அல்குர்ஆன் கூறும் படிப்பினை சம்பவங்கள்! யூசுப் நபியின் வரலாறு!

இஸ்லாமிய உறவுகளே! அல்குர்ஆன் என்பது மனிதனுக்கு எல்லா வழிகளிலும் நேர்வழி காட்டக்கூடிய ஒன்றே. அந்த வகையில் அல்குர்ஆன் பற்றி நாம் படிப்பதற்கு அதிகம் இருக்கின்றன. எனவே அதன் ஒரு பகுதியை தெளிவு படுத்தும் முகமாக இந்த ஆக்கம் எழுதப்படுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:

 ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(2:2)

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;…(2:185)
எனவே, அல்குர்ஆனின் அந்த வழிகாட்டலுக்கு அமைவாக, அல்குர்ஆனிய படிப்பினை சம்பவங்களை ‘படிப்பினையோடு’ உரசிப்பார்க்க இந்த ஆக்கத்தை வரைகிறேன். இதன் மூலம் முன்வைக்கப்படும் சூராவை இலகுவாக புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன். அல்லாஹ் அதற்கு துணை நிற்கட்டும்.
(குர்ஆன் தர்ஜுமாவோடு இந்த ஆக்கத்தை வாசிப்பது மிகவும் பொருத்தம், ஏனெனில், இதில் அனைத்து வசனங்களும் மொழிபெயர்க்கப் படமாட்டாது)
அல்குர்ஆன் கூறும் அழகிய சரித்திரங்களுள்  யூஸுப் நபியின் சரித்திரம் என்பது பல படிப்பினைகளை தன்னகத்தே வைத்திருக்கின்றது.
1-  அதனை அல்லாஹ் பின்வருமாறு வர்ணிக்கின்றான்.

 الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ

அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.

إِنَّا أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ

நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.

 نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَٰذَا الْقُرْآنَ وَإِن كُنتَ مِن قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ

(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருளச் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.  (12:1-3)
2-  அந்த சூராவின் இரண்டாவது கட்டம்; யூஸுப் நபிக்கும், அவர்களது குடும்பத்திற்குமிடையிலான உறவின் வலிமையை எடுத்துக் காட்டுவதோடு, ஷைத்தானிய சதிவலையில் சிக்குண்டவனால் அந்த உறவு முறைக்கு அழிவு வரும் என்பதையும் படம் பிடித்து காட்டுகின்றது.
யூசுப் நபியின் மீது, அவரின் சகோதரர்களை ஷைத்தான் பொறாமை கொள்ள செய்வதற்கான இரண்டு காரணிகள். ஒன்று அவர்கள் தந்தையின் விருப்பத்திற்கு உரியவாரக இருந்தமை, அடுத்து தான் கண்ட (“என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்ற) கனவு அவர்களை சிறந்தவர் என்று எடுத்துக் காட்டியமை.
அதனை அந்த சூராவின் 4-6 வரையான வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
3-  அடுத்த கட்டம்; ஷைத்தானிய சதிவலையில் சிக்குண்ட யூஸுப் நபியின் சகோதரர்கள், அவரை அழித்துக் கட்டி, தந்தையின் கவனத்தை தங்கள் பக்கம் கவர்ந்திழுக்க எடுத்த முயற்சியை விபரிக்கின்றது.
படிப்பினை;;;   யாரிடம் பொறாமை வந்து விடுமோ அவனால் சமூகத்திற்கு கேடு ஏற்படும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு)
முதலில் எந்த வழியில் கொல்லலாம் என்ற திட்டம், கடைசியில் அவரை தந்தையை விட்டு பிரித்து, நாடுகடத்த திட்டம்.
தந்திரத்தைக் கையாண்டு தந்தையிடம் இருந்தது பிரித்தார்கள், தங்கள் திட்டத்தை நிறைவேற்றி, யூசுப் நபியை பால் கிணற்றில் தள்ளிவிட்டு, தந்தையிடம் கண்ணீர் வடித்தவர்களாக, இருள் சூழ்ந்த இஷாவுடைய நேரத்தில், கையில் இரத்தம் படிந்த சட்டை இருக்கும் நிலையில் வந்து, ஓநாய் கொன்று சாப்பிட்டுவிட்டதாக  கூறினார்கள்.
(இங்கு மேற்கொண்ட திட்டங்கள்;பொய்யான இரத்தத்தை பூசிவிட்டு பகல் நேரத்தில் வந்தால் பொய் வெளுத்துவிடும், எனவே இரவில் வரத் திட்டம், கண்ணீரை வடித்தால் இன்னும் அந்தப் பொய்யை மறைக்காலாம் என்று திட்டம் போட்டார்கள். ஆனால் கொண்டு வந்த ஆடை அவர்களது திட்டத்தை பாழ்படுத்தி விட்டது. அதனை வைத்து அவர்களது திட்டத்தை தந்தை யஃகூப் நபி அறிந்து கொண்டார்கள். (ஆடையை கிழிக்க மறந்திருக்கலாம்)
இங்கு நாம் பெற வேண்டிய பாடம், அல்லாஹ்வுக்கு முன்னால் சதித்திட்டங்கள் செல்லுபடியாகாது என்பதே.
அல்லாஹ் ஈஸா நபி விடயத்தில் கூறுகிறான்:  திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் (திட்டத்தை முறித்து) சதி செய்தான்;  அல்லாஹ்வோ சதியை முறியடிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.  (3:54)
அடுத்து அல்லாஹ் சதியை முறித்த விதம்; ஒரு பிரயாணக் கூட்டம் கிணற்றிலிருந்து வெளியிலெடுத்து, மிகவும் சொற்ப விலைக்கு விற்கவும் செய்தனர். வாங்கியவரோ நாட்டு மன்னன். அல்லாஹ்வோ பல சோதனைகளை சந்தித்த அவர்களுக்கு கொடுத்த முதல் வெற்றி இதுவெனலாம்.
இதன் விரிவை சூராவின் 7-21 வரையிலான வசனங்களில் பார்க்கலாம்.
4-அடுத்து,வாழ்வியல் ரீதியில் சோதனைக்கு முகம் கொடுத்த யூஸுப் நபியவர்கள், அரசன் வீட்டில் சந்தித்த பிரச்சனையோ இறை நம்பிக்கை சார்ந்த பிரச்சினை, தன்னை சகோதரர்களின் சதியிலிருந்து காப்பாற்றி அரண்மனையில் கொண்டுவந்து சேர்த்த அல்லாஹ்வுக்கு, அந்த நபி மாறு செய்வார்களா, இதோ பாருங்கள் அரண்மனியில் சந்தித்ததை.
அங்கு இருக்கும் போது வாலிபத்தை அடைந்து, அறிவு ஞானத்தையும் பெற்றார்கள். அங்கு தான் மளை போன்ற சோதனையும் அவர்களுக்கு வந்தது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைநம்பிக்கையாளரோ தம் பாவங்களை, தம் மீது விழும் மளை போன்று பார்ப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான்.  (புஹாரி:6308)
முதலில் அரசனின் மனைவி வாயளவில் தகாத உறவுக்கு அழைத்தார், பிறகு அதற்காக கதவையும் அடைத்தார். யூசுப் என்ற ஆண்மை உள்ள அந்த வாலிபனுக்கு முன்னால் இருந்த தடை எது?!. இறையச்சம் என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை.
ஓடினார்கள், பாவத்தை விட்டும் ஓடினார்கள். அரசனின் மனைவி பின்னால் பிடித்து, இழுக்கவே ஆடையும் கழிகின்றது. இறுதியில் கதவைத் திறக்க, முன்னால் வந்தார் அரசன். எப்படியிருக்கும் நிலை!!!
பொதுவாக பெண்கள் சதிகாரர்கள் என்பார்கள். அது இங்கே நடந்தேறியது. உடனே அரசனைக் கண்ட அந்தப் பெண், “கணவரே உங்கள் மனைவிக்கு கெடுதி செய்ய நினைத்த இவருக்கு என்னதான் கூலி கொடுப்பது” என்று விழித்தாள். யூசுப் நபியவர்களோ “நானல்ல திங்கு செய்ய நினைத்தது, அவரே என்னை ஆசைக்கு அழைத்தார்“. என்று கூற, ஒருவர் நல்லதோர் தீர்வைக் கூறினார். “யூசுப் நபியின் ஆடை முன் பக்கம் கிழிந்திருந்தால் அவர் குற்றவாளி, பின் பக்கம் கிழிந்திருந்தால் அரசி குற்றாவாளி” என்பதே அந்த தீர்ப்பு. அதுபோன்று ஆடை பின்னால் கிழிந்திருப்பதைக் கண்ட அரசன் தன மனைவியை சதிகாரி என்று கூறி, “யூசுபே இதை மறந்துவிடு, அரசியே செய்த தவறுக்கு மன்னிப்புக் கேள்” என்று கூறினாலும்!!!
பொதுவாகவே, ‘அதிகாரத்துக்கு முன்னால் சட்டம் என்பது ஓர் இருட்டறை ‘என்று சொல்வார்கள். அது இன்றைக்கு மட்டுமல்ல, அன்றே நடந்தேறிவிட்டது.
அந்த அரசி இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாள். ஒன்று மக்கள் மத்தியில் நல்ல பெயரை மீட்டிக் கொள்வதற்காக குறை கூறிய பெண்களை அழைத்து, கையில் கத்தியையும், ஒரு பலத்தையும் கொடுத்து, அதனை வெட்டச் சொல்லிவிட்டு, யூசுபை முன்னால் அனுப்பவே, அவரது அழகைக் கண்ட பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டார்கள். அபோது, “அந்த அழகே என்னை அவர் பக்கம் ஈர்க்கச் செய்தது” என்று குற்றத்தை ஒப்புக் கொண்டு, நியாயப் படுத்திவிட்டு, அதிகாரத்தையும் பயன்படுத்தி, ‘நான் சொல்வதை செய்யவில்லையானால் அவரை சிறையிலிட்டு, கேவலப்படுத்துவேன்.‘ என்றால்.
ஆனால் அந்த வாலிபனின் பதில் என்னதெரியுமா!!!’இறைவா இவர்கள் அழைக்கும் பாவத்தைவிட எனக்கு சிறை வாழ்க்கை விருப்பமானது, இவர்களது சூழ்ச்சியிலிருந்து என்னை காத்துவிடு‘ என்பதாகவே இருந்தது. பிறகு சிறை வைக்கப்பட்டார்கள்.
படிப்பினை;;;   இறையச்சத்தை உள்ளத்தில் ஏந்தியவன் தவறைவிட்டு ஒதுங்குவான். அவன் இறைவனால் சுத்தப்படுத்தப்படுவான்.
சட்டங்கள் என்பது எப்போதுமே அதிகாரத்திற்கு முன்னால் இருட்டறைதான். (இதுவே இன்றைய முஸ்லிம்களுக்கும் உலகில் நடந்தேறுகின்றது.)
நல்லவர்கள் நல்லவர்களாக வாழ்வதற்கு எந்த தியாகத்தையும் செய்வார்கள்.
இதன் விரிவைப் பார்க்க சூராவின் 22-35 வரையில் பார்க்கலாம்.
5-  சிறைச்சாலையில் நடந்தது என்ன!!!
அன்பின் உறவுகளே பெரும்பாலும் நெருக்கடிகள் என்பது எம்மில் பலரை அல்லாஹ்வை விட்டும் தூரப்படுத்தி விடுகின்றது. ஆனால் வாளிப பருவத்தில் இருந்தாலும் யூசுப் நபியவர்கள் படைத்தவனை மறக்கவில்லை. பாருங்கள் என்ன நடந்தது சிறைக்குள்ளே!
அவர்களோடு இரு சிறைத் தோழர்கள், தாம் கண்ட கனவை யூசுபவர்களிடம் எடுத்துக் கூறி, விளக்கம் கேட்கவே, அதற்கு பதில் கூறுவதை பின்தள்ளிவிட்டு, அல்லாஹ்வைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள் முதலில். அவர்களைப் பார்த்து கேட்டது; ‘என் சிறைச்சாலையின் இரு தோழர்களே! நீங்கள் வணங்கும் சிதறப் போயிருக்கும் கடவுள்கள் சிறந்தனவா, அல்லது அடக்கியாளும் ஒரே இறைவன் அல்லாஹ் சிறந்தவனா?‘ என்பதுவே!!!
பிறகு மதுபானம் தயாரிப்பதாக கண்டவனைப் பார்த்து, ‘(நீ விடுதலை செய்யப்படுவாய்) அரசனுக்கு மது அருந்தக் கொடுப்பாய்’ என்றும், தலையில் ரொட்டியை சுமக்க, அதிலிருந்து பறவை சாப்பிடுவதாக கண்டவனைப் பார்த்து, ‘நீ சிலுவையில் அறையப்படுவாய், தலையிலிருந்து பறவைகள் சாப்பிடும்‘ என்று கனவுக்கு விளக்கம் கூறினார்கள்.
சிறையிலிருந்து விடுவிக்கப்படுபவனைப் பார்த்து ‘அரசினிடம் என்னை ஞாபகப்படுத்துவீராக‘ என்று கூறினாலும், அவர் அதனை மறந்துவிட்டார்.
பிறகு அரசன் கண்ட ஒரு கனவுக்கு, மந்திரிகளிடம் விளக்கம் கேட்கவே, அந்த தப்பிய கைதிக்கு யூசுபின் ஞாபகம் வரவே,அவர்களிடம் விளக்கம் கேட்டு, அரசனுக்கு சொல்லிவிட்டு, யூசுபைப்  பற்றி எடுத்துக் கூற, அரசனும் அவரை சிறையிலிருந்து விடுவித்துவருமாறு கூற சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். யூஸுப் நபியவர்கள்.
அவர்கள் விடுவிக்கப்பட்டதும் அரசனின் மனைவி மீண்டு குற்றத்தை ஒப்புக் கொண்டு, யூஸுப் நபிக்கு உண்மையாளன் என்ற பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தாள்.
படிப்பினைகள்;;;  சொகுசு வாழ்க்கையிலும், நெருக்கடியிலும் அல்லாஹ்வை, இஸ்லாத்தை மறப்பவனுக்கு, அந்த வரலாறு சொல்லிக் கொடுத்தது; ‘யூஸுப் நபி அரண்மனையிலும் பாவத்திலிருந்து ஒதுங்கி, சிரைச் சாலையில் கனவுக்கு விளக்கம் கேட்டவர்களுக்கு, அல்லாஹ்வைப் பற்றி எடுத்துச் சொல்லியும்  இறை சிந்தனையின் அடிப்படையில் இருந்தார்கள்’ என்பதைத் தான்.. 
அல்லாஹ்வை முறையாக அஞ்சியவர்களை அல்லாஹ் கைவிடமாட்டான். அல்லாஹ் கூறுகிறான்:  எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (நெருக்கடிகளில் இருந்து) வழியை உண்டாக்குவான்.அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்;…(65:2-3)
எல்லா நிலையிலும் தஃவாப் பணியை மேற்கொள்ளுதல்.
கனவுக்கு விளக்கம் சொல்வதற்கான அனுமதி. ஆனால் கண்ட கனவு நல்லதாக இருந்தால் நல்லது நடக்கும் என்ற எதிர் பார்ப்புடன், தனக்கு நெருக்கமானவர்களுக்கு சொல்வதும், கெட்டதாக இருப்பின் யாரிடமும் சொல்லாமல் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுவதும் நபிகளார் காட்டித் தந்த அம்சமாகும். (புஹாரி: 5747, முஸ்லிம்)
இதன் விளக்கங்களை சூராவின் 36-53 வரையிலான வசனங்களில் பார்க்கலாம்.
6-   மீண்டும் யூஸுப் நபியை அரச சபைக்கு எடுத்து கண்ணியப்படுத்திய இறைவன். தொடர்ந்து வாசியுங்கள்! அரச சபையில் என்ன நடந்தது! நமக்கு அறிவுரைகள் என்ன!!!
அரசனும் தனக்கு நெருக்கமான ஒருவராக யூசுப் நபியைத் தேர்வு செய்து, நம்பிக்கையானவர் என்ற பட்டத்தையும் வழங்கி, தனது ஆட்சியின் கீழ் ஒரு பகுதிக்கு அவரது ஒரே வேண்டுகோளுக்காக (களஞ்சிய சாலை)  கவர்னாகவும் ஆக்கிவிடுகின்றான்.
ஒரு விடுத்தம் கிணற்றிலிருந்து விடுவித்து அருள் புரிந்த அல்லாஹ், மீண்டும் சிறைச்சாலையிலிருந்து விடுவித்து மிகப் பெரும் அந்தஸ்த்தை வழங்கி, கண்ணியப்படுத்தினான். என்றால் நாம் பெறவேண்டிய முக்கிய படிப்பினை, சோதனைகளுக்கு பின்னால் வெற்றிவரும் என்பதே, ஆனால் பொறுமை அவசியம்.
அல்லாஹ் கூறுகின்றான்:

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.  (94:6)

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.  (2:153)
அடுத்து தகுதி இருப்பின் தமக்குரிய பொறுப்பை கேட்டு எடுக்க முடியும் என்ற செய்தியும் அதிலிருந்து நாம் பெறவேண்டிய பாடமே. தகுதியற்றவர்கள் அதிகாரங்களுக்கு விண்ணப்பிப்பது துரோகமாகும், மறுமையின் அடையாளமுமாகும்.
இது பற்றிய தெளிவு சூராவின் 54-57 வரை பார்க்கலாம்.
7-  தற்போது களஞ்சிய சாலைக்கு பொறுப்பாக இருக்கும் யூசுப் நபியிடம் அவர்களது சகோதரர்கள் தமக்கான உதவிப் பொருட்களைக் கேட்டுவந்தபோது, ‘உங்கள் தந்தை வழி சகோதரனை (யூசுப் நபியின் உடன் பிறப்பு) அழைத்துவந்தாலே ஆகாரம் வழங்கப்படும்‘ என்று கூறி, அவர்களது பொருட்கள் அவர்களோடே திருப்பி அனுப்பப்படுகின்றது. வீடு சென்று பார்த்தால், தமக்கு ஆகாரம் வழங்குவதற்கு பதிலாக தமது பொருட்களே திருப்பி வழங்கப்பட்டிருப்பதை பார்த்து, தந்தை முன்னே கைசேதப்பட்டு, தந்தையை நோக்கி ‘தம் சகோதரனை எம்மோடு அனுப்பினாலே உணவு தருவதாக அதிகாரி கூறியுள்ளார், எனவே சகோதரை எம்மோடு அனுப்புங்கள்’ என்று வேண்டினர். தம் ஒரு மகனை இழந்த தந்தை யஃகூப் நபி மீண்டும் தம் மகனை அனுப்புவாரா? ஒரு போதும் நடக்காதல்லவா.
இந்த தடவை வெறுமனே அவர்களது ‘பாதுகாப்பு கோரிக்கையை’ ஏற்காமல், ஓர் உறுதி மொழி வாங்கிக் கொண்டு, உணவு பெறுவதற்காக அனுப்பிவைத்தார்கள். ஒரே வாயிலால் அனைவரும் நுழையாமல், பிரிந்து நுழையுமாறு அறிவுரையும் செய்தார்கள்.
அவர்கள் யூசுப் நபியிடம் சென்ற போது, முதலில் தம் உடன் பிறப்பு சகோதரனை தம் பக்கத்தில் அழைத்து ‘நான் உனது சகோதரன், அவர்கள் செய்ததை கணக்கெடுக்காதீர்‘ என்று கூறி, தம் சகோதரனை தன்னோடு வைத்துக் கொள்ளவும், தம் சகோதரர்களுக்கு பாடம் புகட்டவும் நல்லதொரு உக்தியை கையாண்டார்கள்.
அந்த வகையில் அவர்களுக்கான உணவுப் பொதியை கட்டும் போது, அரசனின் குவலையை தம் சகோதரனின் பொதியில் வைத்து கட்டிவிட்டு, அவர்கள் திரும்பி செல்லும்போது, அரசனின் குவலையை யாரோ திருடிவிட்டார். என்று அறிவிப்பு செய்யுமாறும் கூறினார். அப்படியே நடந்தது. பிறகு தம் சகோதரர்களைப் பார்த்து ‘திருடியவருக்கு என்ன தண்டனை‘ என்று நீங்களே சொல்லுங்கள் என்று கூற, அவர்கள் திருடக்கூடியவர்கள் அல்ல என்பதில் உறுதியாக இருந்த சகோதரர்கள் ‘யாரிடம் அது இருக்கிறதோ அவரை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்‘ என்று கூற, யூசுப் நபியின் உடன் பிறப்பு சகோதரரின் பொதியில் இருந்தது. அவர்களது தீர்ப்பு படியே தம் சகோதரனை தனதாக்கிக் கொண்டார். அந்த நேரம் யூசுப் நபியவர்கள் சைக்கினையாக ‘தம் உடன் பிறப்பு சகோதரர் திருட வில்லை, உங்களுக்குரிய (நீங்கள் தொலைத்த) முன்னைய சகோதரரே திருடினார்‘ என்று கூறியும் அவர்களுக்கு புரியவில்லை.
அப்பொழுது அவர்கள்; தம் வயது முதிர்ந்த தந்தையைப் பற்றி  யூசுப் நபியிடம் எடுத்துக் கூறி, அவரை விட்டுவிடுமாறு கூறினார்’ முடியாது என்று விளங்கியதும், அவர்களுள் மூத்த சகோதரர் ஏனையவர்களைப் பார்த்து ‘ஏற்கனவே யூசுபின் விடயத்தில் நீங்கள் எல்லை மீறினீர்கள்,எனது தந்தை அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை, நான் தந்தையிடம் வரமாட்டேன்‘ என்று கூறி, உங்கள் சகோதரன் திருடிவிட்டதாக தந்தையிடம் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
தந்தைக்கு இந்த விடயமும் பெரும் பாரமாகவும், சதியாக்கவுமே இருந்தது. ஏற்கனவே யூசுப் நபியின் கவலையால் அழுதழுது, கண் பார்வையை இழந்திருந்த அவர்கள், அல்லாஹ்வின் மீதே பொறுப்பு சாட்டியவர்களாகவும் இருந்தார்கள்.
பாருங்கள் அந்த நபிக்கு அல்லாஹ்வின் மீதிருந்த நம்பிக்கையை! தம் பிள்ளைகளைப் பார்த்து, ‘எனதருமை பிள்ளைகளே, அல்லாஹின் மீதுள்ள நம்பிக்கையில் குறை விடாமல், நீங்கள் சென்று, யூசுபையும், அவர் சகோதரரையும் தேடுங்கள்.‘ என்று தன் உள்ளத்தில் இருந்த (அல்லாஹ் திருப்பித் தருவான் என்ற) ஆழமமான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.
அடுத்தமுறை உதவி வேண்டி மீண்டும் யூசுப் நபியை நோக்கி போய், உதவி வேண்டுகின்றார்கள். அப்போது நபியவர்கள் ‘நீங்கள் மடமைத் தனமாக யூசுபுக்கும், அவர் சகோதரருக்கும் செய்தது ஞாபகமிருக்கின்றதா?‘ என்று கேட்டார்கள். அபோது சகோதரர்கள் புரிந்து கொண்டார்கள் ‘அவர் தம் சகோதரன் யூசுப் தான்’ என்பதை.
அபோது யூசுப் நபியவர்கள் ‘அல்லாஹ் செய்த அருளை ஞாபகப்படுத்தி, யார் அவனைப் பயந்து, பொறுமை காக்கின்றார்களோ, அவர்களது கூலியை அல்லாஹ் வீணாக்குவதில்லை; என்று தனது இறை நம்பிக்கையின் உறுதியை தெளிவு படுத்தினார்கள். சகோதரர்களோ தம் குற்றத்தை உணர்ந்து, யூசுப் அவர்களின் மதிப்பையும் ஏற்றுக்கொள்ள, குற்றம் இழைத்த தம் உறவுகளை நிரபராதியாக்கி, அல்லாஹ்விடம் அவர்களுக்காக மன்னிப்பும் வேண்டினார்கள். அடுத்து தன் ஆடையை அவர்களிடம் கொடுத்து, தன் தந்தையின் முகத்தில் போட்டால் பார்வை மீண்டு வரும் என்றும், அனைவரையும் இங்கு அழைத்து வாருங்கள் என்றும் கூறி அனுப்பினார்.
படிப்பினைகள்:;;; வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போன்று, யூசுப் என்ற சகோதரனுக்கு திரோகம் செய்து சந்தோசப்பட்டவர்கள், அடுத்த சகோதரனை இழந்து கைசேதப்பட்டார்கள். மேலும் அவரிடமே சென்று உதவியும் தேடவாகிட்டு, என்றால் நாமும் நல்லது செய்தால் நல்லது நடக்கும், தீங்கிளைத்தால் எமக்கும் தீங்குதான் என்ற ஆழமான ஒரு பாடம்.
ஒரு முஃமின் ஒரே பொந்தில் (தன்னை அழிக்கும் ஒரே காரியத்தை) இரு தடவைகள் நுழைய மாட்டான் என்பது நபிகளாரின் அறிவுரை. (புஹாரி:6133) யஃகூப் நபியும் ஒரு தடவை விட்ட தவற்றால் யூசுபை இழந்தார்கள், மீண்டும் ஒபந்தம் செய்யாமல் அடுத்த மகனை அனுப்ப விரும்பவில்லை. எனவே ஒரு முஃமின் ஏமாறுபவனாக இருக்கமாட்டான், படிப்பினை பெறுபவனாக இருப்பான்.
தந்தை யஃகூப் நபியின் நம்பிக்கைக்கு அல்லாஹ் கொடுத்த பரிசு, தம் பிள்ளையை தம் வாழ்நாளில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிடுவதில்லை.
தனக்கு உதவி புரிந்த அல்லாஹ்வுக்கு யூசுப் நபி நன்றி கூறிய விதம், நாம் கட்டாயம் பெறவேண்டிய பாடமே.
ஆட்சியாளனுக்கு தலைக்கணம் என்பதும், பழிவாங்குதல் என்பதும் அவனோடு ஓட்டிப் பிறந்த ஒன்று எனலாம். ஆனால் அந்த கலாச்சாரத்திற்கே முற்றுப் புள்ளி வைத்து, வைராக்கியம் மறந்து, மன்னிப்பு வழங்கி கண்ணியப்படுத்தினார். தமக்கு தீங்கிழைத்த  உறவுகளை. இதிலிருந்து நாம் பெறவேண்டிய பண்பு; விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், வைராக்கியம் மறத்தல் போன்ற பண்புகள் எமக்கு அவசியம் என்பதே.
அல்லாஹ் நபிகளாரைப் பார்த்து கூறுகின்றான்:

 خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.  (7:199)
இதன் விளக்கத்தை சூராவின் 58- 92 வரை பார்க்கலாம்.
8-  அடுத்து யூசுப் நபியவர்கள் தான் பல ஆண்டுகளுக்கு முன்னால் இழந்த தந்தையையும், சகோதரர்களையும் மீண்டும் பெறுகின்றார்கள். அதன் பிறகு அவர்களது நிலை எப்படி இருக்கின்றது என்று நோக்குவோம்.
சூசுப் நபியின் ஆடை தந்தை யஃகூப் அவர்களின் முகத்தில் போடப்படுகின்றது, அவர்களது பார்வை யூசுப் நபி சொன்ன பிரகாரம் மீண்டு வருகின்றது. தந்தைக்கு முன்னால் பிள்ளைகள் குற்றத்தை உணர்ந்து, மன்னிப்பும் வேண்டுகிறார்கள், தந்தையும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரினார்கள். பின்பு அனைவருமாக யூசுப் நபியின் அரண்மனை நோக்கி வந்தார்கள். அவர்கள் யூசுப் நபியை அடைந்த போது, தன் பெற்றோரை தன்னளவில் சேர்த்தவர்களாக, அவர்களை சிம்மாசனத்தில் அமரவும் செய்தார்கள். அவர்கள் எல்லோரும் யூசுப் நபிக்கு தலை குனிந்து விழுந்தார்கள். அப்போது யூசுப் நபியவர்கள்; இதுவே சிறு வயதில் நான் கண்ட கனவின் விளக்கம் என்பதையும் தெளிவுபடுத்தினார்கள். அல்லாஹ் செய்த அருளை நினைவூட்டி, ஷைத்தான் தன் உறவுகளுக்கு மத்தியில் பிரித்ததையும் ஞாபகப்படுத்தி, மீண்டும் அல்லாஹ் அவர்களை ஒன்று சேர்த்ததற்காக நன்றியும் கூறி, ‘இறைவா நீயே ஆட்சியை வழங்கி, அறிவு ஞானத்தையும் வழங்கினாய், என்னை முஸ்லிமாக மரணிக்கவும் செய்து, நல்லவர்கலோடும் சேர்த்துவிடு’ என்று பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ் அந்த அழகிய சரித்திரத்தை முடிக்கும் முகமாக, ‘இது மறைவான செய்தி, நாமே உமக்கு அறிவித்தோம் என‘ முஹம்மது நபிக்கு எடுத்துரைக்கின்றான்.
படிப்பினைகள்:;;;
அல்லாஹ்வின் அற்புதம், ஆடையை முகத்தில் போட்டவுடன் பார்வை மீண்டது. அந்த அற்புதத்தை நம்புவது கடமை.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கிடையே நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளல். மனிதன் தவறு செய்பவன் என்ற அடிப்படையில் ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்து, மன்னித்து வாழ்வதிலே உலகிலும் நின்மதி, மறுமையிலும் வெற்றி என்ற பாடம் எங்களுக்கு மிக அவசியமானதே.
பெற்றோரை கண்ணியப்படுத்த, மனம் குளிரச் செய்ய பிள்ளைகள் பழக வேண்டும்.
அல்லாஹ் எமக்கு செய்கின்ற அருள்களை ஞாபகப்படுத்தி, நன்றி செலுத்துகின்ற பழக்கத்தை எம்மிடம் உருவாக்கிக் கொள்ளல்.
எந்நேரமும் நல்லதோர் இறுதி முடிவுக்கும், மறுமை வெற்றிக்கும் துஆ செய்கின்ற பழக்கத்தை அதிகமாக்கிக் கொள்ளல், குறிப்பாக வெற்றிகளுக்கு பின்னால்.
மறைவான அறிவு என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானது, எந்த நபியாலும் தானாக மறைவானவற்றை அறிகின்ற ஆற்றல் இல்லை என்ற கொள்கைரீதியிலான ஒரு பாடம் இந்த வரலாறு நெடுகிலும். காணப்பட்டது.
இந்த வரலாற்று நிகழ்வின் மிக முக்கியமான சமூக ரீதியிலான படிப்பினை;
ஒற்றுமை உள்ள சமூகம் வெற்றிபெறும்.
திட்மிடல் என்பது எந்த ஒரு காரியத்தையும் முன்னேற்றத்தை நோக்கி எடுத்துச் செல்லும்.
தவறான வழிகளில் என்னதான் திட்டம் போட்டாலும், முயற்சித்தாலும் ஆரம்பத்தில் வெற்றி போன்று விளங்கினாலும், அதன் இறுதி தோல்வியும் அவமானமுமே.
எமது பொது விரோதி ஷைத்தானை அடையாளம் கண்டு, அவனை எதிர்ப்பதன்  மூலமே ஈருலகிலும் விமோசனம் கிடைக்கும்.
இறைவா! நீயே இந்த சூராவிலிருந்து ஆழமான பாடங்களைப் பெற்று, உண்மை முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்கின்ற பாக்கியத்தை எமக்கு தரவேண்டும்.
அந்த சூராவின் கடைசி வசனம்; அல்லாஹ் கூறுகின்றான்:

  لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِّأُولِي الْأَلْبَابِ ۗ مَا كَانَ حَدِيثًا يُفْتَرَىٰ وَلَٰكِن تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. (12:111)