஹில் முல்க்… என்று முழுமையாக ஓதி முடித்தார்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”அந்த அத்தியாயம் தடுக்கக் கூடியது, கப்ருடைய வேதனையை நீக்கக்கூடியது” என்று கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: திர்மிதீ 2815
இதே செய்தி அல்முஃஜமுல் கபீர்லிதப்ரானீ, ஷுஅபுல் ஈமான்லிபைஹகீ, ஹில்யத்துல் அவ்யா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இவை அனைத்திலும் யஹ்யா பின் அம்ர் பின் மாக் என்பவர் இடம் பெற்றுள்ளார்.
இவரை இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். மேலும் புகாரி அவர்கள், ‘ இவர் மீது ஆட்சேபணை இருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 6, பக்கம்: 10)
புகாரி அவர்கள் யாருடைய ஹதீஸை (அறிஞர்களால்) கைவிடப்படுமோ அவருக்குத் தான் ஃபீஹீ நள்ருன் (இவர் மீது ஆட்சேபணை இருக்கிறது) என்று சொல்வார்கள். (நூல்: தத்ரீபுர் ராவி பாகம்:1, பக்கம்:349)
மேலும் இவருக்கு அடுத்து இடம் பெறும் இவருடைய தந்தை மீதும் விமர்சனங்கள் உள்ளன.
இப்னு அதீ அவர்கள், இவர் ஹதீஸ் கலையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும், ஹதீஸைத் திருடுபவர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள். அபூயஃலா அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: லுஅஃபாவு வல் மத்ருகீன் இப்னுல் ஜவ்ஸீ, பாகம்: 2, பக்கம்: 231)
எனவே இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமான செய்தியாகும். இதைக் கொண்டு அமல் செய்யக்கூடாது.
மறுமையில் பரிந்துரை
”குர்ஆனில் முப்பது வசனங்களைக் கொண்ட அத்தியாயம் உள்ளது. அது மனிதனுக்குப் பரிந்துரை செய்யும். இதனால் அவன் பாவங்கள் மன்னிக்கப்படும். அதுதான் தபாரக்கல்லதீ பியதிஹில் முல்க் என்ற அத்தியாயமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்: திர்மிதீ 2816
மேலும் இதே செய்தி அபூதாவூத் (1192), இப்னு மாஜா (3776), அஹ்மத் (7634, 7927),
ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (பாகம்: 3, பக்கம்: 67), ஹாகிம் (பாகம்: 1, பக்கம்: 753),
மவாரிதுல் லம்ஆன் (பாகம்: 1, பக்கம்: 438), முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹி (பாகம்: 1, பக்கம்: 174), முஸ்னது அப்து இப்னு ஹுமைத்
(பாகம்: 1, பக்கம்: 421) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தி இடம் பெறும் அனைத்து நூல்களிலும் அப்பாஸ் அல்ஜுஷமீ என்ற
அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவருடைய நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை.
அப்பாஸ் அல்ஜுஷமீ என்ற அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று பார்த்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.
இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், ”இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடுகிறார்கள்.
இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியல் இடம் பெறச் செய்து விடுவார். இதை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறு எந்த அறிஞரும் அப்பாஸ் அல்ஜுஷமீ என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை. எனவே யாரென்று அறியப்படாத அப்பாஸ் அல்ஜுஷமீ வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப் பட்ட நபிமொழி அல்ல. எனவே இதை ஏற்று அமல் செய்யக்கூடாது. மேலும் இதே செய்தியில் அதே அப்பாஸ் அல்ஜுஷமீ என்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததாகக் குறிப்பிடுகிறார். இதைப் பற்றி இமாம் புகாரி
அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
அப்பாஸ் அல்ஜுஷமீ என்பவர் அடுத்த அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செவியற்றார் என்று அறியப்படவில்லை என்று இமாம் புகாரீ அவர்கள் தனது அத்தாரீகுல் கபீர் என்ற நூல் இவரை குறை சொல்யுள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னுஹஜர் அவர்கள் கூறுகிறார்கள்.
(தல்கீஸுல் ஹபீர் பாகம்: 1, பக்கம்: 233)
இதே செய்தி இமாம் தப்ரானீ அவர்களுக்குரிய அல்முஃஜமுல் கபீர் என்ற நூல்
ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் இடம் பெற்றுள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் தல்கீஸுல் ஹபீர் என்ற நூல் கூறியுள்ளார்கள். ஆனால் அதன் ஐந்தாவது அறிவிப்பாளர் சுலைமான் பின் தாவூத் பின் யஹ்யா அத்தபீபி அல்பஸரீ என்பவரின் நம்பகத்தன்மை பற்றி நாம் அறிந்த வரை எந்த விவரமும் எந்த நூலும் இடம் பெறவில்லை
தூங்கும் முன் ஓத வேண்டிய அத்தியாயம்
நபி (ஸல்) அவர்கள் 32வது அத்தியாயமான அப் லாம் மீம் என்ற அத்தியாயத்தையும் தபாரக்கல்லதீ என்ற அத்தியாயத்தையும் ஓதாமல் தூங்க மாட்டார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: திர்மிதீ 2717
இதே கருத்தில் அஹ்மத் (14132) மற்றும் தாரமி (3277) ஆகிய நூற்களில் இடம்
பெற்றுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹுரைம் பின் மிஸ்அர் என்பவர் இடம்
பெறுகிறார். இவரை இப்னு ஹிப்பானைத் தவிர வேறு எந்த அறிஞரும் உறுதியானவர் என்று சொல்லவில்லை.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் பாகம்: 11, பக்கம்: 29
இப்னு ஹிப்பான் அவர்கள் தனித்து நம்பகமானவர் என்று கூறுவதை ஹதீஸ்கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை முன்னரே நாம் விளக்கியுள்ளோம்.
மேலும் இதே தொடரில் இடம் பெற்றுள்ள லைஸ் பின் அபீ ஸுலைம் என்பவரும் பலவீனமானவர். ”இவர் கடைசி காலத்தில் மூளை குழம்பியவர். இவர் நல்ல நிலையில் அறிவித்தவை எது? மூளை குழம்பிய நிலையில் அறிவித்தவை எது? என்பதைப் பிரித்து அறிய முடியவில்லை.
எனவே இவரது செய்திகளை (ஏற்றுக் கொள்ளாமல்) விடப்பட்டது” என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 464)
மேலும் இதே அறிவிப்பாளர் லைஸ் பின் அபீ ஸுலைம் என்பவர் மற்ற அறிவிப்பாளர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்லாத செய்திகளை இவர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்வார்; எனவே ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியதாக இமாம் திர்மிதீ 2725வது செய்தியின் கீழ் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்ற செய்தியாக இல்லை.
ஜிப்ரயீல் அவர்கள், ”ஹாமீம் ஸஜ்தாவையும், தபாரகல்லதீ சூராவையும் ஓதாமல் தூங்கக் கூடாது” என்று என்னை ஏவினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: தைலமீ, பாகம்: 1லி2, பக்கம்: 215
இச்செய்தி அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்ட செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் மக்ஹுல் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் அவருக்கு அடுத்த அறிவிப்பாளராக இடம் பெறும் அலீ (ர) அவர்களைச் சந்தித்ததில்லை. (நூல்:தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:10, பக்கம் :258)
நன்மைகள் ஏராளம்
யார் ஸஜ்தா அத்தியாயத்தையும் தபாரகல்லதீ பி யதிஹில் முல்க் என்றஅத்தியாயத்தையும் ஓதுகிறாரோ அவருக்கு 70 நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரைவிட்டும் 70 பாவங்கள் அழிக்கப்படும். அவருக்கு 70 அந்தஸ்துகள் உயர்த்தப்படும்
என்று உபை பின் கஅபு (ரலி) கூறுகிறார்கள்.
நூல்: தாரமி 3270
இந்தச் செய்தியும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. கஅப் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்மை, தீமைகள், ஹலால், ஹராம் போன்றவை திருக்குர்ஆன் அல்லது நபி (ஸல்) அவர்கள் மட்டுமே கூறமுடியும். அவர்கள் கூறியது மட்டுமே மார்க்கமாக அங்கீகரிக்க முடியும். எனவே இதை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்த முடியாது.
பறவையாக மாறி பரிந்துரை
காத் பின் மஃதான் என்பவர் கூறுகிறார்: அப் லாம் மீம் ஸஜ்தா என்ற அத்தியாயம்அதை ஓதியவருக்காக (கப்ரு வேதனையிருந்து விடுவிக்க அல்லாஹ்விடம்) போராடும். அது, ”யா அல்லாஹ்! நான் உன்னுடைய வேதத்தில் உள்ளதாக இருந்தால், இவர் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக்கொள்! நான் உன்னுடைய வேதத்தில் உள்ளதாக இல்லை என்றால் உன்னுடைய வேதத்திருந்து என்னை அழித்து விடு!” என்று கூறும். அது பறவை போல் ஆகி அவன் மீது தன்னுடைய சிறகை வைத்து அவனுக்குப் பரிந்துரை செய்யும். அவனை
கப்ரின் வேதனையிருந்து பாதுகாக்கும். தபாரக் என்ற அத்தியாயத்திற்கும் இது
போன்ற (சிறப்பு) உள்ளது. காத் என்பவர் இவ்விரண்டையும் ஓதாமல் துங்கமாட்டார்.
நூல்: தாரமி 3276
இந்தச் செய்தியும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. காத் மஃதான் என்பவரின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் நபித்தோழர் கூட கிடையாது. இவர்களின் சொந்தக் கூற்றுகள் மார்க்க ஆதாரமாக ஆகாது.
மலக்குகளை எதிர்த்துப் போராடும் அத்தியாயம்
உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் இறை வேதத்தில் தபாரக் சூராவைத் தவிர எதுவும் இல்லாத நிலையில் மரணித்து விட்டார். அவரை கப்ரில் கொண்டு வைத்தவுடன், அவரிடத்தில் மலக்கு வந்த போது அவருடைய முகத்தில் தபாரக் சூரா வெளிப்பட்டது. அப்போது அந்த மலக்கு, ”நான் உனக்கும் அவருக்கும் ஏன்? எனக்கும் கூட எந்தத் தீமையும், நன்மையும் செய்ய சக்தி பெற மாட்டேன். இவருக்கு ஏதாவது செய்ய நாடினால் உன்னுடைய ரப்பிடத்தில் செல்! அவனிடத்தில் பரிந்துரையைக் கேள்!” என்றார்.அது இறைவனிடம் சென்று, ”யாஅல்லாஹ்! இந்த மனிதன் உன்னுடைய வேதத்தில் உள்ள என்னைக் கற்றுக் கொண்டு, என்னை ஓதினான். அவனை நெருப்பால் எரிக்கப் போகிறாயா? நான் அவனுடைய இதயத்தில் இருக்கும் போது நீ வேதனை செய்யப் போகிறாயா? நீ அப்படி வேதனை செய்வதாக இருந்தால் என்னை உன்னுடைய வேதத்திருந்து அழித்து விடு” என்று
கூறும். (இறுதியில்) ”அவனுடைய விஷயத்தில் உன்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொண்டேன்” என்று இறைவன் கூறுவான். பின்பு அவனுடைய வாயில் அதனுடைய வாயை வைத்து, ”என்னை ஓதிய இந்த வாயை வரவேற்கிறேன்; ஏனென்றால் நீ என்னைப் படித்தாய்! உன்னுடைய உள்ளத்தையும் பிரியப்
படுகிறேன்; ஏனென்றால் உன்னுடைய இதயம் என்னை மனனம் செய்திருந்தது; உன்னுடைய இரு கால்களை வரவேற்கிறேன் ஏனென்றால் உன்னுடைய கால்கள் என்னை (ஓதி) நின்று வணங்கியது” என்று அந்த அத்தியாயம் கூறும். நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியை அறிவித்தவுடன், சிறுவர்கள், பெரியவர்கள், அடிமைகள், சுதந்திரமானவர்கள் அனைவரும் அதை கற்றுக் கொன்டனர். நபி (ஸல்) அவர்கள் இதற்கு அல் முன்ஜிய்யா (பாதுகாக்கக்கூடியது) என்று பெயர் சூட்டினார்கள்.
நூல்: தாரிகு திமிஸ்க், பாகம்: 6, பக்கம்: 45
இந்தச் செய்தியை எடுத்துப் பதிவு செய்த இமாம் இப்னு கஸீர் அவர்கள், தனது
திருக்குர்ஆன் தப்ஸீரில் இது நிராகரிக்கப்பட வேண்டியது என்று கூறியுள்ளார்கள்.
இதில் புராத் பின் அஸ்ஸாயிப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் அஹ்மத், யஹ்யா பின் மயீன், புகாரீ, அபூஹாதம், தாரகுத்னீ ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள் என்று காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
(நூல்: தப்ஸீர் இப்னு கஸீர், பாகம்: 4, பக்கம்: 396)
புராத் பின் ஸாயிப் என்பவர் கைவிடப்பட்டவர் என்று லுஅஃபாவு வல் மத்ரூகீன்,
பாகம்: 1, பக்கம்: 87ல் நஸயீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
யஹ்யா பின் மயீன் அவர்கள், இவர் மதிப்பற்றவர் என்றும், புகாரி அவர்கள்,
நிராகரிக்கப்பட்டவர்; ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரை விட்டுவிட்டார்கள் என்றும், இவர் பலவீனமானவர் என்று இமாம் ஸஃதி, ராஸி, அபூ ஸுர்ஆ ஆகியோரும் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் தாரகுத்னீ அவர்கள் கைவிடப்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்லுஅபாவு வல் மத்ருகீன் லி இப்னுல் ஜவ்ஸீ, பாகம்: 3, பக்கம்: 3)
எனவே இந்த ஹதீஸும் ஆதாரமற்ற செய்தியாகும். இதை நடைமுறைப் படுத்தக்கூடாது.
வேதனையைத் தடுக்கும் அத்தியாயம்
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ர) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் இறந்த போது அவரிடத்தில் (வேதனையின் வானவர்) வந்து அவரின் தலையின் பக்கம் உட்கார்ந்தார். அப்போது, ”இவரை கைப்பற்ற உங்களுக்கு எந்த வழியும் கிடையாது. ஏனெனில், இவர் சூரத்துல் முல்க்கை ஓதுபவராக இருந்தார்” என்று தலை கூறும். பின்பு அவரின் காலுக்கு அருகில் உட்காருவார். அப்போது, ”உங்களுக்கு எந்த வழியும் கிடையாது. ஏனெனில் இவர் முல்க் அத்தியாயத்தின் மூலம் நின்று வணங்குபவராக இருந்தார்” என்று கூறும். பின்னர் அவரின் நெஞ்சுக்கு அருகாமையில் உட்காருவார். அப்போது, ” உங்களுக்கு எந்த வழியும் கிடையாது. ஏனெனில் இவர் முல்க் அத்தியாயத்தை மனனம் செய்துள்ளார்” என்று கூறும். எனவே இதற்கு அல் மானிஆ (வேதனையை தடுக்கக்கூடியது)என்று பெயர் சூட்டப்பட்டது.
நூல்: அல்முஃஜமுல் கபீர்லிதப்ரானீ, பாகம்: 9, பக்கம்: 131
இந்தச் செய்தியும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் சொந்தக்கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்த முடியாது.
இதே கருத்து அல்முஃஜமுல் கபீர்லிதப்ரானீ, பாகம்: 9, பக்கம்: 131, ஹில்யதுல் அவ்யா, பாகம்: 7, பக்கம்: 248ல் இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியில் ஆஸிம் பின் அபீ அந்நஜூத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவருடைய நினைவாற்றல் குறைபாடு உள்ளது என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம்: 518)
உள்ளத்தில் இடம் பெற வேண்டிய அத்தியாயம்
”நான் என்னுடைய சமுதாயத்தில் ஒவ்வொருடைய உள்ளத்திலும் தபாரக் அத்தியாயம் இருப்பதை ஆசைப் படுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்: அல்முஃஜமுல் கபீர் லி தப்ரானீ, பாகம்: 11, பக்கம்: 241)
இதன் தொடரில் இடம் பெறும் இப்ராஹிம் பின் ஹிகம் என்பவர் ஹதீஸ் கலையில் கைவிடப்பட்டவர். (நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் லி நஸயீ, பாகம்: 1, பக்கம்: 12)
குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அத்தியாயம்
ஒரு மனிதரிடம் இப்னு அப்பாஸ் (ர) அவர்கள், ”உனக்கு மகிழ்வூட்டும் ஒரு ஹதீஸை நான் கூறட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”அப்பாஸ் அவர்களே! உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்! கூறுங்கள்” என்றார். ”நீ தபாரக்கல்லதீ பியதிஹில் முல்க்… (என்ற அத்தியாயத்தை) ஓது! உன் குழந்தைகளுக்கும் உன் வீட்டிலுள்ள சிறுவர்களுக்கும் உன் பக்கத்து வீட்டாருக்கும் இதைக் கற்றுக் கொடு! இது (கப்ரின் வேதனையை விட்டும்) பாதுகாக்கக்கூடியதாகும். இது மறுமை நாளில் இறைவனிடம் இதை ஓதியவருக்காகப் போராடும். நரகத்தை விட்டும் பாதுகாக்க இதைஓதியவருக்காக இறைவனிடம் கோரும். எவருடைய உள்ளத்தில் இந்த அத்தியாயம் இருக்குமோ அவரை கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேலும் ”என் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் இந்த அத்தியாயம் இருப்பதை நான் விரும்புகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் இப்னு அப்பாஸ் (ரலி ) அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர்: இக்ரிமா
நூல்: முஸ்னத் அப்து இப்னு ஹுமைத், பாகம்: 1, பக்கம்: 206)
இந்தச் செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் இப்ராஹீம் இப்னுல் ஹகம் என்பவர் பலவீனமானவராவார்.
இப்ராஹிம் பின் ஹகம் என்பவர் ஹதீஸ் கலையில் கைவிடப்பட்டவர் (பொய்யர்) என்று இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் லி நஸயீ, பாகம்: 1, பக்கம்: 12)
”திருக்குர்ஆனின் முப்பது ஆயத்துகள் கொண்ட (தபாரக்) அத்தியாயம் கப்ரில் வைக்கப் பட்டவருக்காக (வேதனையைத் தடுப்பதற்கு) போராடும்” என்று முர்ரா என்பவர் குறிப்பிடுகிறார். (நூல்: தாரமீ 3279)
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. முர்ரா என்பவரின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் நபித்தோழர் கூட கிடையாது. இவர்களின் சொந்தக் கூற்றுகள் மார்க்க ஆதாரமாக ஆகாது.
அறுபது மடங்கு கூடுதல் நன்மை
ஹாமீம் ஸஜ்தா என்ற அத்தியாயம், தபாரக் அத்தியாயம் ஆகிய இரண்டும்திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தை விட அறுபது மடங்கு நன்மைகளைக் கொண்டு சிறப்பிக்கப் பட்டுள்ளது என்று தாவூஸ் என்பவர் அறிவிக்கிறார்.
(நூல்: தாரமீ 3278)
இந்தச் செய்தியும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. தாவூஸ் என்பவரின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மார்க்க ஆதாரமாக ஆகாது.
மேலும் இந்த நூல்களில் இடம் பெற்றுள்ள லைஸ் பின் அபீ ஸுலைம் என்பவர்
பலவீனமானவர்.
இவர் கடைசி காலத்தில் மூளை குழம்பியவர். இவர் நல்ல நிலையில் அறிவித்தவை எது? மூளை குழம்பிய நிலையில் அறிவித்தவை எது? என்பதைப் பிரித்து அறியமுடிய வில்லை.
எனவே இவரது செய்திகளை (ஏற்றுக் கொள்ளாமல்) விடப்பட்டது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 464)
மேலும் இவர் மற்ற அறிவிப்பாளர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்லாத செய்திகளை, நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவர் சொல்வார். எனவே ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியதாக இமாம் திர்மிதீ 2725வது செய்தியின் கீழ் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்ற செய்தியாக இல்லை.
இறுதியாக, தபாரக் எனும் அத்தியாயத்திற்கு தனிப்பட்ட சிறப்பு இருப்பதாக எந்த
ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.
பொதுவாக திருக்குர்ஆன் வசனங்களை ஓதினால் கிடைக்கும் நன்மைகளே இந்த அத்தியாயத்தை ஓதினால் கிடைக்கும் என்பதே சரியான கருத்தாகும்.