முன்னுரை
ரமளானின் மாதத்தில் ஆண் பெண் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. சூழ்நிலை காரணமாக சிலரால் நோன்பு நோற்க முடிவதில்லை. அப்படிப்பட்டோரின் இயலாமையை அறிந்து அல்லாஹ் பலருக்கு அம்மாதத்தில் நோன்பு நோற்பதிலிருந்து சலுகைகளை வழங்கியுள்ளான். இஸ்லாம் மிக இலகுவானது என்பதை இந்த சலுகைகள் உணர்த்துகின்றன. அவற்றையும் நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
நோன்பு கட்டாயக் கடமை
'ஈமான் கொண்டோரே! உங்களுக்கு முன்பிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையோராகலாம்' (அல்குர்ஆன் 2:183)
'ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்துக் காட்டக் கூடிய அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்'. (அல்குர்ஆன் 2:183)
இவ்வசனங்கள் இரண்டும் ஆண் பெண் அனைவர் மீதும் நோன்பு கடமை என்பதைச் சொல்லுகிறது.
இருப்பினும் நோன்பை விடுவதற்கு சிலருக்கு தற்காலிக சலுகையும், சிலருக்கு நிரந்தர சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.
1. பிரயாணிகள்:
பயணம் மேற்கொள்பவர் அவரது பயணம் கடினமானதாக இருந்தாலும் சரி, அவ்வாறு இல்லா விட்டாலும் சரி அவர் ரமளான் மாத நோன்பை விட்டு விட்டு பின்னர் வைத்துக் கொள்ள சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
'.....எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்'. (அல்குர்ஆன் 2:185)
நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். 'கதீத்' என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டு விட்டார்கள். மக்களும் நோன்பை விட்டு விட்டனர் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரி 1944)
2. நோயாளிகள்:
நோய்களில் தீரும் நோய் என்றும் தீராத நோய் என்றும் இரண்டு வகைகள் உண்டு.
முதல் வகை நோய்க்கு இலக்கானவர்கள் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்ததும் அந்த நோன்பை நோற்க வேண்டும்.
'....எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் பின்னர் வரும் நாட்களில் நோற்க வேண்டும்'. (அல்குர்ஆன் 2:184)
இரண்டாம் வகை நோய்க்கு இலக்கானவர்கள் நோன்பை விட்டு விட்டு 'ஃபித்யா' (பரிகாரம்) கொடுக்க வேண்டும்.
'....எனினும் நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பகரமாக ஃபித்யாவாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்'. (அல்குர்ஆன் 2:184)
3. மாதவிடாய்ப் பெண்கள்:
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதிலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளனர். அச்சமயத்தில் நோன்பு நோற்பதிலிருந்து தடுக்கப்பட்டும் உள்ளார்கள். ஆனாலும் பின்னர் அந்த நோன்பை நோற்க வேண்டும்.
'....ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டு விடுவதில்லையா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி), புகாரி 304)
'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களா செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா)
4. கர்ப்பிணிகள்:
5. பாலூட்டும் தாய்மார்கள்:
ரமளான் மாதத்தின் நோன்பை கர்ப்பிணிகளும் பாலூட்டுவோரும் தற்காலிகமாக விட்டுவிட சலுகை அளிக்கப்பட்டுள்ளார்கள். விடுபட்ட நாட்களை அவர்கள் களா செய்ய வேண்டும்.
'கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகையளித்தனர்' என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)
6. முதியவர்கள்:
தீராத நோய்க்கு இலக்கானவர்கள் எவ்வாறு நோன்பை விட்டு விட்டு ஃபித்யா கொடுக்க வேண்டுமோ அதுபோன்று முதியவர்கள் நோன்பிற்கு பதிலாக ஃபித்யா கொடுக்க வேண்டும்.
'ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு (அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பை விட்டதற்கு) பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்' என்ற 2:184 வது வசனத்தை ஓதிக்காட்டி, இது மாற்றப்பட்ட வசனம் அன்று. நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும், அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (நூல்: புகாரி 4505)
7. போராளிகள்:
ஜிஹாதில் பங்கு கொள்ளக் கூடியவர்கள் ரமளான் மாதத்தின் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் களா செய்ய வேண்டும்.
'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு மக்கா வெற்றியின் போது போருக்கு ஆயத்தமானார்கள். குதைத், உஸ்பான் ஆகிய இடங்களுக்கு இடையே கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டார்கள். அம்மாதம் (ரமளான் மாதம்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
முடிவுரை
நாம் கடமையாகிய நோன்பை நோற்க வேண்டும், இயலாமையினால் அதைச் செய்ய இயலாதவர்கள் ஃபித்யா கொடுக்க வேண்டும், அதற்கும் இயலாதவர்கள் ஃபித்யா கொடுப்பது கூட அவசியமில்லை - ஒருவரது சக்திக்கு மீறி அல்லாஹ் அவருக்கு சிரமம் கொடுப்பதில்லை - என்ற அளவுக்கு இஸ்லாம் எளிமையான மார்க்கம் என்பதை விளங்கிக் கொள்வதோடு, நோன்பு நோற்பது தான் மிகவும் சிறந்தது என்பதையும் விளங்கிக் கொள்வோமாக!
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்
Labels:
நோன்பு பற்றிய தலைப்புகள்