விரும்புகின்றீர்களா?

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?
ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?
ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்)
உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?
ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?
நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله
லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)